பதவுரை:
போரொக்கப்பண்ணி இப்பூமிப் பொறை தீர்ப்பான் - உயிரினங்கள், பொதுவாக இம்மண்ணுலகில் பிறவி எடுப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் முன்வினைகள் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் இப்பூமியில் தோன்றுவதற்கு என்ன காரணம்? இப்பூவுலகில் அதர்மம் அதிகரித்து, தர்ம-அதர்ம சமநிலை மாறுபடும் போது, தர்மத்தை காத்து, சமநிலையை நிலைநிறுத்த இறைவன் திருவவதாரம் புரிகிறார். ஏன் தர்ம-அதர்ம சமநிலை? தர்மம் மட்டுமே இவ்வுலகில் இருந்தால் என்ன? ஏன் அதர்மமும் இருக்க வேண்டும்?? இருள் - ஒளி; குளிர் - வெப்பம்; ஓய்வு - இயக்கம்; அன்பு - பகை; பசித்தல் - புசித்தல்; பிறப்பு - இறப்பு; நிசப்தம் - சப்தம் முதலியவற்றை போல அதர்மம் - தர்மம் இணையும் சரியான அளவில் இருக்க வேண்டும்.
மனிதர்கள் தங்கள் வாழ்வை நெறிபடுத்த ஏற்படுத்திய சில தர்மங்கள், இயற்கைக்குப் பொருந்துவதில்லை. எளிமையாகக் கூறினால்,
"பொய்மையும் வாய்மையே, புரைதீர்ந்த நன்மை பயக்குமிடத்து".
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது போல, சமநிலையைக் காத்தல் வேண்டி, இறைவன் பூமியில் அவதாரமாய் தோன்றுகிறார். மகாபாரதத்திலும், பகவான் முற்றிலும் விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்பதிலிருந்தே இந்த தர்ம-அதர்ம சமநிலை எவ்வளவு முக்கியம் என்பதை உணரவேண்டும்.
இப்பாடலில், மகாபாரதப்போரைக் குறிப்பிடுவது போல் தோன்றினாலும், "போரொக்கப் பண்ணி இப்பூமிப் பொறை தீர்ப்பான் " என்னும் இவ்வடி, இறைவனின் அனைத்து அவதாரங்களுக்கும் ஏற்புடையதே.
(போர் - யுத்தம், ஒக்கப் பண்ணி, பண்ணுதல் - செய்தல், பொறை - பாரம், துன்பம்)
போரொக்கப்பண்ணி: துரியோதனாதிகளைப் போரில் பொருந்தும்படி செய்து - கண்ணபிரான், துரியோதனனிடத்தில் பாண்டவர்கள் பால் தூது சென்றார் என்றுதானே பெரியாழ்வார் முன்னம் உரைத்தார். இப்போது துரியோதனாதிகளைப் போருக்கு அழைத்தாற் போல் பாடுகிறாரே என்று குழப்பமாக இருக்கிறதா??
கண்ணன், துரியோதனனிடத்தில் பாண்டவர்கள் தங்களின் 12 ஆண்டு கால வனவாசத்தையும், 1 ஆண்டு கால மறைவு வாழ்க்கையும்(அஞ்ஞாத வாசம்) நிறைவு செய்துவிட்டமையால், இனி அவர்களின் அரசைத் திருப்பித் தர வேண்டும் என்றார். அதை மறுத்த துரியோதனனிடம், பாதி அரசாவது அல்லது 5 ஊராவது அல்லது 5 வீடாவது பாண்டவர்களுக்குத் தரல் வேண்டும் என்றார். துரியோதனனோ மிகுந்த சினத்துடன், ஊசி முனை அளவு இடம் கூட பாண்டவர்களுக்குத் தர முடியாது என்று முடிவாகக் கூறிவிட்டான். ஆகையினால்,
பொய்வளர்ந்த மொழி மன்னன் மற்றிவை புகன்ற பின்பு புயவலியினால்
ஐவர்தங்களரசுங் கொடாமல் அடலாண்மை கொண்டெதிரடர்த்தியேல்
மெய்விளங்க வருகுரு நிலத்தினிடை வந்து வெஞ்சமர் விளைக்கவே
கைவழங்குகென நின்றதூணிடை அறைந்துரைக்குமிவை காவலன்
- வில்லிபாரதம்
பொய் வளர்ந்த மொழி மன்னன்(துரியோதனன்), முன்னம் சொன்ன சொல்லைக் காப்பாற்றாததினால், இப்பொழுது 'அடலாண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல், குரு நிலத்தினிடை வந்து வெஞ்சமர் விளைக்கவே கை வழங்குக' என்று இம்முறை கண்ணன், துரியோதனனிடத்தில் உறுதி(சத்தியம்) வாங்குகிறார். துரியோதனனும் தூணில் அடித்து குரு சேத்திரத்தில் சமர் செய்வதாய் உறுதி கூறுகிறான். ஆகையினாலே, பெரியாழ்வார் "போரொக்கப் பண்ணி" என்று குறிப்பிடுகிறார்.
தேரொக்கவூர்ந்தாய்! செழுந்தார் விசயற் காய் - தும்பைப் பூமாலை அணிந்த அர்ச்சுணனுக்காகத் தேரை செலுத்தினாய்! பாண்டவர்கள் ஐவர்களுக்கும், கௌரவர்கள் நூற்றுவருக்கும் இடையேயான மகாபாரதப் போரில், பாண்டவர்கள் ஐவரின் தரப்பில் 7 அக்குரோணி சேனைகள் மட்டுமே இருக்க, துரியோதனன் தலைமையிலான கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி சேனைகள் உட்பட, கடும் பிரம்மச்சரிய விரதத்தை வாழ்நாள் முழுதும் கடைபிடித்த, பாண்டவர்-கௌரவர்களின் பாட்டனார் பீஷ்மர், குரு துரோணர், நட்புக்காக இன்னுயிர் ஈந்த வள்ளல் கர்ணன், சகுனி, ஜெயத்ரதன் என்று வலிய, பெரிய படைகளுக்குச் சமமாகத் தேரை செலுத்திய கண்ணபெருமானே!
"வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்"
என்னும் பாடல், போரின் பல்வேறு நிலைகளும் அதற்கேற்ப அவர்கள் அணியும் பூமாலையின் வகைகளையும் விவரிக்கின்றது.
தும்பை மலர் மாலை அணிந்து போர்செய்யும் அர்ச்சுணனுக்காக, அவனின் தேரோட்டியாய் (பார்த்தனின் இரத சாரதி), துரோணாதிகள் நூற்றுவர்க்கும், பீஷ்மர், துரோணர், கர்ணன் உள்ளிட்ட 11 அக்குரோணி சேனைகளையும் சமன் செய்யும் வண்ணம் இலாவகமாய் தேரை ஓட்டி, செரு(போர்) வென்று வாகை சூடினவனே(அர்ச்சுணனுக்கு சூட்டினவனே ~ கண்ணனால், பாண்டவர்கள் வென்றனர்), இலட்சோப இலட்ச சேனைகளுக்கு இணையாக தேரினை செலுத்தியதோடு அல்லாமல், அர்ச்சுணன் கலக்கமுற்று சோர்வடைந்த வேளையில் கீதோபதேசம் புரிந்து மறவனுக்கு மறமே அறம் என்று உணர்த்தி அர்ச்சுணனையும் வழிநடத்தினவனே!
(தேர் - போர் இரதம், ஒக்க - சமமாக, இணையாக, ஊர்ந்தாய் - ஊர்தல் ~ நகர்தல், தார் - மாலை, விசயற் காய் - விசயனுக் காய் ~ விசயனுக்காக, விசயன் - அர்ச்சுணன்)[1 அக்குரோணி = 21,870 தேர்கள்; 21,870 யானைகள்; 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 படைவீரர்கள் (1:1:3:5)]
காரொக்கும் மேனிக் கரும்பெருங்கண்ணனே! ஆரத்தழுவாவந்து அச்சோவச்சோ - திரண்ட மழைமேகம் போல, உருவுகருத்த, தோள்பருத்த வலிமைமிகுந்த கண்ணனே, ஓடி வந்து என்னை ஆரத்தழுவி அணைத்துக் கொள்ள வருவாயாக! (கார் - மழைமேகம், மேனி - உடல் )
ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ. - ஆயர்குல போர் ஏறே என்னை வந்து அணைத்துக்கொள்வாயாக! (ஆயர்கள் - இடையர்கள்; ஏறு - காளை, போர் வீரன்)
பொருளுரை:
"இப்பூமிப் பொறை தீர்ப்பான், போர்ஒக்கப் பண்ணி செழுந்தார் விசயற்காய் தேரொக்க ஊர்ந்தாய் காரொக்கும் மேனிக் கரும்பெருங்கண்ணனே ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ! ஆயர்கள்போரேறே அச்சோவச்சோ!"
இப்பூமியின் அதர்ம பாரத்தைத் தீர்ப்பவனே! மாட்சிமை மிகுந்த தும்பை மலர் மாலை அணிந்த அர்ச்சுணனுக்குத் தேரோட்டியாக சென்று இலட்சோபஇலட்ச சேனைகளுக்கு இணையாக அர்ச்சுணனின் தேரை செலுத்தி அவனுக்கு வெற்றி வாகை சூட்டிய உருண்டு திரண்ட கார்முகில் போன்ற திருமேனிக் கொண்ட கண்ணனே, என்னை ஆரத்தழுவி அணைத்துக் கொள்ள வருவாயாக! ஆயர்கள் போர் ஏறே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக!