Showing posts with label திருப்பல்லாண்டு. Show all posts
Showing posts with label திருப்பல்லாண்டு. Show all posts

Sunday, July 26, 2009

திருப்பல்லாண்டு அடிவரவு

திருப்பல்லாண்டு அடிவரவு:

திருப்பல்லாண்டின் பன்னிரு பாடல்களையும் வரிசைக்கிரமமாக நினைவில் கொள்ள பின்வரும் வரிசையை நினைவில் கொண்டாலே எளிமையாக இருக்கும்!!

பல் அடி வாழ் ஏடு அண்டம்
எந்தை தீ நெய் உடுத்து - எந்நாள்
அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்!!

திருப்பல்லாண்டில் 12 பாடல்கள் தானே இங்கு 13 சீர்கள் இருக்கின்றனவே என்று கேட்டால், இறுதி சீரான வண்ணம் என்பது அடுத்துத் தொடரும் பெரியாழ்வார் திருமொழியின் முதற்பத்தில், முதல் திருமொழியில் வரும் முதற்சீராகும்.

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் என்பது தான் அடுத்து நாம் பார்க்கப் போகும் பாடல்....

இந்த திருப்பல்லாண்டில், ஒருசில இடங்களில் பெரியாழ்வார் பல்லாண்டு கூறுவனே என்று தன்மை ஒருமையிலும், கூறுதும் என்று கூறுவோம் என்னும் பொருள் வருமாறு தன்மை பன்மையிலும், கூறுமின் அதாவது கூறுங்கள் என்று முன்னிலை பன்மையிலும் குறிப்பிட்டிருக்கிறார். அவை எங்கு எங்கு எவ்வாறு வந்திருக்கின்றன என்பதை எளிதில் நினைவு கொள்ள ஒரு எளிய வழி!

ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின்
அண்டம் என்மின், எந்தை பாடுதும்
தீஉடுத்து எந்நாள் கூறுதும்,
நெய்யும் அல்லும் கூறுவனே!

ஆதி என்பது, இங்கு மூன்றாம் பாசுரத்தைக் குறிக்கிறது.
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்... ...கூறுதுமே;

அநந்தரம் ன்னா அடுத்தது என்று அர்த்தம். அதாவது நான்காம் பாசுரத்தைக் குறிக்கிறது.
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து... ...கூறுமினே;

அண்டக்குலத்துக் கதிபதியாகி... ..... என்மினே;

எந்தை தந்தை ....... ....... பாடுதும்;

தீயிற் பொலிகின்ற,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை,
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுதப்பட்ட
ஆகிய மூன்று பாசுரங்களும் ....... கூறுதுமே எனவும்;

நெய்யிடை நல்லதோர் சோறும்,
அல்வழக்கொன்றுமில்லா அணிக்கோட்டியர்கோன்
ஆகிய இரண்டு பாசுரங்களும் கூறுவனே எனவும் முடியும்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

Saturday, July 18, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 12

திருப்பல்லாண்டு பாடல் -12

இப்பாசுரத்தை இரு முறை சேவிக்க வேண்டும்!

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை* சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே.

பொருள்:

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை - பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்கவென்று பரிசுத்தமான இறைவனை, பரமபதத்தின் நாயகனை, (பவித்திரன் - பரிசுத்தமானவன், பரமேட்டி - பரமபதத்தில் இருக்கும் தலைவன்,மகாவிஷ்ணு)

சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - சாரங்கம் என்னும் வில்லினை ஏந்திய இறைவன் (சாரங்கபாணி) மேல் மிகவும் விருப்புற்று, திருவில்லிபுத்தூரில் வாழும் விட்டுசித்தன் உறைத்த பல்லாண்டினை, (சார்ங்கம் - திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான வில்லின் பெயர்)

நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாவென்று - மிகவும் உன்னதமானதென்று உணர்ந்து இந்த திருப்பல்லாண்டினை விருப்புற்று உரைப்பவர்கள் அனைவரும் நமோ நாராயணா என்னும் திருநாமம் பாடி (நவிலுதல் - சொல்லுதல்)

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே - பல்லாண்டு காலத்திற்கும் உடற்கூட்டினுள்ளும், அண்ட வெளியிலும் ஜீவனாய் இருக்கும் பரமாத்வான பிரானைச் சூழ்ந்திருந்து, அவனை அருகிலிருந்து வணங்கும் பேற்றினைப் பெறுவர். அத்தகைய பேரருளாளர்களுக்கும் பல்லாண்டு பாடுவோமாக!

பதவுரை:

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் என்று, பரிசுத்தமானவனை, பரமபதத்தின் தலைவனை, சாரங்க வில்லினைக் கொண்ட வில்லாளனை, திருவில்லிப்புத்தூர் வாழ் விட்டுசித்தன் என்னும் பெரியாழ்வார் மிகவும் உன்னதமான அன்புடன் பாடிய இந்த திருப்பல்லாண்டு பாடல்களை மிகவும் புனிதமானது என்று உணர்ந்து, திருப்பல்லாண்டினை விருப்புற்று ஓதுபவர்கள் அனைவரும் பல்லாண்டு காலத்திற்கும் ஓம் நமோ நாராயணா என்னும் திருநாமம் பாடி, பரமாத்மாவாய் விளங்கும் இறைவன் நாராயணனினைச் சூழ்ந்து நின்று போற்றும் பாக்கியத்தினைப் பெறுவர். அத்தகைய பாக்கியம் பெற்ற பேரருளாளர்களுக்கும் பல்லாண்டு பாடுவோமாக!

திருப்பல்லாண்டு முற்றிற்று!!

ஓம் நமோ நாராயணாய!
திருமாலின் திருவடிகளே சரணம்!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
எம்பெருமான் அடியவர்கள் திருவடிகளே சரணம்!!!

திருப்பல்லாண்டு - பாடல் 11

திருப்பல்லாண்டு பாடல் 11

இப்பாசுரத்தை இரு முறை சேவிக்க வேண்டும்!

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் *அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பல பரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.

பொருள்:

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் - தீய, கூடாத பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாத, சிறந்த திருக்கோட்டியூர் மக்களின் தலைவனான,(அல்வழக்கு - தீய பழக்கவழக்கங்கள், கோட்டியர் - திருக்கோட்டியூரில் வாழும் மக்கள், கோன் - தலைவன், மன்னன்)

அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் - உன்னைப் பற்றிய எண்ணங்களே எப்பொழுதும் கொண்டு, உனக்குத் திருச்சேவகம் புரிந்த, மேலான செல்வநம்பியைப் போல் திருமாலே, அஞ்சனவண்ணனே! நானும் நினைவுத் தெரிந்த நாளாக உன்னையே நினைத்து உனக்கு சேவை செய்து கொண்டுவரும் பழமையான அடியவன்!(அபிமான - எண்ணம், நினைவு; துங்கன் - உயர்ந்தோன்; பழவடியேன் - பழமையான அடியவன்)

நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி - தூய எண்ணத்துடன், உள்ளன்போடு, நல்ல செயல்களினால் உன்தன் உறைவிடமாய் இருக்கும் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறி உன்தன் புனித பெயர்களையும் புகழையும் பாரெங்கும் பரவி

பலவகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே - பல வகைகளிலும் தூய்மையானவனே, உனக்குப் பல்லாண்டு கூறுவேனே! (பவித்திரன் - தூய்மையானவன்)

பதவுரை:

திருமாலவனே! தீய பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாத சிறந்த மக்களான அணிக்கோட்டியூர் மக்களின் தலைவனான செல்வநம்பி, எப்பொழுதும் உன்னைப் பற்றிய நினைவும், உனக்குச் சேவகமும் புரிந்த மேலான நம்பியினைப் போல் நானும் பிறந்தது முதல் உனக்கே என்றும் திருச்சேவை புரியும் பழமையான அடியவன்! பலவகையிலும் தூய்மையானவனே, அன்பின் வழியில் நமோ நாராயணாவென்று கூறி, உன் புனிதப் பெயர்களையும் புகழையும் உலகெங்கும் பரவச் செய்து, உனக்குப் பல்லாண்டு பாடுவேனே!

Tuesday, June 23, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 10

திருப்பல்லாண்டு - பாடல் 10

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட
அந்நாளே* அடியோங்களடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள்தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து* ஐந்தலைய
பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே!

பொருள்:

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட அந்நாளே - எந்நாளில் எங்களின் இறைவனான உமக்கு நாங்கள் அடியவர்கள் என்று எழுதப்பட்டதோ அந்நாளே,

அடியோங்களடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் - அந்நாளிலேயே இந்த அடியவர்களின் குடிகளும் குலமும்( எங்கள் குலத்தவரும், குடும்பத்தவரும்) வீடு பேறு அடைந்து உய்வு பெற்றுவிட்டோம்! (வீடு - முக்தி)

செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து - கண்ணனின் உண்மையான தாய் தந்தை தேவகியும் வாசுதேவனும்! ஆனால், கம்சனின் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனை அழிக்கும் என்று அசரீரி சொன்னதைக் கேட்டு கம்சன், அவன் தங்கையையும் தங்கையின் கணவனையும் சிறையிலடைத்து வைத்து, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாய்க் கொன்றுவிட்டான்.

தேவகியின் ஏழாவது குழந்தையான பலராமன் கருவிலேயே ரோகிணியின் கருவிற்கு மாற்றப்பட்டது.

எட்டாவது குழந்தையான கண்ணன், ஆவணித்திங்கள், தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் திருஅவதாரம் புரிந்தார். கண்ணன் அவதரித்த நள்ளிரவிலேயே வாசுதேவன் தன் ஆயர் குலத் தோழனான நந்தகோபர் மற்றும் யசோதையிடம் குழந்தையைத் தந்துவிட்டு அவர்களின் பெண்குழந்தையை மாற்றிக் கொண்டு இரவோடு இரவாக சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.

கம்சன் அக்குழந்தையை சுவற்றிலடித்துக் கொல்ல முயன்ற பொழுது, ''அது, கம்சா! உன்னை அழிக்கப்போகும் கண்ணன் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக அறிவித்து விட்டுப் பறந்து சென்றது!''

கோகுலத்தில் நந்தகோபர் யசோதையிடம் கண்ணன் சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்தான். அதனையறிந்த கம்சன், கண்ணனை வடமதுரைக்கு(மதுரா) வரவழைத்து நயவஞ்சகமாகக் கொன்றுவிடவேண்டுமென்று எண்ணினான்.

தனுர்யாகம் என்னும் யாகம் ஒன்றை நடத்தி, அதற்கு சிறுவன் கண்ணன் கண்டிப்பாக வரவேண்டுமென்று அழைப்புவிடுத்தான். ஆனால், கோகுலத்திலுள்ள எவரும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் கண்ணன், அவர்கள் அனைவரையும் சமாதானப் படுத்தி, தான் மதுரைக்குச் செல்வதன் விவரத்தை எடுத்துக் கூறி, அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் மதுரைக்குச் சென்றவுடன், அங்கு யாகத்திற்காக வைக்கப்பட்டிருந்த மிகவும் கனமான வில்லை நோக்கி விரைந்து சென்று அதை தன்இடது கையினால் இறகைத் தூக்குவது போல் தூக்கி உடைத்தான். வில்லொடிந்த ஓசையானது பேரிடி முழக்கம் போல் அகிலமெங்கும் எதிரொலித்தது. யாகத்திற்குரிய வில் உடைந்துவிட்டதால் அது யாகத்தின் காரியகர்த்தாவான கம்சனுக்கு உகந்தது அல்ல, என்னும் செய்தியறிந்து மிரண்டுபோய் விட்டான் கம்சன். அதன் பிறகு கம்சன் ஏவிவிட்ட தடைகளையும் மீறி கம்சனை இறைவன் வதம் புரிந்து, தன் தாய் தந்தையரை மீட்டதோடு, மதுராபுரியின் ஆட்சியையும் கம்சனின் தந்தையான உக்கிரசேனரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வைத்தான் ''செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து'' அப்படின்னு சொல்றார் பெரியாழ்வார். செம்மையான திருநாளில் பிறந்து (தோன்றி)வடமதுரைக்குச் சென்று வில்லை ஒடித்த கண்ணபிரானே! ( செந்நாள் - செம்மை+நாள்- சிறந்த நாள், தோற்றி - தோன்றி- பிறந்த, சிலை - வில், குனித்து - உடைத்து)

ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே - ஐந்து தலைகளைக் கொண்ட படமெடுத்தாடும் நாகத்தின் தலைமேல் பாய்ந்து நடனம் புரிந்தவனே!

யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் (அ) காளியன். அது தன் விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த ஒரு உயிரினமும், தாவரங்களோ, விலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது.

ஒரு நாள் பிருந்தாவனத்திலே, தன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது. அதை எடுக்க கண்ணன் அங்கு சென்றபொழுது ஆயர் குல சிறுவர்கள் அனைவரும் தடுத்தனர். அவர்கள் பேச்சைக் கேளாமல் கண்ணன் அங்கு செல்லவே, அவர்கள் அச்சமுற்று கோபியர்களிடம் சென்றுரைத்தனர்.

கண்ணனோ, கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.
சிறுவர்கள் அழைத்து வந்த கோபியர்களோ, தங்களின் கண்ணனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அஞ்சி அவர்களும் கூவி அழைத்துப் பார்த்தனர்; ஆனால் கண்ணன் யார் பேச்சையும் கேட்பதாயில்லை.

நீரின் சலனத்தால் உறக்கம் களைந்த காளிங்கனோ சினமுற்று கண்ணனைப் பின்னிக் கொண்டான்.

இதைக்கண்ட கோபியர்கள் சிலர் மூர்ச்சித்துப் போயினர். கண்ணனைத் தடுக்கச் சென்ற ஆயர்களையும் பலராமன் தடுத்துவிட்டார்.

கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று, தன் புல்லாங்குழலை இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.

இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போது, அண்ட சராசரமே திரண்டு வந்து தன் தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன் தலைத் தூக்கும் போதெலாம், இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும் சோர்வுற்று மரணபயம் கொண்டு, செய்வதறியாது திகைத்தான். அவனின் மனைவியர் வந்து இறைவனிடம், தங்களின் கணவரை விட்டுவிடும்படி இறைஞ்சினர். இறைவனும் காளிங்கனைக் கொல்லாது, அதன் ஆணவத்தை மட்டும் கொன்று திருவருள் புரிந்தான்.

கண்ணனின் இந்த விளையாட்டைத்தான் ''ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே'' என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (ஐந்தலைய - ஐந்து தலைகளை உடைய, பைந்நாகத்தலை - படமெடுக்கும் பாம்பின் தலை).

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே - உனக்குப் பல்லாண்டு கூறுவோமாக!

பதவுரை:

ஆயர்குலக் குழந்தாய் கண்ணனே! எந்த நாளில் நாங்களெல்லாம் உமக்கு அடியவர்கள் என்று எழுதப்பட்டதோ அன்றே, எங்கள் குலத்தினர் அனைவரும் வீடு பேறு பெற்றுவிட்டோம்! மிகவும் உன்னதமான நாளில் மதுரா நகரத்து உதித்தவனே, நீ அன்று கம்சனின் தனுர் யாகத்திற்கான வில்லை ஒடித்ததோடு, காளிங்க நாகத்தின் விஷம் நிறைந்த தலைப்பகுதியில் காளிங்க நடனம் புரிந்தவனே! உனக்குப் பல்லாண்டு கூறுவோமாக!

Sunday, June 21, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 9

திருப்பல்லாண்டு பாடல் - 9

உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு - இறைவா! எம்பெருமானே! நீ உடுத்துக் களைந்த, உன் திருமேனித் தழுவிய பட்டாடைகளையே நாங்கள் உடுத்திக் கொள்வோம்; உனக்குத் திருவமுது செய்தபின், அமுதுக்கிண்ணத்தில் மிஞ்சியிருக்கும் கற்பூரம் மணக்கும, கமலப்பூ மணக்கும் உன் வாய்ச்சுவையையும் நாற்றமும் ஒருங்குக் கொண்ட இறைஉணவையே நாங்கள் உண்ணுவோம்! (பீதகவாடை - பீதகம் + ஆடை - - பீதகம் -பட்டுபீதாம்பரம்;கலத்ததுண்டு - கலத்தது + உண்டு - உணவுக் கலத்தில் உள்ளதனை உட்கொண்டு )

தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் - உனக்கென்றேத் தனியாகத் தோட்டம் வைத்து, அதில் இருக்கும் சிறந்த திருத்துழாய் மலர்களைக் கொண்டு வடிவாய் வணக்கத்துடன் தொடுத்த மலர்மாலைகளை உனக்கு நாங்கள் அணிவிப்போம்! அதை நீ அணிந்து மகிழ்ந்து எங்களுக்குத் திருவருள் புரிவாய்; பின் நீ சூடிக் களைந்த திருத்துளசி மாலைகளையே அணிந்துக் கொள்ளும் உம் அடியவர்கள் நாங்கள்! (துழாய் - துளசி)


விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் - நீ எந்த திசையில் என்ன வேலை எங்களுக்கு இட்டாலும், அவற்றை எல்லாம் நின் திருவடிப் பெயராலே, விரைந்து, திருத்தமாக முடித்துவிட்டு, திருவரங்கநாதா! திருவோணத் திருநாளில், (கருமம் - பணி, வேலை)

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் தன்னையே பாயாக விரித்து, படமெடுக்கும் பாம்பினையே பஞ்சணையாகப் பள்ளிக் கொள்ளும் திருவரங்கநாதனுக்கு நாம் பல்லாண்டு கூறுவோமாக! ( பைந்நாகணை - பைந்நாக அணை - படமெடுக்கும் நாகத்தினை பஞ்சணையாகக் கொள்ளுதல்)

பதவுரை:

எங்கள் இறைவனே, திருவரங்கநாதா! நீ உடுத்திக் களைந்துபோட்ட, உன் திருமேனித் தொடர்புடைய பட்டாடையையே நாங்கள் உடுத்தி, நின் திருவமுது சுவைத்தபின், எஞ்சிய உணவையே நாங்களும் உண்டு, நீ களைந்துவிட்ட திருத்துளசி மாலைகளையே நாங்களும் அணிந்து கொண்டு, நீ எத்திசையில் என்ன வேலையிட்டாலும் அவற்றினை விரைந்து முடிக்கும் அடியவர்களான நாங்கள், படமெடுத்தாடும், ஐந்து தலைகளைக் கொண்ட ஆதிசேஷனைப் பஞ்சணையாகக் கொண்டு, அதன் மேல் துயில்கொள்ளும் திருவரங்கப் பெருமானே, உமக்குகந்த திருவோணத் திருநாளில் நாங்கள் பல்லாண்டு பாடுவோமே!

திருப்பல்லாண்டு - பாடல் 8

திருப்பல்லாண்டு பாடல் - 8

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

பொருள்:

நெய்யிடை நல்லதோர் சோறும் - நல்லா சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்...), நியதமும் அத்தாணிச் சேவகமும் - நித்தமும் அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் சேவையும் (கைங்கர்யமும்), (நியதமும் - நிதமும், நித்தமும், தினமும்)

கையடைக் காயும் - கை + அடைக் காய்; அடைக்காய் இலை ன்னா கொட்டாப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்... விருந்துணவு முடித்தபின் நம் கைகளில் தாங்கி விருந்தினரை எடுத்துக் கொள்ளச் சொல்லும் வெற்றிலைப் பாக்கு(அடைக்காய் - தாம்பூலம், பாக்கு)
கழுத்துக்குப் பூணொடு -கழுத்துக்குத் தேவையாண அணிகலன்களொடு (பூண் - அணிகலன்)
காதுக்குக் குண்டலமும் - காதுக்குத் தோடும் (குண்டலம் - காதணி)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தேகத்திலிடுவதற்கு (பூசுவதற்கு) இனிமையான மணமுடைய அரைச்ச சந்தனமும் (மெய் - தேகம், இட - பூச, தடவ; சாந்தம் - சந்தன சாந்து)
தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல - இவற்றை எல்லாம் தந்தருளி என்னை பாவங்களற்ற, தூய எண்ணங்கள் கொண்ட வெள்ளை மனம் உடைய உயிராக்கவல்ல(இறைவனைப் பற்றியே என்றும் நினைக்கவல்ல) மனம் தூயதானால், உயிரும் தூய்மையானதாகும்! (வெள்ளுயிர் - தூய எண்ணங்கள் உடைய உயிர்) உயிர் என்பது இங்கு ஆழ்வாரையேக் குறிக்கிறது!

பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே - படமெடுக்கும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியாகக் கொண்டுள்ள மன்னவனுக்கு நான் எந்நாளும் பல்லாண்டு பாடுவனே!( பையுடை நாகம் - படமெடுக்கும் தேகமுடைய நல்லப் பாம்பு, நாகப் பகை - நல்லப் பாம்பின் பகைவன், கருடன்; கொடியான் - கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவன், ஸ்ரீமன் நாராயணன் )

பதவுரை:

நெய்யில் கலந்திட்ட நல்ல சுவையான உணவும், தினமும் இறைவனின் அத்தாணி மண்டபத்தில் சேவையும், தாம்பூலமும், கழுத்துக்கு மாலை முதலான அணிகலன்களும், காதுக்குக் குண்டலமும், தேகத்தில் பூசுவதற்கு இதமாகக் குழைத்த சந்தனமும் தந்து என்னை பாவங்கள் அற்ற, தூய எண்ணங்களைக் கொண்டவனாக ஆக்க வல்ல, படமெடுத்து ஆடும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவனுக்கு நான் பல்லாண்டு பாடுவேனே!

Friday, June 19, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 7

திருப்பல்லாண்டு பாடல் 7

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் - (கொழுந்து விட்டெரியும் செழுந்தணல் எவ்வளவு பொலிவா இருக்குமோ அதவிடப் பொலிவானது) அதைத்தான்,தீயிற் பொலிகின்ற - தீயிலிட்டு பொலிவு பெற்ற, சிவந்த சுடரொளி வீசும் ஆழி( சுதர்சன சக்கரம்), தீயிலிட்ட பொன்னைப் போல் மின்னும் திருச்சக்கரத்தின், (தீயிற் பொலிகின்ற - தீயிலிட்டு பொலிவு பெற்ற, செஞ்சுடராழி - சிவந்த சுடருடைய திருச்சக்கரம், திகழ் - மின்னுதல்)

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் - இறைவனின் திருக்கோயிலிலே தீயிலிட்டுச் சிவந்த திருசங்கு மற்றும் திருசக்கரத்தின் சின்னங்களை எங்கள் தோள்களில் பக்தியுடன் முத்திரையாக ஒற்றிக் கொண்டு தலைமுறை தலைமுறையாக, எங்கள் இல்லங்களில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் நின்று, தொடர்ந்து திருத்தொண்டு புரிந்து வருகின்றோம்! (கோயிற் பொறி - திருசங்கு, திருசக்கர முத்திரை, ஒற்றுண்டு - அடையாளச் சின்னமாகக் கைகளில் ஒற்றிக் கொண்டு, குடி குடி - குடும்பத்திலுள்ள அனைவரோடும், ஆட்செய்கின்றோம் - திருத்தொண்டு புரிகின்றோம்)

மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - வாணாசுரன்(பாணாசுரன்) என்னும் அசுரன், பிரகலாதனின் பேரனான மகாபலி என்னும் அசுரவேந்தனின் புதல்வன்தான் இந்த பாணாசுரன். ஆயிரங்கரங்கள் கொண்ட இந்த பாணாசுரன் மாயப்போர் புரிவதில் வல்லவன். இவன் மகளான உஷை, பிரத்யும்னனி்ன் மகனான அநிருத்தனை ( இறைவன் கிருஷ்ணனின் பேரனாவான்)க் கனவில் கண்டு, காதல் வசப்பட்டாள். கனவிலேத் தான் கண்டு ஒருதலையாகக் காதல் கொண்டதை, தன் தோழியான சித்திரலேகா என்பவளிடம் கூற, அவளும் அவன் யாரெனக் கண்டறிந்து, ஒருநாள் இரவில் தன் மாயசக்தியால் அநிருத்தனை துவாரகாவில் இருந்து தூக்க நிலையிலேயேக் கடத்திவந்து, இளவரசியான உஷையிடம் ஒப்புவித்தாள்.

இவர்களின் காதலை அறிந்ததும், பாணாசுரன், அநிருத்தனை சிறையிலடைத்துவிட்டான். இதையறிந்த, கிருட்டினனும், அவன் தந்தையான பிரத்யும்னன், பலராமன் மற்றும் ஏனையோரும் பாணாசுரனின் அரண்மனையை நோக்கி படையெடுத்து வந்தனர். அப்பொழுது நடந்த போரில் இறைவன் கண்ணன் தன் திருச்சக்கரத்தால் பாணாசுரணின் கைகளை எல்லாம் துண்டித்துவிட்டான். இதனால் அந்த அசுரனின் தோள்களிலிருந்து இரத்தம் குபு குபுவெனப் பாய்ந்தோடியது.

அசுரனை வதம் செய்யாமல் அவனுக்கு ஆணவம் தந்த அவனது கைகளை மட்டும் துண்டித்து, அவனுக்குத் திருவருள் புரிந்தார், இறைவன்! அதன்பின், துவாரகாவில் தன் பேரனான அநிருத்தனுக்கும் உஷைக்கும் முறைப்படித் திருமணம் செய்துவைத்தார், கண்ணபெருமான்.

இதுதாங்க கதைச் சுருக்கம்!!

மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - கிருஷ்ணாவதாரத்தில், மாயப் போர் புரிவதில் வல்லவனான வாணாசுரன் என்னும் அசுரனின் ஆயிரம் கைகளை இரத்தம் பொங்கிவரும் அளவுக்கு திருச்சக்கரத்தால் துண்டித்த, (மாயப் பொருபடை - மாயவித்தைகள் புரியும் பகைவனின் படை, வாணன் - வாணாசுரன் என்னும் அசுரன், பொழிகுருதி - இரத்தம் வழியவழிய, குருதி -இரத்தம்)

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - இவ்வாறு, மாயப் போர்புரிபவனின் ஆணவக் கைகளை இலாவகமாய் திருசக்கரத்தால் வெட்டிய வீழ்த்திய வல்லவனுக்கு பல்லாண்டு கூறுவோமாக! (வல்லான் - வல்லவன், சிறந்தவன்)

பதவுரை:

மாயப் போர்புரியும், வாணாசுரனின் ஆயிரந்தோள்களையும் இரத்தம் ஆறென வழிந்தோடும் அளவுக்குத் துண்டித்த, திருச்சக்கரத்தைத் தம் கையில் தாங்கிய வல்லவனான கண்ணபிரானுக்கு, நாங்கள், எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் இறைவனின் கோயிலிலே, தீயிலிட்டு பொலிவுபெற்ற சிவந்த சுடரினை உமிழும் திருசங்கு,சக்கரப் பொறிகளை எங்கள் தோள்களில் இறைவனின் அடியோர்கள் என்னும் அடையாள முத்திரையாக ஒற்றிக் கொண்டு அவனுக்குத் திருத்தொண்டுகள் புரிகின்றோம்! அத்தகைய வல்லமைமிக்க இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவோமாக!!

Sunday, June 14, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 6

திருப்பல்லாண்டு பாடல் - 6

எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திருவிழவில்
அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை*

பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.

பொருள்:

எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் - நான், என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் பாட்டனார் தொடங்கி முதல் வந்த இந்த ஏழு தலைமுறைகளாக நாங்கள் வழிவழியாக வந்து இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்கின்றோம். (எந்தை - என் தந்தை, நான் + என் தந்தை என்று இருவரையும் இங்கு சுட்டுகிறது, மூத்தப்பன் - தந்தையின் தந்தை, தாத்தா)

திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளன்று அந்தி மாலைப் பொழுதில் ஆளரி (ஆளரி - ஆள்+அரி, மனிதன்+சிங்கம்) வடிவில் திருவவதாரமெடுத்து இரண்யகசிபு என்னும் அசுரனை வதம் செய்தவனை, அதாவது

இது ஒரு பெரிய்ய கதைங்க.... இதச் சொல்லனும்னா நாம இரண்யகசிபு உருவான ஆதி முதல் மூலத்திலிருந்து வரவேணும்....

கதைச் சுருக்கம்:

வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, நம் பெருமான் அவர்கள் இருவரையும் மனிதர்களாகப் பிறக்க சாபம் அளித்துவிட்டார்.

உடனேப் பதறிப்போன, பாலகர்கள் தங்களால், இறைவனைப் பிரிந்து ஒருகாலும் இருக்க இயலாது என்று இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கதறினர். கருணாமூர்த்தியான நம் இறைவனும் அவர்களுக்காக மனமிறங்கி, உங்களுக்கு நான் இரண்டு சந்தர்ப்பங்களைத் தருகிறேன். * நீங்கள் என் அடியவர்களாக ஏழு பிறவிகள் பிறந்து (சிலர் நூறு என்று கூறுகின்றனர்) அதன் பிறகு என்னை வந்து அடைகிறீர்களா? இல்லை, ** மூன்று பிறவிகள் என்னை எதிர்ப்பவர்களாக, கொடிய அசுரர்களாக இருந்து என்னை வந்து அடைகிறீர்களா? என்று வினவினார்.

அதற்கு, அந்த பாலகர்கள், எங்களால் நீண்ட காலம் தங்களைப் பிரிந்து இருக்க இயலாது, எனவே, தங்களை எதிர்ப்பவர்களாகப் பிறந்தாலும் விரைவில் தங்களிடம் வந்து சேர்ந்தால் போதும் இறைவா! என்று வேண்டினர். அதோடு இறைவனிடம், மேலுமொரு வரமும் வேண்டினர், அவர்களின் பிறப்புகளுடைய நிறைவு இறைவனால் அன்றி, வேறு எதனாலும் நிகழக்கூடாது என்று கேட்டனர். இறைவனும் அவ்வாறே திருவுளம் புரிந்தார்.

அந்த துவார பாலகர்கள்தான், கிருத (சத்திய) யுகத்தில் இரண்யாக்ஷ்ன் மற்றும் இரண்யகசிபுவாகவும், திரேதாயுகத்தில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், துவாபர யுகத்தில் சிசுபாலர் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறந்தனர்.

''நிழலின் அருமை வெயிலில்,
வெயிலின் அருமை குளிரில்,
அன்பின் அருமை பிரிவில்'' ன்னு சொல்ற மாதிரிஇறைவனின் திருவருளையும், அவனே கருணைக் கடலின் எல்லை என்பதையும் உலக மக்களுக்கு ஏன் தேவர்களுக்கு உணர்த்திய பெருமை இந்த துவார பாலகர்களுக்கு உண்டு.

சரி, இப்ப சங்கதிக்கு வருவோம்.... துவார பாலகர்களின் முதல் பிறவியில் காசியப முனிவருக்கும் அவரது மனைவியருள் ஒருவரான திதி க்கும் இரட்டைக் குழந்தைகளாக இந்த பாலகர்கள் பிறந்தனர். இரட்டையர்களில் மூத்த மகனுக்கு இரணியகசிபு என்றும், இளையவனுக்கு இரண்யாக்ஷன் என்றும் பெயரிட்டனர். இரண்யாக்ஷனை வராக அவதாரம் எடுத்து வதம் செய்தார், மகாவிஷ்ணு. இதனால், மிகவும் கோபமுற்ற அவன் அண்ணன் இரண்யகசிபு, மகாவிஷ்ணுவைத் தன் பரம விரோதியாக நினைத்து, அவனை(ரை) எதிர்த்து சண்டையிடவும், அழிக்கவும் வேண்டி பிரம்மதேவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். தவத்தின் பலனாக, அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனும், அவன் கேட்ட வரத்தை வேறு வழியின்றி அருளினார்.

அப்படி அவர் என்ன வரம் கேட்டார்??? தனக்கு மரணம் பகலிலோ, இரவிலோ நிகழக்கூடாது. அதுமட்டுமல்லாமல் வீட்டின் உள்ளேயும் நிகழக்கூடாது, வெளியேயும் கூடாது, மனிதனோ, வேறு எந்த விதமான மிருகமோ, நீர்வாழ்உயிரினங்கள், பறவைகள், தேவர்கள், அசுரர் என யாராலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. ஆயுதங்கள் ஏதும் என்னை தாக்கி அழிக்கக் கூடாது. பூமியிலும் நான் இறந்துபடக் கூடாது, ஆகாயத்திலும் நான் இறக்கக் கூடாது என்று ஏகப்பட்ட 'கூடாது' நிபந்தனைகளை வரமாக வேண்டினான்.

இரண்யகசிபு தவம் புரியச் செல்லும் வேளையில், அவன் மனைவியான கயாது, கருவுற்றிருந்தாள். அதையும் கூட பொருட்படுத்தாமல், அவன் மனைவியைத் தனியே விடுத்து, அரண்மனை வாசம், அரச வாழ்க்கை அனைத்தையும் துறந்து, தவம் புரிய தனிமையான ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டான். அவன் தவம் முடித்து வரும் முன்னமேயே, கயாது ஒரு அழகிய புதல்வனைப் பெற்றெடுத்திருந்தாள். அந்தக் குழந்தைதான், பிரகலாதன்.

பிரகலாதன் சிறுவனானதும், அவனை குருகுலம் அனுப்பி வைத்தனர், பெற்றோர். அங்கே அவர்கள் கற்றுத் தந்த பாடங்களைப் படிக்க மறுத்ததோடல்லாமல், அவர்களையும் நாராயணனின் திருநாமம் சொல்லச் சொன்னான். குருகுலம் முடித்து,அரண்மனைக்குச் சன்ற நாட்களில், இரண்யகசிபு அவனை அன்போடு அணைத்து, குருகுலத்தில் பயின்றவற்றைக் கூறுமாறு கேட்டான். அப்போது, பிரகலாதன் ''ஓம் நமோ நாராயணாய'' என்று அமைதியாகப் பதிலளித்தான்.

இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்த இரண்யகசிபு, பிரகலாதனையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்த குருவையும் கடிந்துக் கொண்டான். பிரகலாதனை மீண்டும் குருகுலம் அனுப்பி, அவனுக்கு நல்ல முறையில் பாடம் கற்பித்து (அவர்களுக்கு நல்லனவானவற்றை உபதேசிக்குமாறும்) ,முக்கியமாக பிரகலாதன் நாராயணபுராணம் பாடுவதை நிறுத்தச் செய்யுமாறும் கூறினான்.

அவர்களும் மன்னனுக்குப் பயந்து, எவ்வளவோ பிரயத்தப்பட்டுப் பார்த்தனர். ஆனால், ஒரு பயனும் இல்லை. அவனை, அடித்து வதைத்தாலும், அன்பாய் உரைத்தாலும், பாவமாய் கெஞ்சினாலும் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் வரலாம், வரவேண்டும். அது எப்படி ஒரு அசுரக் குலத்தில் பிறந்தவனுக்கு சதா சர்வகாலமும் இறைவனைப் பழிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் குலத்தில் இப்படி ஒரு விதிவிலக்கு என்று???

அதாவது, கயாது கருவுற்றிருந்த சமயம் தானே இரண்யகசிபு தவம் புரியத் தனித்துச் சென்றான். அப்போது, அவன் இல்லாத சமயத்தில், கயாதுவைக் கடத்திச் சென்றுவிட்டான், இந்திரன். அவன் கயாதுவின் கருவைக் கொல்ல முயன்ற பொழுது, நாரதர் அவனைத் தடுத்து, கயாதுவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார். அவர் பாதுகாப்பில் இருந்த கயாதுவுக்கு, நாரதர் அடிக்கடி, நாராயணனைப் பற்றியும், எல்லா நல்ல விஷயங்களையும் கதையாகக் கூறினார். அவற்றை எல்லாம் கயாது மட்டுமல்ல, அவள் வயிற்றில் இருந்த கருவும் கேட்டது. கேட்டு, அவற்றை எல்லாம் தனக்குள் பத்திரமாக உள்வாங்கிக் கொள்ளவும் செய்தது. அன்று நாரதர் விதைத்த வித்துதான், இன்று செடியாக வளர்ந்து பிரகலாதனை இவ்வாறெல்லாம் பேசவைக்கிறது.

எப்படி, பெற்றோர் இந்தியராயினும், தாய் கர்ப்பக் காலம் முழுதும்அமெரிக்காவில் இருந்தால், அக்குழந்தைக்குப் பெற்றோரின் சாயல் வந்தாலும், அக்குழந்தையின் நடத்தையில் அமெரிக்க மண்வாசனைக் கலந்திருக்கும், இதை நான் என் மகனிடமே கண்டிருக்கிறேன். ஒரு பெண் கருவுற்றிருக்கும் பொழுது, அவள் நல்ல விசயங்களைக் கேட்பதோடு, படிப்பதோடு அல்லாமல், நல்லனவற்றையே சிந்திக்கவும் வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், கயாதுவும், பிரகலாதனும்!!

சரி சங்கதிக்கு வருவோம், குருகுலத்தில், அவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போகவே, பிரகலாதனை மீண்டும் கொண்டு வந்து அவன் தந்தையிடமே ஒப்புவித்து மன்னிப்புக் கேட்டனர்.

இரண்யகசிபுவும், தன் மகனை சிறையில் அடைத்து கோரப் பசிக்கும், கொடிய தாகத்திற்கும் இரையாக்கினான். அப்பொழுதும், பிரகலாதன், ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தையே திருவமுதாக உண்டான். மெலிந்த தேகத்தோடும், களைப்புற்ற முகத்தோடும் பிரகலாதனை எதிர்பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அப்பொழுதும் விடாது, அவனை மதம் பிடித்த யானையின் முன் நிறுத்தினர், யானை பிரகலாதனை மிதிக்காமல், வதைக்காமல், மதித்து, வணங்கி நின்றது.

அடுத்து, கொடிய விஷப்பாம்பு, கொழுந்து விட்டெரியும் வெந்தணலினுள் புகுத்துதல் என்று எத்தனை எத்தனையோ சோதனைகள்!! எல்லாம் பயன்றறுப் போகவே, கடைசியாக, பால் அன்னம் ஊட்டிய அன்னையின் கையாலே நச்சுத் தரச் செய்தான் அந்த இரணியகசிபு!!

எத்தனை சோதனைகள் சுட்டாலும், வேதனைகள் வதைத்தாலும் பிரகலாதனின் உள்ளம் நாராயண என்னும் நாமத்தை மறக்க நினைக்கவும் இல்லை, அவன் திருவாய் எட்டெழுத்து மந்திரத்தை ஓதாமல் இருந்ததும் இல்லை. அதுவே, அவனுக்கு உயிராகவும், அவனைக் காக்கும் காப்பாகவும் இருந்தது.

வாழ்வில் எத்தனை அடிகள் விழுந்தாலும், நாராயணனின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டால் அடிகள் அனைத்தும், இறைவனை அடைய நமக்குக் கிடைத்தப் படிகளாக மாறிவிடும், இது பிரகலாதன் வாழ்வில் மெய்யாயிற்று.

தந்தையே, நாராயணா! என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு எந்த குறைவும் என்றும் வாராது!அவனை நினைப்பதும் பேசுவதுமே நமக்கு உய்வினை உண்டாக்கும்! எங்கும், எதிலும், என்றும் இருப்பவன் என் நாராயணனே! என்று பிரகலாதன் சொன்னதும், கோபத்தின் உச்சிக்கேச் சென்றுவிட்டான்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி, அவனை ஆட்கொண்டது! ஏற்கனவே, சினம் இரண்யகசிபுவின் நெருங்கிய பங்காளி!! இன்று, அவனுக்குள்ளேயும் புகுந்துவிட்டான்!! உரத்தக் குரலில் எங்கும் இருக்கும் உன் நாராயணன் அவனை எந்நாளும் எதிரியாக நினைக்கும் என் மாளிகையில் இருக்கிறானா? இங்குள்ள பொருள்கள் எதிலாவது இருக்கிறானா? எங்கு இருக்கிறான், உன் நாராயணன்? என்று முழங்கினான்.

அவன் எங்கும் இருக்கிறான் தந்தையே! இந்த மாளிகையிலும் உள்ளான், இங்குள்ள அனைத்திலும் உள்ளான்; பேசும் என்னிலும் உள்ளான், கேட்கும் உங்களிலும் உள்ளான்; இங்கு உள்ள அனைவரிடத்தும் இருக்கிறான்; அவன் பெரிய தூணிலும் இருப்பவன், சின்னஞ்சிறு தூசியிலும் இருப்பவன்!!

உன் கூற்று மெய்யானால், உன் நாராயணன் எங்கும் இருப்பவனானால், இப்பொழுதே, இதோ இந்த தூணை உடைக்கிறேன், அவன் இருக்கிறானா, இல்லையா? என்று பார்த்துவிடுகிறேன், என்று கூறி தன் கதையால் தூணை வேகமாகத் தாக்கினான், இரணியகசிபு.

அவ்வளவுதான், அந்த தூண் இரண்டாக உடைந்து, அதனுள்ளிருந்து, மகாவிஷ்ணு வந்தார். சாந்த சொருபியாக அல்ல, சாதாரண மனிதராகவும் அல்ல. உலகத்திலே இல்லாத ஒரு உருவத்துடன், வயதான சிங்க உருவத்தில், கிழ சிங்கத்தின் கர்ஜனையுடன், உக்கிரமான முகத்துடன் நரசிம்ம உருவத்தில் வந்தார் மகாவிஷ்ணு!!! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய!! ஓம் நமோ நாராயணாய!!!

--வந்து இப்போ என்னப் பண்ணப் போறார்?? தன்னை அவமானப் படுத்தியதற்குத் தண்டிக்கப் போறாரா?? இல்லை, தன் பக்தனுக்கு சோதனை மேல் சோதனைத் தந்த பாவத்திற்கு அவனைக் கொல்லப்போறாரா?? அவனைத்தான் கொல்ல முடியாதே, விலங்குகளால் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது ன்னு ஏற்கனவே, ஏகப்பட்ட ''கூடாது'' களை அவன் பிரம்மாவிடம் வரமாகப் பெற்றுவிட்டானே??!! அப்படின்னா, பிரம்மா கொடுத்த வரம் பொய்யாகப் போகுதா??


கொஞ்சம் பொறுங்கள், அவர் வயசான சிங்கத்தின் உருவத்தில் தான் வந்தார். அதே நரைத்த பிடரி மயிர், கோரைப் பற்கள், கூரிய நகங்கள், உக்கிரமான கண்கள்... ஆனால், தேகம்? தேகம் எப்படி இருந்தது?? மனித தேகம்...

ஆம் மனித தேகம் கொண்ட சிங்கத்தை எங்கயாவது, யாராவது பார்த்திருக்கோமா? குறைஞ்சபட்சம் அந்தமாதிரி ஒரு குட்டி? சிங்கக் குட்டியாவது கண்டதுண்டா? இல்லையே.. கண்டதே இல்லையே, ஏன்னா அப்படி ஒரு உயிரினம் எங்குமே இருந்ததில்லை...

எத்தனை ''கூடாது'' நிபந்தனைகள் விதித்தாலும், அத்தனைக்கும் மீறிச் செயல்படக்கூடியவன், நம் இறைவன்!! வல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு!!
ஆனால் , இந்த சீனிவாசனுக்கு வல்லவன், அவன் மட்டுமே!! ஓம் நமோ நாராயணாய!!

--ம்ம்.. சரி அவதாரம் எடுத்தாயிற்று, இனி வதத்தை முடித்து, சாபத்தைத் தீர்த்தருள் புரியவேண்டியதுதானே!

எதற்கும் ஒரு காலம் இருக்கிறதன்றோ! வேளையறிந்துதான் வேலை செய்ய வேண்டும்! இரண்யகசிபு பெற்ற வரத்தின் படி, இரவும் அல்லாத, பகலும் அல்லாத பொழுது வர வேண்டுமே!

--அப்ப அதுவரைக்கும், ஒரு கோப்பைத் தேநீர் குடித்துவிட்டு, நாளிதழ் படிக்கலாமா??

தேநீர் கொடுத்து, குழைந்து குழைந்து குசலம் விசாரிக்க, நாராயணன் என்ன இரண்யகசிபுவின் மாமனா?? மச்சானா?? இரண்யகசிபு, இப்படி ஒரு புதிரான வரம் வாங்கியதே, நாராயணனை துவம்சம் செய்யத்தான்?? பழிக்குப் பழி ஐயா, பழிக்குப் பழி!! அதனால் நாராயணனைக் கண்ட மாத்திரம் துவங்கியது, போர்.

--ஆமாம், போர்!!

அந்தி மாலை மயங்கும் சந்தியா காலம் வரும் வரை, இருவருக்கும் யுத்தம்!! சந்தியா காலமும் வந்தது, கண் இமைக்கும் ஒரு நொடிப் பொழுதில், நரசிங்கம் வாயிற்படிமேல், இரண்யகசிபு, நரசிங்கத்தின் மடிமேல்.... அவ்வளவுதான்....

இரண்யகசிபு எவ்வளவு திமிரினாலும் முடியவில்லை, நரசிம்மத்தின் முகம் அதிஉக்கிரமானது, நரம்புகள் புடைத்தன, விண்ணை முட்டும் கர்ஜணை!!! ஓம் நமோ நாராயணாய!

அங்கிருந்த அனைவரும், பிரம்மா, சிவன், தேவர்கள், முனிவர்கள் தேவலோகத்தினர் உட்பட அனைவரும் நடுநடுங்கி, நாராயண வென்னும் திருநாமம் சொல்லி கண் கொட்டாது, அசைவற்று, மூச்சுவிடவும் மறந்து நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்!!

நரசிம்மர், தன் நகங்களாலேயே இரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, குடலை உருவி மாலையாக அணிந்துக் கொண்டு, அவன் இரத்தத்தையும் குடித்தார். அவதாரம் நோக்கம் நிறைவேறியது!! இருந்தாலும் நரசிம்மரின் உக்கிரம் மட்டும் குறையவே இல்லை! அதைக் கண்டு அனைவருக்கும் திகில் இன்னும் விடவில்லை, என்ன செய்வதென்று அறியாமல் பிரம்மனும், சிவனும் திகைக்க, பிரகலாதன் மட்டும் முதலில் இறைவனை நெருங்கிச் சென்றான்!
தந்தை மிகுந்த கோபத்துடன் இருக்கும் போது, மனைவி தரும் குவளைத் தண்ணீரை விட, குழந்தையின் செவ்விதழ் ஓரம் தவழும் புன்சிரிப்பு கோபத்தைத் தணித்துவிடுவது போல்....

குழந்தையின் கோபம் தணிந்தது!

--என்னது?!! இவ்ளோ நடந்தப்புறம் குழந்தையா??!!

ஆமாம், குழந்தைதான்! அவதாரம் பிறந்த ஒரு நாள் கூட ஆகாத சிறு மொட்டு, நரசிங்கம்!! மலரை விட மொட்டு சிறிது கடினமானது :-))

அதன் பிறகு திருமகள் ஐயனிடம் செல்ல, நரசிங்கர் நரசிம்மர்-மகாலெஷ்மி சகிதமாக அனைவருக்கும் காட்சியளித்து திருவருள் புரிந்தனர்!!
பின் பிரகலாதனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்?

''இறைவா, உன்னை என்றும் மறவாத உள்ளம் வேண்டும். உன்னை அவமதித்த என் தந்தைக்கு எந்த விதமான பாவங்களும் வந்து சேராமல் காத்தருள வேண்டும்!உலக வாழ்வின் மீது ஆசை, பற்று, மோகம் இல்லாத நிலை வேண்டும். என்றும் உன் அடியனாகவே வாழ திருவருள் வேண்டும்!'' என்று வேண்டினான், பிரகலாதன்.

இறைவன், குழந்தையே பிரகலாதா! என்னை மனமார நினைத்து வணங்குபவர்களின் தலைமுறைகளுக்கு எந்தவிதமான துன்பங்களும் வந்து சேர்வதில்லை. என் திருவடிகள் மேல் பற்றுக் கொண்டவர்களை எந்தப் பற்றும் பற்றுவதில்லை! நீயே இந்த பூவுலகில் மன்னனாக என்றும் இருந்து இறுதியில் என் திருவடி வந்து சேர்வாயாக!! என்று ஆசி கூறிச் சென்றார்.

அதன் பிறகு பிரகலாதன் தந்தையின் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு, முறைப்படி, பெரியவர்களால், மன்னவனாக முடிசூட்டப்பட்டான்!!

இந்த நரசிம்ம அவதாரம் எடுத்தது சுவாதி நட்சத்திரத்தில், ஆந்திர மாநிலத்திலுள்ள, அகோபிலம் என்னும் இடமாகும்! அதுமட்டுமல்லாமல், கருடாழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்த திவ்யதேசத்தில் 9 விதமான நரசிம்ம தோற்றங்களுடன் பெருமாள் திருவருள் புரிகிறார்! ...

திருவோணத் திருவிழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளில், பொழுது சாய்ந்தவுடன் காண அரிதான மனித உடல் கொண்ட சிங்கத்தினைப் போல் அவதரித்து, அசுரரான இரண்யனை அழித்தவனை (அந்தியம் - பொழுது சாய்ந்துவிட்ட நேரம், போது - பொழுது, அரியுரு - சிங்க உரு, அரி - பகைவன்)
பந்தனைத் தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே! - இரண்யகசிபு என்னும் அசுரனை அழித்த நரசிங்கத்தின் அசதித்தீரப் பல்லாண்டு பல்லாண்டென்று பாடுவோமாக! (பந்தனை - அசதி,களைப்பு)

பதவுரை:

நான், என்தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரது தாத்தா என்று ஏழு தலைமுறைகளாகத் தொடர்ந்து எந்தவிதக் குறையுமில்லாது இறைவனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து வருகிறோம்! திருவோணத் திருநாளன்று, மாலைப் பொழுதில் மிகவும் அரிதான உருவமான ஆளரி (நரசிம்ம அவதாரம்) உருவமெடுத்து, பகைவனான இரண்யகசிபுவை அழித்தவனுக்கு, அந்த களைப்புத் தீரவேண்டுமென்று அவனுக்குப் பல்லாண்டுப் பாடுவோமாக!!

பி.கு - திருவோணத் திருநாளானது, மகாபலி என்னும் மன்னன் நினைவாக, வாமன அவதாரத்தில் இருந்துக் கொண்டாடப்படுவது! அதை ஏன் நரசிம்ம அவதாரத்தோடு இணைத்துக் கூறுகிறார் என்று புரியவில்லை!! தயவுசெய்து தெரிந்தவர்கள் வந்து கூறுங்களேன்! நரசிம்மரானவர், வயதான தோற்றத்துடன் இருந்தாலும், அவர் சிறிது காலம் மட்டுமே இருந்த குழந்தை! சங்கு சக்கரத்துடன், கருடாழ்வாருடன் வந்த திருமகள்நாராயணனுக்கே காப்பிட்டவர்! அதனால, இந்தக் குழந்தைக்கு ஏதும் தீங்கு வந்திடக் கூடாது என்று மறைத்துப் பாடினாரோ??!! -தாய்மைப் பலமாகப் பேசுவது போல் உணர்வு!

Wednesday, May 27, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 5

திருப்பல்லாண்டு பாடல் - 5

அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.


பொருள்:


அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை - இதை, அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். இப்படி பிரிச்சதுக்குப் பிறகு பொருள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. : ))
அவ்வளவு எளிமையான தமிழ்ச் சொற்கள்!

மூவுலகம், ஏழுலகம் ன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கணக்கு சொல்வாங்க!
பூமியிலேயே எத்தனைப் பிரிவுகள் வட்டம், மாவட்டத்து ல துவங்கி, கண்டம், பெருங்கடல் வரைக்கும் போகும். அதே மாதிரி, பூமி, நிலா, சூரியன் உள்ளிட்ட சூரியக்குடும்பம் முதலாக, அண்டம், அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டம் வரை உலகில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்திற்கும் -- அண்டக் குலங்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவனை - அண்டக் குலத்துக் கதிபதியாகி (அண்டம் - உலகம், அதிபதி - தலைவன்)

அசுரரிராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் - (அசுரர் இராக்கதர்) அன்பு, கருணை எதுவுமில்லாமல், மிருகத்தைப் போல் தான் நினைத்தவற்றை எல்லாம் அழிக்கும் கொலைபாதகம் செய்யும் அசுரர்கள், இராட்சதர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் குலத்தையே வேரோடு களைந்த இருடீகேசன்! (இண்டைக் குலம் - கொலைத் தொழில் புரிபவர்களின் குலம்)

இருடீகேசன் ன்னா - ரிஷிகேசன் என்று பொருள். அதாவது வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து பெயரைத் தமிழ்ப் படுத்திக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ரிஷி+கேசன் - முனிவர்களின் தலைவன் (முனிவர்கள் ன்னா எப்படிப்பட்டவர்கள் ன்னு உங்களுக்கேத் தெரியும். முற்றும் துறந்தவர்கள்! ஐம்புலன்களின் ஆசைகளைத் துறந்தவர்கள், உயிரின் மேல் பற்றற்றவர்கள், உறவுகளில் பற்றற்றவர்கள்... இப்படிப்பட்ட முற்றும் பற்றற்ற முனிவர்களுக்கேத் தலைவனாக இருந்தால் அவர் எந்த அளவு புலன்களை அடக்கினவராக, ஆசைகளை எல்லாம் துறந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ?? ''பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றினைப் பற்றுக பற்று விடற்கு'' என்பது வள்ளுவம். இந்த ''பற்றற்றான்'' தான் நம்ம ''இருடீகேசன்''.
(ரிஷி - முனிவர், கேசன் - தலைவன்)

... இருடிகேசன் தனக்கு, தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி - உலகங்களுக்கெல்லாம் தலைவனாகவும், கொலைதொழில் புரியும் அரக்கர்களை எல்லாம் வேரோடு அழித்த, முற்றும் பற்றற்ற முனிவர்களின் தலைவனாக இருப்பவனுக்கு, அடியவர் குலத்திலுள்ள அனைவரும் வந்து, அவனின் திருவடிகளைத் தொழுது, இறைவனின் ஆயிரம் திருநாமங்களை ஓதுவீர்களாக! அதுமட்டுமில்லாமல், (தொண்டக் குலம் - அடியவர்களின் குலம்)

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே - நீங்கள் உங்களின் பழைய மூடநம்பிக்கைகளை எல்லாம் ஒழித்து நம்மோடு என்றென்றும் இருக்கும் இறை அவனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீ வாழ்வாயாக என்று பாடுவீர்களாக!

பதவுரை:

உலகங்களுக்கெல்லாம் ஒரே தலைவனாக இருப்பவனை, கொலை தொழில் புரியும் அசுரக் குலத்தையே அடியோடு அழித்த, புலன்களை அடக்க வல்ல பற்றற்ற முனிவர்களின் தலைவனுக்கு அடியவர் குலத்திலுள்ள அனைவரும் வந்து, உங்களின் பழைய மூட நம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, முழு மனத்துடன் இறைவனின் திருவடிகளை வணங்கி, அவனின் ஆயிரம் திருநாமங்களை ஓதி, இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவீர்களாக!

திருப்பல்லாண்டு - பாடல் 4

திருப்பல்லாண்டு பாடல் - 4

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராய ணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.

பொருள்:

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து கூடும் மனமுடையீர்கள் -நாம் என்னதான் முக்தி பெற்றாலும் நமது ஆன்மா மட்டுமே முக்தி நிலையை அடையும். நமது உடலானது இந்த மண்ணையே சென்றடையும். இங்கு ஏடு என்னும் சொல் உடலைக் குறிக்கின்றது. ஆனால், அந்த உயிர் தமக்கு வேண்டிய புண்ணிய காரியங்களைச் செய்ய உடலே கருவியாக அமைகின்றது. ஆகவே, உயிரானது உடலைவிட்டு பிரிவதற்கு முன்னே, எங்கள் குழுவில் வந்து இணையும் எண்ணம் உடையவர்கள், ( ஏடு - உடல், குழாம் - குழு, புகுந்து - இணைந்து)

வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ - மனிதர்கள் தங்களுக்குத் தாமே வரைமுறைகள் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ''இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித நிலை; எப்படியும் வாழலாம் என்பது மிருகநிலை'' என்று வரைமுறையுடன் வாழ்தல் நல்லதே ஆயினும், அவை இறைவனை அடையத் தடையாய் இருத்தலாகாது. ஆகவே, அத்தகைய தடைகளைத் தவிர்த்துவிட்டு, விரைந்து எங்கள் குழுவில் வந்து இணைவீர்களாக!(வரம்பொழி வந்து - வரம்புகளை அழித்து வந்து, வரம்பு - தடை, ஒல்லை - விரைவில்)

நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே - இந்த நாடு, நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் நன்கு அறியும் வண்ணம் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தைப் பாடும் மனமுள்ள பக்தர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் வந்து பல்லாண்டு கூறுங்கள்! (பாடுமனமுடைப் பத்தர் - பாடும் மனம் உடைய பக்தர், பத்தர் - பக்தர், இறைவனடியான்)

பதவுரை:

தமது உடல் பூமிக்குள் செல்லும் முன்னே, எங்கள் குழுவில் வந்து இணைந்து இறைவனை வணங்கும் எண்ணம் கொண்டவர்கள், அவர்களின் தடைகளை எல்லாம் அழித்துவிட்டு விரைந்து வந்து சேர்ந்துகொள்ளுங்கள். இந்த நாடு நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் அறியுமாறு ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஓதும் மனமுடைய பக்தர்கள் இருப்பார்களாயின் அவர்களும் வந்து நம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறுங்கள்!

Sunday, May 24, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 3

திருப்பல்லாண்டு - பாடல் 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர் களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

பெரியாழ்வார், இறைவன் மேல் கண்ணேறு பட்டுவிடாமல் தடுப்பதற்காக, அங்கு குழுமியிருந்த மக்களின் கவனத்தைத் திருப்பவும், இறைவனுக்கு வாழ்த்து கூறவும், அங்கிருந்த மக்களையும் தம்மோடு பல்லாண்டு பாட அழைக்கி்றார். அவர் எத்தகைய மக்களை அழைக்கிறார் என்று பார்ப்போம்!

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் - இறைவனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து, அதன் மூலம் இறைவனின் மனதில் நிலையான இடம்பிடித்து, அவன் திருவடியில் பெருவாழ்வு வாழ ஆசை கொண்டுள்ளவர்கள் இங்கு இருப்பார்களேயானால் அவர்கள் அனைவரும் எம்முடன் வந்து சேர்ந்து முழுமனதுடன் பல்லாண்டு பாடி, இறைவனுக்குத் தொண்டுகள் புரிய வாருங்கள். அதன் விளைவாக உங்களுக்குக் கிடைக்கும் மெய்வாழ்வினையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்களாக! (வாழாட்பட்டு - நிலைவாழ்வினுக்கு ஆசைப்பட்டு, மண்ணும் - சேர்ந்துக் கொள்ளும், மணமும் - பலன், கொண்மின் - பெற்றுக் கொள்ளுங்கள்)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் - ''காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா'' என்பதற்கேற்ப பொய்யான இந்த தேகத்தை வளர்க்கவும், சாண் வயிற்றை நிரப்பவும் நிலையற்ற இந்த தேக நலனை மட்டுமே நினைத்து, அதற்காக கூழுக்கு ஏங்கி மற்ற சாதாரன மனிதரிடம் அடிமைத் தொழில் செய்பவர்கள் யாரும் இங்கு இருப்பார்களானால், அத்தகையவர்களை, எந்நாளும் இறைவனையே நினைத்து, வணங்கி, அவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே கடமையாக நினைப்பவர்கள் நிறைந்த எங்கள் குழுவி்ல் சேர்த்துக் கொள்ள மாட்டோம்! (கூழாட்பட்டு - உணவுக்கு ஆசைப் பட்டு, புகுதலொட்டோம் - சேரவிடமாட்டோம்)

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் - ஏழு தலைமுறைகளாக எந்த பாவ வினைகளும் செய்யாமலிருந்து, ஏதொரு பழிச்சொல்லிற்கும் ஆளாகதவர்கள் நாங்கள்! (ஏழாட்காலும் - ஏழு+ஆள்+கால்--ஏழு தலைமுறை காலங்களாக, பழிப்பு - பழிச்சொல்)

இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - இராவணன் உள்ளிட்ட அசுரர்கள் வாழ்ந்த இலங்காபுரியை வானரப் படையைத் திரட்டிக் கொண்டு சென்று போரிட்டு, அரக்கர்கள் அனைவரையும் அழித்த மாவீரன் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பல்லாண்டு கூறுவோமாக! (இராக்கதர் - இராஷ்சதர்-- அசுரர்கள், பொருதான் - போர்புரிந்தவன்)

பதவுரை:

இப்பாடலில், இராவணன் தலைமையில் இருந்த அசுரர்களை எல்லாம், வானர சேனைக் கொண்டு எதிர்த்துப் போரிட்டு வென்ற இராமபிரானுக்குப் பல்லாண்டு பாடுகிறார், பெரியாழ்வார். அவருடன் இணைந்து பல்லாண்டு பாட, இறைவன்பால் மெய்யான அன்புள்ளவர்களை அழைக்கிறார். அவ்வாறு இறைதொண்டு செய்வதால் கிடைக்கும் மெய்வாழ்வினையும் அவர்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். இவர்கள் ஏழு தலைமுறைகளாக யாதொரு பழிப்புக்கும் உள்ளாகதவர்கள்! வெறும் கூழு(உணவு)க்கு ஏங்கி ஏனையோரிடம் அடிமைத் தொழில் புரிவோரை, அவர் சேர்த்துக் கொள்ள மறுப்பதாகத் தெரிவிக்கிறார்.

Saturday, May 23, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 2

திருப்பல்லாண்டு - பாடல் 2

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர்புக்கு முழங்கும்அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!

குறிப்பு: இப்பாடலை நாம் இருமுறை சேவிக்க வேணும்.

பொருள்:

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு- உம் அடியார்களாகிய நாங்கள் உன்னோடு எந்நாளும் பிரிவின்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும் இறைவனே! (நின்னோடும் - உன்னோடும்)
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு- எந்நாளும் பிரிவின்றி உன் வலபக்க மார்பினுள் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் அழகிய இளநங்கையான திருமகளும் பல்லாண்டு வாழ்வதாக! (வடிவு - அழகு)
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு- நின் வலக்கரத்தில் தாங்கிய பேரழகு பொருந்திய பொன்னொளி வீசும், அதன் செஞ்சுடரே எதிரிகளை எல்லாம் எரித்து சாம்பலாக்கவல்ல சக்கரமும் பல்லாண்டு வாழ்வதாக!

எதிரிகளை அழிப்பதில் மட்டுமல்ல, அடியவர்களுக்குதவுவதிலும், ஆபத்திலிருந்து காப்பதிலும் தாமோதரன் தாமதித்தாலும் இந்த சுதர்சன ஆழ்வார் தாமதிக்கவே மாட்டார்.

திருமால், தானே திருக்கஞ்சனூர் என்னும் ஊரில் வாசுதேவருக்குப் புத்திரராக சுதர்சனராக அவதரித்தார். அவருக்கு சுதர்சனர் என்று பெயரிட்டனர், பெற்றோர். அவரே இந்த சக்கரத்தாழ்வார் ஆவார்.

ஒருநாளும் தவறாமல் கமலக்கண்ணனுக்கு கமலப்பூவினைச் சூட்டிவிடுவான் கஜேந்திரன் என்னும் யானை. ஒரு நாள் அவனை கூகு என்னும் (crocodile) முதலை கவ்விக் கொண்டது. அப்போது முகுந்தனுக்கு முன்னமேயே விரைந்து வந்து முதலையின் தலையை வாங்கியது, இந்த சக்கரத்தாழ்வாரே.

கிருஷ்ணாவதாரத்தில் அசுய யாகம் நடத்த கண்ணனுக்கு முதல் மரியாதை செய்யும் வேளையில் கண்ணன் உட்பட அங்கிருந்த பீஷ்மன், யுதிர்ஷ்டிரன் என்று அனைவரையும் மிகவும் மோசமாக ஏசிக்கொண்டிருந்தான் சிசுபாலன். அதைப் பொறுக்க இயலாத கண்ணனும் தன் சக்கரத்தை ஏவிவிட்டு சிசுபாலைனைக் கொன்று முக்தி அளித்து, தன் துவாரபாலகராக்கிவிட்டார்.(ஆழி -சக்கரம்(சக்கரத்தாழ்வான்) வலத்துறையும் - வலப்பக்கம் உறையும்)


படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!- அனைவரையும் எப்போதும் விழிப்பாய் வைத்திருக்கும், படைகள் போர்க்களத்தில் செல்லும்போது அங்கு முழங்கும் சங்கும் பல்லாண்டு வாழ்வதாக! (புக்கு - புகுந்து, அப்பாஞ்ச சன்னியம் - சங்கு)

பாஞ்ச சன்னியம் என்பது சங்கு வடிவிலிருந்த பாஞ்ச ஜனன் என்னும் அசுரனை, சீனிவாசன் அடக்கி அவருக்கு முக்தி தந்து சங்கு வடிவில் எந்நாளும் தன்னுடன் இருக்கும் படி வைத்துக் கொண்டார்.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

என்று ஆண்டாள் மாதவனின் திருவாய், பச்சைக் கற்பூரம் போல் இனிதாய் மணக்குமா? இல்லை, கமலப்பூவினைப் போன்று கம கம வென்று மணக்குமா? பவளம் போன்று சிவந்த நிற வாய் இதழ்கள் எப்படி தித்தித்திருக்கும்? அந்த செவ்வாயின் சுவை எவ்விதம் இருக்கும்? என்று பூவராகனின் பூவிதழ்களின் நாற்றமும் மணமும் அறிந்துக் கொள்ள வெண்சங்கிடம் விழைந்து கேட்கிறாள் ஆண்டாள். இறைவனின் திருவாய் சுவை, மணம், திடம் எல்லாம் அறிந்த, அறியக்கூடிய பேறு பெற்றவர் இந்த பஞ்ச சான்னியம் என்னும் சங்கே!


பால்வெண்சங்கும், சுதர்சன சக்கரமும் எக்காலத்தும் இறைவனுடன் இணைபிரியாமல் இறைவனுக்குக் காவலாய் இருப்பவர்கள்! சங்கு எப்போதும் விழிப்பாய் இருக்கவும், சக்கரம் தீமைகளை அழிக்கவல்லதாயும் இருந்து இறைவன் கண்ணயர்ந்தாலும் இவைகள் ஒருகணமும் இமைக்காமல் விழிப்புடன் இறைவனைப் பாதுகாக்க வேண்டுமென பெரியாழ்வார் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்!

ஆபத்பாந்தவனுக்கே ஆபத்தா! காக்கும் கடவுளுக்கே காக்கும் கரங்களா! இங்குதான் நம் விஷ்ணு சித்தர் தாயாய் மாறி தனியாய் தெரிகிறார். ஆளுயர வளர்ந்த பிள்ளை, ஆணைக்கால் குவளையில் அன்னமிட்டாலும் பத்தாதென்று உண்பவனுக்கு, இன்னும் உணவு உண்ணத் தெரியவில்லை என்று இடித்துரைத்து, உணவூட்டம் தாயுள்ளம்! இந்த அக்கறை உணர்வு அன்னையைத் தவிர வேறு எவருக்கும் வராத உணர்வு!

பதவுரை:
பரிவுள்ளம் கொண்ட பரிமள நாதா, எம் பெருமானே! உன்னோடும் உம் அடியவர்களோடும் நாங்கள் எந்நாளும் பிரிவின்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேணும்; எந்நாளும் உன் வலப்பக்கமார்பினில் இதயத்தாமரையில் பூத்திருக்கும் அழகிய திருமகளும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்; உன் வலக்கையில் வீற்றிருக்கும் பேரொளி வீசும் சக்கரத்தாழ்வானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்; படைகள் போர்க்களத்தில் நுழையும் போது அங்கே ஊதப்படும் வெண் சங்கும் பல்லாண்டு் பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வதாக!

Sunday, April 19, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 1

திருப்பல்லாண்டு - பாடல் 1

சரிங்க மக்களே! இவ்வளவு நாளா நாம நாலாயிரத்திவ்யப் பிரபந்தப் பாடல்களி்ன் ஆசிரியர்களான பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொண்டோம் இல்லையா! இனி பாடல்களுக்கு வருவோமா... முதலாவதாக நாம் பார்க்கப் போவது பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு. பெரியாழ்வார் வாழ்ந்த காலத்திற்கு முன்னமேயே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்று பலர் இருந்தும் அவர்களின் பாடல்களை முதலாவதாக வைக்காமல், ஏன் பெரியாழ்வார் பாடல்களை முதலில் பார்க்கிறோம் என்பதில் உங்களுக்குப் பெருத்த சந்தேகம் இருக்கலாம். அதுக்குக் காரணம் ஒன்னே ஒன்னுதான். உலகத்துல அதுக்கு மிஞ்சினதும் ஒன்னும் இல்லதான். அதுதான் தாய்மை.
பெரியாழ்வார் பாடல்களோட சிறப்பே அவரது பாடல்களில் ததும்பும் தாய்மை நிறைந்த பக்தியே! பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியே இந்த பட்டர் பிரான் தான். பெரியாழ்வாரைப் பற்றி நாம இங்க ஏற்கனவே பார்த்திருந்தோம்! அதனால இப்போ பாடல்களுக்கு வருவோமா! ஒரு துளி அமுதம் உண்டால், உயிர்த்துளி நம்மை விட்டு என்றும் நீங்காது ன்னு சொல்வாங்க. அப்போ ஒரு அமுதக்கடலையே உண்டால்..... அந்த அமுதக் கடல்ல நீந்தி நீக்கமற நிறைந்துள்ள நிர்மலனடி தொழுவோமாக. பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு 

                          காப்பு குறள் வெண் செந்துறை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* 
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* 
உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு.
குறிப்பு: * குறியிட்டுள்ள இடங்களில், நிறுத்திப் படிக்க வேண்டும்

நிகழ்வு: கமலக்கண்ணன் கனவில் இட்ட கட்டளைக்கிசைந்து, பெரியாழ்வார் வல்லபதேவ பாண்டியனிடம் சென்று பரம்பொருள் யார் என்ற கேள்விக்கு? எங்கும் எப்போதும் எப்பொருளிலும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் பெருமாளே! என்று வேதங்களிலுள்ள ஆதாரங்களுடன் கூற பொற்கிழி தானே வளைந்து கொடுத்தது. பொற்கிழியை வென்ற விஷ்ணுசித்தனை பாண்டிய மன்னன், பட்டர்பிரான் என்னும் பட்டமளித்து பட்டத்து யானை மேல் ஏற்றி, கொட்டு மேளங்கள் முழங்க மிகுந்த மரியாதையுடன் ஒரு மன்னனைப் போல் பரிசிலுடன் அனுப்பி வைத்தான். ஊரார் அனைவரும் திரண்டு வந்து பட்டர்பிரானுக்குப் பூமாரி பொழிந்து பெரும் சிறப்பு செய்தனர். எம்பெருமானும் அக்காட்சியைக் காண கருட வாகனம் மீதேறி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலமாய்க் காட்சித் தந்தார். வானில் திடீரென்று ஆயிரம் ஆதவன் அவனியில் உதித்தப் பேரொளி தோன்ற, அதன் நடுவே குளிர்ந்த வெண்மேகமாய், கொள்ளை அழகுடன் கூடலழகர் காட்சித் தந்தார். உடனே அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் கூடலழகரைத் தரிசிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட விஷ்ணுசித்தர் சித்தம் சிதறினார். நெஞ்சம் பதறினார். அடியனாய் இருந்த அவர் சிந்தையில் தாய்மை குடியேறியது. இறைவன் மேல் கண்ணேறு ஏதாவது பட்டுவிடுமோ? என்று கலங்கி நின்றார். கல்லடியில் தப்பித்தாலும் கண்ணடியில் தப்பிக்க இயலாதே என்று நடுநடுங்கிப் போனார். உடனே அனைவரின் சிந்தையையும் மாற்றும் வண்ணம், கார்முகில் வண்ணன் மேல் திருப்பல்லாண்டு பாடினார். அங்கு கூடியிருந்தோரும் அவருடன் சேர்ந்து பாடினர். அந்தப் பாடல் தான் இந்த திருப்பல்லாண்டு! 

பொருள்: 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் - பலகோடி நூறாயிரம் ஆண்டு காலமாய் (infinitive) பல யுகங்களைக் கடந்தும் ஆதிக்கும் ஆதியான காலம் முதலாய் நின் திருவருட்கரங்களிலே உயிர்களை வைத்துக் காத்து அருள்புரியும் ஆதிகேசவனே, 

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா - குழந்தைக் கண்ணனுக்கு, தாய்மாமன் கம்சனே வில்லனாய் வாய்த்துவிட, அவன் குழந்தையைக் கொல்ல எத்தனையோ தந்திரங்கள் செய்தும், அவன் கெட்ட எண்ணம் நிறைவேறவில்லை. அதில் ஒன்று தான் மல்யுத்த வீரர்களுடன் வைத்த மற்போர்.
குழந்தை கண்ணன் கம்சனின் சாணுரன், முஷ்டிகன் என்னும் இரு மற்போர் வீரர்களையும் எதிர்த்து சண்டையிட வேண்டும். ஒரு முறை குழந்தை கண்ணன், வெண்ணையைத் திருடி உண்டுவிட்டான். அதை அறிந்த யசோதை ஏன் வெண்ணையைத் திருடி உண்டாய்? என்று வினவியதற்கு, கண்ணனோ இல்லை என்று பொய்யுரைத்தான். உடனே, யசோதா கண்ணனின் வாயைத் திறக்கச் சொன்ன பொழுது, கண்ணனும் தன் திருவாய்த் திறந்துக் காண்பித்தார். வாயினுள் யசோதை, வெண்ணையைக் காணவில்லை! அண்டசராசரமும் அவர் கண்முன், கண்ணனின் வாயினுள் விரிந்தது. இவ்வாறு பேரண்டம் அத்தனையும், தன் வாயினுள் வைத்து இருக்கும் கண்ணனுக்கு இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். அவன் தன் திண்மையான தோள் வலிமையினால் வீரர்களை எளிதில் வெற்றிக் கொண்டான், பகவான் கண்ணன். அந்த கார் முகில் வண்ணனை, நீல மணி தேகத்தானை, மலைக் கள்ளனைத் தான் பெரியாழ்வார் பாடுகிறார் - தன் திடமான தோள் வலிமையினால் மல்யுத்த வீரர்களை வெற்றிக் கொண்ட நீல மணிவண்ணா! 

நின் செவ்வடி செவ்வித்திருக் காப்பு - எல்லா உயிர்களுக்கும், எக்காலத்தும் காப்பாய் அமையும் உம் செம்மையான திருவடிகளுக்கு பலகோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் திருவந்திக்காப்பு தொடரவேண்டுமாக! 

பதவுரை: 

தன்னுடைய திண்மையான தோள் வலிமையினால் கம்சனின் மற்போர் வீரர்களைத் தோற்கடித்த நீலமணிவண்ணனே, பல கோடி நூறாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து ஊழிதோறும் எல்லா உயிர்களையும் காக்கும் உன்னுடை சிவந்த செம்மையான திருவடிகளுக்கு பல கோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் திருக்காப்பு தொடர்வதாக!