பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அச்சோப்பருவம் - அணைத்துக்கொள்ள அழைத்தல்)
கலித்தாழிசை
பாடல் - 3
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு*
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சன வண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே அச்சோவச்சோ.
பதவுரை:
இந்த பாடலில் பெரியாழ்வார், பெருமாளின் கிருஷ்ணாவதாரத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார்.
ஒன்று, மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியாக இருந்தமை
இரண்டு, கண்ணன், சிறுவனாக இருந்தபோது யமுனை நதியையும், அங்குள்ள காற்றையும் கூட நஞ்சாக்கிக் கொண்டு இருந்த காளிங்கன் என்னும் ஐந்து தலை நாகத்தை அடக்கி அதன் ஐந்து தலைகளின் மேல் நடனமாடி அதற்கு அருள் புரிந்தமையும் ஆகிய இரண்டு நிகழ்வுகள்.
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து- பஞ்ச(ஐந்து) பாண்டவர்களின் தூதுவனாய் சென்று, மகாபாரதப் போரில் இருபுறமும் அணிவகுத்து நடத்திச் சென்று, (பஞ்சவர் - பஞ்ச பாண்டவர்கள்; பாரதம் - மகாபாரதப் போர்; கை செய்து - உதவி செய்து)
மகாபாரதத்தில், பாண்டவர்கள் ஐவருக்கும் நாட்டில் இடமளிக்க விரும்பாத துரியோதனனிடம், பாண்டவர்களின் தூதுவனாய் சென்று தர்ம நியாயத்தை எடுத்துரைத்தும் கூட அவன் அதை ஏற்காமையால், இறுதியாக மகாபாரதப் போர் நடக்க வேண்டிய நிலை உருவானது.
அப்போது போரில் தங்களுக்கு உதவும்படி துரியோதனன் மற்றும் அர்சுணன் இருவரும் வேண்ட, அவர்களுக்கு உதவும் பொருட்டு கண்ணன் ஒரு புறமும், கண்ணனின் படைகள் ஒரு புறமும் இருப்பார்கள் என்று பதிலுரைத்தார்.
முதலில் அர்ச்சுணன், தனக்கு கண்ணன் மட்டுமே போதுமெனவும், துரியோதனன், தான் கண்ணனின் படையினை எடுத்துக்கொள்வதாகவும் பதிலுரைத்தனர். அவ்வண்ணமே இருவரின் மனத்திற்கேற்ப அருளினார் கண்ணபிரான்.
அர்ச்சுணனின் படையில் கண்ணபிரான் ஆயுதமேந்தாமல் எளிய தேரோட்டியாகவே இருந்தார்.
தூதுவனாய், தேரோட்டியாய், அடியாருக்கு அடியாராய், எளியாருக்கு எளியாராய் என்றென்றும், எங்கெங்கும் நீக்கமற நிறைந்தவர் எம்பிரான்.
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கை புக்கு- யமுனை ஆற்றின் மடுவில், வாழ்ந்து வந்த காளியன் என்னும் ஐந்து தலை நாகம், தன் கொடிய நஞ்சை யமுனையாற்றின் நீரிலும் காற்றிலும் கலந்து அங்கு உயிர்கள் நீர் அருந்தவோ ஆற்றை அணுகவோ முடியாத படி செய்திருந்தது. எவரும் நெருங்க முடியாத அப்பொய்கையில் புகுந்து, (பொய்கை- நீர்நிலை, மடு; புக்கு - புகுந்து; கிடந்த - வாழ்ந்த)
அஞ்சு அப்பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த- கண்ணன் யமுனையினுள் சென்றதைக்கண்டு ஆயர்கள் அனைவரும் பேரச்சமும் பெருங்கவலையுமுற்றனர். ஆனால் கண்ணனோ மடுவில் புகுந்து காளியனை வம்பு செய்து, களைப்படையச் செய்து அச்சுறுத்தும் அதன் ஐந்து தலைகளின் மேல் நடனமாடி காளியனின் கர்வத்தையும், குரோதத்தையும் அழித்து, காளியனைக் கொல்லாமல் அவன் குரோதத்தை மட்டும் அழித்து அருள்செய்த அருட்பெருங்கடலே (அஞ்சு - அச்சம்; பணம் -பாம்பின் படம்)
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே அச்சோஅச்சோ- கண் மை வண்ணத்தனே அச்சோ அச்சோ! ஆயர் குல நாயகனே அச்சோவச்சோ!! (அஞ்சனம் - கண்ணிலிடும் மை )
பொருளுரை:
பஞ்சப் பாண்டவர்களின் தூதுவனாய், மகாபாரதப் போரில் தேரோட்டியாய் தன்னையும் ஈந்து, தன் படையையும் ஈந்து பேருதவி செய்து,
தன் கொடிய நஞ்சை, ஆற்றிலும், காற்றிலும் கலந்து நச்சாக்கிய ஐந்து தலை நாகம் வாழ்ந்து வந்த பொய்கையினுள் புகுந்து, அச்சுறுத்தும் அதன் ஐந்து படங்களின் மீது நடனமாடி அந்த நாகத்தைக் கொல்லாது, அதன் கோபத்தையுத் குரோதத்தையும் மட்டும் அழித்துஅருள்புரிந்தவனே, அஞ்சன வண்ணனே, ஆயர்கள் நாயகனே அச்சோவச்சோ!