Wednesday, September 30, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 2
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ

பொருள்:

உடையார் கனமணியோடு ஓண்மா துளம்பூ - பெருஞ்செலவம் உடையவர்களிடம் மட்டுமே இருக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த மணிகளோடு அழகிய மாதுளம்பூவை

கனம் - சிறப்பு
ஒண் - ஒப்பற்ற, சிறந்த

இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு - இடையே கோர்த்த எழில் நிறைந்த அரையில் அணியும் வடத்தை

தெழ்கு - இடுப்பில் அணியும் அணிகலன்

விடையேறு காபாலி ஈசன்விடு தந்தான் - காளையின் மீது ஏறிவரும் காபாலம் என்னும் கூத்தை உடைய சிவன் அனுப்பி இருக்கிறான்

விடை - காளை

காபாலி - சிவன் பிரமனின் (ஐந்தாவது)தலையைக் கொய்து அந்த மண்டை ஒட்டை வைத்துக் கொண்டு ஆடும் கூத்து.

பதிவர் குமரனின் கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து என்ற பதிவிலிருந்து

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - அதனைப் பெற்றுக் கொண்டு அழாதிருப்பாயாக, உலகம் அளந்த பெருமாளே அழாதிருப்பாயாக

பதவுரை:

நீ அழும் குரல் கேட்டு உன் மாப்பிள்ளை பெருஞ்செல்வர்கள் தங்களுக்குப் பெருமை எனப் போற்றும் அரிய மணிகளோடு அழகிய மாதுளம்பூக்களை இடையே கோர்த்த எழில் நிறைந்த அரைஞான் கயிரொன்றை அனுப்பி இருக்கிறான். அதை நான் உனக்குத் தருவேன். அதனைப் பெற்றுக் கொண்டு முன்பு உலகம் அளந்த பெருமாளே அழாதிருப்பாயாக.

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.

பொருள்:

மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே வயிரத்தைப் பதித்து; மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று.

மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும்.
செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன்.

அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில்

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அதை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்தான்.

மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ -
குள்ளச் சிறுவனாய் மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியில் உலகத்தை அளந்தவனே தாலேலோ! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.

பதவுரை:

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.

அளந்து - சிந்தித்து

Sunday, September 20, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் 
கலித்தாழிசை 
குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்! 
பாடல் 1 - 3 - 1 

மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி* 
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்* 
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்* 
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.
பொருள்:
மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே மின்னல் போல் ஒளிரும் வயிர மணிகளைப் பதித்து; மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று. ஆங்கிலத்தில் ரூபி என்று அழைப்பார்கள். அது சிவந்த நிறத்தில் இருக்கும். அத்தகைய மாணிக்கக் கற்களைப் பதித்து, அவற்றிற்கிடையில் வைரக்கற்களைப்பதித்து...
மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும். செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து 

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன். அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில் 

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அனுப்பி வைத்தான்; நானிலத்தில் உனக்கு நிகரான நன்தொட்டில் கிடைத்திராதென்று எண்ணி, தூய பசும்பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிறிய தொட்டிலில், பொலிவான மாணிக்கக் கற்களும், அவற்றிற்கிடையில் எடுப்பான வைரக்கற்களையும் பதித்த அழகிய தொட்டிலை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்திருக்கின்றான். 

மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகனே! குள்ளமான வடிவில் வந்த எங்கள் குருவே! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்! மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியிலேயே உலகத்தை அளந்த உத்தமனே சத்தமின்றி கண்ணயற உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.

கதைச்சுருக்கம்: 

இறைவனின் பத்து அவதாரங்களில் ஐந்தாவதாக வருவது 'வாமன அவதாரம்'. மகாவிஷ்ணு, உலகம் உய்வடையவும், நீதி நிலைபெறவும், பத்து விதமான திருவவதாரங்கள் கொண்டு இவ்வுலகுக்கு வந்தாரென்று அறிந்திருக்கிறோம்..

முதலாவதாக மச்சாவதாரம் - கடல்நடுவே வீழ்ந்த சதுர் வேதம் தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்; மச்சம் - மீன் 

இரண்டாவதாக கூர்மாவதாரம் - அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் - கூர்ம அவதாரம்; கூர்மம் - ஆமை 

மூன்றாவதாக வராகாவதாரம் - பூமியைக் காத்திட ஒருகாலம் நீ புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்; வராகம் - பன்றி 

நான்காவதாக நரசிம்மாவதாரம் - நாராயணா என்னும் திருநாமம் நிலைநாட்டிட இன்னும் ஒரு அவதாரம் - நரசிம்ம அவதாரம்; சிம்மம் - சிங்கம் 

ஐந்தாவதாக வருவதுதான் வாமனாவதாரம் - மாபலி சிரம் தன்னில் கால்வைத்து இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்!- வாமன அவதாரம்! வாமனன் - குள்ளன் 
அப்படினு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 'திருமால் பெருமை' என்னும் திரைப்படத்தில் பாடிருப்பார். மேற்கண்ட இந்த அவதார வரிசைகளைப் பாருங்கள் ஒருவிதமான பரிணாம வளர்ச்சியை ஒத்துஇருப்பதை அறியலாம். பூமியில் முதன் முதலில் உயிரினங்கள் உருவானது கடலில்தான். அதிலும் குறிப்பாக அமீபா. அவதாரம் என்னும் சொல்லுக்கு 'இறங்கிவருதல்' என்று பொருள் ஆகும். சரி பொதுவான சங்கதிகள் போதும்! கதைக்கு வருவோம்!

வாமனாவதாரம்: 

  கேரள நன்னாட்டில் திருவோணம் என்னும் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதை நாம அறிவோம். அதற்கும் வாமனாவதாரத்துக்கும் என்ன தொடர்பு?? மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 'பக்த பிரகலாதன்' னின் பேரனாவான். ஆ! அச்சோ! அப்போ அசுரனா?? ஏன், அசுரக் குலத்துல தோன்றினா அசுரனாத்தான் இருக்க வேண்டுமா?? பிரகலாதன் என்ன அசுரனா?? பக்தன் பிரகலாதாழ்வான் என்று தானே சொல்கிறோம்! பிரகலாதாசுரன் என்று சொல்வதில்லையே. பயங்கரமான நாராயண பக்தியும், அவன் பால் பேரன்பும் கொண்ட பிரகலாதனின் மடியில் தவழ்ந்து விளையாடி, பக்திமயமான கதைகளைக் கேட்டு, அன்பும் அறனும் குழந்தைவயது முதலே ஊட்டப்பெற்று வளர்ந்த இந்த மகாபலிச்சக்கரவர்த்தியும் ர்ர்ர்ரொம்ப ர்ர்ர்ரொம்ப நல்லவராத்தான் இருந்தார். அவர், தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான். மகாபலியின் திறைமையைக் கண்டு அச்சமுற்று, வருத்தமுற்ற தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனராம். அதேசமயம், உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது, உலக உயிர்கள் அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம். ஆனால், ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு. வல்லவரு. யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவரு; தானம் செய்வதில் தன்னைவிட தலைசிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம். தான்தான் தானத்தின் தலைவன் என்கிற அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர் ஆட்சி புரிந்து, விண்ணுலகம், மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி. மகாபலியும் முக்திபெறுகின்ற காலம் வந்தாயிற்று! மகாவிஷ்ணு, காசியப முனிவருக்கு மகனாக வந்து, வாமனனாகத் திருவவதாரம் புரிந்தார்.

வாமனனாக வந்த இறைவன், ஒரு கையில் கமண்டலம், மறுகையில் ஒரு குடையும் கொண்டு, உடலை மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டு, குள்ளமான உருவத்துடன், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்றான். சிறுவனாக வந்த வாமனனிடம், மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?' என்று கேட்டார். வாமனன், தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி அளவுடைய நிலம் வேண்டும் என்று யாசித்தார். மகாபலிச்சக்கரவர்த்தியும் தருவதாக ஒப்புக் கொண்டு, சிறுவனுக்குக் கொடுக்க எத்தனிக்கும் வேளையில் அரசவையில் இருந்த அவரது குருவான சுக்கிராச்சாரியர், வந்திருப்பது யாரென்று, தன் ஞானத்தால் அறிந்தார். மகாவிஷ்ணுவே இப்படி உருமாறி வந்தால், இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறதென்பதை உணர்ந்து, அவர் சக்கரவர்த்தியிடம் 'வேண்டாம்!' என்று இடைமறித்தார். மாவலிச் சக்கரவர்த்தியோ, ஒரு சிறுவனின் தேவையைக் கூட நிறைவேற்ற இயலாத தான் ஒரு மன்னனா?? இப்பாலகனுக்குத் தராவிட்டால், தான் இதுவரை செய்த தர்மங்களால் என்ன பயன்?? எல்லாவற்றிற்கும் மேல், கொடுத்த வாக்கை எப்படி மீறுவது?? என்று சிந்தித்துவிட்டு, தன் குருவின் சொல்லையும் மீறி தானம் அளித்தார். வாமனனும் அளக்க ஆரம்பித்தான். அதற்கு முன் அவன், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் பெற்றார். மாவலியும் இறைவனின் திருவுருவைத் தரிசித்தான். வாமனனாய் வந்தவன், வானமளவு நெடிதுயர்ந்து, முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார். மூன்றடியில், இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாது திகைக்கவே.... மாவலித் தலைகுனிந்து, இறைவனிடம் வணங்கி நின்று, மூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார். இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து, முக்தி பெற்றான். வாமன அவதாரம் வதத்திற்காக அல்ல! முக்திக்காக(வீடுபேற்றிற்காக)!! முன்னமே, இரண்யகசிபு வதத்தின் பொழுது, பிரகலாதனுக்கு இறைவன் கொடுத்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? இனி, பிரகலாதனின் வம்சத்தில் எவரையும் வதம் செய்வதில்லை என்று இறைவன் சொன்ன சொல்லையும் மீறவில்லை. ஆனாலும், இறைவனிடம், ஆண்டிற்கொரு முறைத் தான், தன் மக்களை வந்து காண அனுமதி வழங்கியருள வேண்டினான். இறைவனின் ஒப்புக் கொள்ளவே, ஒவ்வொரு ஆண்டும் திருவோணத் திருவிழா அன்று மகாபலிச் சக்கரவர்த்தி தன் மக்களை வந்து காண்பதாக கேரளம் மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் மக்கள் நம்பி, தங்கள் மன்னனை வரவேற்க ஊரே திருவிழாக்கோலம் பூண்டு, அத்தப்பூ கோலமிட்டுத் தங்கள் சக்கரவர்த்தியை வரவேற்கின்றனர். முதன் முதலாக மனித உருவில் இறைவன் எடுத்தத் திருவவதாரம்- 'வாமன அவதாரம்'! 

இறைவனின் திருமேனி சம்மந்தத்தை விட, திருவடி சம்மந்தம் கிடைப்பதே பெரும்பேறாகும்! நம் பாவங்கள் முழுமையையும் நீக்கி, நம் புண்ணியங்கள் அனைத்தையும் அவனே ஏற்றுக் கொண்டு, நமக்கு நித்திய வாழ்வு தந்து உய்விப்பது இறைவனின் திருவடியே ஆகும். திருவள்ளுவரும், இறைவனைத் திருவடியாய்த்தான் பார்க்கிறார். பெருமாள் கோயில்களில், கோயில் அர்ச்சகர் நம் தலையில் சடாரி என்று ஒன்றை சாற்றுவார். அது வேறு ஒன்றும் இல்லை, இறைவனின் திருவடியே ஆகும். சடாரி ன்னா என்னான்னு கேக்குறீங்களா?? கிரீடம் மாதிரி ஒன்ன பெருமாள் கோயில் ல நம்ம தலையில வைப்பாரு, கோயில் அர்ச்சகர். அதற்குப் பெயர் தான் சடாரி! 

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.

பதவுரை: 

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார். 

பின்குறிப்பு: ஒரு சிறு உதவி! இப்பாடலில் இடைச்செருகலாக வந்த கதைச்சுருக்கம் தேவையா? இல்லையா? என்று கூறுங்கள். நீங்கள் விரும்பினால், இந்த பதிவை வைத்திருக்கலாம் இல்லாவிட்டால் நீக்கிவிடலாம். :-) -தமிழ்

Thursday, September 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 21

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 21 (தரவுகொச்சகக் கலிப்பா)

இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

சுருப்பார்குழலி யசோதைமுன் சொன்ன*
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்*
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார் போய்* வைகுந்தத் தொன்றுவார்தாமே.

பொருள்:

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன - பூக்கள் மலர்ந்தவுடனேயே பறித்து, அவற்றைத் தொடுத்துச் சூடியதால், மலரிலுள்ள மது கூந்தலிலும் பரவியது. அதனால் வண்டுகள், மலரிலும், கூந்தலிலும் உள்ள மதுவினைச் சுவைப்பதற்காக யசோதை அன்னையின் கூந்தலில் அமர்ந்து, தேனைஉண்டு ஆர்ப்பரித்தன.

சுரும்பு + ஆர் - சுருப்பார்; சுரும்பு - வண்டு
''மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும்'' - தொல் - குற்றியலுகரப்புணரியல் (9)

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன - வண்டுகள் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கூந்தலையுடையவளான யசோதை அன்னை இதுவரை சொன்ன

திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் - இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை அனைத்தையும், திருவில்லிப்புத்தூர் வாழ் புலவனான, விட்டுசித்தன் (திருகேசம் - கூந்தல், திருமுடி; தென்புதுவை - திருவில்லிப்புத்தூர்; பட்டன் - புலவன்)

விருப்பாலுரைத்த இருபத்தோடொன்றும் உரைப்பார் போய் - குழந்தை கண்ணன் மேல் கொண்ட ஆசையால் சொன்ன இந்த இருபத்திஒரு பாடல்களும் சொல்பவர்கள், நிச்சயம் சென்று

வைகுந்தத்தொன்றுவார் தாமே - இறைவனுடன் வைகுந்த நிலையில் நிலைபெறுவார்கள்.

பதவுரை:

வண்டுகள் தேனுண்டு ஆர்ப்பரிக்கும் கூந்தலையுடைய யசோதை அன்னை, குழந்தை கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரை அன்று சொல்லி மகிழ்ந்ததை, திருவில்லிப்புத்தூர் வாழும் கவிஞனான, விட்டுசித்தன், குழந்தை கண்ணபெருமான் மேல் கொண்ட அதீத அன்பினால் அவற்றை இந்த இருபத்திஒரு பாடல்களிலும் தந்துள்ளவற்றை, முழு விருப்பத்துடன் மனதாற பாடுபவர்கள், இறைவனின் திருவடி நிலையான வைகுந்த நிலையை அடைந்து என்றும் வாழ்வாங்கு வாழ்வர்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 20

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 20

அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக் கொண்டு*
கழல்கள் சதங்கை கலந்து எங்குமார்ப்ப*
மழகன்றினங்கள் மறித்துத் திரிவான்*
குழல்கள் இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.

பொருள்:

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு - உள்ளங்களையில் பசும்பொன்னாலான அழகிய நீண்ட கோலினை வைத்திருக்கின்ற (பைம்பொன் - பசும்பொன்; கோல் - தடி, குச்சி; அங்கை - உள்ளங்கை)

கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப - கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் சதங்கை கொலுசு அணியும் வழக்கம் பெண்களுக்குரியது. ஆனால், ஆண்களும் காலில் கழல் அணிந்து கொள்வர். காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக்கழலைத்தான்.

கிண்கிணிகள் நிறைந்த கழல்கள் கண்ணன், கால் அசையும் பொழுதெல்லாம் ஒலிஎழுப்புகின்றன. அவ்வொலி எங்கும் எதிரொலிக்கின்றது. (கழல் - வீரக்கழல், காலில் அணியும் ஒருவகை அணி; சதங்கை - கிண்கிணி, ஆர்ப்ப - ஒலிக்க)

மழகன்றினங்கள் மறித்துத் திரிவான் - முதல் இரண்டடிகளிலேயே நமக்கு, எத்தகைய சூழல் என்று உணரக்கூடியதாய் உள்ளன; மூன்றாமடி அதை உறுதி செய்துவிடுகிறது. சிறு கன்றுக் குட்டிகள் எப்போதும் ஓரிடம் நில்லாது, அவ்வப்போது தன் தாயை விட்டுப் பிரிந்து சென்று பரந்த வெளியில் துள்ளித் துள்ளி விளையாடும். அவ்வாறு தனிமையில் விளையாடுவது கானகத்தில் க்ன்றிற்கு நல்லதல்ல. விலங்குகள் ஏதும் தாக்கிவிடக்கூடும். எனவே, கன்றுக்குட்டிகளை, எங்கும் தனித்து சென்றுவிடாது மறித்து, ஆநிரைகளின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் திரிபவனின்

கையில் நீண்ட கோலினைக் கொண்டு, மாடு மேய்க்கச் செல்கையில் கன்றுகுட்டிகள் அங்குமிங்கும் ஓடிவிளையாடும் பொழுது, அவற்றை மறித்து மந்தையோடு சேர்த்துவிட்டு, அவற்றின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் திரிபவனின் (மழகன்று - கன்றுக் குட்டி)

குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே - அழகிய இளம்பெண்களே! கையில் நீண்ட கோல் கொண்டு, காலில் வீரக்கழல் அணிந்து, அங்குமிங்கும் குறும்பு செய்து ஓடிவிளையாடும் கன்றுக்குட்டிகளை மறித்து மந்தையோடு இணைத்து, அவற்றின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் திரிபவனின் கூந்தலழகை வந்து பாருங்கள். (குழல் - கூந்தல்) குழல் - கூந்தல்; குழை - குண்டலம்

இந்த இருபது பாடல்களிலும், குழந்தை கண்ணனின், அடி முதல் முடி வரை ஒவ்வொரு பாகமாக யசோதை அன்னைத் தான் அனுபவித்து இன்புற்றதை, மற்ற பெண்களையும் அழைத்துக் காண்பித்து மகிழ்கிறார்.

பதவுரை:

அழகிய பசும்பொன்னால் செய்த கோலினைக் கையில் ஏந்திக் கொண்டு, கால்களில் வீரக்கழலின் கிண்கிணிகள், அவன் நடக்கும் போதெல்லாம் ஒலி எழுப்புகின்றன; அவ்வொலி கானகமெங்கும் எதிரொலிக்க, மந்தையை விட்டுத் தனித்துச் செல்லும் மழலைக் கன்றுக்குட்டிகளை மறித்து மந்தையோடு இணைத்து, ஆநிரைகளின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் அலைந்து திரிபவனின் கூந்தலழகை வந்து பாருங்கள். அழகிய இளம்பெண்களே! இந்த கோவலக் குமரனின் கூந்தலழகை வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 19

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 19

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்*
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை*
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும்பரமன்தன்*
நெற்றி இருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும் - பெண் குழந்தைகள், தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற சிறு சிறு பொருட்களைக் கொண்டு, மணலில் சிறிய வீடு கட்டி விளையாடுவர். அவ்வாறு இந்த பெண்பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்த போது, அவர்கள் வைத்திருந்த, சிறிய முறம், சிறிய மண்பொருட்கள் மற்றும் அவர்கள் கைகளில் என்னவெல்லாம் வைத்திருந்தனரோ அதையும் (முற்றில் - சிறிய முறம்; தூதை - சிறுமண்கலம்; பூ - கொண்டிருத்தல்)

சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப் - சிறுமண் வீடு கட்டி விளையாடும், பெண்பிள்ளைகளைப் (சிற்றில் - சிறிய+இல் - சிறு வீடு; இழைத்து - உருவாக்கி; திரிதருவோர் - விளையாடுவோர்)

பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன் - அவர்களை வலுவாய்ப் பிடித்து, அவர்கள் கைகளில் இருப்பவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு ஓடும் இந்த பரமனின்

நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர்! வந்துகாணீரே - அந்தப் பெண்பிள்ளைகளிடத்து இருக்கின்றவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு, அவர்களோ, பெரியவர்களோ தன்னைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வேகமாக ஓடுகின்ற இந்த பிள்ளையின் நெற்றியினை வந்து பாருங்கள். அழகிய பெண்களே, இந்த பிள்ளை ஒருமுக சிந்தனையோடு பதற்றமாய் ஓடும் பொழுது அதன் அழகை வந்து பாருங்கள். (நேரிழை - பெண்; நேரிழையீர் - பெண்களே)

பதவுரை:

சிறு முறம், சிறு மட்கலம் மற்றும் அவர்கள் கையில் கிடைத்தவற்றை எல்லாம் வைத்து, சிறுவீடு கட்டி இந்த பொருட்களை எல்லாம் வைத்து பெண்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில், இந்த குட்டிக் கண்ணன் அங்கு இரகசியமாய் சென்று அவர்களிடமிருக்கின்ற அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு வேகமாய் ஓடி வரும் இந்த பரமனின் சிறு நெற்றியின் அழகினை வந்து பாருங்கள். அழகிய பெண்களே, தன் வயதொத்த பெண்பிள்ளைகளிடமிருக்கின்ற பொருட்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்ற இந்த குறும்பு பிள்ளையின் நெற்றியழகை வந்துப் பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 18

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 18

மண்ணும்மலையும் கடலும் உலகேழும்*
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு*
வண்ணமெழில்கொள் மகரக் குழையிவை*
திண்ணம் இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

மண்ணும் மலையும் கடலும் உலகேழும் - புவியின் நிலமும், பெரிய பெரிய மலைகளும், பெருங்கடலும், ஏழு உலகங்களும்... பூமியிலுள்ள மலைகள், பெருங்கடல்கள் கொண்ட பூமியோடு சேர்த்து ஏழு உலகங்களையும்

உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு - பூமியோடு சேர்த்து ஏழு உலகங்களையும், வெண்ணெய் உண்பது போல் எளிமையாக, அவற்றை விரும்பி உண்ணக்கூடிய இந்த குழந்தைக்கு

வண்ணமெழில்கொள் மகரக் குழை இவை - பொன்வண்ண ஒளி எங்கும் சிதறுகின்ற அழகுடைய மீன்வடிவ குண்டலங்களான இவை ஒவ்வொன்றும் (மகரம் - மீன், சுறாமீன்; குழை - குண்டலம்) {கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர்!}

திண்ணம் இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே - அவன் காதுகளுக்கு எத்துனைப் பொருத்தமாய், குண்டலங்களால் காதுக்கழகா? காதால் குண்டலங்களுக்கு அழகா? என்று ஆராயத்தக்க வண்ணம் ஒன்றுக்கொன்று பொருத்தமாய் அமைந்திருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். செம்மையான அணிகலன் பூண்ட பெண்களே வந்து பாருங்கள்.

பதவுரை:

மண்ணும், மலையும், பெருங்கடல்களும் நிறைந்திருக்கின்ற இந்த பூவுலகத்தோடு சேர்த்து ஏழு உலகங்களையும், வெண்ணெய் உண்பது போல் எளிதாய், இலகுவாய் விரும்பி உண்ணக்கூடிய இந்த பிள்ளைக்கு, பொன்னொளி சிதறித்தெறிக்கின்ற மீன்வடிவ குண்டலங்கள் ஒவ்வொன்றும் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள். செவ்விய அணிகலன் அணிந்துள்ள பெண்களே, இங்கே வந்து, இந்தபிள்ளையின் காதுகளுக்குப் பொருத்தமாய் அமைந்திருக்கின்ற இந்த மகரக் குண்டலங்களின் அழகினை வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 17

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 17

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய*
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற*
உருவுகரிய ஒளிமணி வண்ணன்*
புருவம் இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே.

பதவுரை:

பருவம் நிரம்பாமே, பாரெல்லாம் உய்ய - பருவம் நிரம்பாத பாலகன், உலக உயிர்கள் அனைத்தும் உலகத்திலுள்ள துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக (பார் - உலகம்; உய்ய - துன்பங்களிலிருந்து விடுபட)

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற - திருமகளைப் போன்ற அழகான, தேவகி அன்னையின் திருவயிற்றில் உதித்த, அழகில் திருமகளை ஒத்தவளான,தேவகி அன்னைக்கு மகனாகப் பிறந்து; 'சீதக்கடல் உள் அமுதன்ன தேவகி' - நினைவிருக்கின்றதா?? சீதக்கடலின் வெளி அமுது - தேவாமிர்தம்; சீதக்கடலின் உள் அமுது - திருமகள்.

உருவு கரிய ஒளி மணிவண்ணன் - கரிய உருவத்தினனாய்ப் பிறந்த, நீலமணியொத்த வண்ணனின்

புருவம் இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே - நீலமணிவண்ணனின் புருவம் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். மார்பில் அழகிய அணிகலன் அணிந்துள்ள பெண்களே, இந்த நீலமணி வண்ணனின், கரிய புருவம் எத்துனை அழகாய் அமைந்திருக்கின்றதென்று வந்து பாருங்கள்.

பதவுரை:

இந்த உலகம் உய்வதற்காக, திருமகளைப் போன்ற அழகான தேவகி அன்னைக்கு மகனாகப் பிறந்த, பருவம் நிறையாத, கரிய உருவத்தில் நீலமணி ஒத்த வண்ணமுடைய இந்த மழலைச் செல்வத்தின் கண் புருவம் எத்துனை அழகாய் அமைந்திருக்கின்றதென்று வந்து பாருங்கள். மார்பில் அழகிய அணிகலன் அணிந்துள்ள பெண்களே, இந்த நீலமணி வண்ணனின், கரிய புருவத்தின் அழகினை வந்து பாருங்கள்.

Monday, September 7, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 16

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 16

விண்கொள் அமரர்கள் வேதனைதீர*முன்
மண்கொள் வசுதேவர்தம் மகனாய்வந்து*
திண்கொள் அசுரரைத் தேயவளர்கின்றான்*
கண்கள் இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.



பொருள்:


விண்கொள் அமரர்கள் வேதனைத் தீர -
விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர், தேவிகளுக்கு அசுரர்களால் விளைவிக்கப்படும் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக

முன் மண்கொள் வசுதேவர்தம் மகனாய்வந்து -
மண்ணுலகத்தில், வசுதேவர் என்பவருக்கு மகனாகப் பிறந்து

திண்கொள் அசுரரைத் தேய வளர்கின்றான் -
திண்மையானத் தோள்களை உடைய அசுரனான கம்சனை அழிப்பதற்காக ஆயர்பாடியில் வளர்கின்றவனுடைய

கண்கள் இருந்தவா காணீரே கனவளையீர்! வந்துகாணீரே -
வசுதேவருடைய மகனாகப் பிறந்து, ஆயர்பாடியில் வளர்கின்ற கண்ணனின் கண்ணழகைப் பாருங்கள். நெருக்கமாய் வளையல் அணிந்துள்ள பெண்களே, வந்து அசுரனை அழிப்பதற்காக வளர்கின்ற இந்த பிள்ளையின் கண்கள் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள்.

பதவுரை:

விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களின் துன்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக, மண்ணுலகில் வசுதேவருக்கு மகனாகப் பிறந்து, திண்மையானத் தோள்களை உடைய அசுரனான கம்சனை அழிப்பதற்காக ஆயர்பாடியில் வளர்கின்றவனுடைய கண்களைப் பாருங்கள். நெருக்கமாய் வளையல் அணிந்துள்ள பெண்களே, தேவர்களுக்கும் அடியவர்களுக்கும் கருணைபுரியும் அதே கண்கள், கம்சன் போன்ற அசுரர்களுக்கு கனலாய் தகிக்கின்ற இருபார்வையும் ஒன்றாய்க் கொண்டுள்ள உத்தமனின் கண்ணழகை வந்து பாருங்கள்.

Sunday, September 6, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 15

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 15

நோக்கியசோதை நுணுக்கிய மஞ்சளால்*
நாக்குவழித்து நீராட்டும் இந்நம்பிக்கு*
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்*
மூக்கும் இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே.

பொருள்:

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் - யசோதை அன்னை, நல்ல மஞ்சள்எதுவென்றுத் தேடி தேடிப் பார்த்து, அதை, குழந்தையின் சிறுநாவினை வழிப்பதற்கு ஏற்ற அளவுடையதாய் சிறியதாய் நுணுக்கி

நாக்குவழித்து நீராட்டும் இந்நம்பிக்கு - சிறந்த, சிறிய மஞ்சளைத் தேடிக் கொண்டுவந்து அதனால், சிறுகுழந்தையான கண்ணனின் நாவினைக் கீறிவிடாது இலகுவாய் வழித்து, பதமாய் பையவாட்டிய நீரால் குளிப்பாட்டும் இந்த தலைவனுக்கு (நம்பி - தலைவன்)

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் - தத்தித் தத்திப் பேசும் மழலை மொழியும், கருணை மழைப்பொழியும் கார்முகில் வண்ணனின் செங்காந்தள் கண்களும், பவளவாயும், நவமணியும் மின்னுகின்ற குறுநகையும், (நயனம் - கண்; முறுவல் - புன்னகை)

மூக்கும் இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே - எள்பூ (எட்பூ) நாசியும், இப்படி ஒவ்வொன்றும் மாயக் கண்ணன், கார்முகில் வண்ணன் முகத்தில் அழகாய், அமைப்புடன் இருக்கின்ற முறையை வந்து பாருங்கள். அடர்த்தியான, கருங்கூந்தல் கொண்ட பெண்களே வந்து, இந்த கருணா மூர்த்தியின் முகழகைப் பாருங்கள்.

பதவுரை:

நல்ல மஞ்சளாகத் தேடித் தேடிப் பார்த்து, அதை குழந்தை கண்ணனின் வாய்க்கு ஏற்றவாறு சிறியதாக நுணுக்கி, அந்த மஞ்சளால் நாவினை வழித்து, பதமாக பையவாட்டிய நீரால் குளிப்பாட்டும் இந்த தலைவனுக்கு, மழலை மொழியும், கருணை ததும்பும் கண்களும், பவளவாயும், வசீகரப் புன்னகையும், எட்பூ நாசியும் என்று முகத்தில் ஒவ்வொன்றும் அமைந்துள்ள அழகை வந்து பாருங்கள். இருளைப் போன்று கரிய, மிகவும் அடர்த்தியான கூந்தலைக் கொண்ட பெண்களே, வந்து சர்வ இலட்சணங்களும் அமைந்திருக்கும், இந்த வசீகரனின் முக அழகை வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 14

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 14

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு*
அந்தொண்டை வாயமு தாதரித்து* ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப்பருகும்* இச்
செந்தொண்டை வாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு - என் தொண்டைவாய்ச்சிங்கம் வா! என்று எடுத்துக் கொண்டு - என் தங்கம், என் செல்லம், என் பட்ட்டுக் குட்டி ... என்றெல்லாம் குழந்தையைக் கொஞ்சி அழைப்பதுபோல், கோவை (கொவ்வை)ப் பழம் போல் செக்கச் செவேறென்று சிவந்துள்ள வாயினையுடைய என் சிங்கமே, இங்கேவா, அன்புகூர்ந்து அழைக்கும் என்னிடம் வாடா என்று அழைத்து, அவன் வந்ததும், தன்இருகைகளாலும் வாரி எடுத்துக் கொண்டு (தொண்டை - கோவைப்பழம் )

அந்தொண்டை வாயமுது ஆதரித்து - மிகுந்த அன்போடு அவன் வாயோடு முத்தம் வைத்து, அவன் செவ்விதழில் ததும்புகின்ற தேனை, விருப்பத்துடன் சுவைத்து (ஆதரி - மிகுந்த அன்பு)

ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் - அவன் செவ்வாயில் ஊறுகின்ற தேனமுதினை, ஆய்ச்சியர்கள், தங்கள் இதழ்களால் முத்தமிடும் வேளையில் அப்பிள்ளையின், திருவாய் அமுதினையும் செருக்குடன் பருகும் (தருக்கு - செருக்கு)

இச்செந்தொண்டை வாய் வந்து காணீரே சேயிழையீர்! வந்து காணீரே - ஆய்ச்சியர், இந்த சிறுபிள்ளையின் வாயமுதினைக் கிடைக்காத அமுதம் தங்களுக்கு கிடைத்தவிட்ட செருக்குடன் பருகுவர். அத்தகைய தித்திக்கும் தேனமுது தத்தளிக்கும், கொவ்வைப் பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள். செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே வந்து பாருங்கள். (சேயிழையீர் - செவ்விய அணிகலன் அணிந்திருப்பவர்கள்; இழை - புன்னகை)

பதவுரை:

''கொவ்வைப் பழம் போல் சிவந்த நிறமுடைய என் சிங்கமே'', என்னிடம் வாடா என்று அழைத்து, அவனை அள்ளி அணைத்துக் கொண்டு, ஆய்ச்சியர் மிகுந்த அன்போடு தங்கள் இதழ்களால் முத்தமிட்டு, கிடைக்காத அரிய செல்வம் கிடைத்துவிட்ட செருக்குடன் அவனின் திருவாயமுதினை விரும்பி சுவைப்பர். அத்தகைய தித்திக்கும் தேனமுது தத்தளிக்கும், கொவ்வைப் பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள். செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 13

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

பாடல் 13


வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு* வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு*
அண்டமும் நாடும் அடங்கவிழுங்கிய*
கண்டம் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

பொருள்:

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் கொண்டு - செடியிலேயே மலர்ந்த, செறிந்த தேனுடைய மலர்களை, மலர்ந்தவுடன் பறித்து, நெருக்கமாய்த் தொடுத்து, அவற்றை சூடினமையால், மலரின் தேனைச் சுவைப்பதற்காக யசோதையின் கூந்தலில் வண்டுகள் வந்தமரக்கூடியக் கூந்தலையுடைய ஆய்ச்சியான யசோதை அன்னை, 'தன் மகன்' என்று எண்ணிக் கொண்டு

வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு - தன் மகன் என்ற நினைப்புடனேயே, யசோதை அன்னையால் வளர்க்கப்படுகின்ற இந்த சிறுபிள்ளையான கண்ணபிரானுக்கு (கோவலன் - கண்ணபிரான்; குட்டன் - சிறுபிள்ளை)

அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய - கண்ணனும், யசோதை அன்னையும் இருந்த ஆயர்பாடி உட்பட, இந்த உலகத்திலிருந்த அனைத்தும், அண்டசராசரம் முழுவதும் அவன் வாய்க்குள்ளேயே அடங்கிவிடுமாறு விழுங்கிய (அண்டம் - உலகம்)

கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்து காணீரே - உலகம் அனைத்தையும், தன் வாய்க்குள் விழுங்கிவிட்ட இந்த சிறுபிள்ளையினுடைய தொண்டை அமைந்திருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். வனப்பாய் அலங்கரித்துக் கொண்டுள்ள அழகிய பெண்களே இந்த பிள்ளையின் தொண்டை எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்துபாருங்கள். (கண்டம் - தொண்டை; காரிகை - பெண், காரிகையீர் - பெண்கள்)

பதவுரை:

தேன்நிறைந்த மலர்களைத் தொடுத்தணிந்த கூந்தலில் உள்ளத் தேனினைப் பருகவதற்கு தேனீக்கள் வந்து அமரக்கூடிய அழகிய, மணம்நிறைந்த கூந்தலையுடையவளான யசோதை அன்னையால் 'தன் மகன்' என்ற எண்ணத்துடன் வளர்க்கப்படுகின்ற சிறுபிள்ளையான கண்ணபிரானுடைய வாய்க்குள் அடங்கிவிடுமாறு அண்டசராசரம் அனைத்தையும் விழுங்கியிருக்கின்ற சிறுதொண்டை எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள். வனப்பாய் அலங்காரம் செய்துகொண்டுள்ள அழகிய பெண்களை இந்த சிறுபிள்ளையின் சிறுதொண்டையின் அழகினை வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 12

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்


பாடல் 12


மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற*
செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற -
கருமையான, பெரிய கண்களை கொண்டவளான யசோதை அன்னை வளர்க்கின்ற (மை - கருமை; தட - பெரிய; கண்ணி - கண்களையுடையவள்)









செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை -
நீர்நிறைந்த வயல்வெளிகளில் வளரக்கூடிய நீலம் என்னும் கருங்குவளை மலரையொத்த நிறமுடைய சிறுபிள்ளை (செய் - வயல்; நீலநிறம் - நீலம் என்னும் மலரினை ஒத்த நிறம்)

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய -
நேமியும் சங்கும் நிலாவிய நெய்த்தலை கைத்தலங்கள் - திருச்சக்கரமும், திருசங்கும் நிலைத்திருந்த, செழுமையான (நெய்த்தல் - செழித்தல்; நேமி - சக்கரம், வட்டம்; நிலாவிய - நிலைத்திருக்கின்ற)

கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்து காணீரே - எப்பொழுதும், திருசங்கும், சக்கரமும் நிலைத்திருக்கின்ற செழுமையான கைத்தலங்களை வந்து பாருங்கள். காதில், கனமான பொன்னால் செய்யப்பட்ட குண்டலங்களை அணிந்துள்ளவர்களே வந்து பாருங்கள். (கனம் - பொன், பாரம்; குழை - காதணி, குண்டலம்)

பதவுரை:

கருமையான, பெரிய கண்களையுடைய யசோதை அன்னை வளர்க்கின்ற, நீர்நிறைந்த நிலத்தில் மலரக்கூடிய கருங்குவளை மலரையொத்த வண்ணமுடைய இந்த பிள்ளையின், செழுமையான, திருசக்கரமும்திருசங்கும் நிலைத்திருந்த அழகிய கைத்தலங்களை வந்து பாருங்கள். காதில், பொன்னால் செய்யப்பட்ட கனமான குண்டலங்களை அணிந்துள்ளவர்களே வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

பாடல் 11


நாள்களோர் நாலைந்து திங்களளவிலே*
தாளைநிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்*
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்*
தோள்கள் இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.


பொருள்:

நாள்களோர் நாலைந்து திங்களளவிலே -
கண்ணன், ஒரு நான்கு அல்லது ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, (திங்கள் - மாதம்)

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் -
தன் மலர் போன்ற மென்மையான பிஞ்சு பாதங்களை நீட்டி, வண்டிச் சக்கரத்தை உதைத்து, சகரவடிவில் வந்த சகடாசுரன் என்னும் அசுரனை வதம்புரிந்தான். (தாள் - பாதம்; சகடம் - வண்டி, சக்கரம்; சாடி - கொன்று)

கதைச் சுருக்கம்:


கண்ணன் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது, அவனை ஒரு மாட்டுவண்டியின் நிழலில் படுக்கவைத்திருந்தனர்.

கம்சன், கோகுலத்தில் இருந்த குழந்தை கண்ணனைக் கொல்ல, முதலில் பூதனை (பூதகி) என்னும் அரக்கியை அனுப்பினான். அவளைக் கண்ணன் கொன்றுவிடவே, இரண்டாவது முயற்சியாக, சகடாசுரன் என்னும் அசுரனை அனுப்பிவைத்தான்.


சகடாசுரன், கண்ணன் படுத்திருந்த வண்டியின் சக்கரத்திற்குள் சென்று, குழந்தை மேலேறிக் கொல்ல முயன்றான். குழந்தை கண்ணனோ, விளையாட்டுத் தனமாகக், காலை உதைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பாவனையில், சக்கரத்தை ஒரு உதை உதைத்தான்.

'மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது' என்பது போல், குழந்தையின் பிஞ்சு பாதம் பட்ட வேகத்தில் வண்டியின் சக்கரத் தூளாக நொறுங்கி, அதனுளிருந்த அசுரனும் கொல்லப்பட்டான். கொல்லப்பட்டான் என்பதையும் விட, இறைவனின் திருப்பாதம் பட்டு முக்தியடைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

வாள் கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் -
  • கூர்வாள் கொண்டு, கொலைத்தொழில் புரியும், வளைந்த, நீண்ட பற்களை உடைய அசுரர்கள் பலரின் ஆருயிர்களைப் பறித்துக்கொண்டு, அவர்களின் ஆன்மாக்களுக்கு முக்தி அளித்தான்;
  • இதையே வாள்கொள் வளையெயிற்று ன்னு பொருள்கொள்ளலாம், அதாவது, ஒளியுடைய வளைந்த பற்களையுடைய அசுரர்கள் உயிர் வவ்வினான்;
  • மேலும், வளைந்த தந்தமுடைய, குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை பறித்துக்கொண்டவன் என்பதும் பொருத்தமுடையதே.
(வாள் - கூரிய ஆயுதம், ஒளி; எயிறு - பல்; யானைத் தந்தம்)

தோள்கள் இருந்தவா காணீரே சுரீகுழலீர்! வந்து காணீரே - ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோதே, சகடாசுரன் என்னும் அசுரனைத் தன்மலர்ப் பாதங்களால் உதைத்து வதம்புரிந்தான். கூர்வாள்கொண்டு கொலைத் தொழில் புரியும், ஒளியுடைய வளைந்த பற்களை உடைய அசுரர்கள் பல பேரைக் கொன்ற மாவீரனின் தோள்களுடைய வலிமையையும், வனப்பையும் வந்து பாருங்கள; சுருண்ட கூந்தலுடையவர்களே அசுரர்கள் பலரை வதம்புரிந்த இந்த வலிய தோள்களின் வனப்பை வந்து பாருங்கள்.
(சுரி - சுருண்ட; குழலீர் - கூந்தலுடையவர்கள்; சுரிகுழல் - பெண்)


பதவுரை:

பிறந்து, ஒரு நான்கு அல்லது ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, கம்சனால் அனுப்பப்பட்ட, சக்கரவடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனும், அதோடு நில்லாது, கொலைதொழில் புரியும் கூர்வாள் ஏந்திய, ஒளியுடைய வளைந்த பற்களைக் கொண்ட அசுரர்கள் பல பேரைக் கொன்று முக்தி அளத்தவனான, இவனின் தோள்கள் எத்துனை வலிமையானதாகவும், அழகுடையதாகவும் இருக்கின்றன என்பதை வந்து பாருங்கள். சுருண்ட குழலுடைய பெண்களே வந்து பாருங்கள்.

Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

பாடல் 10


பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து* அங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை*
குருமா மணிப்பூண் குலாவித்திகழும்*
திருமார்பு இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து - கண்ணன் குழந்தையாக இருப்பதால், உரலானது அவனைவிடப்பெரியதாகவும், மிகுந்த கனத்துடன் இருந்ததை, பெருமா என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். மிகவும் பெரிய உரலில், கட்டப்பட்டிருந்து, (பெரு - பெரிய, மா - பெரிய, பிணி - கட்டுதல்)

அங்கு இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை - அங்கு, ஒரு சாபத்திற்குக் கட்டுப்பட்டு நெடுங்காலமாய் இருந்த, இரண்டு மருத மரங்களையும் ஒடித்த இந்த சிறுவன்

கதைச்சுருக்கம்:

குபேரனின் மகன்களான, நளகூபரன் (நளகூபன்), மணிக்ரீவன் ஆகிய இருவரும் ஒருமுறை நாரத முனிகளை அவமதித்தக் குற்றத்திற்காக, அவர்களை நாரதமுனி மண்ணுலகில் மரங்களாக இருக்க சாபம் கொடுத்துவிட்டார்.

தங்கள் குற்றத்தை உணர்ந்து இருவரும், முனிவரிடம் மன்னிப்பு வேண்டி, சாபத்திலிருந்து விடுதலைப் பெற வழி சொல்லுமாறும் வேண்டினர். அதற்கு நாரதர், எம்பெருமான் நாராயணன், பூமியில் அவதாரமெடுத்து உங்களை சாபத்திலிருந்து மீட்டருளுவார் என்று கூறினார்.

அதன்படியே, இறைவனின் வருகைக்கும், அருளுக்கும் நெடுங்காலமாகக் காத்திருந்தன அந்த மரங்கள்.

கிருஷ்ணாவதாரத்தில், சிறுபிள்ளையான கண்ணன் செய்த குறும்புத்தனங்களைப் பொறுக்கமாட்டாத யசோதை அன்னை, அவரை ஒரு உரலில் கட்டிவைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு நீளமான கயிறானாலும் அது, இரண்டு அங்குல அளவு குறைவானதாகவே இருந்தது.

வியந்துபோன யசோதை அன்னை, கண்ணனின் திருவிளையாடலைப் புரிந்து கொண்டார். அதன்பின், யசோதை அன்னையின் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி கட்டுப்பட்டார். கயிறு கொண்டு கட்டமுடியாத கண்ணனை, அன்பு கனிந்த உள்ளம் கட்டுபடுத்திவிட்டது.

யசோதை, அவ்விடத்தில் இருக்கும் வரை, ஒன்றும் அறியாத பிள்ளைப்போல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, அமைதியாக நின்றிருந்தான். அவள், அவ்விடத்தைவிட்டு நகர்ந்ததும், இவனும் அவ்விடத்தை விட்டு நகர ஆரம்பித்தான், உரலுடன். உரலை யும் சேர்த்து இழுத்துக் கொண்டே சென்ற அப்பிள்ளை,எதிரில் இருந்த இரண்டு மருதமரங்களின் இடையில் சென்றான். (இந்தமரங்கள் வந்த கதைதான் தெரியுமல்லவா?)

கண்ணன், மரங்களைக் கடந்து சென்றுவிட்டான். ஆனால், உரல்?? அது மரங்களுக்கிடையில் வர இயலாது மாட்டிக் கொண்டது. கண்ணனும் தன் பலம் கொண்ட மட்டும் வலுவாய் இழுத்தான்.

அவன் வலுவுடன் இழுக்கவும், அங்கு நின்றிருந்த மருதமரங்கள் ஒடிந்து போயின. மரங்கள் ஒடிந்து, சாபவிபோச்சனம் பெற்றனர், நளகூபனும், மணிக்ரீவனும். பின் அவர்களிருவரும் இறைவனை வணங்கிவிட்டு, விண்ணுலகம் ஏகினர்.

இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை - முனிவரின் சாபத்திற்கு கட்டுப்பட்டு, அங்கு இருந்த இரண்டு, பெரிய மருத மரங்களை ஒடித்த இந்த பிள்ளை (இறுத்த - முறித்த) முன்னம், எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ன்னு படிச்சது நினைவுக்கு வருமே! ;-))

குருமா மணிப்பூண் குலாவித் திகழும் - உடம்புல சந்தனம் பூசுவாங்க, குருமா வக் கூடவா பூசிக்குவாங்கன்னு நினக்கப்படாது. ;-))

குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் - இறைவனுடன் என்றும் பிரியாது மிகவும் நெருக்கமாய் இணைந்து இருக்கும், மிகுந்த பேரொளியுடன் மின்னுகின்ற, அழகிய துளசிமாலையும் (திருத்துழாய் மாலை), கனமான இரத்தினமாலையும், திருமாலையே தன்வயப்படுத்தி வைத்திருக்கும் திருமறுவான திருமகளும் ஆகிய மூவரும் பொலிவுடன் விளங்கும் (குரு - ஒளிநிறைந்த; மா - பெரிய; மணி - அழகு, துளசி; பூண் - அணி்தல்; குலாவி - நெருங்கிப் பழகி ~அளவளாவி)

திருமார்பு இருந்தவா காணீரே சேயிழையீர்! வந்துகாணீரே - அழகிய, புனிதத்தன்மையுடைய திருத்துழாய்மாலை, பேரொளி மிகுந்த கனமான இரத்தினமாலை (கௌஸ்துபம்), திருமறுவான திருமகள் ஆகிய மூவரும் சேர்ந்து விளக்கமாய் அமைந்து மின்னுகின்ற இந்த பிள்ளையின் திருமார்பை வந்து பாருங்கள். செம்மையான அணிகலன் பூண்டிருக்கும் பெண்களே வந்து இந்தப் பிள்ளையின் பொலிவான திருமார்பைப் பாருங்கள். (சேயிழை - செம்மையுடைய அணிகலன்)

பதவுரை:

தான் செய்த குறும்புத்தனத்திற்காக, யசோதையால் மிகப்பெரிய உரலில் கட்டப்பட்டு, பின் அந்த உரலை இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களை முறித்துவிட்ட இந்தப் பாலகனின், திருமார்பையும், திருமார்பில் மின்னுகின்ற திருமறுவான திருமகள், கனமான இரத்தினமணி, பொலிவுடைய திருத்துழாய் மாலை ஆகியவற்றையும் வந்து பாருங்கள். செம்மையுடைய அணிகலன் அணிந்திருப்பவர்களே வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 9

அதிரும் கடல்நிற வண்ணனை* ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து*
பதரப்படாமே பழந்தாம் பாலார்த்த*
உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே.

பொருள்:

அதிரும் கடல்நிற வண்ணனை - அலைகடல் ஆர்ப்பரிக்கும் பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை

ஆய்ச்சி மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து - ஆய்ச்சியான யசோதை அன்னை, அவனைத் தன்னருகே அழைத்தால் விளையாட்டுக் காட்டித் தன்னிடம் அகப்படாது தப்பித்துவிடுகிறான். அதனால், அவனுக்குப் பால் கொடுப்பதாய்ப் பொய்க் காரணம் கூறி அவனை ஏமாற்றித் தன்னிடம் வரவழைத்தாள் (வஞ்சித்தல் - ஏமாற்றுதல்; மதுரம் - இனிமை)

பதரப்படாமே பழந்தாம்பால் ஆர்த்த - அவன், யசோதையின் கைக்கு சிக்கியதும், அவனை மிகவும் கவனமாய் அருகில் கிடந்த ஆநிரைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய பழைய கயிற்றை எடுத்து, அவனை உரலில் கட்டி வைத்தாள். கட்டி வைத்ததும் சும்மா நில்லாது, உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே நடந்தான் இந்தப் பொல்லாதப் பிள்ளை. அதனால், அவன் வயிற்றில் தாம்புக்கயிற்றின் தழும்பும் தப்பாமல் ஒட்டிக் கொண்டது. (பதர் - மாசு, குற்றம்; தாம்பு - கயிறு)

உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்து காணீரே - யசோதைஅம்மாள் கட்டிய கயிற்றின் தழும்பு அவன் வயிற்றில் இருந்தது. அதைத்தான், தாம்பால் கட்டியதனால், தாம்பின் தழும்புடன் கூடிய வயிறு இருக்ககும் அழகை வந்து பாருங்கள். ஒளிருகின்ற வளையல்கள் அணிந்த பெண்களே வந்து, இந்த தாமோதரனின் வயிற்றழகைப் பாருங்கள். (உதரம் - வயிறு; வளை - வளையல், கையில் அணியும் அணிகலன்)

பதவுரை:
அலைகடல் ஆர்ப்பதைப் போன்று, மிகவாய் குறும்பு செய்துகொண்டிருந்த அலைகடல் வண்ண தேகங்கொண்ட கண்ணனை, இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக ஏமாற்றித் தன்னருகே அழைத்த யசோதை அன்னை, அவனை, அருகிலிருந்த ஒருபழைய கயிற்றால் கட்டி வைத்தாள். கண்ணனின் தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய வயிற்றழகை வந்து பாருங்கள். ஒளிவீசும் வளையல்கள் அணிந்துள்ள பெண்களே வந்து, கண்ணனின் குறும்புக்குப் பலனான தழும்புடன் கூடிய அழகிய வயிற்றை வந்து பாருங்கள்!

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 8

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து*
தந்தக்களிறுபோல் தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு நன்றுமழகிய*
உந்திஇருந்தவா காணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து - கண்ணனுடன் விளையாட வந்திருந்த மற்ற ஆயர்கள் வீட்டுக் குழந்தைகளை எல்லாம் ஏதாவது லொள்ளு செய்து அழவைத்து விட்டு; (மதலை - மழலை; குழாம் - குழு, கூட்டம்; வலி - துன்பம்)

தந்தக் களிறு போல் தானே விளையாடும் - தந்தம் கொண்ட யானையைப் போல் தானே தனி வீரனாக நின்று வென்று விளையாடுகின்ற;

பொதுவாக, குட்டி யானைக்குத் தந்தம் இருக்காது, இது இயல்பு. தந்தம் இருந்தால் அது செய்ற சேட்டைல, அது உடலையே கிழித்தாலும் கிழித்துவிடும். ஆனால், இந்த கண்ணன் எப்படிப்பட்டவனாய் இருந்தானென்றால், மழலைப் பட்டாளம் முன் அவன் தந்தங்கொண்ட ஒரு குட்டி யானையைப் போல் இருந்தானாம்.

குழந்தை உள்ளம், பாலுள்ளம், தயிருள்ளம், தூய வெண்மையான உள்ளம் ன்னு சொல்வாய்ங்க. ஆனா அவங்களுக்கு இருக்குற possessiveness, பெரியவங்களுக்குக் கூட இருக்காது; இருக்க வேண்டிய சமயங்கள் ல்ல. ;-))

தன் தாய்மடியில் தன்னைத் தவிர ஆரும் உட்கரப் படாது; தன் தாய் தன்னைத் தவிர யாரும் தூக்கக் கூடாது. தன் வெளாட்டுப் பொருள்களை வைத்துத் தான் மட்டும் தான் வெளாடனும்.... அதுவும் பாருங்க, இந்த பொம்ம நம்ம குழந்தை விளயாடறதாச்சே, இதக் கொடுத்தா அழுவானேன்ன்னு... அது தொடக் கூடத் தொடாது, எங்காவது மூலையிலத் தூக்கிப் போட்டத எடுத்துவெச்சிருந்து கொடுத்தா, அப்பத்தான், அப்படியே பாசம் பொத்துக்கிட்டு வரும் அந்த பொம்மை மேல. உடனே, அப்புறம் என்ன ஒரே கத்தக் களறித்தான் அந்த இடம். ரெண்டும் ஒன்னோட ஒன்னு, அடிதடி வரைக்கும் கூட போயிடும். ;-))

நந்தன் மதலைக்கு நன்று மழகிய - நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய - மற்ற மழலையரிடத்து, தந்தங்கொண்ட யானைப்பிள்ளைப் போல் இருந்தாலும், தன் தந்தையிடத்து மழலைக் குழந்தையாய் குழைகின்ற கண்ணனுக்கு தடித்தும் இல்லாது, குழியாகியும் இல்லாது, சீர்மையுடன் அமைந்துள்ள அழகான (மதலை - மழலை, குழந்தை)

உந்தி இருந்தவா காணீரே ஒளியிழையீர்! வந்து காணீரே - கொப்பூழ் (தொப்புள்) இருந்த அழகினை வந்து பாருங்கள். மின்னுகின்ற அணிகலன்கள் பூண்டிருப்பவர்களே வந்து, இந்த நந்தன் மைந்தனது, குட்டி யானையினது கொப்பூழ் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதைப் பாருங்கள்! (உந்தி - கொப்பூழ், தொப்பூள்; இழை - அணிகலன்)

பதவுரை:

தன்னுடன் விளையாட வந்த மற்ற ஆயர்க் குழந்தைகள் மத்தியில், தந்தம் கொண்ட யானைப் பிள்ளையைப் போல், அவர்களுக்கு ஏதாவது துன்பம் செய்துவிட்டு, தான் மட்டும் தனியே வென்று விளையாடும், நந்தகோபருடைய மழலைச் செல்வமான இந்த மைவண்ணக் கண்ணனுக்கு, எத்துனை சீரான அழகிய கொப்பூழ் இருக்கின்றதென்பதை, பொலிவுமிகுந்து ஒளிவீசும் பொன் அணிகலன் அணிந்துள்ள பெண்களே இங்கே வந்து பாருங்கள். அவன் கொப்பூழின் சீர்மையையும், அழகையும் வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 7

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை*
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடுபரமன்தன்*
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும்*
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர்! வந்துகாணீரே.

பொருள்:

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனை - நீண்ட, கரிய துதிக்கையையுடைய மதங்கொண்ட யானையையும், அதைக் கட்டுபடுத்தி செலுத்தும் பாகனையும் (இரு - கரிய; கை - யானையின் தும்பிக்கை; களிறு - யானை, ஆண்யானை; ஈர்க்கின்றவனை - இழுப்பவனை, கட்டுப்படுத்துபவனை)

பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடுபரமன்தன் - பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன் - அவர்களைக் கொன்று யானையின் தந்தங்களைப் பறித்துக் கொண்டு ஓடிய பரம்பொருளின் (பருங்கி - கொன்று ~ பருங்குதல் - கொல்லுதல்; )

கதைச்சுருக்கம்:

கம்சன், கோகுலத்திலிருந்த கண்ணனை தந்திரமாக மதுரா நகருக்கு, கம்சனின் தனுர் யாகத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்து, கண்ணனை மதுரையிலேயேக் கொன்றுவிட எண்ணினான்.

கண்ணனும் ஆயர்பாடி மக்களை ஆற்றுபடுத்திவிட்டு, வடமதுரை மாநகருக்கு வந்தான். அங்கே, கம்சனின் அரண்மனைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த, குவலயாபீடம் என்னும் பட்டத்து யானையினை வம்புக்கிழுத்து, அதை சினங்கொள்ளச் செய்து, யானையையும், யானைப் பாகனையும் கொன்றுவிட்டு, யானையின் தந்தங்களைப் பறித்துக் கொண்டு கம்சனை நோக்கி விரைந்தோடினான்.

அதன் பிறகு, சாணூரன், முஷ்டிகன் ஆகிய இரண்டு மல்லர்களையும் கொன்றுவிட்டு, கம்சனையும் வதம் செய்துவிட்டு தன் பெற்றோர்களை சிறைமீட்டான் கண்ணன்.

நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும் - பவளமும் முத்தும் நெருக்கமாய் கோர்க்கப்பட்ட நீண்ட அழகிய அரைஞான் கயிறும் (நேர் நாண் - அரைஞான்கயிறு)

மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர்! வந்து காணீரே - முத்தும் பவளமும் நெருக்கமாய்க் கோர்க்கப்பட்ட அழகிய அரைஞான் கயிறும், இப்பிள்ளையின் இடையில் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள்! பவளமும், முத்தும், பொன் மருங்கும் ஒருங்கு இருக்கும் அழகினையும், அவற்றில் எது சிறப்பாய் பொலிகிறதென்பதனையும் வந்து பாருங்கள். ஒளி பொருந்திய நெற்றியினையுடைய பெண்களே இந்த பரமனின் பவளக்கொடி அணிந்த இடையினை வந்து பாருங்கள்! (மருங்கு - இடை; வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்கள்)

பதவுரை:

நீண்ட, கரிய, பெரிய மதங்கொண்ட குவலயாபீடம் என்னும் கம்சனின் பட்டத்து யானையையும், யானைப் பாகனையும் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்துக் கொண்டு கம்சனை நோக்கி விரைந்தோடிய பரம்பொருளான கண்ணனின், பவளமும் முத்தும் நெருங்கக் கோர்த்த அரைஞாண்கயிறு மின்னுகின்ற அவனின் அழகிய இடையினை வந்து பாருங்கள். ஒளிபொருந்திய நெற்றியினையுடைய பெண்களே, பவளமும் முத்தும் நெருங்கக் கோர்த்து அணிந்திருக்கும் பொன்னிடையில் மின்னுவதனைத்தும் வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 6

மத்தக்களிற்று வசுதேவர் தம்முடை*
சித்தம்பிரியாத தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.

பொருள்:

மத்தக்களிற்று வசுதேவர் தம்முடை - மதங்கொண்ட ஆண் யானையைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய (மத்தக்களிறு - மதங்கொண்ட யானை)

சித்தம்பிரியாத தேவகிதன் வயிற்றில் - மதங்கொண்ட ஆண்யானைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய சிந்தனையை விட்டு எப்போதும் நீங்காமல் இருக்கும், அவரது துணைவியாரான தேவகி அன்னையின் திருவயிற்றில் (சித்தம் - சிந்தனை, நினைவு)

அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் - இதுக்கு எனக்கு என்ன சொல்றது ன்னு சுத்தமா யோசனையே இல்ல... ;-)) (அச்சுதன் - அழிவில்லாதவன், திருமால்)

மாதவிப்பந்தல் இரவி சார் சொன்ன விளக்கங்கள் பின்வருமாறு:-

அத்தத்தின் பத்தாம் நாள்
* அத்தத்தின் முன்னிருந்து பத்தாம் நாள் = திருவோணம்
* அத்தத்தின் பின்னிருந்து பத்தாம் நாள் = ரோகிணி
ஆழ்வார் இரண்டையுமே குறிக்கிறார்! ஏன்-னா கம்சன், ரோகிணியில் பிறந்த குழந்தைகளை எல்லாம் அழிக்கத் துவங்குகிறான்!
அவன் காதுகளுக்கு குழந்தை பிறந்த நட்சத்திரம் போய்ச் சேரக் கூடாது-ன்னு இப்படி வேணும்-ன்னே குழப்படி போல் செய்கிறார்! :)

//அத்தத்தின் பத்தாம் விண்மீன் ன்னுதான சொல்லணும்... பத்தாம் நாள் என்றால்...??//

ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்கள் வரவும் வாய்ப்புண்டு! அதான் நாள் என்று சொல்லிக் கம்சனின் ஒற்றர்களை இன்னும் குழப்புகிறார்!
குழந்தைக்குத் தொட்டில் இடும் விழாவில், நட்சத்திரத்தைச் சொல்ல வேணும் என்ற இக்கட்டு வந்ததால், இப்படி ஒரு தாயுள்ளம்! :)

மேலும் திருவோணம் பெருமாளின் நட்சத்திரம்! அதனால் ஆழ்வார் பொய் சொன்னார் என்ற பேச்சும் வராதபடி நின்றது!

அஸ்தம் = தாயாரின் திருநட்சத்திரம் ஆகையாலே, அவளை முன்னிட்டுச் சொல்லி, குழந்தைக்கு மங்களத்தை உண்டாக்கி வைக்கிறார்!

நன்றி: மிக்க நன்றி, கண்ணபிரான் இரவிசங்கர்.

முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர்! வந்து காணீரே - ஆண்யானைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய சிந்தனையில், என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் அன்னை தேவகியின் திருவயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அழிவற்ற இந்த பாலகனின் முத்தம் இருந்த அழகை வந்துபாருங்கள்! முகிழ்கின்ற குறுநகை உடைய நங்கையரே வந்து பாருங்கள். (முத்தம் - ஆண் உறுப்பு; முகிழ் - அரும்பு; நகை - புன்னகை, சிரிப்பு)

பதவுரை:

மதங்கொண்ட ஆண்யானைப் போன்று வலிமையுடைய வாசுதேவருடைய மனத்தில் என்றும் நீங்காது நிறைந்துள்ள அன்னை தேவகிப் பிராட்டியின் திருவயிற்றில், அத்த நட்சத்திரத்திற்குப் பின் பத்தாவது நட்சத்திரமான இரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அழிவற்றவனான இந்த பாலகனின் முத்தம் இருக்கின்ற அழகை வந்து பாருங்கள். நாணத்துடன் குறுநகைப் புரியும் நங்கையரே, இச்சிறுப்பிள்ளையினை வந்து பாருங்கள்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 5

பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு*
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை*
மறங்கொளிரணியன் மார்பை முன்கீண்டான்*
குறங்குகளை வந்துகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.


பொருள்:

பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு - பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு - ஒரு மானுடப் பெண்ணை போல் உருமாறி, குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்திட்ட பூதனை என்னும் அரக்கியிடத்து பாலுஞ்சுவது போல், பாலோடு, அவள் உயிரையும் சேர்த்து உண்டுவிட்டு,

கதைச்சுருக்கம்:
தேவகியின் திருவயிற்றுதிக்கும் எட்டாவது பிள்ளை, கம்சனின் காலனாக இருப்பவன் என்று அசரீரி கம்சனிடத்து சொன்னதைக் கேட்டு, தங்கையான தேவகியையும் தேவகியின் கணவனையும் சிறையிலடைத்து வைத்துவிட்டான்.

தேவகியின் ஏழாவது கருவில் வந்த பலராமனை, கருவிலேயே இரோகிணியின் கருவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. எட்டாவது குழந்தையாய் கண்ணன் பிறந்தான்.
அவன் பிறந்தவுடனேயே, பெற்றோர்க்கு தன் சுயரூபக் காட்சியைக், சங்கு சக்கரங்கள் ஏந்திய கைகளுடன் பெற்றோர்க்குத் தெய்வக் குழந்தையாய்க் காட்சியளிக்க, பதறிப் போனாள் தேவகி. தேவகியின் வேண்டுகோளுக்கிணங்கி மானுடக் குழந்தையாக மாறினான் கண்ணன்.

இரவில், சிறைச்சாலையில் பிறந்திருந்த கண்ணனை, இரவோடு இரவாக, வசுதேவர் குழந்தையைக் கொண்டு சென்று தன் நண்பனான நந்தகோபரிடத்து, கொடுத்துவிட்டு, அவருடைய பெண்பிள்ளையை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

மறுநாள் காலையில், கம்சன், மாற்றப்பட்ட குழந்தையை சுவற்றில் வீசிக் கொல்ல முயன்ற போது, அது, 'கம்சா! உன்னைக் கொல்லப் போகும் தெய்வக்குழந்தை பாதுகாப்பாய் வேறிடத்து உள்ளது. அவன் கையில் நீ இறக்கப் போவது உறுதி!' என்று கூறிவிட்டு விண்ணிற்கு பறந்து சென்றது.


அதன் பிறகு, தன் தங்கையின் குழந்தை ஆயர்ப்பாடியில் இருப்பதை அறிந்து, குழந்தையைக் கொல்வதற்காக ''பூதனை'' என்னும் அரக்கியை அனுப்பி வைத்தான் கம்சன்.


பூதனையும், சாதாரண மானிடப் பெண்ணைப் போல் உருமாறி, தன் மார்பில் கொடிய விடத்தைத் தடவிக் கொண்டு நந்தகோபரின் மாளிகைக்கு வந்தாள். அழுகின்ற குழந்தையை ஆற்றுவது போல், அவனுக்கு நஞ்சுப் பாலைக் கொடுத்துவிட்டாள் பூதனை. குழந்தையும் அவளிடத்து பாலுண்ணுவது போல் அவளுடைய உயிரையும் அவ்வழியே உண்டுவிட்டது.

அரக்கியாக அல்லாமல், மானுடப் பெண்ணைப் போல் உருமாறி வந்த பூதனையிடத்து, மிகவும் சுவைத்துப் பாலுண்ணும் பாவனை செய்து, பாலுடன் அவள் உயிரையும் சேர்த்து உண்டுவிட்டு (பிறங்கிய - நிலைமாறிய)

உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை - பூதனையைப் பாலுண்ணுவது போல் அவளைக் கொன்றுவிட்டு, ஏதுமறியாது உறங்குவது போல் பாசாங்கு செய்த இந்த சிறுக் குழந்தை

மறங்கொளிரணியன் மார்பை முன் கீண்டான் - மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் - மிகுந்த வீராவேசங் கொண்டு நரசிம்மரிடம் போரிட்ட இரணியனை, தன் தொடை மேல் படுக்க வைத்து, அவன் மார்பைப் பிளந்தானுடைய (மறம் - வீரம்; கீண்டான்- பிளந்தான், கீண்டல் - கிழித்தல், பிளத்தல்)

குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே - மிகுந்த வீராவேசங் கொண்டு போரிட்ட இரண்யகசிபுவைத் தன் தொடை மேலேயே வைத்து அவன் நெஞ்சைப் பிளந்தவனின் தொடையழகை வந்து பாருங்கள். சிறுகுழந்தை ஏந்திய அன்னையர்களே வந்து அவன் தொடையழகைப் பாருங்கள். (குறங்கு - தொடை)

பதவுரை:

அரக்கியாக இல்லாமல், மானுடப் பெண் போல் உருமாறி குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியிடத்து பாலுண்ணும் போது, பாலோடு அவள் உயிரையும் சேர்த்து உண்டுவிட்டு, ஒன்றும் அறியாத பச்சிளம் பிள்ளையாய் உறங்குவது போல் பாசாங்கு செய்த இந்த குழந்தை, வீராவேசங்கொண்டு போர் புரிந்த இரணியனைத் தன் தொடைகள் மேல் வைத்து அவன் மார்பை இரண்டாகப் பிளந்தவனின் தொடையழகை வந்து பாருங்கள். சிறு குழந்தைகளைக் கொண்டுள்ள அன்னையர்களே இங்குவந்து, இச்சிறுப்பிள்ளையின் தொடையழகையும் வலிமையையும் வந்து பாருங்கள்!

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 4

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண*
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்*
பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்*
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே.

பொருள்:

உழந்தாள் நறுநெய் ஓரோர் தடாவுண்ண - அரும்பாடுபட்டு, இந்த குட்டி வாலு கண்ணனையும் வெச்சிகிட்டு, யசோதை அம்மா, பாலிலிருந்து பக்குவமாய் முறையாய் எடுத்து, பானைகளில் பத்திரமாய் வைத்திருந்த நெய்யையெல்லாம், ஒவ்வொரு பானையா கபலீகரம் செய்த; :-))
---காய்ச்சிய பாலில் உரை(கொஞ்சம் தயிரிட்டு)யிட்டு வைத்து, அதை தயிராக்கி, தயிரை நன்கு கடைந்து அதிலிருந்து மணம்மிகுந்த வெண்ணெயைப் பக்குவமாய் எடுத்து, ஒவ்வொருநாளும் சேரும் வெண்ணெயை சேர்த்து வைத்து, அவற்றைப் பாங்காய் காய்ச்சி நெய்யாக்கி, பானைகளில் சேர்த்து வைத்திருந்தாள் யசோதை. (உழந்தாள் - முயன்று நெய்யினை சேர்த்து வைத்தவள்; ஓரோர் - ஒவ்வொரு, தடா - பானை)

குழந்தை கண்ணனோ, வெண்ணெயோடு, மணம் மிகுந்த நெய்யையும் சேர்த்து, ஒவ்வோர் பானையாக சாப்பிட்டுவிட,

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில்மத்தின் - யசோதை பலநாட்களாய் முயன்று சேர்த்துவைத்த வெண்ணெயையும், நெய்யையும் உண்டுத் தீர்த்ததனாலும், அளவுக்கு மீறி உட்கொண்டால் குழந்தைக்கு செரிமானமாகாது போய்விடும் என்று அஞ்சியும், அக்கறையுடன் கூடிய செல்லக் கோபத்தினால், நெய் திருடி உண்டு, அன்னைக்கு அஞ்சி தூண் மறைவில் மறைவாய் நின்ற கண்ணனைத் தன்னருகே இழுத்து, தயிரினைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதற்கு வைத்திருந்த அழகிய மத்தினுடைய, (எரிவு - கோபம்; எழில் - அழகு; மத்து - தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்கப் பயன்படுத்தும் பொருள்)

பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் - தயிர், கொஞ்சமாய் இருந்தால் நாம் வெறும் கையால் சிறு மத்தினைக் கொண்டு கடையலாம். ஆனால், ஆயர்ப்பாடியில் பால்வளம் மிகுந்திருந்ததினால், நிறைய தயிரினை, பெரிய மத்தைக் கொண்டு கடைய வேண்டியிருக்கும். அத்தகைய நிலையில் வெறும் கையினால் உருட்டி தயிர் கடைவது சிரமமானதாகும். எனவே, மத்தின் தண்டுப் பகுதியில் கயிற்றைச் சுற்றிவைத்து, அந்த கயிற்றின் இரு முனைகளையும் பிடித்து, மாற்றி மாற்றி இழுத்தால் தயிர் கடைவது எளிமையாக இருக்கும்.

அருகிலிருந்த தயிர் கடையப் பயன்படுத்திய கயிற்றை எடுத்து ஓங்கிக் கொண்டே யசோதை, கண்ணனைத் துரத்த, அவனும் பயந்துபோய், அவ்விடம் நிற்காது, அங்கும் இங்கும் ஆட்டம் ஆடி, பின் யசோதை அருகில் வந்தவுடன், சட்டென்று கீழே முழங்காலிட்டு, தவழ்ந்துகொண்டே யசோதையிடமிருந்து தப்பிச் சென்றுவிட்டான். (பழந்தாம்பு - பயன்படுத்திய தாம்பு; தாம்பு - கயிறு; ஓச்ச - துரத்த; விரட்ட)

முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே - இவ்வாறு என்னிடம் இருந்து, தவழ்ந்து கொண்டே தப்பிச் சென்ற மாயவனின் முழந்தால் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை, சிறுமிகளே, இளம்பெண்களே அனைவரும் வந்து பாருங்கள். அவன் முழங்காலழகையும், அதைக் கொண்டு அவன் தப்பிக்கும் அழகையும் வந்து பாருங்கள். (முழந்தாள் - முழங்கால், காலின் முட்டிப் பகுதி)

பதவுரை:

யசோதை, அரும்பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த மணமிகுந்த நெய்யினை வைத்திருந்த பானைகளை, ஒவ்வொரு பானையாய் கண்ணன் உண்டுவிட்டான். அதனால் கோபம் கொண்ட யசோதை அன்னை, தூண் மறைவில் நின்ற கண்ணனை இழுத்து, தயிர் கடைவதற்கு பயன்படுத்திய அழகிய மத்தின், கயிற்றினைக் கொண்டு அவனை மிரட்டினாள். கண்ணனோ அன்னை அடித்துவிடுவாளோ என்ற பயத்தில் முழங்காலால் தவழ்ந்துச் சென்றுத் தப்பிவிட்ட, மாலவனின் முழங்காலழகை, ஆயர்பாடி சிறுமிகளே வந்து பாருங்கள்! அவன் முழங்கால் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை பாருங்கள்.

Thursday, September 3, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 3

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை*
அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை*
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்*
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

பொருள்:

சிவந்த பாதமலர்கள், நவஇரத்தினங்கள் மின்னும் விரல்கள்! இப்போது, கார்முகில் வண்ணனின் கணுப்பகுதியைக் காண்போம்!

பணைத்தோள் இளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை - மூங்கிலைப் போன்று வழுவழுப்பான, செழுமையான தோள்களையுடைய இளம் வயதுடைய, ஆய்ச்சியான யசோதையிடத்து, பால்நிறைந்த கொங்கைகளை (பணை - மூங்கில், செழுமை; கொங்கை - மார்பகம்)

அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை - யசோதை ஆய்ச்சியிடத்து நிறைவாய் சுரந்திருந்த தாயமுதத்தினை, அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டு, பசியாற பாலுண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம் பாலகனின்

இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் - இரண்டு கால்களிலும் வெள்ளியால் செய்த காற்சிலம்பு விளக்கமாய் அமைந்து ஒளிவீசும் (இணை - இரண்டு; தளை - கால் சிலம்பு; இலங்கும் - மின்னும், ஒளிரும்)

கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்துகாணீரே - இரண்டு கால்களிலும், வெள்ளியில் செய்த காற்சிலம்பு அமைந்து ஒளிவீசும் அழகிய கணுக்காலினை வந்து பாருங்கள். அழகிய பெண்களே, என் கண்ணனின், கணைக்கால் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள்! (கணைக்கால் - கணுக்கால்; காரிகை - பெண், அழகு)

பதவுரை:

மூங்கிலைப் போன்று வழவழப்பும் உறுதியும் கொண்ட செழிப்பான தோள்களையுடைய, இளமையான யசோதை ஆய்ச்சியினை ஆதரவாய் அணைத்துக் கொண்டு, அவளிடம் பசியாற தாயமுது உண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம்பிள்ளையின், இரண்டுகால்களிலும், வெள்ளியால் செய்த கால்சிலம்பு, அவன் வண்ணத்திற்கு ஏற்றாற்போற் எடுப்பாய் மின்னுகின்ற அந்த கணுக்காலின் அழகினை, அழகிய பெண்களே வந்து காணுங்கள்!