Sunday, October 25, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 9 மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டுஉவ ளாய்நின்றாள் ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத் தனையானே தாலேலோ
பொருள்:
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் - உடலிலிருந்து வெளிப்படும் நறுமணத்துக்காக நாற்றப் பொடியும், மஞ்சளும் நல்லா கவனிங்க கண்ணனுக்கு இயற்கை மணம் இல்லை ;-) அறிவியல் படி பாத்தா உண்டு ;-))) ஒருவேளை பெரிய ஆளானாத் தான் உடல்மணம் உண்டாகுமோ! நானப்பொடி - நறுமணப் பொடி (ச்)நானப் பொடின்னு வைச்சுக்குங்க. குளிக்கும் போது கண்ணனுக்கு நறுமணப் பொடியும், மஞ்சளும் பூசிக் குளிப்பாட்டுறாங்க. அதுனால உடலிலிருந்து அந்தப் பொடிகளின் மணம் கமழ்கிறது. செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் - அழகான பெரிய கண்களுக்குத் தடவ மையும், நெற்றியில் சிவப்பு வண்ணமிட்டு செய்ய - அழகான அஞ்சனம் - மை குளிச்ச பிள்ளைக்கு கண்ணுக்கு மை தடவி, சிந்துரமும் இடுகிறார்கள் . கன்னத்துல ஒரு பொட்டு வைப்பாங்களே, அது வழக்கம் இல்லையோ?? வெய்ய கலைப்பாகி கொண்டுஉவ ளாய்நின்றாள் - விரையும் மானில் ஏறி வரும் காளி உனக்குத் துணையாக நின்றாள். வெய்ய - விரைந்து கலைப்பாகி - கலைமானின் பாகி (பாகனுக்குப் பெண்பால்) ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத் தனையானே தாலேலோ - அரங்கத்தில் பள்ளி கொண்ட தலைவனே அழாது கண்ணுறங்கு ஒரு சின்ன இலக்கணக் குறிப்பு எதுகைனா அடியின் இரண்டாவது எழுத்து ஒன்றி வருதல். அதோட முதல் எழுத்து குறில்னா எல்லா அடிகள்லயும் முதல் எழுத்து குறில் தான் வரணும். மாறி வந்தாத் தவறு. மெய், செய்ய, வெய்ய வந்துருக்க எதுகைக்கு ஐயா எப்படிப் பொருந்தும்? இங்க தான் ஐகாரக் குறுக்கம் வருது. ஐ நெடிலாக ஒலிக்காம அய்யான்னு குறுகி ஒலிக்கும். அதனால எதுகை வந்துருச்சே!! பதவுரை: உன் நறுமணக் குளியலுக்கு நாற்றப் பொடியும், மஞ்சளும் செய்து, குளித்த பின் பெரிய கருவிழிகளில் பூச மையும், நெற்றியில் இட சிந்துரமும் விரையும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட காளி (அ) துர்க்கை உனக்குத் துணையாக இருக்கின்றாள் அரங்கத்தில் பள்ளி கொண்ட அய்யனே அழாது கண்ணுறங்கு

Saturday, October 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 8 கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ
பொருள்:
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை - இடுப்புக் கச்சையோடு, தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் அணியும் வளை இவற்றோடு கச்சு - இடுப்பில் இறுக்கிக் கட்டும் பட்டை (belt) சுரிகை - குறுவாள் காம்பு - பட்டாடை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ - நெற்றியில் அணிய மணி ஆடும் சுட்டியும், ஒப்பற்றத் திருவடிகளுக்கு பொன்னாலான பூவும் நிரைப்பொற்பூ - நிரைந்திருக்கும் பொற்பூ கால்களை நிரைக்கும் பொற்பூவா அல்லது (நிலத்தில்) நடக்கும் போது அடி எடுத்ததும் அங்கே ஒரு மலர் காட்டுவாங்களே, அந்த மாதிரியா? தாமரை மணாளனுக்கு தங்க மலராமா? நடக்கட்டும். அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள் - அச்சுதன் என்றழைக்கப் படும் உனக்காக நிலமகள் அனுப்பி இருக்கிறாள் இங்கன ஏன் அச்சுதன் பேர் குறிப்பிடுறார் ஆழ்வார்? அச்சுதன் என்ற பெயரின் விளக்கத்தில் பொருள் புரியுமோ? நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ - பூதகியின் நச்சுப்பால் உண்ட நாராயணனே அழாது கண்ணுறங்கு பதவுரை: இப்போது நிலமகள் முறை! மிடுக்கான தோற்றத்துக்கென்று பொருட்களைச் பட்டியலிட்டு அனுப்புகிறாள். இடுப்புக்கு கச்சு, அதில் சொருக தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் பொருத்தத் தங்க வளை, நெற்றியில் ஆடும் மணிச்சுட்டி, திருவடிகளை நிரப்பும் பொற்பூவும் அச்சுதன் என்று பெயர் பெற்ற உனக்கு நிலமகள் தந்திருக்கிறாள். பூதகியை அவளின் முலை நச்சுப் பால் உண்டு முடித்த நாராயணனே நான் தாலாட்ட நீ அழாது கண்ணுறங்கு.

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 7 கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ
பொருள்:
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் - நறுமணம் நிறைந்த நல்ல துளசியைக் கையால் கண்ணி தொடுத்து கான் - மணம் கான் + ஆர் - கானார் நறுமை - நன்மை (பயக்கும்) துழாய் - துளசி வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் - வானின் செழுமை மிகுந்த சோலையிலிருக்கும் கற்பகத் தருவின் பூக்களால் நெருக்கித் தொடுத்த மாலையை வாசிகை - மலர்களால் செறிவாகத் தொடுக்கப் பட்ட மாலை தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் - தேன் நிறைந்த மலர் மேல் வைத்துத் திருமகள் அனுப்பி இருக்கிறாள். தேன் நிறைந்த மலரில் இருக்கும் மங்கைன்னும் படிக்கலாம். இதெல்லாம் உடன் தொக்கத் தொகைன்னு சொல்வாங்க. கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ - குடந்தையில் படுத்தவாறு இருக்கும் தலைவனே அழாது கண்ணுறங்கு பதவுரை: வானோர்கள் வந்து பரிசளித்தாகி விட்டது. இப்போது தாமரைச் செல்வியே பரிசளிப்பதாகச் சொல்கிறார் பெரியாழ்வார். மங்கை உறையும் மார்புக்கு நறுமண மாலை சூட்டுவதாகச் சொல்கிறார். எப்படிப் பட்ட மாலை? நறுமணம் மிக்க நல்ல துளசி இலைகளை கண்ணியாகத் தொடுத்து, கற்பகத் தருவின் மலர்களை செறிவாகக் கோர்த்துத் தன் கையால் செய்த மாலையை அனுப்புகிறாள். இப்ப உனக்கு மனசு நிறைஞ்சுதான்னு கேட்டுத் தாலாட்டுகிறார் தாயுமான ஆழ்வார்.

Monday, October 5, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து 
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி 
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் 
கலித்தாழிசை பாடல் 6 

ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும் 
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான் சோதிச் 
சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ
பொருள்:

ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும் - ஓலி எழுப்பும் கடலின் ஒளி பொருந்திய முத்தால் ஆன ஆரமும் ஓதம்னா பேரொலி, ஆர்ப்பரிப்பு. அதனால ஓதம்னால கடல்னு பண்புப் பெயர் உண்டு. படைகள் ஆர்பரிக்கும் போருக்கும் ஓதம்னே பெயர். 

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் - உயர் வகைப் பவளமும் வண்ணச் சரிகையும் சந்தம் - வண்ணம். இந்தப் பொருள் கொண்டு இணை மற்றும் பாடல் வகைக்களுக்கு இனிமையான தமிழ் சொல் கூறலாம். சந்த விருத்தம் - வண்ணப் பெருக்கு இங்க பாருங்க. 

மாதக்க வென்று வருணன் விடுதந்தான் - உனக்குச் சிறப்பானது என்று மழைக் கடவுள் தந்தனுப்பி இருக்கிறான் மா - பெரியது, சிறப்பானது மாதக்க - உன் சிறப்புக்குத் தக்கது 

சோதிச் சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ - அழகிய தோள்கள் ஏந்தும் புகழ் வீசும் முடியுடையவனே கண்ணுறங்கு 

பதவுரை: 

மழைக்கும் கடலுக்கும் தலைவன் வருணன். அவன் தன்னிடத்தே இருந்து விளையும் பொருள்களான முத்து, பவளம் போன்றவற்றோடு வண்ணம் நிறைந்த சரிகைகளையும் உனக்குச் சிறப்பாக இருக்கும் என்று அனுப்பி இருக்கிறான். அழகிய தோள்களில் அமைந்த சிறப்பு வாய்ந்த முடி சூடிய கண்ணனே கண்ணுறங்கு

Sunday, October 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 5
எழிலார் திருமார்புக்(கு) ஏற்கும் இவையென்(று)
அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ

பொருள்:

எழிலார் திருமார்புக்(கு) ஏற்கும் இவையென்(று) - வடிவான உன் மார்புக்கு ஏற்றவை என்று

அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு - அழகிய ஐந்தாயுதத்தை (பெருமாளின் அடையாளங்களான சங்கு, எஃகம், வாள், தண்டு, வில் ஆகியவையே ஐந்தாயுதம்) அருமையான சங்கிலியில் கோர்த்துக் கொணர்ந்த

ஆரம் - முத்து/மணி கோர்த்த கழுத்தணி

வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் - குற்றமற்ற கொடையாளனான குபேரன்

வழு - குற்றம்
வழு + இல் - வழுவில்

தொழு(து)உவ னாய்நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ - உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கின்றான் தூய மணியின் நிறங்கொண்டவனே கண்ணுறங்கு


பதவுரை:

உன்னுடைய அடையாளங்களான ஐந்தாயுதம் பொருத்திய சங்கிலியை எழில் நிறைந்த மார்புக்குச் சூட்டுவதற்காக கொண்டு வந்த குற்றமில்லாத கொடையாளனான குபேரன் உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கிறான். தூய மணியின் நீல வண்ணம் கொண்டவனே கண்ணுறங்கு.

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 4
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ

பொருள்:

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் -
சங்கில் வலம்புரிச் சங்கையும் அருள் தரும் திருவடிகளுக்கு கொலுசும்

சங்கின் வலம்புரி - சங்கிற் சிறந்த வலம்புரி
சேவடிக் கிண்கிணி - போன பாட்டில் ஏற்பட்ட குழப்பம் இந்தப் பட்டில் தான் தீர்ந்தது. கிண்கிணி கொலுசு தான்.

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் - உள்ளங்கையில் ஏந்தும் சரிவளையும், தோளில் அணியும் காப்பும் , அரைஞான் கொடியும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் - உயர்நிலையாம் வானுலகின் அமரர்கள் தந்தனுப்பி இருக்கிறார்கள்

அங்கண் - சிறந்த இடம்
விசும்பு - வானுலகம்

செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ - சிவந்த கண்கள் கொண்ட கருமுகில் வண்ணனே. தேவகி பெற்ற சிங்கமே உனக்குத் தாலாட்டுப் பாடுகின்றேன்.

பதவுரை:

சிறப்பு மிகுந்த வானுலகத்தில் இருந்து அமரர்கள் உனக்கு மாற்று அணிகலணாக வலம்புரிச் சங்கையும், திருவடிக் கொலுசுகளும், சரிகையும், தோள்காப்பும், அரைஞான் கொடியும் தந்திருக்கிறார்கள். சிவந்த கண்களை உடைய தேவகி பெற்ற சிங்கமே உனக்குத் தாலாட்டுப் பாடுகின்றேன். குழந்தைக்கு கண்கள் சிவந்திருக்காதே! சிங்கத் திருவுருவால் சிவந்த கண்களையுடைய தேவகியின் மைந்தனேன்னு படிச்சா சரியா வரும் ;-).

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 3
எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ

பொருள்:

எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு -
அழகிய மார்பினை உடைய எங்கள் தலைவனுக்கு

தம்பிரான் - தலைவன்

தாமரைத் தாளர்க்கு இந்திரன் தானும் - தாமரை மலர் போன்ற குளிர்ந்த திருவடிகள் கொண்டவனுக்கு கொண்டவனுக்கு இந்திரன் தானும்

சந்தம் அழகிய எழிலுடைக் கிண்கிணி - இனிய இசையை எழுப்பும் கொலுசினை

கிண்கிணி - கொலுசு, சதங்கை (அப்ப கிலு,கிலுப்பு கிடையாதா)

தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ - உனக்குத் தந்து உன்னருகில் நிற்கின்றான். தாமரைக் கண்கள் கொண்டவனே உனக்குத் தாலேலோ

பதவுரை:

ஒருநிறைத் தலைவர்கள் கண்ணனுக்கு பரிசு தந்தாகி விட்டது. இந்திரனும் தன் பங்குக்கு திருவடிகளுக்கு கொலுசு தருகிறானாம். என்ன இருந்தாலும் அசுரர் எழுச்சி கண்ட போதெல்லாம் அடைகலம் அடைந்தது திருமாலின் திருவடிகள் தானே. அந்த நன்றி உணர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமல்லாது கூடவே இருந்து பணிவிடை வேறு செய்வானாம். எனவே அடியார்களுக்கு மலர் போன்று இரங்கிய கண்கள் கொண்டவனே உன்னைத் தாலாட்டுகிறேன்.