பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை
குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!
பாடல் 1 - 3 - 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.
பொருள்:
மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே மின்னல் போல் ஒளிரும் வயிர மணிகளைப் பதித்து;
மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று. ஆங்கிலத்தில் ரூபி என்று அழைப்பார்கள். அது சிவந்த நிறத்தில் இருக்கும். அத்தகைய மாணிக்கக் கற்களைப் பதித்து, அவற்றிற்கிடையில் வைரக்கற்களைப்பதித்து...
மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும்.
செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன்.
அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அனுப்பி வைத்தான்; நானிலத்தில் உனக்கு நிகரான நன்தொட்டில் கிடைத்திராதென்று எண்ணி, தூய பசும்பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிறிய தொட்டிலில், பொலிவான மாணிக்கக் கற்களும், அவற்றிற்கிடையில் எடுப்பான வைரக்கற்களையும் பதித்த அழகிய தொட்டிலை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்திருக்கின்றான்.
மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகனே! குள்ளமான வடிவில் வந்த எங்கள் குருவே! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்! மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியிலேயே உலகத்தை அளந்த உத்தமனே சத்தமின்றி கண்ணயற உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.
கதைச்சுருக்கம்:
இறைவனின் பத்து அவதாரங்களில் ஐந்தாவதாக வருவது 'வாமன அவதாரம்'. மகாவிஷ்ணு, உலகம் உய்வடையவும், நீதி நிலைபெறவும், பத்து விதமான திருவவதாரங்கள் கொண்டு இவ்வுலகுக்கு வந்தாரென்று அறிந்திருக்கிறோம்..
முதலாவதாக மச்சாவதாரம் - கடல்நடுவே வீழ்ந்த சதுர் வேதம் தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்; மச்சம் - மீன்
இரண்டாவதாக கூர்மாவதாரம் - அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் - கூர்ம அவதாரம்; கூர்மம் - ஆமை
மூன்றாவதாக வராகாவதாரம் - பூமியைக் காத்திட ஒருகாலம் நீ புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்; வராகம் - பன்றி
நான்காவதாக நரசிம்மாவதாரம் - நாராயணா என்னும் திருநாமம் நிலைநாட்டிட இன்னும் ஒரு அவதாரம் - நரசிம்ம அவதாரம்; சிம்மம் - சிங்கம்
ஐந்தாவதாக வருவதுதான் வாமனாவதாரம் - மாபலி சிரம் தன்னில் கால்வைத்து இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்!- வாமன அவதாரம்! வாமனன் - குள்ளன்
அப்படினு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 'திருமால் பெருமை' என்னும் திரைப்படத்தில் பாடிருப்பார்.
மேற்கண்ட இந்த அவதார வரிசைகளைப் பாருங்கள் ஒருவிதமான பரிணாம வளர்ச்சியை ஒத்துஇருப்பதை அறியலாம். பூமியில் முதன் முதலில் உயிரினங்கள் உருவானது கடலில்தான். அதிலும் குறிப்பாக அமீபா.
அவதாரம் என்னும் சொல்லுக்கு 'இறங்கிவருதல்' என்று பொருள் ஆகும். சரி பொதுவான சங்கதிகள் போதும்! கதைக்கு வருவோம்!
வாமனாவதாரம்:
கேரள நன்னாட்டில் திருவோணம் என்னும் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதை நாம அறிவோம். அதற்கும் வாமனாவதாரத்துக்கும் என்ன தொடர்பு??
மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 'பக்த பிரகலாதன்' னின் பேரனாவான்.
ஆ! அச்சோ! அப்போ அசுரனா??
ஏன், அசுரக் குலத்துல தோன்றினா அசுரனாத்தான் இருக்க வேண்டுமா?? பிரகலாதன் என்ன அசுரனா??
பக்தன் பிரகலாதாழ்வான் என்று தானே சொல்கிறோம்! பிரகலாதாசுரன் என்று சொல்வதில்லையே. பயங்கரமான நாராயண பக்தியும், அவன் பால் பேரன்பும் கொண்ட பிரகலாதனின் மடியில் தவழ்ந்து விளையாடி, பக்திமயமான கதைகளைக் கேட்டு, அன்பும் அறனும் குழந்தைவயது முதலே ஊட்டப்பெற்று வளர்ந்த இந்த மகாபலிச்சக்கரவர்த்தியும் ர்ர்ர்ரொம்ப ர்ர்ர்ரொம்ப நல்லவராத்தான் இருந்தார்.
அவர், தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான். மகாபலியின் திறைமையைக் கண்டு அச்சமுற்று, வருத்தமுற்ற தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனராம்.
அதேசமயம், உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது, உலக உயிர்கள் அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம். ஆனால், ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு. வல்லவரு. யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவரு; தானம் செய்வதில் தன்னைவிட தலைசிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம். தான்தான் தானத்தின் தலைவன் என்கிற அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர் ஆட்சி புரிந்து, விண்ணுலகம், மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி.
மகாபலியும் முக்திபெறுகின்ற காலம் வந்தாயிற்று! மகாவிஷ்ணு, காசியப முனிவருக்கு மகனாக வந்து, வாமனனாகத் திருவவதாரம் புரிந்தார்.
வாமனனாக வந்த இறைவன், ஒரு கையில் கமண்டலம், மறுகையில் ஒரு குடையும் கொண்டு, உடலை மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டு, குள்ளமான உருவத்துடன், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்றான்.
சிறுவனாக வந்த வாமனனிடம், மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?' என்று கேட்டார்.
வாமனன், தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி அளவுடைய நிலம் வேண்டும் என்று யாசித்தார்.
மகாபலிச்சக்கரவர்த்தியும் தருவதாக ஒப்புக் கொண்டு, சிறுவனுக்குக் கொடுக்க எத்தனிக்கும் வேளையில் அரசவையில் இருந்த அவரது குருவான சுக்கிராச்சாரியர், வந்திருப்பது யாரென்று, தன் ஞானத்தால் அறிந்தார்.
மகாவிஷ்ணுவே இப்படி உருமாறி வந்தால், இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறதென்பதை உணர்ந்து, அவர் சக்கரவர்த்தியிடம் 'வேண்டாம்!' என்று இடைமறித்தார்.
மாவலிச் சக்கரவர்த்தியோ, ஒரு சிறுவனின் தேவையைக் கூட நிறைவேற்ற இயலாத தான் ஒரு மன்னனா?? இப்பாலகனுக்குத் தராவிட்டால், தான் இதுவரை செய்த தர்மங்களால் என்ன பயன்?? எல்லாவற்றிற்கும் மேல், கொடுத்த வாக்கை எப்படி மீறுவது?? என்று சிந்தித்துவிட்டு, தன் குருவின் சொல்லையும் மீறி தானம் அளித்தார்.
வாமனனும் அளக்க ஆரம்பித்தான். அதற்கு முன் அவன், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் பெற்றார்.
மாவலியும் இறைவனின் திருவுருவைத் தரிசித்தான். வாமனனாய் வந்தவன், வானமளவு நெடிதுயர்ந்து, முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார்.
மூன்றடியில், இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாது திகைக்கவே....
மாவலித் தலைகுனிந்து, இறைவனிடம் வணங்கி நின்று, மூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார்.
இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து, முக்தி பெற்றான். வாமன அவதாரம் வதத்திற்காக அல்ல! முக்திக்காக(வீடுபேற்றிற்காக)!! முன்னமே, இரண்யகசிபு வதத்தின் பொழுது, பிரகலாதனுக்கு இறைவன் கொடுத்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? இனி, பிரகலாதனின் வம்சத்தில் எவரையும் வதம் செய்வதில்லை என்று இறைவன் சொன்ன சொல்லையும் மீறவில்லை.
ஆனாலும், இறைவனிடம், ஆண்டிற்கொரு முறைத் தான், தன் மக்களை வந்து காண அனுமதி வழங்கியருள வேண்டினான்.
இறைவனின் ஒப்புக் கொள்ளவே, ஒவ்வொரு ஆண்டும் திருவோணத் திருவிழா அன்று மகாபலிச் சக்கரவர்த்தி தன் மக்களை வந்து காண்பதாக கேரளம் மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் மக்கள் நம்பி, தங்கள் மன்னனை வரவேற்க ஊரே திருவிழாக்கோலம் பூண்டு, அத்தப்பூ கோலமிட்டுத் தங்கள் சக்கரவர்த்தியை வரவேற்கின்றனர்.
முதன் முதலாக மனித உருவில் இறைவன் எடுத்தத் திருவவதாரம்- 'வாமன அவதாரம்'!
இறைவனின் திருமேனி சம்மந்தத்தை விட, திருவடி சம்மந்தம் கிடைப்பதே பெரும்பேறாகும்!
நம் பாவங்கள் முழுமையையும் நீக்கி, நம் புண்ணியங்கள் அனைத்தையும் அவனே ஏற்றுக் கொண்டு, நமக்கு நித்திய வாழ்வு தந்து உய்விப்பது இறைவனின் திருவடியே ஆகும்.
திருவள்ளுவரும், இறைவனைத் திருவடியாய்த்தான் பார்க்கிறார்.
பெருமாள் கோயில்களில், கோயில் அர்ச்சகர் நம் தலையில் சடாரி என்று ஒன்றை சாற்றுவார். அது வேறு ஒன்றும் இல்லை, இறைவனின் திருவடியே ஆகும்.
சடாரி ன்னா என்னான்னு கேக்குறீங்களா?? கிரீடம் மாதிரி ஒன்ன பெருமாள் கோயில் ல நம்ம தலையில வைப்பாரு, கோயில் அர்ச்சகர். அதற்குப் பெயர் தான் சடாரி!
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.
பதவுரை:
விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.
பின்குறிப்பு:
ஒரு சிறு உதவி! இப்பாடலில் இடைச்செருகலாக வந்த கதைச்சுருக்கம் தேவையா? இல்லையா? என்று கூறுங்கள். நீங்கள் விரும்பினால், இந்த பதிவை வைத்திருக்கலாம் இல்லாவிட்டால் நீக்கிவிடலாம். :-)
-தமிழ்