Tuesday, July 28, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து!
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் - 2

ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்*
நாடுவார் நம்பிரான் எங்குத்தானென்பார்*
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே.

பொருள்:

இந்த பாடல், கண்ணன் பிறந்ததால், ஆயர்களும் ஆய்ச்சியரும் எவ்விதம் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர் என்று நம் கண் முன் காட்டுவதாய் உள்ளது.

ஓடுவார் - கண்ணன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஆயர் குல ஆடவரும் பெண்டிரும் நந்தகோபருடைய மாளிகையை நோக்கி விரைந்து ஓடினர்;
விழுவார் - முதல் பாடலில் சொல்லியிருந்த வண்ணம், எண்ணெய் சுண்ணம் கலந்த கண்ணன் முற்றத்தில் இருக்கும் அளற்றில்(சேற்றில்) வழுக்கி விழுந்தனர்; ஆயினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது, விரைந்தெழுந்து கண்ணனை நோக்கி ஓடினர்;
உகந்தாலிப்பார் - பெரும் மகிழ்ச்சி ஆரவாரக் கூச்சல் போட்டு ஒருவரை ஒருவர் உணர்ச்சிப் பெருக்கோடு தழுவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
(உகந்தாலிப்பார் - உகந்து+ஆலிப்பார் - விரும்பி, மகிழ்ச்சியோடு + கூச்சலிடல், ஆரவாரம் செய்தல்)


நாடுவார் நம்பிரான் எங்குத்தானென்பார் - நாடுவார் நம்பிரான் எங்குற்றானென்பார் - மாளிகைக்குள் வந்ததும், எங்கே எங்கள் தலைவன்? எங்கே எங்கள் தலைவன்? எங்கள் தலைவன் எங்கிருக்கின்றான்? என்று கண்ணன் பிறந்திருந்த, இடத்தைத் தேடிச் செல்வர்.

பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று - குழந்தைக் கண்ணன் பிறந்துவிட்ட மகிழ்ச்சி வெள்ளப் பெருக்கில், அவனைத் துதித்துப் போற்றி இன்சுவைப் பாடல்கள் பாடினர்; பல வகையான இசை வாத்தியங்கள் முழங்கின; ஏறுகோட்பறையை உணர்ச்சிப் பொங்கக் கொட்டி முழக்கினர்

ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே - இசைவாத்தியங்களின் இன்னிசைக்கேற்ப பலர் நடனம் புரிந்தனர்; இப்படியாக ஆடலும் பாடலும் மிகுந்தொலிக்கும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கிப் போயிருந்தது ஆயர்பாடி.

பதவுரை:

கண்ணன் பிறந்ததும், ஆயர்பாடியில் இருந்த அனைவரும் எவ்வாறு ஆரவாரித்தனர் என்பதை விளக்குவதாய் உள்ளது இந்த பாடல்:

கண்ணன் பிறந்ததும், ஆயர்பாடியில் இருந்த அனைவரும் அவனைக் காண்பதற்காக விரைந்து, நந்தகோபருடைய மாளிகைக்கு ஓடி வந்தனர். அப்பொழுது அவர்கள், மாளிகை முற்றத்தில் இருந்த எண்ணெயும் சுண்ணமும் கலந்த சேற்றில் வழுக்கி விழுந்தனர்; அதையும் அவர்கள் பொருட்படுத்தாது விரைந்து எழுந்து ''அவர்களின் தலைவன் எங்கு இருக்கின்றான்?'' என்று கண்ணன் பிறந்திருந்த இடத்தைத் தேடிச் சென்றனர்; குழந்தை கண்ணனைக் கண்ட ஆயர்கள் அனைவரும் அவனைத் துதித்து பாடியும், பலவகையான இசைக்கருவிகளை முழக்கியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

Monday, July 27, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து!
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
கலிவிருத்தம்

இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!


வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.

பொருள்:

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளமைந்த மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் - கண்ணன், கேசவன், நம்பி பிறந்த ஈனில்; அதாவது, அழகிய ஒளி நிறைந்த கண்களை உடையவனே, கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனே, கேசவா, அண்டக் குலத்துக்கதிபதியானவனே! நீ திருவவதாரம் புரிந்த கோகுலமானது,

கண்ணன் - ஒளி நிறைந்த கண்களை உடையவன்;
கேசவன் - கேசி என்னும் குதிரை வடிவில் இருந்த அசுரனை வதம் புரிந்தவன். கிருஷ்ணாவதாரத்தில், கண்ணனைக் கொல்வதற்காக கேசி என்னும் அசுரனை அனுப்பினான். ஆனால், இறைவனோ அந்த அசுரனை வதம் புரிந்து கேசவன் என்னும் பெயர் பெற்றான்;
பிறந்தினில் - பிறந்த ஈனில் - ஈன் அப்படின்னா ஈனுதல் - பிரசவித்தல்; இல் - இல்லம், மனை, வீடு - கண்ணன் பிறந்த கோகுலத்தை இங்கு குறிக்கிறது.

கண்ணன் பிறந்தது மதுரா நகரின் சிறைச்சாலையில் என்றாலும், அது யசோதாவுக்குத் தெரியாது. அவள் கண்ணன் தனக்குப் பிறந்த குழந்தை என்றே நினைத்திருந்தாள்.

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட - கோகுலத்தில் கண்ணன் பிறந்த நன்னாளை முன்னிட்டு ஆயர்களனைவரும் நறுமண எண்ணெயையும், வண்ணப் பொடிகளையும் எதிர்படுவோர் அனைவர் மேலும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.

கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்று - கோகுலத்தில் கண்ணன் பிறந்திருந்த நந்தகோபர் மாளிகையின் பரந்து விரிந்திருந்த முற்றமானது, நறுமண எண்ணையும் வண்ணப் பொடிகளும் கலந்ததினால் சேறாய் மாறியிருந்தது! (முற்றம் - வீட்டின் முகப்பில் காற்றும், ஒளியும் வருவதற்கு ஏதுவாய் அமைத்த ஒரு பரந்த திறந்த இடம்; அளறு - சேறு )

கண்ணன் பிறந்தது, வடமதுராவில், ஆனா பெரியாழ்வாரோ திருக்கோட்டியூரைக் குறிப்பிடுகிறாரே என்று கேட்கிறீங்களா??? அதாவது, திருக்கோட்டியூர் பெருமானான பேரழகுமிக்க, சாந்த சொரூபியான ஸ்ரீ சௌமியநாராயணரையே குழந்தைக் கண்ணனாகப் பாவித்து, பிள்ளைத்தமிழ் பாடுகிறார்.

பதவுரை:

ஒளி நிறைந்த நீண்ட கண்களையுடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணன் பிறந்த திருநாளை முன்னிட்டு, அழகிய, நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த, உயரமான மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரானது, கோகுலத்தை மிஞ்சும் வண்ணம் பேரெழில் பெற்றது; ஆயர்களும், ஆய்ச்சியரும், தங்கள் முன் எதிர்படுவோர் அனைவர் மீதும் நறுமண எண்ணையையும், வண்ணப் பொடிகளையும் தூவிக் குதூகலித்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி ஆரவாரச் செய்கையினால், கண்ணன் வீட்டின் பரந்த முற்றமும் நறுமண எண்ணெயும், வண்ணப் பொடியும் கலந்த சேறாய் மாறியிருந்தது.

பெரியாழ்வார் திருமொழியின் இந்த முதல் பத்து முழுதும் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் மீது பாடப்பட்ட மங்களாசாசனம் ஆகும்.

மங்களசாசனம் என்றால் ஏதேனும் திருத்தலத்தில் இருக்கும் தெய்வத்தைத் தரிசித்து, அந்தத் திருத்தலத்தையும், அங்கு இருக்கும் தெய்வத்தையும் பற்றிப் பாடுவது.

Sunday, July 26, 2009

பிள்ளைத் தமிழ் இலக்கியம்!

பிள்ளைத் தமிழ் இலக்கியம்!
பிள்ளைத்தமிழ்:

*பிள்ளைத்தமிழ் இலக்கியமானது, தமிழில் (96) தொன்னூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

*பிள்ளைத் தமிழ் இலக்கியமானது,
இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.

குழந்தையும் அழகு, தமிழும் அழகு; அழகான குழந்தையை அழகியத் தமிழில் பாடப்படும் இந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம் பேரழகு மிக்கது. அதைப் படிக்கும் போது நமக்குள்ளேயே தாய்மைப் பொங்கிவருவதை உணராது இருக்க முடியாது.

*பிள்ளைத் தமிழ் இலக்கியமானது -
1. ஆண்பால் பிள்ளைத் தமிழ்;

2.பெண்பால் பிள்ளைத தமிழ் என இரண்டு வகைப்படும்.

*ஆண்பால் பிள்ளைத் தமிழ்:

1. காப்பு
2. செங்கீரை
3. தால்
4. சப்பாணி
5. முத்தம்
6. வாரானை
7. அம்புலி
8. சிற்றில்
9. சிறுபறை
10. சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களையுடையது.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:

காப்புப் பருவம் முதல் அம்புலி பருவம் ஈறாக உள்ள ஆறு பருவங்களும் இருபாலார்க்கும் பொதுவானது; ஆண்பால் பிள்ளத் தமிழில் கடைசியாக உள்ள சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் மூன்று பருவங்களுக்குப் பதிலாக

8. கழங்கு
9. அம்மானை
10. ஊசல் ஆகிய மூன்று பருவங்களும் பெண்பால் பிள்ளைத் தமிழில் வரும்.

*விளக்கம்:

1. காப்புப் பருவம் - இது குழந்தையின் இரண்டாவது மாதத்தில் பாடுவது.
எந்த குழந்தையாயினும் முதலில் அதற்கு எந்த தீங்கும் நேர்ந்திடா வண்ணம், சிவன், பார்வதி, விநாயகர், திருமால், முருகன் என்று பலத் தெய்வங்களும் குழந்தையைக் காக்க வேண்டி,அவர்கள் மீது பாடல்கள் பாடி, குழந்தைக்குக் காப்பிட வேண்டும்.

2. செங்கீரைப் பருவம் - இது குழந்தையின் ஐந்தாம் மாதத்தில் பாடுவது.
இந்த பருவத்தில், குழந்தை ஓரளவு தவழவும் முயற்சிக்கும்.

அதாவது, குழந்தை தன் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலையை நிமிர்த்தி முகமாட்டும் பருவம். குழந்தை இவ்வாறு செய்யும் போது, அது செங்கீரைக் காற்றில் ஆடுவது போன்று மிகவும் அழகாக, மனமும் அதோடு சேர்ந்து ஆடுற மாதிரி இருக்கும்.

3. தாலப் பருவம் - இது குழந்தையின் ஏழாம் மாதத்தில் பாடுவது.
தால்~நாக்கு. தாய் தன் தாலை ஆட்டிப் பாடும் போது, நாக்கின் அசைவுகளைக் குழந்தைகள் கவனித்துக் கேட்கும். (தாலாட்டுப் பாடும் பருவம்)

4. சப்பாணிப் பருவம் - இது ஒன்பதாம் மாதம் பாடப்படும்.
சப்பாணி என்றால் - கைகளைத் தட்டுதல்; குழந்தைத் தன் இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தட்டி ஆடும் பருவம்.

5. முத்தப் பருவம் - இது குழந்தையின் பதினோறாம் மாதத்தில் பாடுவது.
பெற்றோர், தங்களுக்கு முத்தம் தருமாறு குழந்தையிடம் கெஞ்சும் பருவம்.

6. வாரானைப் பருவம் (வருகை) - இது குழந்தையின் 13ம் மாதத்தில் பாடுவது. குழந்தை தன் ஒரு வருட காலத்தின் நிறைவில் அவர்கள் செய்யும் சாகசம், தளிர் நடைப் போடுதல்.

ஓரளவு நடக்கத் தெரிந்த தன் குழந்தையை, தாய் தன் இரு கைகளையும் முன்னே நீட்டி, தன்னிடம் நடந்து வருமாறு அழைக்கும் பருவம்.

7. அம்புலிப் பருவம் - இது குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் நிகழ்வது.

அம்புலி என்றால் நிலா. நிலவை நோக்கிக் கை நீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம்.

8. சிற்றில் பருவம் - இது குழந்தையின் பதினெட்டாம் மாதத்தில் பாடப்படுவது.

ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் வேறுபடுவது இந்த பருவத்தில் இருந்துதான்.

(சிற்றில் - சிறு+இல் - சிறிய வீடு)பெண்பிள்ளைகள் மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் பொழுது, அவர்கள் மண்வீட்டைத் தன் சிறு பொற் பாதத்தால் உதைத்துக் கலைக்கும் பருவம்.

ஆண்டாள் கூட சொல்வாளே, நாச்சியார் திருமொழியின் இரண்டாம் திருமொழியில்(நாமமாயிரம்), இடைப்பெண்கள் சிற்றில் சிதைக்க வேண்டாவென்று கண்ணனை வேண்டுவர்களே!
'எங்கள் சிற்றில் வந்து சிதையேலே' என்று ஆண்டாள் சொல்லுவா.

9. சிறுபறைப் பருவம் - இது குழந்தையின் பத்தொன்பதாம் மாதத்தில் பாடப்படும்.

ஒரு சிறிய பறையையும் குச்சியையும் வைத்து பறை கொட்டி விளையாடும் பருவம்.

10. சிறுதேர் பருவம் - இது குழந்தையின் இருபத்திஒன்றாம் மாதத்தில் பாடப்படுவது.

இப்பல்லாம், எங்கனா கடைக்குப் போனாக் கூட, அம்மா க்கா..., க்கா.... அப்படின்னு ஒரே அழுவாச்சி பண்ணுதுங்க. அதாவது கார் வேணுமாம். 'க்கா ன்னா கார்'.

அந்த காலத்துல கார் இல்லாததால தேர். பொம்மைத் தேரை உருட்டி விளையாடும் பருவம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:

கழங்காடல் - அதாவது, தாயக்கட்டை மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு உருட்டி விளையாடுவது.
அம்மானை ஆடல் - அம்மானை ன்னா பந்து. பெண்பிள்ளைகள் ஒரு பாட்டு பாடிக் கொண்டே பந்து விளையாடுவாங்க. அப்பொழுது பாடும் பாட்டு 'அம்மானைப் பாட்டு'.
ஊசலாடும் பருவம் - ஊஞ்சல் ஆடி விளையாடும் பருவம்.

அதுமட்டுமல்லாது, நீராடல் பருவம் என்றும் ஒரு பருவம் உண்டு.இவை அனைத்தும் ஒரு பொதுவான பருவம் தான் என்றாலும், அவ்வப் பொழுது வெவ்வேறு பருவங்களும் சேர்த்து, வெவ்வேறு பருவ காலத்தில் பிள்ளைத் தமிழ் பாடுவர்.

எப்படி இருந்தாலும், குழந்தையின் இரண்டாம் மாதம் முதல் இருபத்தி ஒன்றாம் மாதம் வரை உள்ள இந்த பத்துப் பருவங்களும் பிள்ளைத்தமிழ் பாடும் பருவங்களாகும்.

இதைப்பற்றி எல்லாம் இப்போது எதற்கு என்றால், அடுத்து நாமப் பார்க்கப்போறது, பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையைச் சேர்ந்த பாடல்கள்!

ஆம், பெரியாழ்வார் தன்னை யசோதையாகவும், இறைவனைக் குழந்தையாகவும் பாவித்துப் பாடிய பாடல்கள் தான் பெரியாழ்வார் திருமொழி!

பெரியாழ்வார் திருமொழியில் ஒரு தாயின் மனநிலையை அப்படியே அச்சு அசலாகப் பாடலாய்ப் பாடியுள்ளார். ச்சும்மாவா அவர் பெரியாழ்வார் ன்னு அழைக்கப்படுகிறார் ன்னு நீங்க இந்த பெரியாழ்வார் திருமொழியைப் படிக்கும் பொழுது அறிந்து கொள்வீங்க....

தமிழை அமிழ்து ன்னு சொன்னதே, பெரியாழ்வார் திருமொழியைப் படிச்சதுக்குப் பிறகுதானோ ன்னு நினைக்கத் தோணும்!! அவ்வளவு முத்து முத்தா, மணி மணியா சொல்லியிருப்பாரு ஒரு தாயைப் போலவே.

இவர் திருமொழியில் ஆண்பாற் பிள்ளைத் தமிழை எவ்வாறு பாடியிருக்கிறார் என்றால், இவர் பாடிய இந்த திருமொழியில் மேலே சொன்ன பத்துப் பருவங்களிலும் அல்லாத மேலும் சில பருவங்களையும் பாடியுள்ளார்.

பெரியாழ்வார் திருமொழியின் தலைப்புகளும், அதில் அவர் பாடிய பிள்ளைப் பருவங்களும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

முதற்பத்து:
  • முதல் திருமொழி - வண்ணமாடங்கள் (கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
  • இரண்டாம் திருமொழி - சீதக்கடல் (கண்ணனது திருமேனி அழகைப் பாதாதிகேசமாக அனுபவித்தல்)
  • மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி (தாலப்பருவம்- கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்)
  • நான்காம் திருமொழி - தன்முகத்து (அம்புலிப் பருவம் - சந்திரனை அழைத்தல்)
  • ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (செங்கீரைப் பருவம் - தலையை நிமிர்த்தி முகத்தை அசைத்து ஆடுதல்)
  • ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி (சப்பாணிப் பருவம் - கைக்கொட்டி விளையாடுதல்)
  • ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை (தளர்நடைப் பருவம் - தளர் நடை நடத்தல்)
  • எட்டாம் திருமொழி - பொன்னியல் (அச்சோப் பருவம் - அணைத்துக் கொள்ள அழைத்தல்)
  • ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே (தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

இரண்டாம் பத்து:

  • முதல் திருமொழி - மெச்சூது (பூச்சி காட்டி விளையாடுதல்)
  • இரண்டாம் திருமொழி - அரவணையாய் (கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
  • மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு (பன்னிரு நாமம்: காது குத்துதல்)
  • நான்காம் திருமொழி - வெண்ணெயளைந்த (கண்ணனை நீராட அழைத்தல்)
  • ஐந்தாம் திருமொழி - பின்னை மணாளனை (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)
  • ஆறாம் திருமொழி - வேலிக்கோல் (காக்கையைக் கண்ணனுக்குக் கோல் கொண்டுவர விளம்புதல்)
  • ஏழாம் திருமொழி - ஆனிரை (கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)
  • எட்டாம் திருமொழி - இந்திரனோடு (கண்ணனை திருஷ்டி தோஷம் வாராதபடி திருவந்திக் காப்பிட அழைத்தல்)
  • ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய் விழுங்கி (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)
  • பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து (ஆயர்மங்கையர் யசோதையிடம் கண்ணன் தீம்புகளைக் கூறி முறையிடுதல்)

மூன்றாம் பத்து:

  • முதல் திருமொழி - தன்னேராயிரம் (யசோதைப் பிராட்டி கண்ணனது குறும்புகளைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
  • இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை (யசோதைப் பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி கவலையுறுதல்)
  • மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை (கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு யசோதை களிப்புறல்)
  • நான்காம் திருமொழி - தழைகளும் (பசுக்கூட்டம்(காலிப்) பின்னேவரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)
  • ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியைக் குடையாகக் கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
  • ஆறாம் திருமொழி - நாவலம் (கண்ணன் புல்லாங்குழலூதற் சிறப்பு)
  • ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்)
  • எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்துத் தாய் பலபடி வருந்திக் கூறும் பாசுரம்)
  • ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (கிருஷ்ணாவதார இராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இரண்டு தோழியர் எதிரெதிராகக் கூறி உந்திப்பறத்தல் {உந்திபறத்தல்- பெண்கள் பாடியும் குதித்தும் விளையாடும் ஒரு வகை விளையாட்டு.})
  • பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்குத் தூது சென்ற திருவடி{அனுமன்}, பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித் திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழி கொடுத்துக் களிப்பித்தல்)

நான்காம் பத்து:

  • முதல் திருமொழி - கதிராயிரம் (இறைவனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்)
  • இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச் சிறப்பு)
  • மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பு)
  • நான்காம் திருமொழி - நாவகாரியம் (மனம், மெய், வாக்கு ஆகிய முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாதாரை இழித்தும் கூறுதல்)
  • ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (இறைவனிடத்தில் ஈடுபடாமலிருக்கும் சம்சாரிகளுக்கு நற்போதனை(ஹிதோபதேசம்) செய்தல்)
  • ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை ( பெற்றபிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
  • ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கப்படும் திருக்கண்டங்கடிநகர் என்னும் (திருப்பதியின்) திவ்யதேசத்தின் பெருமை)
  • எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)
  • ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)
  • பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாஷிக்கும்படி அப்பொழுது வேண்டுவதற்குப் பதில் இப்பொழுதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்)

ஐந்தாம்பத்து:

  • முதல் திருமொழி - வாக்குத் தூய்மை (நைச்யாநுஸந்தாநம் {நைச்சியானுசந்தானம்}- தன்னைத் தாழ்த்திக் கூறுதல்)
  • இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளைப் போல் விரும்பிப் புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல் {தன் தேகத்தையே, இறைவனின் ஒரு திவ்யதேசமாய் அவர் கருதுகிறார்} )
  • மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவிடமாட்டேனென்று தடுத்தல்)
  • நான்காம் திருமொழி - சென்னியோங்கு (எம்பெருமான் தமது திருவுள்ளதில் புகுந்ததனால் ஆழ்வார் தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)

திருப்பல்லாண்டு அடிவரவு

திருப்பல்லாண்டு அடிவரவு:

திருப்பல்லாண்டின் பன்னிரு பாடல்களையும் வரிசைக்கிரமமாக நினைவில் கொள்ள பின்வரும் வரிசையை நினைவில் கொண்டாலே எளிமையாக இருக்கும்!!

பல் அடி வாழ் ஏடு அண்டம்
எந்தை தீ நெய் உடுத்து - எந்நாள்
அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்!!

திருப்பல்லாண்டில் 12 பாடல்கள் தானே இங்கு 13 சீர்கள் இருக்கின்றனவே என்று கேட்டால், இறுதி சீரான வண்ணம் என்பது அடுத்துத் தொடரும் பெரியாழ்வார் திருமொழியின் முதற்பத்தில், முதல் திருமொழியில் வரும் முதற்சீராகும்.

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் என்பது தான் அடுத்து நாம் பார்க்கப் போகும் பாடல்....

இந்த திருப்பல்லாண்டில், ஒருசில இடங்களில் பெரியாழ்வார் பல்லாண்டு கூறுவனே என்று தன்மை ஒருமையிலும், கூறுதும் என்று கூறுவோம் என்னும் பொருள் வருமாறு தன்மை பன்மையிலும், கூறுமின் அதாவது கூறுங்கள் என்று முன்னிலை பன்மையிலும் குறிப்பிட்டிருக்கிறார். அவை எங்கு எங்கு எவ்வாறு வந்திருக்கின்றன என்பதை எளிதில் நினைவு கொள்ள ஒரு எளிய வழி!

ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின்
அண்டம் என்மின், எந்தை பாடுதும்
தீஉடுத்து எந்நாள் கூறுதும்,
நெய்யும் அல்லும் கூறுவனே!

ஆதி என்பது, இங்கு மூன்றாம் பாசுரத்தைக் குறிக்கிறது.
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்... ...கூறுதுமே;

அநந்தரம் ன்னா அடுத்தது என்று அர்த்தம். அதாவது நான்காம் பாசுரத்தைக் குறிக்கிறது.
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து... ...கூறுமினே;

அண்டக்குலத்துக் கதிபதியாகி... ..... என்மினே;

எந்தை தந்தை ....... ....... பாடுதும்;

தீயிற் பொலிகின்ற,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை,
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுதப்பட்ட
ஆகிய மூன்று பாசுரங்களும் ....... கூறுதுமே எனவும்;

நெய்யிடை நல்லதோர் சோறும்,
அல்வழக்கொன்றுமில்லா அணிக்கோட்டியர்கோன்
ஆகிய இரண்டு பாசுரங்களும் கூறுவனே எனவும் முடியும்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

Saturday, July 18, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 12

திருப்பல்லாண்டு பாடல் -12

இப்பாசுரத்தை இரு முறை சேவிக்க வேண்டும்!

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை* சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே.

பொருள்:

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை - பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்கவென்று பரிசுத்தமான இறைவனை, பரமபதத்தின் நாயகனை, (பவித்திரன் - பரிசுத்தமானவன், பரமேட்டி - பரமபதத்தில் இருக்கும் தலைவன்,மகாவிஷ்ணு)

சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - சாரங்கம் என்னும் வில்லினை ஏந்திய இறைவன் (சாரங்கபாணி) மேல் மிகவும் விருப்புற்று, திருவில்லிபுத்தூரில் வாழும் விட்டுசித்தன் உறைத்த பல்லாண்டினை, (சார்ங்கம் - திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான வில்லின் பெயர்)

நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாவென்று - மிகவும் உன்னதமானதென்று உணர்ந்து இந்த திருப்பல்லாண்டினை விருப்புற்று உரைப்பவர்கள் அனைவரும் நமோ நாராயணா என்னும் திருநாமம் பாடி (நவிலுதல் - சொல்லுதல்)

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே - பல்லாண்டு காலத்திற்கும் உடற்கூட்டினுள்ளும், அண்ட வெளியிலும் ஜீவனாய் இருக்கும் பரமாத்வான பிரானைச் சூழ்ந்திருந்து, அவனை அருகிலிருந்து வணங்கும் பேற்றினைப் பெறுவர். அத்தகைய பேரருளாளர்களுக்கும் பல்லாண்டு பாடுவோமாக!

பதவுரை:

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் என்று, பரிசுத்தமானவனை, பரமபதத்தின் தலைவனை, சாரங்க வில்லினைக் கொண்ட வில்லாளனை, திருவில்லிப்புத்தூர் வாழ் விட்டுசித்தன் என்னும் பெரியாழ்வார் மிகவும் உன்னதமான அன்புடன் பாடிய இந்த திருப்பல்லாண்டு பாடல்களை மிகவும் புனிதமானது என்று உணர்ந்து, திருப்பல்லாண்டினை விருப்புற்று ஓதுபவர்கள் அனைவரும் பல்லாண்டு காலத்திற்கும் ஓம் நமோ நாராயணா என்னும் திருநாமம் பாடி, பரமாத்மாவாய் விளங்கும் இறைவன் நாராயணனினைச் சூழ்ந்து நின்று போற்றும் பாக்கியத்தினைப் பெறுவர். அத்தகைய பாக்கியம் பெற்ற பேரருளாளர்களுக்கும் பல்லாண்டு பாடுவோமாக!

திருப்பல்லாண்டு முற்றிற்று!!

ஓம் நமோ நாராயணாய!
திருமாலின் திருவடிகளே சரணம்!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
எம்பெருமான் அடியவர்கள் திருவடிகளே சரணம்!!!

திருப்பல்லாண்டு - பாடல் 11

திருப்பல்லாண்டு பாடல் 11

இப்பாசுரத்தை இரு முறை சேவிக்க வேண்டும்!

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் *அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பல பரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.

பொருள்:

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் - தீய, கூடாத பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாத, சிறந்த திருக்கோட்டியூர் மக்களின் தலைவனான,(அல்வழக்கு - தீய பழக்கவழக்கங்கள், கோட்டியர் - திருக்கோட்டியூரில் வாழும் மக்கள், கோன் - தலைவன், மன்னன்)

அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் - உன்னைப் பற்றிய எண்ணங்களே எப்பொழுதும் கொண்டு, உனக்குத் திருச்சேவகம் புரிந்த, மேலான செல்வநம்பியைப் போல் திருமாலே, அஞ்சனவண்ணனே! நானும் நினைவுத் தெரிந்த நாளாக உன்னையே நினைத்து உனக்கு சேவை செய்து கொண்டுவரும் பழமையான அடியவன்!(அபிமான - எண்ணம், நினைவு; துங்கன் - உயர்ந்தோன்; பழவடியேன் - பழமையான அடியவன்)

நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி - தூய எண்ணத்துடன், உள்ளன்போடு, நல்ல செயல்களினால் உன்தன் உறைவிடமாய் இருக்கும் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறி உன்தன் புனித பெயர்களையும் புகழையும் பாரெங்கும் பரவி

பலவகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே - பல வகைகளிலும் தூய்மையானவனே, உனக்குப் பல்லாண்டு கூறுவேனே! (பவித்திரன் - தூய்மையானவன்)

பதவுரை:

திருமாலவனே! தீய பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாத சிறந்த மக்களான அணிக்கோட்டியூர் மக்களின் தலைவனான செல்வநம்பி, எப்பொழுதும் உன்னைப் பற்றிய நினைவும், உனக்குச் சேவகமும் புரிந்த மேலான நம்பியினைப் போல் நானும் பிறந்தது முதல் உனக்கே என்றும் திருச்சேவை புரியும் பழமையான அடியவன்! பலவகையிலும் தூய்மையானவனே, அன்பின் வழியில் நமோ நாராயணாவென்று கூறி, உன் புனிதப் பெயர்களையும் புகழையும் உலகெங்கும் பரவச் செய்து, உனக்குப் பல்லாண்டு பாடுவேனே!