Sunday, May 15, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 2

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல*
நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக*
அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்*
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ.

பொருள்:

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல - சிவந்த அந்தி நேர வானத்தில் இருக்கும் பிறைநிலவானது, நமக்கு அது மரக்கிளையில் நுனிக்கொம்பின் இடையில் இருப்பது போல் தோன்றும்.

அந்த காலத்துல, மரங்கள் அடர்ந்து இயற்கை வளம் மிகுந்திருந்தது. அதனால மரக்கிளையின் உச்சியில் னு பாடிருக்காங்க. இப்போ பாடினா, அந்த தண்ணிடேங்க் மேல, இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில, செல்போன் டவர் உச்சியில ன்னு பாடிருப்பாங்க. என்னத்த சொல்ல. சரி டாபிக் மாற வேணாம். பாட்டுக்கு வருவோம்.

இன்னும் முழுதாக இருட்டவும் இல்லை. சூரியன் இல்லாத செங்கிரணங்களின் ஒளியில், கீழ்வானில் தோன்றும் பிறைநிலவைப் போன்று, அந்த பிறை நிலவை எந்த கோணத்தில பார்க்கிறாங்கன்னா, சமவெளிப் பகுதியிலோ, கடல்தாயின் மடியிலோ அல்ல. ஒரு மரக்கிளையின் நுனிப்பகுதியில், அதன் கிளைகளுக்கிடையில்! இந்த அழகிய, ரம்மியமான காட்சியை ஒத்திருந்தது எது?
(செக்கர் - சிவந்த(செவ்வானம்))

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண்பல் முளையிலக - குட்டிக்கண்ணனின், மலர் விரிவதைப் போன்று இதமாய், இனிமையாய் சிரித்த சிவந்த வாயின் வீங்கிய ஈறில் புதிதாக முளைத்து எட்டிப்பார்க்கும் குளிர்ந்த பால் வெண்பற்கள் விளங்க

வாய்த்திண்ணை: அது என்ன வாயா இல்ல கால்வாயா? திண்ணை, மேடை எல்லாம் வெக்கிறதுக்கு ன்னு கேக்காதீங்க. :-)) குழந்தைகளுக்குப் பல் முளைவிட்டு வெளில வரும்பொழுது ஈறுப்பகுதி சிவந்து, கொஞ்சம் சுரந்துப் போய் இருக்கும்(வீங்கினாப் போல). அதத்தான் வாய்த்திண்ணை ன்னு சொல்லிருக்கார் பெரியாழ்வார்.

துவர் - சிவப்பு; துவரம்பருப்பு - துவரம் பருப்பு தோல் சிவப்பா இருக்கும். சிவந்த தோல் உடையதால துவரம்பருப்பு; அதே மாதிரிதான் பச்சைப்பயறு(பாசிப்பருப்பு)

நளிர் - குளிர்; பேச்சுவழக்கில இருக்குற வார்த்தை. தண்ணியில அதிக நேரம் பிள்ளைங்க விளையாடினாக்க, "தண்ணில ரொம்ப நேரம் இருக்காதீங்க, நளிர் எடுக்கும், காய்ச்சல் வந்துடும்" னு சொல்வாங்க. கேட்டுருக்கீங்களா?
(நக்க - நகைக்க, சிரித்த; செந்துவர் - செக்கச் சிவந்த; துவர் - சிவப்பு; வாய்த்திண்ணை - வீங்கிய ஈறு; நளிர் - குளிர்)

அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் - இடையில் சங்குமணிகள் கோர்த்த அரைஞாண் கயிறும், மார்பில் பொன்னாலான ஆபரணமும் அணிந்து, அனந்தன் அணை மேல் அறிதுயில் புரிபவனான எம் பிரான்

ஆமைத்தாலின்னா, அகன்ற பெரிய பதக்கமுடைய ஹாரத்தை சொல்றாங்களோ, தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.
(அக்கு-சங்குமணி)

தக்க மாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ - தரமான நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் புதல்வனே தளர்நடை நடவாயோ!

ஒப்புமை:
செக்கர்வானம் -செந்துவர் வாய்
நுனிக்கொம்பு -வாய்த்திண்ணை
சிறுபிறை -நளிர்வெண்பல்

பதவுரை:
மயங்கும் மாலைப்பொழுதில் மரக்கிளையின் நுனிக்கொம்புகளுக்கிடையில் தோன்றி மின்னும் பிறைநிலவைப் போல புன்சிரிப்பு தவழும் உன் பவழவாயில், சுரந்து சிவந்திருக்கும் ஈறில் முளைத்துவரும் பால்வெண் பற்கள் ஒளிவீச, சிற்றிடையில் கலகலக்கும் சங்குமணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண் கயிறும், மார்பில் ஒளிரும் பொன்ஆபரணமும் அணிந்து, பாற்கடலில் அனந்தன் என்னும் பாம்பணையில் அறிதுயில் புரியும் என்பிரானே! தேர்ந்த நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் மைந்தனே தளர்நடை நடவாயோ!

Monday, May 9, 2011

பெரியாழ்வார் திருமொழி 1- 7 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 1

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப*
படுமும்மதப்புனல்சோர வாரணம்பைய நின்று ஊர்வதுபோல்*
உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க*
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ.

பொருள்:

குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு நிலையையும் கடந்து வரும் வளர்ச்சியும், ஒவ்வொரு நாளும் அவை செய்யும் லீலைகளும், சட்டு, சட்டென்று மாற்றும் பாவனைகளும், பார்க்க பார்க்க அதன் அன்னைக்கு உண்டாகும் பெருமையும், மகிழ்ச்சியும் எழுத்தாலோ, சொல்லாலோ விவரிக்க இயலாத ஒன்று.

தத்துவஞானிகளும், மேதைகளும் மக்களின் நலனுக்காக உரைத்த தத்துவங்களும், சொல்லப்படாத பல தத்துவங்களையும் குழந்தைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லிவிடும்.

வருசத்துக்கு ஒருமுறை வந்துட்டு வியாக்கியானம் பேசி உசுர வாங்காதன்னு நீங்க சொல்றது கேக்குது. எனக்கு கொஞ்சம் இஸ்ஸ்ஸ்டார்ட்டிங்க் இம்சையா இருக்கு... தயவுசெய்து கொஞ்சம் மன்னிச்சூஊ..


பிள்ளைகள், தட்டுத் தடுமாறி, முட்டி மோதி கீழவிழுந்து, விழும்போது யாராவது பார்த்தா அழுது, பார்க்காட்டி 'விடுறா கைப்புள்ள, வாழ்க்கையில இதெல்லாம் சகசமபா ன்னு, அதுவா எழுந்து தத்தித் தத்தி வீறுநடை போடற அழகு இருக்கே... அட! அட!!

இப்போ நாம பார்க்கப் போகிற பத்துப் பாடல்களும் "என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை" ன்னு, குழந்தைகள் தத்தி தத்தி தளர் நடை நடக்கும் பருவத்தைப் பற்றியவையே!

முதல் பாடலில், குட்டிக் கண்ணன் எட்டு வைத்து நடப்பதை யானையின் நடையுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார், தாயுமாகிய பெரியாழ்வார்.

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்கு பொன்மணி ஒலிப்ப - எந்த யானைக்கு எப்போ மதம் பிடிக்கும் ன்னு யார்க்கும் தெரியாது. ஆனா, எந்த யானைக்கு மதம் பிடிச்சாலும் என்ன நடக்கும் ன்னு எல்லார்க்கும் தெரியும். அதனால முன்னெச்செரிக்கையா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுருப்பாங்க.

அப்படி நான்கு கால்களிலும் விலங்குப் பூட்டி இரும்புச் சங்கிலியால கட்டப்பட்டிருக்கறதால யானை நடக்கும் பொழுது சங்கிலியின் உராய்வினால் (சலார் பிலார் ன்னு)சத்தம் உருவாகும்.

நம்ம அஞ்சன வண்ணனும், இளஞ்சூரியன் சாந்தெடுத்து செய்த பொலிவான பொன் ஆபரணங்கள் அணிந்துள்ளான். அவ்வாபரணங்களில் தொங்குகின்ற பொன்மணிகள், குட்டிக் கண்ணனின் நடைக்கேற்ப அசைந்து இசைக்கின்றன.

(தொடர் - விலங்கு; சலார் பிலார் - ஒலிக் குறிப்பு; தூங்கு - தொங்குகின்ற)

படுமும்மதப்புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் - கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால் அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல

(சோர - சொரிய, வழிய; வாரணம் - யானை; பைய - மெல்ல)

உடன்கூடிக் கிண்கிணி யாரவாரிப்ப உடைமணி பறை கறங்க - முதல் அடியுடன் சேர்த்துப் படிங்க... அப்போ உங்களுக்கு முதல் வரியின் அர்த்தமும் புரிஞ்சுடும்.

... தூங்கு பொன்மணியொலிப்ப, உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க - கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப, அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்பரிக்க, இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல் பெருமளவு சத்தம் உண்டாக்க

(கிண்கிணி - சதங்கை, கால் கொலுசு; உடைமணி - அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகள்; கறங்க - ஒலிக்க, சப்திக்க)

தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ - தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து, சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன் தளர்நடை நடக்கமாட்டாயோ?!

(தடந்தாள் - பெரிய பாதம்; சார்ங்கம் - பெருமாள் கொண்டுள்ள பஞ்சாயுதங்களில் ஒன்றான வில்லின் பெயர்)

பதவுரை:

சாரங்கம் என்ற வில்லினை கையில் ஏந்தியவனே! கால்களில் விலங்கு பூட்டி, இரும்புச் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருக்கும் மதயானையானது, அச்சங்கிலி உருவாக்கும் சலார் பிலாரென்னும் பெருத்த ஓசையுடன், தன் கன்னங்களில் மதநீர் வழிந்தோட, மெல்ல மெல்ல அசைந்து நடப்பதை போல குட்டிக் கண்ணனின் மார்பில் அணிந்துள்ள பொன் ஆபரணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொன்மணிகள் சப்திக்க, அவன் செவ்விதழ்களிலிருந்து சிந்தும் நீரானது மார்பில் விழுந்து, வயிற்றில் வழிந்தோட, பொன்மணிகளின் ஒலியோடு பாதசதங்கையின் கிண்கிணிகள் ஆரவாரிக்க, இவற்றுடன் இணைந்து இடுப்பிலுள்ள அரைஞாண் கயிற்றின் மணிகள் பறையொலியினைப் போல் சப்திக்க, தன் பஞ்சு போன்ற பெரியபிஞ்சு பாதங்களை மெல்ல மெல்ல எடுத்து வைத்து தளர்நடை நடந்து வாராயோ!