பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 2
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 2
கோளரியின் னுருவங் கொண்டுஅவுண னுடலம்
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்
கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்
கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
பொருள்:
இப்பாடலில் பெரியாழ்வார், மகாவிஷ்ணுவின் இரண்டு திருவிளையாடல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, இரணியவதம். மற்றொன்று, குன்றமேந்தி, கல்மழைத் தடுத்தமையும் பற்றிக் கூறியுள்ளார்.
கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் - நரசிம்ம அவதாரத்தில், வலிமை மிகுந்த ஆண் சிங்கத்தினைப் போல் திருவவதாரம் எடுத்து, அசுரனான இரணியனின் உடலில் உள்ள இரத்தம் பொங்கி பொங்கி வெளியில் வருமளவுக்கு, உன் கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக் கிழித்தெடுத்தாய், (கோள் - வலிமை; அரி - ஆண்சிங்கம்; அவுணன் - அசுரன் ~ இரணியன்; உடலம் - உடல்; குருதி - இரத்தம்; குழம்பி - நிலைகுலைதல்; உகிர் - நகம்)
மீள அவன் மகனை மெய்ம்மைக் கொளக் கருதி - இரணியனின் மகனான, பிரகலாதன் கூறிய வார்த்தைகளை மெய்ப்பித்து, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காப்பதற்காக நீ இந்த திருவவதாரம் புரிந்தாய். (மீள - தப்பித்தல், தப்பிக்க)
மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர - வானுலகத்திலுள்ள தேவர்களின் தலைவனான, இந்திரன் மிகுந்த கோபங்கொண்டு
இந்த சிறுகதையை முன்னமே, ''மத்தமாமலை தாங்கிய மைந்தன்'' 1-1-8 ம் பாடலில் பார்த்திருக்கிறோம். இந்திரனை சிறப்பிப்பதற்காக, ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரவிழா எடுப்பது வழக்கம். சிறுவன் கண்ணனோ, ஆநிரைகளுக்கும், ஆயர்களுக்கும் தேவையானவற்றை கோவர்த்தன மலைத்தான் தந்து அவர்களை வாழ்விக்கிறது. எனவே, இந்திரனுக்கு விழா எடுப்பதை விட்டு, கோவர்த்தன மலையைக் கொண்டாடுமாறு கூறினான். மக்களும் கோபலன் கூறியதைப் போல் செய்யவே, இந்திரனுக்கோ, கடுஞ்சினம் வந்தது. வந்து... (மேலை - வானுலகம்; அமரர் - தேவர்; பதி - தலைவன்; வெகுண்டு - சினந்து)
காளநன்மேகம் அவை கல்லொடு கால் பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே - பூமிக்கு மழையைத் தந்து வாழ்விப்பது, கருமேகந்தான். அதனால்தான் காள நன்மேகம் ன்னு அடைமொழியோட சொல்லியிருக்கார் ஆழ்வார். சில்லென்று மழைச்சாரல் சிந்தினால் நல்லாருக்கும்.... கல்லாய் பொழிந்தால்?? இப்ப என்ன செய்வது, எங்கே சென்று ஒண்டுவது? கடவுளே! என்று கோபாலக் கண்ணனிடம் அண்டுவதே சரியென்று ஆநிரைகளொடு, ஆயர்களும், அவன்பால் தஞ்சம் புகுந்தனர். கண்ணனோ, சுடர்வெண் ஆழி சுழன்று கொண்டிருந்த விரலில், கோவர்த்தன மலையைத் தாங்கிநின்று, அனைவரையும் காப்பாற்றினான். (காளமேகம் - கார்மேகம், காளம் - கருமை; கால் - காற்றுமழை; வரை - மலை; காலிகள் - பசுக்கள்)
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - அன்று நரசிங்கனாய் வந்து, பிரகலாதனைக் காத்தவனே! கோவர்த்தனக் குடை கொண்டு, ஆயர்களைக் காத்த எங்கள் குலத் தலைவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த, போர் செய்ய வல்லமை கொண்ட காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுவாயாக!
பதவுரை:
உன் பக்தனும், இரணியனின் மைந்தனுமான பிரகலாதனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கவும், அவனை இரணியனிடமிருந்து மீட்கவும், வலிமையான ஆண் சிங்கத்தின் உருவமெடுத்துவந்து, தன் கூரிய நகங்களாலேயே, இரத்தம் பொங்கி எழுமளவுக்கு அசுரனான இரணியனின் உடலைக் கிழித்தாய்! விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களின் தலைவனான இந்திரன் மிகுந்த சினங்கொண்டு பொழிந்த கல்மழையிலிருந்து, ஆநிரைகளையும், ஆயர்களையும் காப்பதற்காக கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தவனே! என் தலைவனே! உன் அன்னைக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக. ஆயர்கள் குலத்திலுதித்த வலிமைமிக்க காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுக, ஆடுகவே.