Saturday, August 6, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 11

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.

ஆயர்குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை*
தாயர்மகிழ ஒன்னார்தளரத் தளர்நடை நடந்ததனை*
வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே.

பொருள்:

ஆயர்குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை- மேன்மை மிகுந்த ஆயர் குலத்தில் வந்து வளர்ந்த கரியமை வண்ணனை,

தாயர்மகிழ ஒன்னார்தளரத் தளர்நடை நடந்ததனை- தாயர் மகிழ, ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததை~ ஆயர்குடியில் உள்ள அத்தனைப் பெண்களுக்கும், கண்ணன் அவர்கள் வீட்டுப்பிள்ளை. தாய்மார்கள் மனம் பெருமகிழ்ச்சி அடையவும், பகைவர்கள் அஞ்சி நடுங்கும் வண்ணம் தளர்நடை நடந்த அழகினை

வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார்- அந்தணக்குடியில் பிறந்த, புகழ்மிகுந்த விட்டுசித்தன் என்னும் திருநாமமுடைய பெரியாழ்வார் அவர்கள் பெருமையுடன் சொல்லிய இந்த பாடல்களை மனமுவந்த கூறுபவர்கள்

மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே- கரியமாலவன், மணிவண்ணனின் திருத்தாளினை வணங்கக்கூடிய மக்களைப் பெறுவார்கள்.

பக்தியும், அன்பும்:

பக்தி என்கிற உணர்வு மிகவும் பெருமை மிகுந்தது. மரியாதை செலுத்தக் கூடியது. எல்லோர்க்கும் அந்த உணர்வு வந்துவிடாது. இறைவன்பால் பக்தி செலுத்தக்கூட, இறைவனின் திருவருள் வேண்டும். மானுடனாய் பிறந்த நாம் எத்தனையோ கேளிக்கைகளில் மனம் செலுத்துகிறோம். நிலையில்லாதவற்றின் மேல் பற்றுக் கொள்கிறோம். கோபம், பொறாமை, வஞ்சனை, பேராசை,கர்வம் போன்ற தீய எண்ணங்களுக்கு இடமளித்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். முதலில் பேராசை, அது நிறைவேறாத நிலையில் பொறாமை, பொறாமையின் விளைவு கோபக்கனலில் நம்மை நாமே அழித்துக் கொள்ளுதல். நம்முள் இருக்கும் இத்தகைய தீயனவற்றை எல்லாம் வெளியேற்றி, மனத்தைத் தூய்மைப்படுத்த வல்லது, பக்தி.

பக்தியின் சாரம் சாந்தம், கருணை, பணிவு, மனஅடக்கம். சாந்தமும், கருணையும் உள்ளவர்கள் உள்ளம் என்றும் நிம்மதியில் திளைக்கிறது.மனிதர்கள் வாழும் காலம் வரை இன்பமுடன் இருக்க ஆதாரமே மனநிம்மதி தானே. மனம் நிம்மதி அடைய உள்ளத்தில் பக்தி இருக்க வேண்டும். நம்முடைய பக்தியானது உயர்வானதாக இருக்க வேண்டும். பக்தி என்பதே பேரன்புதானே.

அன்பு:

அன்பின் பரிமாணங்கள்தான் ஆசை, நட்பு, நேசம், காதல், பாசம், பக்தி, மரியாதை, இரக்கம். எத்தனைப் பெயர் வைத்தாலும் அன்பு என்பது ஒன்றே. கொள்கலனின் வடிவம் பெறும் திரவம் போல, அன்பு செலுத்தும் பொருளுக்கேற்ப அதன் பரிமாணம் மாறும். ஆனால் அன்பு மாறாது. ஆகவே, சக உயிரினங்கள் பால் அன்பு செலுத்துவோம்; உயர்வானவற்றின் மேல் அன்பு செலுத்துவோம்; உண்மையான அன்பு செலுத்துவோம். என்றென்றும் இன்பமெய்த உள்ளத்தில் அன்பு என்னும் தீபத்தை ஏற்றுவோம். அன்பானது பகிரும் போதுதான் பலமடங்காகப் பெருகும். அன்பு நிறைந்தோர் நெஞ்சில் அமைதி என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

பதவுரை:

ஆயர்குடியில் வளர்ந்து வந்த அஞ்சனவண்ணன், தன் தாய்மார்கள் மனம் மகிழவும், பகைவர்கள் மனம் அஞ்சும்படியாயும் தளர்நடை நடந்ததை, புகழ்மிகுந்த, அந்தணர் குடியில் பிறந்த விஷ்ணுசித்தன் பெருமையுடன் விவரித்துக்கூறிய பாடல்களை மனமுவந்து கூறுபவர்கள், மாயவன், மணிவண்ணனின் திருத்தாளினைப் பணியக்கூடிய மக்களைப் பெறுவார்கள்.

அடிவரவு:

தொடர் செக்கர் மின்னுக் கன்னல் முன்னல் ஒருகாலில் படர் பக்கம் வெண் திரை ஆயர் பொன்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 10

திரைநீர்ச் சந்திரமண்டலம் போல் செங்கண்மால் கேசவன்* தன்
திருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர*
பெருநீர்த்திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடைநடவானோ.

பொருள்:

திரைநீர்ச் சந்திரமண்டலம் போல் செங்கண்மால் கேசவன்* தன்- அலைகடல்நீரில் தெரியும் உதயசந்திரனைப் போல, செந்தாமரை இதழ்களைப் போன்று சிவந்த நிறமுடைய கண்களை உடைய திருமால், கேசவன் தன்னுடைய (திரை -அலைகடல்; சந்திரமண்டலம் -சந்திரன்; செங்கண்மால் - சிவந்த கண்களையுடைய மாலவன்; கேசவன்-தலைவன் )

திருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர- திரு நீர் முகத்தில் துலங்கும் சுட்டியானது, திகழ்ந்து எங்கும் புடை பெயர;

(திரு - அழகு, நீர் - இயல்பு, குணம், நிலை; துலங்குசுட்டி - தொங்கி ஆடும் நெற்றிச்சுட்டி; துலங்குதல் - பிரகாசித்தல்; திகழ்ந்து - மின்னுதல்~ மின்னி, ஒளிவீசி; புடைபெயர- அசைதல், அசைந்தாட)
குட்டிக்கண்ணனின் முகம் இயல்பாகவே பேரழகு மிக்கதாகவும், ஒளிவீசக்கூடியதாகவும் இருக்கின்றது. அலைகடலானது, இரவில் கருமையாக இருந்தாலும், அது அடர் கருமையாக இருக்காது. தன் மேல் வீசும் நிலவொளியினால், அக்கடல் ஒரு விதமான பிரகாசத்துடன் இருக்கும். இரவில் கடலினைப் பிரகாசப்படுத்த, பொலிவான தேஜஸைக் கொடுக்க நிலவொளித் தேவைப்படுகிறது. ஆனால் கண்ணனுக்கு, அவை எதுவும் தேவை இல்லை. அவனுடைய முகம் இயல்பாகவே பொலிவுடன் விளங்கும்.

அத்தகைய திருமுகத்தில் விலையுர்ந்த, நேர்த்தியான மணிகளால் செய்யப்பட்ட நெற்றிச்சுட்டியானது, அவன் அசைந்து அசைந்து நடக்கும் போது, அச்சுட்டியும் சேர்ந்து அசைந்தாடி, எங்கும் தன் ஒளியினைப் பரவச் செய்கின்றது.

உயர்ந்த, தரமான மணிகளானது, இயல்பாகவே பொலிவானதாகும். அவை, திருமாலின் முகத்தில் இருக்கும் போது, அவனுடலின் பிரகாசத்தால் அவை மென்மேலும் பொலிவுபெறுகின்றன. அவ்வொளியானது, எல்லாத்திக்கிலும் பரவுகின்றன.

பெருநீர்த்திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம் தருநீர் - பெருநீர்த் திரை எழுக்கூடிய கங்கையின் தீர்த்தம் தரக்கூடியதைக்காட்டிலும் மிகப்பெரும் புண்ணியம் தரக்கூடியதான நீர்... எந்த நீர்?

பெரிய, பெரிய அலைகள் எழக்கூடிய கங்கை நீரைக்காட்டிலும், மாபெரும் புண்ணியம் தரக்கூடிய நீரினை

சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடைநடவானோ- குழந்தைக்கண்ணனின் சிறு ஆண்குறியினின்று வெளியேறும் நீரானது சிறுசிறு துளிகளாகச் சிந்தத் தளர்நடை நடவானோ
(சண்ணம் - ஆண்குறி; துள்ளம் - துளி, சொட்டு)

பதவுரை:

அலைகடலின் மத்தியில் இருக்கும் சந்திரனைப் போல, கார்முகில் வண்ணனின் முகத்தில் அமைந்துள்ள நெற்றிச்சுட்டி நாற்புறமும் தன் ஒளியினைப் பரப்பி, கண்ணனுடன் சேர்ந்தாட, கங்கையினும் புனிதமாய, குழந்தைக் கண்ணனின் சிறுநீர் சொட்டு சொட்டாக வீழ சிவந்த கண்களையுடைய மாலவன், கேசவன் தளர்நடை நடப்பானாக!

Friday, August 5, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 9

வெண்புழுதி மேல் பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறுபுகர் படவியர்த்து*
ஒண்போதலர் கமலச் சிறுக்காலுறைத்து ஒன்றும் நோவாமே*
தண்போது கொண்டதவிசின் மீதே தளர்நடைநடவானோ.

பொருள்:

வெண்புழுதி மேல் பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின் கருங்கன்று போல்- வெண்மையான, மணல் புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்டு, அந்த மணலிலேயே உருண்டு, புரண்டு அனுபவித்து விளையாடி மகிழும், சிறிய யானைக்குட்டியினைப் போல (வெண்புழுதி - வெண்மையான புழுதி; அளை - அனுபவித்தல், மகிழ்தல், விளையாடுதல்; வேழம் - யானை)

தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறுபுகர் படவியர்த்து - மூன்றடியில் உலகளந்த எம்பிரான், தெளிந்த புழுதியில், வியர்த்து விறு விறுக்க விளையாடி. நெடுநேரம் விளையாடினமையில், அவன் மேனியெங்கும் வியர்வைத் துளிகள் பூத்து சிறு சிறு அருவியினைப் போல் வழிகின்றனவாம். (தெண் புழுதி - தெளிந்த புழுதி; புகர் - அழகு, அருவி)

ஒண்போதலர் கமலச் சிறுக்காலுறைத்து ஒன்றும் நோவாமே- கதிரவன் உதயமாகிக் கீழ்வானம் வெளுத்து ஒளிரும் இளங்காலைப் பொழுது. அவ்வழகிய காலை வேளையில் தாமரைமொட்டுகள் அனைத்தும், மலரத் தயாராகி இருக்கின்றன. போது நிலையில் உள்ளன. சூரியனின் ஒரு கதிரின் ஒளியும் வெப்பமும் பட்டாலும் போதும், உடனே மலர்ந்து விடும். அத்தகைய நிலையிலுள்ள செந்தாமரை மலரின் போதுவினைப் போன்ற உன் அழகிய சின்னஞ்சிறு பாதங்களுக்கு, சிறு துரும்பு, கல், முள் போன்ற எத்தகைய ஒரு கடினமான பொருளினாலும் தீங்கு விளைந்திடாமல் இருக்கும் வண்ணம் (ஒண்போதலர் - ஒண்+போது+அலர் - ஒளிரும் பொழுது மலரும்; சூரிய உதயத்தின் போது இருக்கும் மலரின் நிலை; கமலம் -தாமரை; உறைத்து -உறுத்துதல், துன்பம்நேர்தல்; நோவாமே - வலிக்காமல் இருக்க)

தண்போது கொண்டதவிசின் மீதே தளர்நடைநடவானோ- அன்னச்சிறகினை ஒத்த மென்மையான மெத்தையில் குளிர்ந்த, முதிர்ந்த, போது நிலையிலுள்ள தண்மையான, மணம் மிகுந்த மலர்களை எங்கும் பரப்பி வைத்துள்ள இந்த தாழ்வான உயரமுடைய, பெரிய கட்டிலின் மேல் தளர் நடைநடவாயோ! (தண்போது - தண்மையான போது - குளிர்ந்த போது நிலையிலுள்ள மலர்; தவிசு - மெத்தை, இருக்கை, ஆசனம், கட்டில் )

புழுதியில் புரண்டது போதும், இந்த மலர் மஞ்சத்தின் மேல் மகிழ்ந்து வா! என்று அழைக்கிறார் பெரியாழ்வார். முன்னம் ஒரு பாடலில் பகைவர்களின் தலைகளின் மேல் நடந்து வராப் போல பாடினவர், இப்போ பூப்பாதையில நடந்து வர்ராப் போல பாடறார்.

"பாத மலர் நோகுமுன்னு, நடக்கும் பாதை வழி பூவிரிச்சேன், திரிவிக்கிரமா!"

பதவுரை:

மண்ணையும் விண்ணையும் ஈறடியில் அளந்து, மூன்றாவது அடிக்கு மன்னவன் தலையினையே அளந்த மன்னாதி மன்னவனே! வெண்மையான புழுதி மணலை, தன் மேனியெங்கும் அள்ளி இறைத்துக் கொண்டும், அம்மணலிலேயே உருண்டு, புரண்டு விளையாடும், சிறிய, கரிய யானைக்குட்டியினைப் போல் தெளிந்த புழுதி தேகமெங்கும் படர, நெடுநேரம் விளையாடியதினால் உன் மேனியில் வியர்வைத்துளிகள் சிறு, சிறு அருவியினைப் போல் வழிந்தோடுகின்றன. கீழ்வானில் சூரிய ஒளி உதயமாகும் பொழுது மலரும் செந்தாமரை மலரினை ஒத்த உன் பாதக்கமலங்களில், ஏதும் உறுத்தாமல், காலுக்கும் வலி ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அன்னச்சிறகினை ஒத்த மென்மையுடைய இந்த மெத்தையில் குளிர்ச்சி மிகுந்த, போது நிலையிலுள்ள இளம் மலர்களைப் பரப்பிவைக்கப்பட்டுள்ள இந்த தாழ்ந்த, பெரிய கட்டிலின் மேல் தளர்நடை நடவாயோ, திரிவிக்கிரமா!

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 8

பக்கம் கருஞ்சிறுப்பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய *
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர*
மக்களுலகினில் பெய்தறியா மணிக்குழவியுருவின்*
தக்கமாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ.

பொருள்:

பக்கம் கருஞ்சிறுப்பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய - மலையின் மேலுள்ள, கரிய, சிறிய, சிறிய பாறைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்தோடும் அருவிநீரின் மேல், சூரிய ஒளியோ, சந்திர ஒளியோ படுகின்ற வேளையில் அந்நீர் பிரகாசிப்பதைப் போன்றது (பகர்ந்து - ஒளிர்ந்து, அனைய - போன்ற)

அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர - குட்டிக்கண்ணனின் இடையில் அணிந்துள்ள அரைஞாண்கயிற்றில் உள்ள சங்குமணிகள், அவன் நடக்கும் போது, இடுப்பிலுள்ள மேடு, பள்ளங்களில் ஏறி, இறங்கி அசைந்தாட (அக்குவடம் - சங்குமணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண்கயிறு, இழிந்தேறி - இழிந்து+ஏறி - இறங்கி, ஏறி; தாழ அணி அல்குல் - தாழ்வான, அழகான, குட்டிக்கண்ணனின் பிறப்புறுப்பு, புடை பெயர - அசைந்தாட)

மக்களுலகினில் பெய்தறியா மணிக்குழவியுருவின்- இப்பூமியிலுள்ள மாந்தர் எவருக்கும் வாய்த்திராத அளவுக்கு அழகுடைய என் மழலைச் செல்வமே (பெய்து அறியா - பெற்று அறியாத, பெற்றிடாத; மணி - அழகு; குழவி உருவின் - குழந்தை வடிவின்)

தக்கமாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ - மேன்மையான, பெரிய நீலமணியின் வண்ணனே, வாசுதேவா தளர்நடை நடவாயோ! (தக்க- மேன்மை மிகுந்த)

பதவுரை:

பூவுலகில் உள்ள மானிடர் எவருக்கும் வாய்த்திராத அளவுக்கு பேரழகுடைய என் மழலைச் செல்வமே! மலையின் மேலுள்ள சின்னஞ்சிறு பாறைகளின் இடுக்குகளிலும், அம்மலையின் மேடு பள்ளங்களிலும் வழிந்தோடும் அருவிநீரின் மேல் சூரிய ஒளி அல்லது சந்திர ஒளி படும்போது, பிரகாசிப்பதைப் போன்று, மேன்மையுடைய நீலமணிவண்ணனின் அரைஞாண்கயிற்றில் கோர்க்கப்பட்ட சங்குமணிகள் இடுப்பிலுள்ள மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கி, பிறப்புறுப்புடன் சேர்ந்து அசைந்தாட, வாசுதேவனே நீ தளர்நடை நடந்து வருவாயாக!

Tuesday, August 2, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 7பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 7

படர்பங்கயமலர் வாய் நெகிழப் பனிபடுசிறுதுளி போல்*
இடங்கொண்ட செவ்வாயூறியூறி இற்றிற்று வீழநின்று*
கடுஞ்சேக்கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணிகணகணென*
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ.

பொருள்:

படர்பங்கயமலர் வாய் நெகிழப் பனிபடுசிறுதுளி போல் - அகன்று, விரிந்த செந்தாமரை மலரின் வாய் திறக்கப்பெற்று, அதனின்று ஊறி வரும் குளிர்ந்த, இனிமை மிகுந்த தேனின் துளியினைப் போல (பங்கயம் - தாமரை; சிறுதுளி - தேன்)இடங்கொண்ட செவ்வாயூறியூறி இற்றிற்று வீழநின்று - குட்டிக்கண்ணனின் பெரிய, செந்தாமரை இதழினை ஒத்த வாயினின்று மேலும் மேலும் ஊறி, முறிந்து முறிந்து கீழே ஒழுகி விழ, நின்று...

மழலைகளின் வாயினின்று ஒழுகும் எச்சிலானது, தண்ணீரினைப் போல சொட்டு சொட்டாக விழாது. அதன் பாகுநிலை அதிகம் என்பதால், தேனைப் போல அது ஒரு நீண்ட கம்பி போல விழும்.

கடுஞ்சேக்கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணிகணகணென- கடும் சே கழுத்தின் - கடுமையான பார்வை, செயல், சுபாவம் கொண்ட காளைமாடு. வலிமை மிகுந்த, கொடுங்கோபமுடைய காளைமாட்டின் கழுத்திலுள்ள மணிகள் ஒன்றையொன்று வேகமாக உரசி எழுப்பும் கனத்த ஒலியினைப் போல, நின் திருவரையில் உள்ள அரைஞாண்கயிற்றில் கோர்க்கப்பட்ட மணிகள் கண கண என சப்திக்க (கடுஞ்சே - கடும் சே - முரட்டுக்காளை; உடைமணி - மணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண்கயிறு)

தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ- உன் அகன்ற பாதங்களை மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து, சார்ங்கம் என்னும் வில்லினை ஆயுதமாக உடையவனே தளர்நடை நடவாயோ. (தடந்தாள் - அகன்ற பாதம்; சார்ங்கபாணி - சாரங்கம் என்னும் வில்லினை ஆயுதமாக உடையவன்)

ஒப்புமை:

விரிந்த செந்தாமரை மலர் - கண்ணனின் வாய்
பங்கய மலர் வாய் - கண்ணனின் செவ்விதழ்
பனிபடு சிறுதுளி தேன் - வாயமுதம்
முரட்டுக் காளையின் கழுத்தில் உள்ள மணிகளின் ஒலி - இடுப்பிலுள்ள அரைஞாண்கயிற்றின் மணிகளின் ஒலி

பதவுரை:

சாரங்கம் என்னும் வில்லினை ஆயுதமாக உடையவனே! அகன்ற, பெரிய, விரிந்த இதழ்களை உடைய செந்தாமரை மலரினுள்ளிருந்து ஊறுகின்ற குளிர்ந்த, இனிமை மிகுந்த தேன்துளியினைப் போன்று, உன் பெரிய, செவ்வாயினின்று ஊறி ஊறி, ஒழுகி வீழ, கடுமை மிகுந்த காளைமாட்டின் கழுத்திலுள்ள மணிகள், ஆரவாரித்து எழுப்பும் பேரொலியினை ஒத்த சப்தத்தினை உன் இடையில் கட்டப்பட்ட அரைஞாண்கயிற்றிலுள்ள மணிகள் உண்டாக்கும் வண்ணம், உன் அகன்ற செம்மலர் பாதங்களினைக் கொண்டு தளர்நடை நடவாயோ!

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 6

ஒருகாலில்சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த*
இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைபட நடந்து*
பெருகா நின்ற இன்பவெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்து பெய்து*
கருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடைநடவானோ.

பொருள்:

ஒருகாலில்சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த - ஒரு காலில் திருசங்கு இலச்சினையும், ஒரு காலில் திருசக்கர இலச்சினையும் பொறித்தவண்ணம் அமைந்துள்ள திருவடிப் பாதங்கள்

இருகாலும் கொண்டு அங்கங்கு எழுதினாற்போல் இலச்சினைபட நடந்து- பாதங்களில் திருசங்குசக்கர இலச்சினைகளைப் பொறித்த அழகிய கால்களைக் கொண்டு அடுத்தடுத்து அடி வைக்கும் வேளையில், பாதங்களிலுள்ள திருசங்குசக்கர ரேகைகள், அச்சுவார்தததைப் போல் உன் பாதம் படும் இடங்களில் எல்லாம் பதியும் வண்ணம் நடந்து

பெருகா நின்ற இன்பவெள்ளத்தின்மேல் பின்னையும் பெய்து பெய்து - ஆனந்தப் பெருவெள்ளம் என் மனதில் ததும்ப ததும்ப நிற்கின்ற போதும், திருசங்குசக்கர ரேகைகள் பூமியெங்கும் அச்சுவார்த்தார்போல் நீ பாதங்களைப் பதித்து நடந்து என்னுள் மென்மேலும் இன்பவெள்ளம் ஊற்றெடுக்கச் செய்யும் வண்ணம்

கருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடைநடவானோ- ஆழ்ந்த கருநிறமுடைய குளிர்ந்த நீரையுடைய பேராழியின் வண்ணதேகமுடையவனே, காமதேவனின் தாதையே தளர்நடை நடவாயோ!

பதவுரை:

குளிர்ந்த நீரையுடைய, அடர்கருநிறங்கொண்ட பெருங்கடலின் வண்ணம் ஒத்த தேகமுடையவனே! மன்மதனின் தந்தையே! உன்னைப் பெற்று, உன் லீலைகள் பலவற்றைக் கண்ணாற கண்டதில் இன்பப் பெருவெள்ளம் என்னுள் ததும்பி ததும்பி நிறைந்துள்ளது. அதில் மென்மேலும் ஆனந்தப்பெருவெள்ளம் ஊற்றெடுக்க, உன் ஒரு காலில் திருசங்கு இலச்சினையும், மற்றொரு காலில் திருசக்கர இலச்சினையும் உள்ளவாறு பொறித்தமைந்த மலர்ப்பாதங்கள் படும் இடங்களில் எல்லாம் அச்சுப் பொறித்தாற் போல் பூமியெங்கும் அத்திருசங்குசக்கர முத்திரைகள் பதியுமாறு தளர்நடை நடவாயோ!

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 5
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோட*
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்*
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்*
தன் நம்பியோடப்பின் கூடச் செல்வான் தளர்நடைநடவானோ.


பொருள்:

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடுமொடு விரைந்தோட-
முன்னே ஒரு குட்டிப்பையன் குடுகுடுவென்று விரைந்தோடுகிறான். யாரு கண்ணன் தானே? அதுதான் இல்ல. அந்த குட்டிப்பையன் எப்படி இருக்கான் னா... வெள்ளிப் பனிமலை வார்த்தெடுத்தவாறு இருக்கானாம் அந்த பையன்.

பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது போல்- அவனைத் தொடர்ந்து பின்னாடியே போறான் இன்னொரு குட்டிப்பையன். இந்த பையன் எப்படி இருக்கான்னா.. கரிய மலையினைப் போன்று இருக்கின்றான். ஓ! அப்ப இதுதான் கண்ணன்.

அது சரி! இப்போ புரிஞ்சுடுச்சு... முன்னாடி போனது, கம்சன் அனுப்பின ஆளா இருப்பான். அவனைப் புடிச்சு துவம்சம் பன்றதுக்காக இச்சிறு பாலகனும் அடிமேல் அடி வைத்துப் போகிறான்.

கொஞ்சம் பொறுத்திருந்து கேள்! ஏன் இந்த அவசரம்! பாடலை முழுசா படி! முன்னாடி ஒரு பையன் வெள்ளிப்பனி மலை போல விரைந்தோடுகிறான்; அவனைத் தொடர்ந்து மற்றொரு குட்டிபையன் கரியகுன்று பெயர்ந்து நகர்வது போல் போகிறான். கருங்குன்று போன்றவன் கண்ணன் என்றால், முன்னால் ஓடுகிற பாலகனைப் பற்றி பின்னால் சொல்கிறார் பாரும்.

பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்-
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப் பலதேவன் என்னும்- தன்னுடைய வீரத்தாலும், புத்தி சாமர்த்தியத்தாலும் அரிய செயல்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடியவன் என்று உலகத்தார் அனைவராலும் போற்றப்படக்கூடியவனும், அழியாப் புகழினை உடையவனுமான பலதேவன் என்னும் (ஓவாப் புகழ் - அழியாப்புகழ்)

so, இப்ப புரிகிறதா! யார் அந்தக் குட்டிப்பையன் என்று. குட்டிக்கண்ணனின் சுட்டி அண்ணன் -பலதேவன்

தன் நம்பியோடப்பின் கூடச் செல்வான் தளர்நடைநடவானோ -
பலதேவன் என்னும் திருப்பெயருடைய தன் தமையனின் பின்னே செல்பவனே, என் செல்வனே தளர்நடை நடவாயோ! (நம்பி - அண்ணன்)
வீட்டில் குழந்தைச் செல்வம் விளையாடுவதே தனி அழகு! அதிலும் அவை ஒன்றையொன்று அனுசரித்து ஒருநேரம் விளையாடுவதும், பின் அவற்றுக்குள் மகாயுத்தம் வந்து வீடே அதகளப் படுவதும் கொள்ளை அழகு!

கண்ணனும், அவன் அண்ணன் பலதேவனும் ஓடுவார், விழுவார் உகந்தாலிப்பார், நாடுவார் நம்பி நானென்று... அண்ணன் ஓட, அவன் பின்னே தம்பி ஓட... தளர்நடை நடக்கும் தம்பி கால் இடறி விழும் வேளையில் அவனைத் தூக்கித் தழுவி, சமாதானம் செய்ய; அஞ்சாதே, உன்னோடு நானிருக்கிறேன் என்று அவனுக்குத் தோள் கொடுத்து உடன் கூட்டிச் செல்ல... எத்துனை அழகிய காட்சி அது. கொள்ளை இன்பம் கொடுக்கும் நிகழ்ச்சி இது.

பதவுரை:


தன் அறிவுக்கூர்மையினாலும், உடல் வலிமையினாலும் அரிய செயல்களை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடியவன் என்று உலகத்தாரால் போற்றப்படுபவனும், அழியாப் புகழினை உடையவனுமான பலதேவன் என்னும் திருநாமம் உடைய தன் அண்ணன் முன்னே பெரிய வெள்ளிமலையினை போன்று மொடு மொடுவென்று விரைந்தோட, பின்னே அவனைத் தொடர்ந்து கரியமலைப் பெயர்ந்து நகர்வதைப் போன்று அடி வைத்து நடப்பவனே அருளாளா, தளர்நடை நடவாயோ!

Thursday, July 28, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 4

கன்னற்குடம் திறந்தாலொத்தூறிக் கணகண சிரித்துவந்து *
முன்வந்து நின்று முத்தம் தரும் என்முகில் வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத்தன் வாயமுதம் தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்*
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடைநடவானோ.

பொருள்:

கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து சிந்துகின்ற தித்திக்கும் சாறினைப் போன்று, எம்பெருமானின் பவளவாயிலிருந்து ஊறுகின்ற அமுதவூறலானது அவன் செவ்வாய்க் கடந்து வெளியே வழிகின்றது.
குழந்தைகளின் வாயில் சுரக்கின்ற உமிழ்நீரினை அவர்களால் வாயினுள்ளேயே வைத்திருக்கத் தெரிவதில்லை. அது வழிந்து அவர்களின் மேனியெங்கும் பரவும்.

அந்த அமுதஊறலைத்தான் பெரியாழ்வார், கருப்பஞ்சாற்றுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார். (கன்னல் - கரும்பு)

கணகண சிரித்து வந்து, முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில்வண்ணன் - மேனியோ கார்முகில் வண்ணம்! அவனின் சிவந்த திருவாயிலிருந்து வாயமுதம் வழிந்தோட, கணகண என்று வெண்கலம் போல் சிரித்துக் கொண்டே, கொஞ்சிக் கொஞ்சி, குழைந்து என் முன்னே வந்து நின்று முத்தம் தருகிறான், என் அருமை மைந்தன், கார்முகில் வண்ணன், கருணை மன்னன்.

பாத்தீங்களா, இதுதான் பெரியாழ்வாருக்கும், ஆயர்பாடி பெண்களுக்கும் உள்ள வித்தியாசம்!
பாலனென்று தாவி அணைச்சாக்க, மாலையிட்டவன் போல் வாயில் முத்தம் தந்துவிடுகிறானாம். அதைச் சொல்ல அந்தம்மாவுக்கு வெக்கம் வேறு வந்துவிடுகிறதாம்!

குழந்தைங்க முத்தமிட்டா சந்தோஷப்படனும்; வெக்கப்படப்படாது!... பெரியாழ்வார் எம்பெருமானைக், மழலை மாறாக் கண்ணனாகப் பார்க்கிறார்; மற்றவர்கள் மனங்கவர் கண்ணாளனாகப் பார்க்கின்றனர்.

திருமார்வன் - வடிவாய் அவன் வல மார்பினில் எப்போதும் வீற்றிருக்கும் திருமகள்! திருமகள் உறைகின்ற மார்வன், அதுதான் திருமார்வன்.

தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் - திருமார்வனைப் பெற்ற எனக்கு, அவனின் திருவாயமுதினைத் தந்து என்னை உயிர்ப்பிக்கிறான்.

திருமகள் உறைகின்ற திருமார்பை உடையவன், அவனையே நினைந்து உறைந்து போய்விட்ட என்னை, அவனே என்னிடத்து வந்து கரும்பினும் இனிய, பனியினும் தண்மையான வாயமுதம் என் முகத்தில் ஒட்ட முத்தம் தந்து உயிர்ப்பிக்கின்றான்.

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடைநடவானோ - தன் மேல் பகைமை கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள் மீது தளர்நடை நடந்து வருவாயா!

இது வரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருந்தது. ஏன் திடீர்ன்னு இப்படி... முள்ளுச்செடியில் இருக்கும் அழகிய மலரினைப் போன்றவன், எம்பெருமான். செடியில் முள்ளாயிருப்பவனும் அவனே! அதே செடியில் மலராய் மலர்பவனும் அவனே! பாலகன் பிரகலாதனை பற்பல தீங்குகளிலிருந்து காத்தவனும் அவனே! அப்பிள்ளையின் அப்பனை, அவன் முன்னேயே வயிற்றைக் கிழித்துக் கொன்று, தன்னுள் கடத்திக் கொண்டவனும் அவனே!

இதுதாங்க தாயுள்ளம்! குட்டிக்கண்ணனே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தளர்நடையிட்டு நடை பழகுகிறான். அந்த நடையையும், தன் பகைவர்களைக் கொன்று அவர்களின் தலைமேல் நடந்து பழகுகிறானாம். வீரம் விளையும் மண்ணு!
(எற்று - எதிர்த்தல், பகை; மாற்றலர் - பகைவர்)

பதவுரை:

கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து, அச்சாறு வழிந்தோடுவதைப் போன்று, கண்ணனின் திருவாயிலிருந்து தித்திக்கும் வாயமுதம் மென்மேலும் ஊறி, மேனியெங்கும் வழிந்தோட, கணகணன்னு (கலீர் கலீர் என்று) வெண்கலப் பாத்திரம் உருளுவதைப் போன்று சிரித்துக் கொண்டே வந்து என் முன் நின்று, திருமகள் உறைகின்ற திருமார்பினை உடையவன்தனைப் பெற்ற எனக்கு முத்தமிட்டு உயிர் கொடுத்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான், அந்த கார்முகில் வண்ணன்! அவன், தன்னை எதிர்க்கும் பகைவர்களை எல்லாம் எதிர்த்து நின்று, வென்று அவர்களின் தலைகளின் மீது தளர்நடை நடந்து வருவானோ!

Sunday, July 24, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 3

மின்னுக்கொடியும் ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்*
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்*
மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக் கழுத்தினில்காறையொடும்*
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடைநடவானோ.

பொருள்:

மின்னுக்கொடியும் ஓர் வெண்திங்களும் சூழ் பரிவேடமுமாய் - கொடி மின்னல், பொன்னிற மின்னுகின்ற மின்னல் கீற்றும், முழுமையான குளிர் வெண்ணிலவும், அந்நிலவினைச் சூழ்ந்திருக்கின்ற பரிவேடமும் ஆகிய இம்மூன்றும் இணைந்திருக்கின்ற வானத்தைக் கற்பனை செய்து பாருங்கள்...

பரிவேடம் ன்னா, பரி ன்னா குதிரை- அப்ப குதிரைக்கு ஏதோ மாறுவேடப்போட்டி வெச்சிருக்காங்கன்னோ, இல்ல, குதிரை வேடமிட்ட மனிதன்னோ நினைச்சுடாதீங்க... இது ஒரு வானியல், ஒளியியல் தொடர்புடைய வார்த்தை.

சூரியனைச் சுற்றியோ, சந்திரனைச் சுற்றியோ ஒரு ஒளிவட்டம் தெரியும். கவனிச்சுருக்கீங்களா?

அதாவது, இரவு நேரத்தில் சந்திரனைச் சுற்றி இருக்கிற மேகங்கள், நல்லா நீரைக் குடிச்சுட்டு, பனிப்படிகங்கள் மாதிரி உறைஞ்சி இருக்கிற போது, அந்த படிகங்கள் எல்லாம் ஒரு முப்பட்டகத்தைப் போல செயல்பட்டு, அதன் மேல் படுகின்ற சந்திரனின் ஒளியைச் சிதறலடிக்கின்றன. அவை சந்திரனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போல் தோன்றுமே அதுதான் பரிவேடம்.

so, இப்ப நீங்களே புரிஞ்சுக்குவீங்க... சில்லென்று குளுமையாக மழை பெய்து ஓய்ந்த இரவு வானம்! ஏற்கெனவே இரவில் வானம் கருப்பா இருக்கும்; இதில் கார்மேகமும் படர்ந்திருக்கு... 1.கருநிறவானம்.

2.பொன்வண்ண மின்னல் கீற்று.
3.பௌர்ணமி நாளின் பால் வெண்ணிலவு.
4.நிலவினைச் சுற்றிலும் பரிவேடம்.


பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும் - பின்னல், துலங்கும் அரசிலை, பீதகச் சிற்றாடை- இடையில் மின்னும் பொன்னாலான அரைஞாண்கயிறு, அதில் கோர்க்கப்பட்ட மிகுந்த பொலிவுடைய தூய வெள்ளியால் செய்த அரசமரத்தின் இலை வடிவிலான ஆபரணம், இடுப்பில் கட்டியுள்ள பட்டுப்பீதாம்பரம் ஆகிய இம்மூன்றனுடன் இணைந்த...

மின்னில் பொலிந்தது ஓர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும் - மின்னல் ஒளியினால் பொலிவு பெறும் மழைமேகம் போலக், கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் அணிகலனுடனும்

தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ - தனக்கே உரித்தான தன் திருமேனிப் பொலிவுடன், இவ்வாடை, ஆபரணங்களின் பொலிவும் ஒன்றுகூட இருடீகேசா(ரிஷிகேசா) தளர்நடை நடந்துவா என் அப்பனே.

முந்தைய பாடலில் கண்ணனின் திருவாயினை வர்ணித்துப் பாடினார், பெரியாழ்வார். இந்தப் பாடலில் அவரின் ஆடை ஆபரணங்களை வர்ணித்துள்ளார்.

கார்மேகம் - கண்ணன் திருமேனி
மின்னல் - இடையிலுள்ள பொன் அரைஞாண்கயிறு, கழுத்திலுள்ள காறை
வெண்திங்கள் - அரசிலை
பரிவேடம் - பீதகவாடை

பதவுரை:

எங்கள் இறைவனே! இருடீகேசா! பொன்னொளி வீசும் மின்னல் கொடி, முழு வெண்ணிலவு, நிலவினைச் சூழ்ந்துள்ள பரிவேடம் ஆகியவற்றைப் போல பொன் அரைஞாண்கயிறு, வெள்ளியினாலான அரசிலை, இடையில் உடுத்திய பொன்னில் தோய்ந்த பட்டாடை ஆகியவற்றுடன், மின்னல் ஒளியினால் பொலிவுறும் கார்முகிலைப் போல கழுத்தினில் அணிந்துள்ள காறையோடும் சேர்ந்து, உனக்கே உரித்தான உன் திருமேனிப் பொலிவுடன் தளர்நடை நடந்து வாராயோ!

Sunday, May 15, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 2

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல*
நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக*
அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்*
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ.

பொருள்:

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல - சிவந்த அந்தி நேர வானத்தில் இருக்கும் பிறைநிலவானது, நமக்கு அது மரக்கிளையில் நுனிக்கொம்பின் இடையில் இருப்பது போல் தோன்றும்.

அந்த காலத்துல, மரங்கள் அடர்ந்து இயற்கை வளம் மிகுந்திருந்தது. அதனால மரக்கிளையின் உச்சியில் னு பாடிருக்காங்க. இப்போ பாடினா, அந்த தண்ணிடேங்க் மேல, இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில, செல்போன் டவர் உச்சியில ன்னு பாடிருப்பாங்க. என்னத்த சொல்ல. சரி டாபிக் மாற வேணாம். பாட்டுக்கு வருவோம்.

இன்னும் முழுதாக இருட்டவும் இல்லை. சூரியன் இல்லாத செங்கிரணங்களின் ஒளியில், கீழ்வானில் தோன்றும் பிறைநிலவைப் போன்று, அந்த பிறை நிலவை எந்த கோணத்தில பார்க்கிறாங்கன்னா, சமவெளிப் பகுதியிலோ, கடல்தாயின் மடியிலோ அல்ல. ஒரு மரக்கிளையின் நுனிப்பகுதியில், அதன் கிளைகளுக்கிடையில்! இந்த அழகிய, ரம்மியமான காட்சியை ஒத்திருந்தது எது?
(செக்கர் - சிவந்த(செவ்வானம்))

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண்பல் முளையிலக - குட்டிக்கண்ணனின், மலர் விரிவதைப் போன்று இதமாய், இனிமையாய் சிரித்த சிவந்த வாயின் வீங்கிய ஈறில் புதிதாக முளைத்து எட்டிப்பார்க்கும் குளிர்ந்த பால் வெண்பற்கள் விளங்க

வாய்த்திண்ணை: அது என்ன வாயா இல்ல கால்வாயா? திண்ணை, மேடை எல்லாம் வெக்கிறதுக்கு ன்னு கேக்காதீங்க. :-)) குழந்தைகளுக்குப் பல் முளைவிட்டு வெளில வரும்பொழுது ஈறுப்பகுதி சிவந்து, கொஞ்சம் சுரந்துப் போய் இருக்கும்(வீங்கினாப் போல). அதத்தான் வாய்த்திண்ணை ன்னு சொல்லிருக்கார் பெரியாழ்வார்.

துவர் - சிவப்பு; துவரம்பருப்பு - துவரம் பருப்பு தோல் சிவப்பா இருக்கும். சிவந்த தோல் உடையதால துவரம்பருப்பு; அதே மாதிரிதான் பச்சைப்பயறு(பாசிப்பருப்பு)

நளிர் - குளிர்; பேச்சுவழக்கில இருக்குற வார்த்தை. தண்ணியில அதிக நேரம் பிள்ளைங்க விளையாடினாக்க, "தண்ணில ரொம்ப நேரம் இருக்காதீங்க, நளிர் எடுக்கும், காய்ச்சல் வந்துடும்" னு சொல்வாங்க. கேட்டுருக்கீங்களா?
(நக்க - நகைக்க, சிரித்த; செந்துவர் - செக்கச் சிவந்த; துவர் - சிவப்பு; வாய்த்திண்ணை - வீங்கிய ஈறு; நளிர் - குளிர்)

அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் - இடையில் சங்குமணிகள் கோர்த்த அரைஞாண் கயிறும், மார்பில் பொன்னாலான ஆபரணமும் அணிந்து, அனந்தன் அணை மேல் அறிதுயில் புரிபவனான எம் பிரான்

ஆமைத்தாலின்னா, அகன்ற பெரிய பதக்கமுடைய ஹாரத்தை சொல்றாங்களோ, தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.
(அக்கு-சங்குமணி)

தக்க மாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ - தரமான நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் புதல்வனே தளர்நடை நடவாயோ!

ஒப்புமை:
செக்கர்வானம் -செந்துவர் வாய்
நுனிக்கொம்பு -வாய்த்திண்ணை
சிறுபிறை -நளிர்வெண்பல்

பதவுரை:
மயங்கும் மாலைப்பொழுதில் மரக்கிளையின் நுனிக்கொம்புகளுக்கிடையில் தோன்றி மின்னும் பிறைநிலவைப் போல புன்சிரிப்பு தவழும் உன் பவழவாயில், சுரந்து சிவந்திருக்கும் ஈறில் முளைத்துவரும் பால்வெண் பற்கள் ஒளிவீச, சிற்றிடையில் கலகலக்கும் சங்குமணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண் கயிறும், மார்பில் ஒளிரும் பொன்ஆபரணமும் அணிந்து, பாற்கடலில் அனந்தன் என்னும் பாம்பணையில் அறிதுயில் புரியும் என்பிரானே! தேர்ந்த நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் மைந்தனே தளர்நடை நடவாயோ!

Monday, May 9, 2011

பெரியாழ்வார் திருமொழி 1- 7 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 1

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப*
படுமும்மதப்புனல்சோர வாரணம்பைய நின்று ஊர்வதுபோல்*
உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க*
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ.

பொருள்:

குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு நிலையையும் கடந்து வரும் வளர்ச்சியும், ஒவ்வொரு நாளும் அவை செய்யும் லீலைகளும், சட்டு, சட்டென்று மாற்றும் பாவனைகளும், பார்க்க பார்க்க அதன் அன்னைக்கு உண்டாகும் பெருமையும், மகிழ்ச்சியும் எழுத்தாலோ, சொல்லாலோ விவரிக்க இயலாத ஒன்று.

தத்துவஞானிகளும், மேதைகளும் மக்களின் நலனுக்காக உரைத்த தத்துவங்களும், சொல்லப்படாத பல தத்துவங்களையும் குழந்தைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லிவிடும்.

வருசத்துக்கு ஒருமுறை வந்துட்டு வியாக்கியானம் பேசி உசுர வாங்காதன்னு நீங்க சொல்றது கேக்குது. எனக்கு கொஞ்சம் இஸ்ஸ்ஸ்டார்ட்டிங்க் இம்சையா இருக்கு... தயவுசெய்து கொஞ்சம் மன்னிச்சூஊ..


பிள்ளைகள், தட்டுத் தடுமாறி, முட்டி மோதி கீழவிழுந்து, விழும்போது யாராவது பார்த்தா அழுது, பார்க்காட்டி 'விடுறா கைப்புள்ள, வாழ்க்கையில இதெல்லாம் சகசமபா ன்னு, அதுவா எழுந்து தத்தித் தத்தி வீறுநடை போடற அழகு இருக்கே... அட! அட!!

இப்போ நாம பார்க்கப் போகிற பத்துப் பாடல்களும் "என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை" ன்னு, குழந்தைகள் தத்தி தத்தி தளர் நடை நடக்கும் பருவத்தைப் பற்றியவையே!

முதல் பாடலில், குட்டிக் கண்ணன் எட்டு வைத்து நடப்பதை யானையின் நடையுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார், தாயுமாகிய பெரியாழ்வார்.

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்கு பொன்மணி ஒலிப்ப - எந்த யானைக்கு எப்போ மதம் பிடிக்கும் ன்னு யார்க்கும் தெரியாது. ஆனா, எந்த யானைக்கு மதம் பிடிச்சாலும் என்ன நடக்கும் ன்னு எல்லார்க்கும் தெரியும். அதனால முன்னெச்செரிக்கையா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுருப்பாங்க.

அப்படி நான்கு கால்களிலும் விலங்குப் பூட்டி இரும்புச் சங்கிலியால கட்டப்பட்டிருக்கறதால யானை நடக்கும் பொழுது சங்கிலியின் உராய்வினால் (சலார் பிலார் ன்னு)சத்தம் உருவாகும்.

நம்ம அஞ்சன வண்ணனும், இளஞ்சூரியன் சாந்தெடுத்து செய்த பொலிவான பொன் ஆபரணங்கள் அணிந்துள்ளான். அவ்வாபரணங்களில் தொங்குகின்ற பொன்மணிகள், குட்டிக் கண்ணனின் நடைக்கேற்ப அசைந்து இசைக்கின்றன.

(தொடர் - விலங்கு; சலார் பிலார் - ஒலிக் குறிப்பு; தூங்கு - தொங்குகின்ற)

படுமும்மதப்புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் - கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால் அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல

(சோர - சொரிய, வழிய; வாரணம் - யானை; பைய - மெல்ல)

உடன்கூடிக் கிண்கிணி யாரவாரிப்ப உடைமணி பறை கறங்க - முதல் அடியுடன் சேர்த்துப் படிங்க... அப்போ உங்களுக்கு முதல் வரியின் அர்த்தமும் புரிஞ்சுடும்.

... தூங்கு பொன்மணியொலிப்ப, உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க - கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப, அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்பரிக்க, இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல் பெருமளவு சத்தம் உண்டாக்க

(கிண்கிணி - சதங்கை, கால் கொலுசு; உடைமணி - அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகள்; கறங்க - ஒலிக்க, சப்திக்க)

தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ - தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து, சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன் தளர்நடை நடக்கமாட்டாயோ?!

(தடந்தாள் - பெரிய பாதம்; சார்ங்கம் - பெருமாள் கொண்டுள்ள பஞ்சாயுதங்களில் ஒன்றான வில்லின் பெயர்)

பதவுரை:

சாரங்கம் என்ற வில்லினை கையில் ஏந்தியவனே! கால்களில் விலங்கு பூட்டி, இரும்புச் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருக்கும் மதயானையானது, அச்சங்கிலி உருவாக்கும் சலார் பிலாரென்னும் பெருத்த ஓசையுடன், தன் கன்னங்களில் மதநீர் வழிந்தோட, மெல்ல மெல்ல அசைந்து நடப்பதை போல குட்டிக் கண்ணனின் மார்பில் அணிந்துள்ள பொன் ஆபரணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொன்மணிகள் சப்திக்க, அவன் செவ்விதழ்களிலிருந்து சிந்தும் நீரானது மார்பில் விழுந்து, வயிற்றில் வழிந்தோட, பொன்மணிகளின் ஒலியோடு பாதசதங்கையின் கிண்கிணிகள் ஆரவாரிக்க, இவற்றுடன் இணைந்து இடுப்பிலுள்ள அரைஞாண் கயிற்றின் மணிகள் பறையொலியினைப் போல் சப்திக்க, தன் பஞ்சு போன்ற பெரியபிஞ்சு பாதங்களை மெல்ல மெல்ல எடுத்து வைத்து தளர்நடை நடந்து வாராயோ!