Tuesday, August 25, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 10

இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்*
மன்னுநாரணன் நம்பி பிறந்தமை*
மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லைபாவமே.

பொருள்:

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் - செந்நெல் நிறைந்த செழிப்பான வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரில் (ஆர் - ஆர்ந்த - நிறைந்த)

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை - எங்கும் நீக்கமற நிலைபெற்று நிற்கும் திருமால், ஆயர்குலத் தலைவனாய் பிறந்ததை (மன்னு - நிலைபெறு; நாரணன் - திருமால்; நம்பி - இறைவன், தலைவன்; பிறந்தமை - பிறந்ததை)

மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த - மார்பில் மின்னுகின்ற பூணூலை அணிந்துள்ள விட்டுசித்தன் விரிவாய் விவரித்த (மின்னு - பொலியும், மின்னுகின்ற; நூல் - முப்புரிநூல், பூணூல்)

இப்பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே - திருக்கோட்டியூரில், திருமாலே கண்ணனாக அவதரித்ததை ஆராய்ந்து சொல்லிய இந்த பாடல்களை மனம் விரும்பி மீண்டும் மீண்டும் பாடும் உள்ளத்தவர்க்கு, எந்த விதமான பாவங்களும் அவர்களைத் தீண்டாது.

பதவுரை:

செந்நெல் விளைந்த செழிப்பான வயல்களால் சூழப்பட்டுள்ள, திருக்கோட்டியூரில், எவ்விடத்தும், எக்காலத்தும் நீக்கமற நிலைத்து நிற்கும் திருமாலே, ஆயர்குலத் தலைவனாய் திருவவதாரம் எடுத்ததை, மார்பில் மின்னுகின்ற முப்புரிநூலினை அணிந்த விட்டுசித்தனாகிய, பெரியாழ்வார் ஆராய்ந்து சொல்லிய பாடல்களை, விரும்பத்துடன், மனமாற மீண்டும் மீண்டும் பாடும் உள்ளத்தவருக்கு எந்தவிதமான பாவங்களும் அவர்களைச் சேராது.

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 9

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!

பொருள்:

இப்பாடலில், குழந்தைக் கண்ணனின் தொட்டில் குறும்புகளை விவரிக்கிறார், பெரியாழ்வார்.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் - தொட்டிலில் படுக்க வைத்திருக்கும் போது, தொட்டில் துணி கிழிந்துவிடும் அளவுக்குத் தொட்டிலை உதைக்கிறான்; (கிடக்கில் - படுத்திருக்கும் பொழுது)

எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் - இடுப்பில் தூக்கி உட்கார வைத்தால், விலா எலும்பை முறிச்சிடுறான்; (மருங்கு - விலாப்பகுதி, இடுப்புப்பகுதி, இடை; இறுத்திடும் - முறித்துவிடுவான்)

ஒடுக்கிப் புல்கில் உதரத்தேப் பாய்ந்திடும் - அருகில் என்னுடன் ஒடுங்கிப் படுக்கவைத்து, பாலூட்டும் போதும், மார்போடு சேர்த்துத் தூக்கித் தழுவிக் கொள்ளும் போதும் வயிற்றில் கதக்களி ஆடுகிறான்; (ஒடுக்கி - தன்னுடன் ஒடுங்கிப் படுக்க வைத்து, புல்கு - தழுவு; புல்கில் - தழுவிக் கொள்ளும் போது; உதரம் - அடிவயிறு)

மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்! - அவன் செயும் இது போன்ற செயல்களைத் தாங்குவதற்கு உடலில் வலிமையில்லாமையால், நான் மெலிந்தே போய்விட்டேன், பெண்களில் சிறப்புடையவளே! (மிடுக்கு - வலிமை; நங்காய் - பெண்களில் சிறந்தவளே)

பதவுரை:

சிறப்பான குணங்களையுடைய பெண்ணே!, ''தொட்டிலில் படுக்க வைத்தால், தொட்டில் துணி கிழிந்துப் போகும் அளவினுக்குத் தொட்டிலை உதைக்கிறான்; அவனைத் தூக்கி இடுப்பில் உட்கார வைத்தால், அவன் போடும் ஆட்டத்தில் என் விலா எலும்பே முறிந்துவிடுகிறது; மார்போடு இறுக அணைத்துத் தழுவிக் கொண்டால், வயிற்றின் மேல் துள்ளுகிறான்; இந்த பொல்லாத குறும்பு குழந்தை செய்யும் குறும்புகளைத் தாங்கும் வலிமையில்லாததால் நான் மெலிந்தே போய்விட்டேன்,'' என்று யசோதைப் புலம்புகிறாள்

Monday, August 24, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 8

பத்துநாளும் கடந்த இரண்டாநாள்*
எத்திசையும் சயமரம் கோடித்து*
மத்தமாமலை தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே.

பொருள்:

பத்துநாளும் கடந்த இரண்டாநாள் - குழந்தை கண்ணன் பிறந்து பத்துநாள் கடந்துவிட்டது. அதன் பிறகு இரண்டாம் நாளன்று, அதாவது குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாள் ஆயர்பாடியில் நடந்த நிகழ்வுகளை இப்பாடலில் விவரிக்கிறார், பெரியாழ்வார். பன்னிரண்டாம் நாள் ஆயர்பாடியில் என்ன நடந்தது என்றால், குழந்தையை எந்த தீங்கும் அண்டக் கூடாது என்பதற்காக, புனித நீராட்டல் செய்வித்து, பெரியவர்கள் அனைவரும் கூடி வந்து குழந்தையைத் தங்கள் கைகளிலேந்தி, குழந்தைக்கு ஆசி கூறுவர். அந்த நிகழ்வினைத்தான் இந்த பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

எத்திசையும் சயமரம் கோடித்து - ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும் ன்னு சொல்வோம் ல்ல அதுதான்... நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்களை நட்டு, வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, வனப்பாய் சுயம்வரம் நடக்கும் இளவரசியின் அரண்மனையைப் போல் அலங்கரித்து, (சயமரம் - சுயம்வரம்; சயம் + மரம் - சயம் - வெற்றி, மரம் - தூண்; சயமரம் - சுயம்வரம்; சயம்வரம் - வெற்றித் தூண்)

மத்தமாமலை தாங்கிய மைந்தனை - மதங்கொண்ட ஆண்யானைகள் பல நிறைந்த கோவர்த்தன மலையைத் தன் விரலால் குடைப் போல் பிடித்து ஆயர்களைக் காத்த வீரமகனை; (மத்த - மதங்கொண்ட; மா - ஆண் யானை; மைந்தன் - மகன், வீரன்)

சிறுகதை:

ஆனாயர் கூடி அமைத்த விழவை* அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் - மாலவன்.

ஆயர்கள் அனைவரும் கூடி, பலவகையான படையல்களிட்டு இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, கண்ணன், ஆநிரைகள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய, கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் கல்மழைப் பொழிவித்தான்.

ஏழு நாட்கள் தொடர்ந்து பெய்த கல்மழையிலிருந்து ஆயர்களையும், ஆநிரைகளையும் காக்க, சிறுவனான கண்ணன், கோவர்த்தன மலையையே குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, கல்மழையிலிருந்து காத்தான்.

இறுதியாக, இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.


எனக்கு ஒரு சந்தேகம்... ஆயர்களும், ஆநிரைகளும் மலைக்கடியில போய் கல்மழையிலிருந்து தப்பிச்சாங்க... மலைமேல் இருந்தவை என்ன ஆயின??? யாராவது தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்களேன், தயவுசெய்து!! :-))


உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே - பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; பத்து நாளுக்குப் பிறகு, ஏதேனும் ஒரு நல்ல நாளில், குழந்தைக்கு முறையான புனித நீராட்டல் (புண்ணிய ஸ்நானம்) செய்வித்து, அதனை, எந்த தீங்கும் அண்டாத வண்ணம் பூசை செய்து, அதன் பிறகே குழந்தையை, பிறந்ததிலிருந்து இருந்த அறையை விட்டு, வீட்டின் மற்ற இடங்களுக்குக் கொண்டு வருவர். அதுவரை, பெரும்பாலும் எல்லாரும் குழந்தையைத் தொட மாட்டனர். குழந்தையின் தாயும், தாயையும் சேயையும் பார்த்துக் கொள்ளும் செவிலி ஆகியோர் மட்டுமே குழந்தையைத் தொடுவர்; உத்தானம் செய்த பின்பே, மற்றவர்கள் குழந்தையைக் கையில் தூக்குவர். (உத்தானம் - உத்தாபனம் - குழந்தையைப் பிறந்த அறையினின்று வெளிக்கொணரும் நிகழ்ச்சி; உகந்தனர் - கையில் ஏந்திக் கொண்டனர்)

குழந்தையான கண்ணனுக்கு, புனித நீராட்டல் செய்த்து, அவன் பிறந்திருந்த அறையை விட்டு, அனைவரும் காணும் வண்ணம் வந்ததும், ஆயர் குல ஆண்களும் பெண்களும் அனைவரும் அவனைத் தங்கள் கைகளில் ஏந்தி பெருமகிழ்ச்சி கொண்டனர், ஆயர்கள்.

இதுவரை வந்த பாசுரத்தில் கூட எந்த பாடலிலும், கண்ணனைத் தங்கள் கைகளில் ஏந்தி கொஞ்சியதாக இல்லையே!

பேணிச் சீருடைப் பிள்ளைப் பிறந்தீனில்
காணத்தாம் புகுவார், புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லைக் காண் -
அப்படின்னு தான் சொல்லிருக்காரு.

ஒரு ஆணாக இருந்தும், குழந்தையைப் பற்றி் எவ்வளவு நுணுக்கமா சொல்லியிருக்காரு பாருங்க. பெரியாழ்வார், பெரிய ஆழ்வார்தான்!!! ஆண்டாள், சரியான நபரிடம் தான் கிடைக்கப்பெற்றாள். இல்லை, இவையெல்லாம் ஆண்டாளால் கொடுக்கப் பெற்றத் தாயுள்ளமோ?? ;-))

பதவுரை:

குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். மதங்கொண்ட ஆண்யனைகள் நிறைந்த கோவர்த்தன மலையைத் தாங்கி, ஆயர்களையும், ஆநிரைகளையும் காத்த வீரமகனை, புனிதநீராட்டல் செய்ததும், ஆயர்கள் அனைவரும் குழந்தையான கண்ணனைத் தங்கள் கைகளில் ஏந்தி மகிழ்ந்தனர்.

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 7

வாயுள் வையகம் கண்ட மட நல்லார்*
ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம்*
பாயசீருடைப் பண்புடைப் பாலகன்*
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே.

பொருள்:

வாயுள் வையகம் கண்ட மடநல்லார் - போன பாசுரத்தில் ''வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே'' அப்படின்னு சொன்னாருல்ல பெரியாழ்வார்.

பிள்ளை வாயுள் வையமேழும் கண்ட யசோதை, தன்னருகில் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு உடனிருந்த மற்ற ஆய்ச்சியரையும் அழைத்துக் காட்ட, அங்கிருந்த அனைவரும் கண்ணனின் வாயினுள் வையமேழும் இருந்த அதிசயத்தைக் கண்டு பின்வருமாறு யசோதையிடம் கூறினர்.
( வையகம் - உலகம்; மடநல்லார் - பெண்கள், இங்கு ஆய்ச்சியரைக் குறித்தது)

ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம் - குழந்தையின் வாயினுள் வையகம் கண்ட ஆயர் குலப் பெண்கள், ''இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானிடப் புதல்வனே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வம் இவன். (புத்திரன் - புதல்வன், மகன்; அருந்தெய்வம் - அரிதான தெய்வம்)

பாய சீருடைப் பண்புடைப் பாலகன் - விரும்பத் தகுந்த குணங்களும், சிறந்த புகழினையும், சீரிய பண்புகளைக் கொண்ட பாலகன் இவன். (பாய - விரும்பத் தகுந்த; சீர் - புகழ்; பாலகன் - குழந்தை)

மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே - விரும்பத் தகுந்த குணங்களும், சிறந்த புகழும், சீரிய பண்பும் உடைய இந்த பாலகன், அந்த மாயோன் தான் என்று பெருமகிழ்ச்சி கொண்டனர், ஆயர்குலப் பெண்கள். (மாயன் - மாயோன்; மாதர் - பெண்கள் {மாந்தர் - மக்கள்})

பதவுரை:

குழந்தை கண்ணபிரானின் நாவினை நல்ல மஞ்சளால் வழித்துவிட, அவன் வாயை அங்காந்திட்ட போது, யசோதை குழந்தையின் வாயினுள்ளே வையம் ஏழினையும் கண்டாள். அவ்வருங்காட்சியை, உடனிருந்த ஆயர்குலப் பெண்களிடம் யசோதை காட்டிய போது, அவர்கள், ''இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானுடப் பிள்ளையே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வமிவன்; எல்லாராலும் விரும்பத் தகுந்தவனும், மேன்மையான புகழும், சிறந்த குணங்களுமுடைய இந்த குழந்தை நம் குலத் தெய்வமான மாயோனே தான்" என்று கூறி பெரும் மகிழ்ச்சி கொண்டனர் ஆயர் குலப் பெண்கள்.

Friday, August 21, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி- வண்ணமாடங்கள்
பாடல் 6

கையும்காலும் நிமிர்த்துக் கடாரநீர்*
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்*
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட*
வையமேழும் கண்டாள் பிள்ளைவாயுளே.

பொருள்:

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது, உடலை நன்றாக உருவிவிட்டு, கைகளை முன்னும் பின்னும் மடக்கி, கால்கள் வளைந்துவிடாது இருப்பதற்காக, அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்த வண்ணம் வெந்நீரை ஊற்றுவர். குழந்தையின் உடலுக்கு உறுதி தரும் வண்ணம் குளிப்பாட்டும் பொழுது இயன்ற வகைகளில் கை காலை மடக்கி, சில உடற்பயிற்சிகளைச் செய்வர். இதனால், குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும்.

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் - குழந்தையின் கை, கால்களை நன்கு உருவிவிட்டு, கால்கள் வளைந்துவிடாது, இருப்பதற்கு அதனை நிமிர்த்திவிடுவதற்காக, கடார நீர் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி

பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி, அதை தள புளா ன்னு ல்லாம் கொதிக்க விடாம, நல்ல வெதுவெதுப்பாக சுடவைத்து, மிதமான வெண்ணீராக்கி, பசுமையான பிஞ்சு மஞ்சளை, மைய அரைத்து மேனியெங்கும் பூசி, மஞ்சளின் ஒரு சிறிய துண்டைக் கொண்டு (பைய - மெதுவாக, மெல்ல; வாட்டி - சூடு செய்து; பசுஞ்சிறு மஞ்சள் - பசுமையான, சிறிய மஞ்சள்)

ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட - தலைவனின் நாவினை வழிப்பதற்காக, யசோதையை, குழந்தையின் வாயைத் திறந்திட்ட போது, (ஐய - தலைவன்; அங்காத்தல் - வாய்திறத்தல்)

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே -
ஏழு உலகத்தையும் குழந்தை கண்ணனின் வாயினுள் யசோதை கண்டாளே. (வையம் - உலகம்; வாயுளே - வாயின் உள்ளே)


பதவுரை:

பிறந்தவுடன் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக அகன்ற, பெரிய பாத்திரத்தில் நீரூற்றி, அதை கைபொறுக்குமளவுக்கு இதமாக சூடேற்றி, கண்ணனின் கை கால்களை நன்கு உருவிவிட்டு, அவை நன்கு உறுதிபடுவதற்காக, இதமான வெந்நீரை ஊற்றி கால்களை நிமிர்த்திவிட்டாள் யசோதை. கிருமி நாசினியாகவும், மருத்துவக் குணம் உடையதுமான மஞ்சளை, நன்றாக மைப்போல் அரைத்து,அதை உடல் முழுவதும் பூசினாள். அதன்பிறகு, கண்ணனின் நாக்கிலுள்ள அசடினை எடுப்பதற்காக, ஒரு சிறிய மஞ்சளால் நாவினை வழிக்க வாயைத் திறக்கும் போது, அண்டகுலத்துக்கு அதிபதியானவனின் வாயினுள் ஏழு உலகத்தையும் கண்டாள் யசோதை.

என்ன அற்புதமான பாடல்!! குழந்தை கண்ணனின் முதல் திருவிளையாடல், சிறையில் பெற்றவர்களிடம், இரண்டாவதாக, பெற்றுக் கொண்டவளிடம்!!

Thursday, August 20, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல்திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 5

கொண்டதாளுறி கோலக்கொடுமழு*
தண்டினர் பறியோலைச் சயனத்தர்*
விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.

கொண்ட தாளுறி கோலக்கொடுமழு - இவ்வடியை, தாள் உறி கோலக் கொடு மழு கொண்ட என்று மாற்றிப் பொருள் கொள்வோம். அதாவது, உறி என்பது வீட்டின் விட்டத்தில், மோர்ப் பானை அடுக்குகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு கயிறு என்று முந்தைய பாசுரத்தில் பார்த்தொமல்லவா. அதுவும் உறிதான்
. அதே சமயம் எங்காவது நெடுந்தூரம் பயணம் செய்வோர் அவர்களுக்குத் தேவையானவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி அல்லது தண்ணீர் பானை, மோர் பானை போன்றவற்றை, கயிற்றில் கட்டி, நடுவில் ஒரு தடிமனான குச்சியால் இருபுறத்துக் கயிற்றையும் இணைத்து, அந்த குச்சியைத் தோளில் வைத்து தூக்கிச் செல்வர். இதுவும் ஒரு வகையான உறிதான். உறி என்றால் தூக்கணக் கயிறு என்று பொருள்.

ஆயர்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகளைக் கொண்டவர்கள் சற்றுத் தொலைவான இடங்களுக்கு, அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். அவர்கள் திரும்பி வரும் நாளானது, அவர்கள் செல்லும் தொலைவினைப் பொறுத்து மாறுபடும். நெடுந்தொலைவு சென்றவர்களால் தினம் தினம் தங்கள் வீட்டிற்கு வர இயலாததினால், அவர்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் தங்களுடன் எடுத்துச் செல்வர். இவ்வாறு கால்நடைகளை நெடுந்தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆயர்களை இப்பாசுரத்தில் விவரிக்கிறார், பெரியாழ்வார்.

அவ்வாறு நெடுந்தொலைவு சென்றவர்கள், இடையில் பால் கறக்க நேரிட்டால், அதையும், பாலின் பயன்களையும் வைப்பதற்கு எடுத்துச் சென்ற உறியானது, அவர்களின் பாதங்களைத் தொடுமளவிற்கு நீண்டிருந்தது. அதோடு, கால்நடைகளுக்குத் தேவையான இலைத் தழைகளும், கொடிகளும் உயரத்தில் இருந்தால் அவற்றைப் பறிப்பதற்காக, அழகிய, கூர்மையான அரிவாளையும் கொண்டிருந்தனர். (தாள் - பாதம்; உறி - தூக்கணக்கயிறு; கோலக்கொடு - அழகிய, கூர்மையான; மழு - அரிவாள்)

தண்டினர் பறியோலைச் சயனத்தர் - பாதமளவு நீண்ட உறியையும், அழகிய, கூர்மையான அரிவாளையும் கொண்ட தண்டினர். அதாவது, கால்நடைகளை ஒழுங்குபடுத்தி மேய்ப்பதற்கும், அவற்றை மிரட்டுவதற்கும் கையில் நீண்ட குச்சிகளைக் கொண்ட ஆயர்கள்; பனை ஓலையைப் பறித்து அதன் மேல் உறங்கும் ஆயர்கள்;(தண்டினர் - தடியினை உடையவர்; பறியோலை - பனை மரத்திலிருந்து பறித்த ஓலை; சயனத்தர் - உறங்குபவர், துயில்பவர்)

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் - ஆயர்களின் பல்லழகை இவ்வடியில் கூறுகிறார். அதாவது, முகிழ்கின்ற முல்லைப் பூவின் மொட்டினை ஒத்த பல்லையுடையவர்கள்; முல்லை மலர் மொட்டாய் இருக்கும் பொழுதும், நன்கு மலர்ந்த பின்னும் இருப்பதைவிட, அது மலரும் பொழுது மிகுந்த வெண்மையுடன் இருக்கும். (விண்ட - மலர்கிற, முகிழ்கின்ற; முல்லை - ஒருவகை பூ; அரும்பு - மொட்டு; அன்ன - உவம உருபு; பல்லினர் - பல்லினை உடையவர்)

உவம உருபுகளைக் கூறும் நன்னூல் பாடல்:
'போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே' - நன்னூல் 367.

அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் - ஆநிரை மேய்ச்சலுக்காகத் தொலைதூரங்களுக்குச் சென்ற ஆயர்கள், கண்ணன் பிறந்துவிட்ட நல்ல செய்தியைக் கேட்டு, உற்சாகமிகுந்து, குழந்தையைப் பார்க்க வேண்டிய ஆவலில் பாதிவழியிலேயே அவற்றைத் திருப்பி வீட்டிற்கு ஓட்டிவந்துவிட்டு விட்டு, கண்ணன் பிறந்திருந்த நல்ல நாளை முன்னிட்டு எண்ணெய் முழுக்காடினர். (அண்டர் - ஆயர், இடையர்; மிண்டி - நடுவில், இடைவழியில்; நெய்யாடினார் - நெய் முழுக்கு அல்லது எண்ணெய் முழுக்காடினர்)

பதவுரை:

ஆநிரைகளை மேய்ப்பதற்கு நெடுந்தொலைவு சென்ற ஆயர்கள், பாதமளவிற்கு நீண்ட உறியையும், அழகிய, கூரிய அரிவாளையும் கொண்டவர்கள்; மேலும், ஆநிரைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நீண்ட, தடித்த குச்சியினை உடையவர்கள்; அவர்கள் ஓய்வெடுக்கவும், உறங்கவும், பனை ஓலையினை படுக்கையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; முகிழ்கின்ற முல்லை மலரின் அரும்பினைப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஆயர்கள், தங்கள் நிரைகளை மேய்க்கச் செல்லும் பாதிவழியிலேயே கண்ணன் பிறந்துவிட்ட நல்ல செய்தியைக் கேட்டு, உடனே வீட்டிற்குத் திரும்பினர்; வீட்டிற்கு வந்தவுடன், கண்ணன் பிறந்திருந்த நல்ல நாளினை முன்னிட்டு எண்ணெய்க் குளியலாடினர்.

Monday, August 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல்திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 4

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்*
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து* எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.

பொருள்:

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார் -
உறி என்பது தயிர், மோர் ஆகியவற்றைப் பானைகளில் வைத்து, அப்பானைகளை அடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அவற்றை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிடுவர். இதை தூக்கணக் கயிறு ன்னு கூட சொல்வாங்க.

ஏன் இப்படி வைக்குறாங்கன்னா, இரவில் பூனை வந்து மோரை கபலீகரம் செய்திடக்கூடாது என்பதற்காகவும், தரையில் வைத்தால் எறும்பு போன்றவை வந்து மோர்ப்பானை முழுதையும் ஆக்கிரமிச்சுக்குங்கறதாலயும், இந்த மாதிரி உறியில வெச்சு சமையலறையில ஒரு விட்டத்துல கட்டித் தொங்கவிடுவாங்க.

உறியை முற்றத்துல உருட்டி நின்றாடுவார் என்றால், உறியில் வைத்துள்ள பாலின் பயன்களான தயிர், மோர், வெண்ணெய் போன்றவற்றை மகிழ்ச்சி மிகுதியால் அவற்றை வீட்டு முற்றத்தில் உருட்டி விளையாடி மகிழ்வர்;

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் - நல்ல, மணமான நெய்யையும், பால், தயிர் முதலியவற்றையும் மிகுந்த உற்சாகத்தோடு ஒருவர் மேல் ஒருவர் தூவிக் கொண்டு குதூகலிப்பார்கள்;

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து - இருண்ட அடர்ந்த காட்டினைப் போல் செறிவான கூந்தலின் பின்னல் அவிழ்வதைக் கூட அறியாமல், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து; ( செறிமென் - செறிவான, அடர்ந்த; திளைத்து - மகிழ்ந்து)

எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே - ஆயர்ப்பாடியில் உள்ள ஆயர்கள் அனைவரும், உறியில் தங்களின் தேவைக்கென்று வைத்துள்ள தயிர், மோர் ஆகியவற்றை உருட்டிவிட்டு விளையாடியும், எதிர்ப்படுவோர் அனைவர் மேலும் சிறந்த மணமுடைய நெய்யையும், பால், தயிர் முதலியவற்றையும் மிகுந்த உற்சாகத்துடன் தூவிக்கொண்டும், கட்டப்பட்ட அடர்த்தியான கூந்தல் அவிழ்வதைக் கூட அறியாது, தாங்கள் என்ன செய்கிறோம் என்ற நிதானமிழந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர்.

பதவுரை:

இப்பாடலில், ஆயர்ப்பாடியிலுள்ள ஆயர்கள் அனைவரும், நந்தகோபருடைய மாளிகைக்குச் சென்று குழந்தை கண்ணன் கோகுலத்தில் பிறந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் தங்கள் நிதானத்தையும் தாம் என்ன செய்கின்றோம் என்ற அறிவையும் இழந்து பேரின்பம் கொண்ட நிலையைப் பெரியாழ்வார் விவரிக்கிறார்.


ஆயர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைத்திருந்த, அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான பாலின் பயன்களான தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட பானைகளை உறியிலிருந்து வீட்டு முற்றத்தில் உருட்டிவிட்டு விளையாடி மகிழ்ந்தனர்; சிறந்த, நல்ல மணமான நெய்யினையும், பால், தயிர் முதலியவற்றை எதிர்ப்படுவோர் அனைவரின் மீதும் உற்சாகம் பொங்கத் தூவிக் குதூகலித்தனர்; நன்கு கட்டப்பெற்ற, அடர்த்தியான கூந்தல் அவிழ்வதைக் கூட அறியாது மகிழ்ச்சி பெருங்கடலில் மூழ்கி, தங்களின் நிதானம் தவறியவர்களாக மாறியிருந்தனர், ஆயர்ப்பாடியிலுள்ள ஆயர்கள் அனைவரும்.

Saturday, August 8, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 3

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்*
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்*
ஆணொப்பார் இவன் நேரில்லைகாண்* திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே.

பொருள்:

இந்த பாசுரத்தில், பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார் என்றால் - குழந்தைக் கண்ணனைப் பார்க்கச் சென்ற, ஆயர் குல மக்கள் அவனைக் கண்டதும் அவர்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டனர் என்பதை கூறுகிறார். பொதுவாகவே ஏதேனும் ஒரு நிகழ்ச்சி என்றால், அங்கு ஒரு சலசலப்பு, ஒரு பரபரப்பு இருக்கத்தானே செய்யும். அதுவும், தெய்வமே குழந்தையாய் பிறந்துவிட்ட இடத்தில் இந்த சலசலப்பு, பரபரப்புக்குப் பஞ்சமிருக்குமா என்ன?? அந்த சலசலப்பைத்தான் அவர் என்னன்னு விளக்கமாக சொல்கிறார்.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் - பேணிச் சீருடையா??? என்னது கண்ணன் பிறந்த உடனேயே பாதுகாத்து வெச்சிருந்த சீருடை(uniform)யை மாட்டிவிட்டுட்டாங்களா??? அப்படின்னு குதர்க்கமா நினச்சிடாதீங்க.... :-))

கம்சனிடமிருந்து பாதுகாக்கப்பட்ட, பலவித சிறப்புகள் நிறைந்த, புகழ் மிகுந்த குழந்தை கண்ணன் பிறந்த மாளிகைக்கு (பேணி - பாதுகாத்தல்; சீருடைப் பிள்ளை - சீர் உடைய குழந்தை --- சீர் - சிறப்பு, புகழ், செழுமை; பிறந்தினில் - பிறந்த இல்லத்தினுள் )

காணத்தாம் புகுவார் புக்குப் போதுவார் - குழந்தை கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, கண்ணனைப் பார்க்கச் செல்பவர்களும், அவனைப் பார்த்து, மகிழ்ந்து அருள் கூறிவிட்டுத் திரும்பிவருபவர்களும் (புகுவார் - மாளிகைக்குள் செல்பவர்கள்; புக்கு - புகுந்து, நுழைந்து; போதுவார் - வருவார், திரும்ப வருபவர்கள்)

ஆணொப்பார் இவன் நேரில்லைக் காண் - குழந்தையைப் பார்ப்பவர்களும், பார்த்துவிட்டு வருபவர்களும் இவனைப் போன்ற ஒரு ஆண்மகன் இந்த உலகில் எங்குமே இல்லை என்று வியந்து கூறினர். அதாவது, இக்குழந்தைக்கு ஒப்புமை சொல்லக்கூடிய அளவிற்கு எந்த ஆண்மகனும் இதுவரை பிறந்ததே இல்லை; அத்தகைய ஒரு தனித்துவம் மிகுந்த இறையொளி வீசும் அருட்குழந்தை அவர்கள் குலத்தில் பிறந்துள்ளான் என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர்.

திருவோணத்தான் உலகாளும் என்பார்களே - திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவனான இவன், இந்த ஏழு உலகங்களையும் ஆளப்போகிறான் என்றும் அவர்கள் பேசிக் கொண்டனர்.

பதவுரை:

கம்சனிடமிருந்து பாதுகாக்கப்பட்ட, இறையொளி வீசும், சிறந்த புகழ்களை உடைய குழந்தையான கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்கச் சென்றவர்களும், பார்த்துவிட்டுத் திரும்புவர்களும் என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்றால், ''இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கொப்பான ஆண்மகன் பிறக்கவேயில்லை. திருவோணத்தில் பிறந்தவனான இவன் அகில உலகத்தையும் ஆளப்போகிறான்'' என்று பேசிக் கொண்டனர்.