Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 11

குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையு மானவனே! ஆயர்கள் நாயகனே*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவென்று*
அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு
ஆனபுகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே.

பதவுரை:


அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையு மானவனே - அன்னப்பறவையாய் அவதரித்து வேதங்களுரைத்தவனே; மீனாய் அவதரித்து மறைகளை மீட்டவனே; நரசிம்மனாய் வந்து நாராயண நாமம் நிலைநிறுத்தினவனே; வாமனனாய் வந்து விண்ணைத்தாண்டி அளந்தவனே; ஆமையாய் வந்து அமரர்களுக்குதவியவனே;

ஆயர்கள் நாயகனே என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவென்று - எங்கள் ஆயர்குலத் தலைவனே, என்பால் இரங்கமாட்டாயா? என் துயரங்களைய மாட்டாயா? ஏழுலகுங் கொண்டவனே இந்த ஏழையின் உள்ளங்குளிர, கண்கள் களிக்க நீ செங்கீரை ஆடமாட்டாயா?

அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு ஆனபுகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த - அன்னமென மெல்ல நடை புரியும் யசோதை அன்னையான, புதுவை நகர் வாழ் இந்த பட்டனின் பரிசான

தமிழ் இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே - இந்த பத்து, இன்றமிழ் இன்னிசை பாக்களைப் பாட மனமுள்ளவர்கள், பாடவல்லவர்கள் உலகின் எட்டுத்திக்கும் புகழ் பெற்று, எல்லையில்லா இன்பம் பெறுவரே.

பொழிப்புரை:

அன்னம், மீன், நரசிம்மன், வாமனனுடன் ஆமை வடிவிலும் அவதரித்தவனே! ஆயர்குல நாயகனே! என் துயரங்களைய மாட்டாயோ? ஏழுலகுங்கொண்டவனே என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவென்று, அன்னம் போல் மெல்ல நடைபுரியும் யசோதை அன்னையின் உள்ளங்கொண்டு, பாடிய புதுவை நகர் வாழ் பட்டன் அளித்த பரிசான இந்த இன்றமிழ் இசை மாலைகளைப் பாட வல்லவர், உலகெங்கும், எட்டுத் திக்கும் புகழ் பெற்று, பேரின்பம் பெறுவரே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 10
செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில்

சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்* அரையில்

தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்

பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*

மங்கள வைம்படையும் தோள்வளையும் குழையும்

மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக*

எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.


பதவுரை:

செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்
- மழலைச் செல்வன் மாதவனின் மென்மையான செந்தாமரைப் போல் சிவந்த பாதங்களில் ஒலிக்கின்ற கிண்கிணிகளும், அச்சிறு பாதத்திலிருந்து, சிறு மொட்டுகள் அரும்பி இருப்பது போல் அமைந்திருக்கின்ற விரல்களில் அணிந்துள்ள மோதிரங்களும் (கழல் - பாதம்; ஆழி - மோதிரம்; கிண்கிணி - கால்சதங்கை, கொலுசு)

அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் - உன் சிற்றிடையில் அணிவிக்கப்பட்டுள்ள, பொன்னாலான அரைஞாண்கயிற்றில் பூட்டப்பட்டுள்ள நல்ல மாதுளம்பூவுடன், பொன்மணிகளும் சேர்ந்து இசைக்க (அரையில் பொன்வடம் - அரைஞாண்கயிறு)

மோதிரமும் கிறியும் மங்கள வைம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக - கைவிரல்களில் அணிந்துள்ள மோதிரம் ஒளி வீச, கைகளில் அணிந்துள்ள பவள வளையல் பளபளக்க, மார்பில் உள்ள மங்கல ஐம்படையும் சேர்ந்தாட, உன் தோளில் உள்ள தோள்வளையுடன் காதில் அணிந்துள்ள மகரகுண்டலமும், வாளியும்(ஒரு வகைக் காதணி), உச்சியில் சுட்டியும் உன் திருமேனி வண்ணத்திற்கு எடுப்பாய் அமைந்து உன்னுடன் சேர்ந்தாடும் வண்ணம் (கிறி - குழந்தைகளின் முன்னங்கைகளில் அணியும் ஒருவகை பவள அணிகலன்; குழை - குண்டலம்; வாளி - ஒருவகை காதணி; சுட்டி - நெற்றிச்சுட்டி)

எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே - எங்கள் ஆயர்குடி ஆதவனே செங்கீரை ஆடுவாயாக! ஏழுலகும் ஆள்பவனே செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை: ஆயர்குல மன்னவா! உன் சிவந்த செங்கமலப்பாதத்தில் அணிந்துள்ள கிண்கிணிகள் ஒலி இசைக்க, அச்சிறு பாதத்தில் அரும்பிய சிறிய விரல்மொட்டுகளில் அணிந்துள்ள மோதிரங்கள் மின்ன, உன் சிற்றிடையில் ஒட்டியுள்ள பொன்னாலான அரைஞாண்கயிறும் அதனுடன் கோர்க்கப்பட்டுள்ள நல்ல மாதுளம்பூவினோடு, பொன்மணிகள் கலகலக்க, கைகளில் - விரல் மோதிரங்களுடன், முன்கையில் உள்ள பவள வளையல் பளபளக்க, மார்பில் அணிந்துள்ள ஐம்படையும் ஆட, காதில் மகரக் குண்டலத்துடன், வாளியும் சேர்ந்தாட, உச்சியில் நெற்றிச்சுட்டித் தானாட செங்கீரை ஆடுகவே! ஏழுலகும் ஆள்பவனே ஆடுக ஆடுகவே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 9
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர*
கோலநறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப்போல் சிலபல்லிலக*

நீலநிறத் தழகா ரைம்படையின் நடுவே
நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ*

ஏலுமறைப் பொருளே! ஆடுக
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.
பதவுரை:

பாலொடு நெய்தயிர் - வேதநாயகனே! நீ உண்ட பால், தயிர், நெய் கலந்த அன்னம் எல்லாம் அவற்றின் நறுமணத்தை உன் தேகத்தின் மேல் விட்டுவிட்டு வயிற்றினுள் சென்றன. அந்த நறுமணம் எங்கும் பரவி வர...

செண்பகமலர்:

ஒண்சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர -
நீலமணிவண்ணத் தேகத்துக்கு எடுப்பாக அமைந்த, குழைவாய் அரைத்து உன் மேனியில் பூசிய சந்தனம் கமகமக்க, மணக்கும் செண்பகமலரும், மாதவனைப் பார்த்து சிரிக்கும் செந்தாமரை மலரும், நல்ல மணத்துடன், மருத்துவக்குணமும் நிறைந்த பச்சைக் கற்பூரமும் உன் மேனியில் ஒய்யாரமாய் படர்ந்து மணம் வீச...

பச்சைக்கற்பூர பழம்:


(ஒண் -பொருந்துதல்; சாந்து - சந்தனம்; சண்பகம் - செண்பக மலர்; பங்கயம் - தாமரை மலர்; கருப்பூரம் - பச்சைக் கற்பூரம்; நாறி வர - இனியமணம் வீசி வர)

பச்சைக்கற்பூரம்:( செடியும், மலரும்)








கோலநறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளைப்போல் சிலபல்லிலக -
வடிவான, இனிய மணங்கமழும் உன் செம்பவள வாயினுள்ளே, அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம், வெள்ளி முளைத்ததைப் போன்று அமைந்த பால்பற்கள் கண்ணைப் பறிக்க...

நீலநிறத் தழகா ரைம்படையின் நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ - நீலமணிவண்ணனே! நீ சிரிக்கும் பொழுது சிந்தும் உன் வாயமுதத்தில் நனைந்து முக்தி பெற்ற ஐம்படைத்தாலியின் நடுவே உன் முகம் பூத்திருக்க... காக்கும் கடவுளுக்கே காப்பா...?? - ஐம்படைத்தாலி! (ஐம்படை - வில், வாள், தண்டு, சங்கு, சக்கரம் ஆகிய பஞ்சாயுதங்களையும் சிறு சிறு வடிவமாக பொன்னிலோ, வெள்ளியிலோ செய்து குழந்தைகளின் கழுத்தில் அணிவிப்பர் - ஐம்படை குழந்தைக்குக் காப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.)

ஏலுமறைப் பொருளே! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே -
வேதங்களுக்குள் பொருந்திய பொருளானவனே! ஏழுலகும் ஆள்பவனே செங்கீரை ஆடுவாயாக!(ஏலும் - பொருந்துதல்)

பொழிப்புரை:

வேதத்தின் வித்தானவனே! விளங்கும் பரம்பொருளே! உன் திருமேனி மேல், நீ உண்ட பாலும் தயிரும் நெய்யும் ஆகியவற்றின் சுகந்தமணம் வீசிவர, அரைத்த சந்தனமும், மணக்கும் செண்பக மலரும், அழகிய செந்தாமரையுடன் நல்ல பச்சைக்கற்பூரமும் உன் மேனியில் படர்ந்து மணம் பரப்ப, வடிவான செம்பவள வாயினுள் வெள்ளி முளைத்ததைப் போன்று விளங்கும் பால்வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம், உன் இதழில் புன்னகை தவழ, உன் வாயமுதத்தில் நனைந்து நனைந்து வீடுபெறு கொள்ளும் திருமார்பில் தவழ்ந்தாடும் ஐம்படையின் நடுவே பூத்திருக்கும் உன் பூமுகம் காற்றிலாட, அதைக் கண்டு என் மனமாட நீலமணிவண்ணனே செங்கீரை ஆடுவாயாக! ஏழுலகும் ஆள்பவனே, அன்னைக்கொரு முறை செங்கீரை ஆடிக்காட்டி அருள்வாயாக!

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 8
குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*
என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி - என்னாஆது தமில் லா?? பெரியாழ்வாரே ஃபெல்லிங் மிஷ்டேக் செய்கிறாரா?? ன்னு யோசிக்க வேணாம்... தம்+இல் - ன்னு பிரிச்சி மேயணும்... ம்ச் பிரிச்சி பொருள் அறியணும்...

ஒக்கலை - முன்னாடியே படிச்சிருக்கோமே! ம் சரியான பதில். இடை ன்னு அர்த்தம்.

ஆயர்பாடியில, அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் ல்லாம், இந்த ச்ச்சின்னப் பையன், குட்டி நந்தனோட அவன் வீட்டில விளையாடிட்டு இருக்கும்போது, அவங்க அப்பா, அம்மா யாராவது வீட்டுக்கு ஏதாவது வேலை செய்யணும், சாப்பிடனும்னு கூப்டும் போது எப்படி இந்த குட்டி வால விட்டுப் பிரிஞ்சுப் போறதுன்னு... அவங்க போம்போதே, இவனையும் அவங்களோட வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவாங்க... அதத்தான் ஆழ்வார் சொல்றாரு...

குட்டிக் கண்ணா! உன்னைத் தங்கள் இடைமேல் இருக்க வைத்துத் தங்கள் வீட்டுக்குச் சென்று

உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழக் - அவங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை உன்னோடு விளையாடியும், உனக்குத் தேவையானவற்றை உனக்கு அளித்து, உன்னை மகிழ்ச்சியாய் விளையாடச் செய்து மகிழ்வித்து, மகிழ்ந்தனர்.

கண்டவர் கண் குளிர, கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருளி மன்னு - சிறுபிள்ளைகளுடன் கண்ணன் சிரித்து விளையாடுவதையும், தன் மழலை மொழியால் கொஞ்சுவதையும் கண்டவர்கள் கண் குளிரப் பெற்றனர்; கற்றவர்களோ, மிகுந்த மகிழ்ச்சியால் வார்த்தைகளை மறந்து மெய்சிலிர்த்து நின்றனர்; அத்தகைய ஒரு பேரானந்த களிப்பை, என் அப்பனே உன்னைப் பெற்ற எனக்கு அருள்வாயாக!

குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ் சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை! ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே! - திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை:

பாலகன் கண்ணனைத் தங்கள் மடிமேல் இருத்தி, சிறுமியரும், பெண்களும் தங்கள் இல்லத்திற்கு அவனை அழைத்துச் சென்று, அவனுக்கு விருப்பமானவற்றை அளித்து, அவனுடன் விளையாடி மகிழும் காட்சியைக் காண்பவர்கள் தங்கள் கண்கள் குளிர கண்டு மகிழ்கின்றனர்; கற்றவர்களோ சொல்வதற்கு வார்த்தையின்றி அவன் மழலைச் சொல்லின் மயக்கத்தில் தடுமாறி நிற்கின்றனர். அத்தகைய ஒரு பேரானந்தத்தை உன்னைப் பெற்ற எனக்கும் அருள்வாயாக! பேரருளாளா! திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 7
துப்புடை யாயர்கள் தம்சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய*
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய* என்
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது - வலிமை நிறைந்த, திறமைசாலிகளான ஆயர்கள் முன்னம் ஒரு காலத்தில் சொல்லி வைத்த சொல் மாறாமல், அவர்கள் வாக்குப்படியே நடந்து கொண்ட நம் கண்ணபிரான்.... அடியவர்கள் வேண்டுகோள் அனைத்தையும் மதித்து நடப்பவன், அவர்கள் துயர் தீர்ப்பவன்- நம்பிரான். இப்ப என்ன வம்பு வந்துச்சு?? யாருக்கு என்ன ஆச்சு?? (துப்பு - வலிமை, திறமை; வழுவாது - பிறழாது)

ஆருக்கும் ஒன்னும் ஆகலை... எல்லாம் நல்ல சேதிதான். அது என்ன சேதின்னு பாட்டுல பாப்போம். மேல படிக்கலாமா... ம்ச்! தொடர்ந்து படிக்கலாம் வாங்க...

தூய கருங்குழல் நல் தோகை மயிலனைய நப்பினை -
ஆகா அதுதான் சேதியா?? ஆஹா! புரிஞ்சுப்போச்சு எனக்கு இப்ப புரிஞ்சுபோச்சு...
ஆமாம் அதேதான். ஒரு குட்டிக்கதை.


கண்ணன், யசோதையின் மைந்தனா, ஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதே, அ
தாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதே, யசோதையின் சகோதரனும், துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் புதல்வியான நப்பின்னைதான் கண்ணனின் வருங்கால மனைவி ன்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.

கண்ணன் தான் எல்லோரின் உள்ளங்கவர் கள்வனாச்சே! நப்பின்னைக்கு மட்டும் பிடிக்காம போகுமா?? நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனா, நப்பின்னையோட அப்பா, ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளை யார் அடக்குறாங்களோ அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக் கொடுப்பேன்னு சொல்லிடறாரு.

எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப் போக, நம்ம மதுரைவீரன், மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அனாயசயமாக அடக்கி, நப்பின்னையைத் திருமணம் செய்து ஆயர்கள் சொன்ன சொல்லையும் மெய்யாக்கிவிட்டார்.

இந்த கதையைத்தான் இந்த பாட்டுல சொல்லியிருக்கார், பெரியாழ்வார்.

தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய நப்பினை தன் - மயிலின் நீண்ட தோகையைப் போன்ற பொலிவான நீண்ட கருங்கூந்தலையுடையவளான நப்பின்னையின்; தோகை மயிலினைப் போன்ற சாயலுடைய நப்பின்னை.

திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே! - நப்பின்னையின் தந்தைக்குச் சொந்தமான வலிமை மிகுந்த, ஏழு காளைகளை ஒடுக்கிய வல்லமையுடைய தலைவனே! (திறமா - வலிமை; விடை- காளை; அவிய - இறக்க, ஒடுங்க; நாதன் - தலைவன்)

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய என் அப்ப! - காணாமல் சென்ற பிள்ளைகளை எல்லாம் தனியொரு ஆளாகச் சென்று மீட்டுவந்து, அவர்கள் தாயிடம் சேர்ப்பித்த என் அப்பனே! (தப்பின - காணாமல் போன)

எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே -
எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை:

வலிமை மிகுந்த ஆயர்கள், உன் சிறு வயதில் முடிவு செய்திருந்த சொல்லை மெய்யாக்கும் வண்ணம், தோகை மயிலனைய சாயலுடைய நப்பின்னையை மணம் முடிப்பதற்காக, அவள் தகப்பனாரின் ஏழு காளைகளையும் அடக்கி நப்பின்னையைக் கரம்பிடித்த தலைவனே! காணாமல் சென்ற பிள்ளைகளை எல்லாம் தனியாளாகச் சென்று மீட்டு வந்து பாதுகாப்பாக அவர்கள் அன்னையிடம் ஒப்புவித்த என் அப்பனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுகவே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 6

காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!
கானக மாமடுவில் காளிய னுச்சியிலே*
தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!
துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே!*
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்!*
ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

காயமலர் நிறவா! கருமுகில் போல் உருவா! கானக மாமடுவில் காளியன் உச்சியிலே - அடர்நீல வண்ணமுடைய காசா மலர் வண்ண தேகங்கொண்டவனே! குளிர் மழை பொழிகின்ற, கடல் நீருண்டு கருவுற்ற கருமேகங்களைப் போல் கண்ணுக்கும், மனத்தினுக்கும் குளிர்ச்சித் தரத்தக்க உருவங்கொண்டவனே! (காயமலர் - காயாமலர், காசாமலர்; கானகம் - வனம், காடு; மடு - ஆற்றின் உட்பள்ளம், குளம்)



காளிங்க நர்த்தனம்:

பிருந்தாவனத்தை ஒட்டி செல்லுகின்ற, யமுனை நதியின் ஒரு பகுதியில் இருந்த மடு ஒன்றில் , கடுமையான விடத்தைக் கக்கக் கூடிய கருநாகம் ஒன்று வசித்து வந்தது. அதன் பெயர் காளியன்.
(அவனுக்கு நூறு தலைகள் இருந்ததாகவும், ஐந்து தலைகள் இருந்ததாகவும் இருவகைகளாகக் கூறுகின்றனர். பெரியாழ்வார் ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே ன்னு சொல்லிருக்காரு. கதைகள் ல்ல, அவனுக்கு நூறு தலைகள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் வந்து தெளிவுபடுத்துங்களேன்.) அவன் கக்கின விடமானது, அப்பகுதியின் நிலம், நீர், காற்று ஆகியவற்றில் எல்லாம் கலந்து விடவே, அப்பகுதி முழுவதும் விடத்தன்மை எய்திப் போனது.

எனவே மக்களும், கால்நடைகளும் எவரும் அப்பகுதிக்குச் செல்வதில்லை. ஒருநாள், சிறுவன் கண்ணன், தன் தோழர்களுடன் பிருந்தாவனத்தில் பந்து விளையாடிக்கொண்டிருக்கையில், பந்து தவறிப் போய் காளியன் வாழ்ந்து கொண்டிருந்த மடுப்பகுதியில் விழுந்து விட்டது.

சிறுவனான கண்ணபிரானோ, அப்பந்தை தான் எடுத்து வருவதாகக் கூறி மடுவின் கரைப்பகுதியில் இருந்த கடம்ப மரத்தில் ஏறி, மடுவை நோக்கிப் படர்ந்திருந்த கிளை வழியாக மடுவினுள் குதித்து விட்டான்.

கண்ணபெருமான் மடுவிற்குள் குதித்ததால் ஏற்பட்ட, நீரின் சலசலப்பானது, காளிங்கனை நடுங்குறச் செய்யத்தக்கதாய் இருந்தது. சினந்து, சீறிட்டெழுந்த காளிங்கனை அடக்கி, அவன் தலைமீதேறி நர்த்தனம் புரிய ஆரம்பித்தான் இறைவன்.

கண்ணனைத் தாக்க முயன்ற ஒவ்வொரு தலைகளின் மீதும், தாவித் தாவி மிதித்து, அத்தலைகளை அடக்கி அவற்றின் மீது நடனமாடி, காளிங்கனை ஆட்கொண்டான். கண்ணனின் திருவடிகள் படக்கூடிய பெரும்பேறு பெற்ற, காளிங்கன் அம்மடுவை விடுத்து வேற்றிடம் சென்றான்.



தூய நடம் புரியும் சுந்தர என் சிறுவா! துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே! - பிருந்தாவனத்திற்கருகில் இருந்த கானகத்தில் இருந்த பெரிய மடுவில் வசித்து வந்த கொடிய விடத்தைக் கக்கி அங்கிருந்த பூமியையும், பூங்காற்றையும், தேன்புனலையும் தீதாக்கிக் கொண்டிருந்த காளிங்கன் என்னும் கருநாகத்தினை அடக்கி, அதன் தலைகள் மீதேறி நன்னடனம் புரிகின்ற அழகனே என் மைந்தனே! அரச குலத்தவரையும், அவர்களுக்கொப்பானவர்களையும் மட்டுமே ஏந்திச் செல்லக்கூடிய பெருமையுடைய பட்டத்து யானையை, - மதுராபுரியின் பட்டத்து யானையான குவலயாபீடத்தின் கொம்புகளை சீறிப் பாய்ந்து பறித்தவனே! (நடம் - நடனம், நர்த்தனம்; துங்கம் - உயர்வு, பெருமை; கரி - யானை; கொம்பு - தந்தம்)

ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்தாடிய தாளிணையாய்! - கம்சனிடமிருந்து பெறக்கூடிய ஆதாயத்திற்காக, கம்சனுக்கு ஆதரவாக கண்ணபெருமானிடமும் பலராமரிடமும் மல்யுத்தம் புரிய வந்தவர்களை எல்லாம் சிறிதும், பதற்றப்படாமல் பரபரப்பில்லாமல் அவர்களை அழித்தாடிய வலிமைமிகுந்த, அதேசமயம் மலரினும் மெல்லிய, செவ்விய திருவடிகளைக் கொண்டவனே! (ஆயம் - ஆதாயம்; பொருவான் - ஒப்புவான்; மல்லு - மற்போர்; அந்தரம் - பதற்றம்; தாள் - பாதம்; இணை - இரண்டு)

ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - நல்லவர்களுக்குக் குளிர் மழையாகவும், அல்லவர்களுக்குக் கொடும்புயலாகவும் தோன்றவல்லவனே, என்றும் வெற்றித்திருநடனம் புரிபவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒருபொழுது, செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை:

கருநீல காயாமலரின் வண்ண தேகங்கொண்டவனே! குளிர்மழைப் பொழிகின்ற கருமேகத்தைப் போன்ற உருவங்கொண்டவனே! பிருந்தாவனத்திற்கருகில் உள்ள காட்டிலிருந்த பெரியமடுவில் வசித்து வந்த நூறு தலைகளைக் கொண்ட காளியன் என்ற பெரிய கருநாகத்தை அடக்கி, அதன் தலைகளின் மேல் நல் நடனம் புரிந்த அழகனே! என் மைந்தனே! அரச குலத்தவரை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய பெருமைமிகுந்த பட்டத்து யானையின் கொம்புகளைப் பறித்தவனே! கம்சனிடமிருந்து பெறக்கூடிய நன்மைக்காக, உன்னை எதிர்க்க வந்த மல்யுத்தவீரர்களை எல்லாம்,மிகவும் எளிமையாக, எவ்வித பதற்றமோ பரபரப்போ இல்லாமல் அழித்து, உன் இரு திருவடிகளாலும் மதுராபுரியில் வெற்றித் திருநடனம் புரிந்தவனே! உன் கருமேக தேகம், காண்பவரைப் பொறுத்தது. நல்லவர்களுக்குக் குளிர்மழையாகவும், பொல்லாதவர்களுக்குக் கடும் புயல் மழையாகவும் பொழிய வல்லவனே, எனக்கு ஒரு பொழுது செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! காளியன் மீதும், மதுராபுரியிலும் வெற்றித்திருநடம்புரிந்த வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


பாடல் 5

மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி* ஒருங்கு
ஒத்தஇணை மருதம் உன்னி யவந்தவரை
ஊருகரத் தினொடும் உந்திய வெந்திறலோய்!*
முத்தினிள முறுவல் முற்ற வருவதன்முன்
முன்னமுகத் தணியார் மொய்குழல்கள் அலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி - என் குட்டிக் கண்ணனே! நீண்ட, அடர்த்தியான கருங்கூந்தலை உடைய, அழகிய, சிறந்த குணங்களைக் கொண்ட, ஆயர்குல பெண்கள் தயாரித்து, சேமித்து வைத்திருந்த தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையெல்லாம் தன் பெரிய கைகளால் அள்ளி, அவற்றை எவரும் கண்டறிவதன் முன்னம் சுவைத்து,ஒரே விழுங்கில் அவசர அவசரமாக உட்கொண்டாய்.


கண்ணனின் கள்ளத்தனத்தைக் கண்டறிந்ததும், கோபங்கொண்ட யசோதையன்னை,அவனை நீண்ட பழந்தாம்புக் கயிற்றால் உரலில் கட்டிப்போட்டாள்.

ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னியவந்த வரை ஊர் உகரத்தினொடும் உந்திய வெந்திறலோய் - பெரிய கனமான உரலில் உன்னைப் பிணைத்திருந்தும், வலிமைமிகுந்த உன் கால்களினால் அந்த உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே, மாளிகையை விட்டு, வெளியே வந்து, ஆங்கே மாளிகையின் பின்புறத்தில், ஒன்றாக அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களுக்கிடையே உரலுடன் ஊர்ந்து செல்ல முயலுகையில், அவற்றை உன் வலிமையான தோள்களினால் இடித்துக் கீழே தள்ளிவிட்டு அவற்றிற்கிடையில் புகுந்து சென்ற மிகுந்த வலிமையுடையவனே! மருதமரங்கள், ஆயர்பாடி வந்த கதை


(உன்னு - இழு; இயவு - வழி, செல்லுதல்; வரை - விலக்கு; உகரம் - இடித்தல், கீழே விழச் செய்தல்; உந்து - தள்ளு; வெந்திறலோய் - மிகுந்த வலிமையுடையவனே)

முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்னமுகத் தணியார் மொய் குழல்கள் அலைய - நீ அசைந்தாடுகையில், உன் செவ்விதழ்கள் சிந்தும் செந்தூரப் புன்னகையை முந்திக் கொண்டு உன் கருங்கூந்தல் நின் திருமுகத்தின் முன் வந்து அலைபாயும்... முத்தினும் சிறந்த உன் வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம் நீ சிரிக்கும் முன்னமேயே, உன் கருங்கூந்தல் ஊர்ந்து உன் முகத்தின் முன் வந்தாடும் வண்ணம் எனக்காக ஒரு தடவை செங்கீரை ஆடுவாயாக

அத்த! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே - என்னைப் பெற்ற என் அப்பனே! எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக. போர்செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே

பொழிப்புரை:

என் குட்டிக் கண்ணனே! அடர்த்தியான, நீண்ட கருங்கூந்தலை உடைய, சிறந்த குணங்களைக் கொண்ட ஆயர்குல பெண்கள் சிரத்தையுடன் தயாரித்து, சேமித்து வைத்திருந்த தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையெல்லாம் தன் பெரிய கைகளால் அள்ளி, அவற்றை எவரும் கண்டறிவதன் முன்னம் சுவைத்து,ஒரே விழுங்கில் அவசர அவசரமாக உட்கொண்டாய்.உன் கள்ளத்தனத்தைக் கண்டறிந்ததும், கோபங்கொண்ட யசோதையன்னை, உன்னை நீண்ட பழந்தாம்புக் கயிற்றால் உரலில் கட்டிப்போட்டாள்.பெரிய கனமான உரலில் உன்னைப் பிணைத்திருந்தும், வலிமைமிகுந்த உன் கால்களினால் அந்த உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே, மாளிகையை விட்டு, வெளியே வந்து, ஆங்கே மாளிகையின் பின்புறத்தில், ஒன்றாக அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களுக்கிடையே உரலுடன் ஊர்ந்து செல்ல முயலுகையில், அவற்றை உன் வலிமையான தோள்களினால் இடித்துக் கீழே தள்ளிவிட்டு அவற்றிற்கிடையில் புகுந்து சென்ற, மிகுந்த வலிமையுடையவனே!என்னைப் பெற்ற என் அப்பனே! முத்தினும் சிறந்த உன் வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம் நீ சிரிக்கும் முன்னமேயே, உன் கருங்கூந்தல் ஊர்ந்து உன் முகத்தின் முன் வந்தாடும் வண்ணம் எனக்காக ஒரு தடவை செங்கீரை ஆடுவாயாக. போர்செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு

(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 4

வானவர் தாம்மகிழ வன் சகட முருள
வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*

தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*

ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.



பொருள்:

வானவர் தாம் மகிழ - விண்ணுலக தேவர்கள் அனைவரும் மகிழும் வண்ணம், அவர்களுக்கு இடையூறுகள் தந்த அசுரர்களையெல்லாம் வதம் புரிந்த தேவாதி தேவனே!

வன்சகடமுருள, வஞ்ச முலைப்பேயின் நஞ்சமுது உண்டவனே - கண்ணனைக் கொல்வதற்காக, அவன் தாய் மாமனான கம்சனால் பல அசுரர்கள் அனுப்பப்பட்டனர். ஆனால், கண்ணனோ அனைவரையும் வதம் புரிந்து இறுதியில் கம்சனையும் அழித்து, தன் தாய் தந்தையரை சிறைமீட்டான்.

வன் சகடம் உருள: யசோதை அன்னை, குழந்தை கண்ணனை, ஒரு மரநிழலில் படுக்க வைத்து விட்டு அவ்விடம் விட்ட நகர்ந்தாள். குழந்தை கண்ணனோ, உறங்காமல் தன் கால்களை உதைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, சகடாசுரன் என்னும் அசுரன் வண்டியின் சக்கர உருவில் உருமாறி, படுத்திருந்த குழந்தையினை நோக்கி உருண்டு வந்தான். குட்டிக் கண்ணன், தன் கால்களை உதைத்தது விளையாடுவது போல் அந்த சக்கரத்தை நோக்கி,பிஞ்சு கால்களால் ஒரு உதை விடவே, சக்கரம் தூள் தூளாக நொறுங்கிப் போய், அந்த அசுரனும் மாண்டுபோனான்.

வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே - குழந்தைக் கண்ணனைக் கொல்வதற்காக, கம்சனால் அனுப்பப்பட்டவள் தான் இந்த பூதனை என்னும் அரக்கி. அவள், தன் பேயுருவத்தை மாற்றி மானுடப் பெண்ணைப் போல் உருமாறி கண்ணனின் மாளிகைக்கு வந்தாள். அழுது கொண்டிருந்த பிள்ளையை ஓச்சுவது போல், அவள் குழந்தைக் கண்ணனுக்கு விஷம் கலந்த தாய்ப்பாலைக் கொடுத்து கொன்றுவிடலாம் என்று எண்ணி, குழந்தைக்கு தாயமுது கொடுத்தாள். கண்ணனோ, பூதகியிடம் தாய்ப்பால் குடிப்பது போல் பாவனை செய்து, அவள் உயிரையும் அவ்வழியே குடித்துவிட்டான்.


கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே - காட்டிலிருக்கும், வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல், அம்மரத்தில் ஒரு கன்றினையே எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் கன்றுகுட்டியே!

ஆயர்குலத்தலைவன் என்று எல்லாராலும் வணங்கப்படுகிற இந்த கண்ணனா, ஒரு கன்றுக் குட்டியப் போய் கொன்றார்?? அதுவும் மரத்துல வீசியடித்து கொன்றிருக்காரே?? என்ன இது? அதப் போய் பெரியாழ்வாரும் கருங்கன்றே ன்னு கொஞ்சுறாரு ன்னு கேக்குறீங்களா... மேற்கொண்டு படிங்க உங்களுக்கே புரியும்.

ஒரு முறை, சிறுவன் கிருஷ்ணர் தன் தமையனான பலராமருடன் யமுனை நதிக்கரையில் ஆநிரைகளை மேய்க்கச் சென்றனர். அவைகளை ஓரிடத்தில் மேய விட்டுவிட்டு, இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, வத்சாசுரன் என்னும் அசுரன் கன்றின் உருவெடுத்து அவர்களைக் கொல்லும் நோக்குடன் மற்ற கன்றுகளுடன் மந்தையில் கலந்துவிட்டான். சிறுவன் கண்ணனோ, ஓசைபடாமல் கன்றின் பின்புறமாக சென்று, அதன் இரு பின்னங்கால்களையும் இறுக்கப் பிடித்து, கவண் சுற்றுவதைப் போல் வேகமாக சுழற்றி அங்கிருந்த விளா மரத்தின் மேல் வீசினான். அந்த விளாமரம் யார் தெரியுமா? அதுவும் ஒரு அசுரன் தான். கபிஸ்டாசுரன் என்னும் அசுரனே அங்கு விளாமரமாக உருமாறி நின்றான்.

கண்ணன், விளா மரத்தின் மேல் கன்றினை வீசி எறிய, அந்த மரமும் முறிந்து விழுந்தது. கன்றாக வந்தவனும், மரமாக நின்றவனும் மாண்டுபோயினர்.



தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை - தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்கள் அனைவரும் அழிந்து போகும் வண்ணம், அவர்களுக்கெல்லாம் மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்யும் வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே!

தேனுகனும்:

சிறுவனான கண்ணபிரானும், பலராமனும் அவர்களது தோழர்களுடன் ஆநிரைகளை மேய்க்கச் சென்றனர். ஒரு நாள் அவர்கள் அனைவரும் சிரித்து பேசி மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கையில், ஒரு சிறுவன், இந்த விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் என்று ஒரு காடு உள்ளது. அந்தக் காட்டில் நிறைய ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்களும் மிகுதியாக உள்ளன. ஆனால், அந்த காட்டிற்குள்தான் எவராலும் செல்ல இயலவில்லை என்று கூறினான். கண்ணனும், பலராமனும் அவர்களிடம் காரணம் கேட்டறிந்தனர். அந்தக் காட்டில், தேனுகாசுரன் என்னும் அசுரன் கழுதை வடிவில் அங்கு இருப்பதாகவும், அவனுடன், இன்னும் பல அசுரர்களும் இருக்கின்றனர். அவர்கள் வனத்தில் விலங்குகள் கூட இருக்க முடியாதபடி அனைத்தையும் கொன்றுவிடுகின்றனர் என்று கூறினர். அதுமட்டுமில்லாமல், இவர்களைத்தவிர வேறு யாராலும் அந்த அசுரர்களை அழிக்க இயலாது என்றும் கூறி, அவர்களை அழித்தால், நாம் அனைவரும் அங்கே சென்று அப்பழங்களை சுவைத்து மகிழலாம் என்று சொல்லவே, சிறுவர்கள் படை கிருஷ்ணர் - பலராமர் தலைமையில் காட்டை நோக்கிப் புறப்பட்டது.

அனைவரும், தாளவனத்திற்குள் நுழைந்தனர். அண்ணனார், மரத்தைப் பிடித்து உலுக்க, பழங்கள் கீழை உதிர்ந்தன. அவற்றை எல்லாம் சிறுவர்கள் பேராவலுடன் பொறுக்கி சேர்த்தனர். பழங்கள் உதிரும் ஓசை கேட்ட அசுரன், வேகமாக வந்து பலராமனைத் தாக்கினான். ஆதிசேஷனான பலராமன் அசையாமல் நிற்க, அவன் மீண்டும் தாக்க வந்த போது, அவனைத் தடுத்து, அவன் கால்களைப் பிடித்து சுழற்றி வீசிஎறிந்தார்.

உடனே, அங்கிருந்த மற்ற அசுரர்கள் வந்து கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்கினர். ஆனால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு கழுதையாக அவற்றின் கால்களைப் பிடித்து வீசி எறிந்து அனைத்து அசுரக்கழுதைகளையும் கொன்றனர்.

முரனும், வெந்நரகனும்:

முராசுரன் என்பவன், நரகாசுரனின் தமையன். இவன் ஐந்து தலைகளைக் கொண்டவனாவான். நரகாசுர வதத்தின் போது, இவனையும், இறைவன் கண்ணபரமாத்மா, தன் சக்கராயுதம் எறிந்து கொன்றார். முராசுரனைக் கொன்றதால் இறைவனுக்கு முராரி என்றொரு பெயரும் உண்டு.

நரகாசுர வதம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்குமே! பட்டாச சுட்டுச் சுட்டுப் போடட்டுமா!! :-)) நரகாசுரனையும் வதம் புரிந்தவர், கண்ணபெருமான் தான்.

இந்த நரகாசுர வதத்தை வைத்துதான், இராமன் தல தீபாவளிய எங்க கொண்டாடினாங்க? அயோத்திலயா, காட்டுலயா ன்னு கூட புதிரா கேப்பாங்களே....


எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - வானுலக தேவர்கள் அனைவரும் மகிழும் வண்ணம், அசுரர்களனைவரையும் அழித்த, வலிமை மிக்க ஆண் யானையைப் போன்றவனே! எனக்கு, ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக! போர்செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பதவுரை:

விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 3

நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!

நாவியுள் நற்கமல நான்முகனுக்கு* ஒருகால்

தம்மனை யானவனே! தரணிதல முழுதும்

தாரகையின் னுலகும் தடவி அதன்புறமும்*

விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!*

அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.



பதவுரை:


நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே! நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே -
எம் ஆயர் குலத்தரசே! முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப்பொருளாய் இருப்பவனே! நின் கொப்பூழ்கொடி பந்தம் கொண்ட, படைப்புத் தொழிலைச் செய்யும் செந்தாமரைமலர் மேல் வீற்றிருக்கின்ற நான்முகனுக்கும் அன்னையாய் இருப்பவனே! அதுமட்டுமல்லாது, உலக நன்மைக்காக பிரம்மனிடமிருந்து மது, கைடபன் என்ற இரு அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட நான்கு வேதங்களையும், அவர்களிடமிருந்து மீட்டு, மீண்டும் பிரம்மனிடம் கொடுத்து நான்முகனுக்கு அன்னையாய் ஆதரித்தவனே! (நாயகன் - தலைவன், இறைவன்; நான்மறை - நான்கு வேதங்கள்~ ரிக்வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்; நாவி - கொப்பூழ்; நான்முகன் - பிரம்மன்; மனை - நற்றாய்)



தரணிதலம் முழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே! -
வாமன அவதாரத்தில், திரிவிக்கிரமனாக வளர்ந்து பூலோகம் முழுவதையும் ஓர் அடியில் அளந்து, இரண்டாமடியில், நட்சத்திரக்கூட்டங்கள் நிறைந்த விண்ணுலகம் மட்டுமல்லாது, அதற்கு அப்பாலும் இருப்பவை எல்லாவற்றையும் அளந்தவனே (தரணி - பூமி; தாரகை - விண்மீன், நட்சத்திரம்; விம்ம - நிறைய, மிக)

வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே -
சிறுவனாயிருந்த பொழுது குவலயாபீடம் என்ற கம்சனின் பட்டத்து யானையையும், நப்பின்னையை மணமுடிப்பதற்காக ஏழு எருதுகளையும் எதிர்கொண்டு, அவற்றை அடக்கி, வெற்றியோடு வருபவனே (வேழம் - யானை; விடை - எருது, காளைமாடு)

அம்ம! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே -
அம்ம, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; போர் செய்ய வல்லமையுடைய காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே. (அம்ம - கேள் என்னும் ஏவற்பொருளில் வந்த அசைச்சொல்)

பதவுரை:


எங்கள் ஆயர் குலத்தரசே! முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப்பொருளாய் இருப்பவனே! நின் கொப்பூழ்க்கொடி பந்தம் கொண்ட பிரம்மனிடமிருந்து அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட வேதங்களை மீட்டுத் தந்து, நான்முகனுக்கு நற்றாயாக இருப்பவனே! மண்ணை ஓரடியாலும், விண்ணுலகம் முழுதையும் இரண்டாமடியாலும் அளந்துவிடும் அளவுக்கு வளர்ந்த வாமனனே! மதங்கொண்ட யானையானாலும், கூரிய கொம்புகளைக் கொண்ட காளைகளானாலும் அவற்றையெல்லாம் எளிதில் எதிர்கொண்டு, அடக்கி, என்றும் வெற்றிவாகை சூடுபவனே! என் கூற்றுக்கு செவிசாய்ப்பாயாக அண்ணலே! எனக்காக ஒரு முறை, ஒரே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த போர் செய்ய வல்ல காளையைப் போன்ற வலிமையுடையவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே.