Showing posts with label மூன்றாம் திருமொழி மாணிக்கங்கட்டி. Show all posts
Showing posts with label மூன்றாம் திருமொழி மாணிக்கங்கட்டி. Show all posts

Monday, November 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 10 வஞ்சனை யால்வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே
பொருள்:
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட - உன்னைக் கொல்லும் தீய எண்ணத்துடன் வந்த பூதகி என்னும் பேயின் முலைப்பால் உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய - கருமை நிறக் கண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல் - சிறப்பான சொற்களை மறை ஓதுவோர் நிறைந்த சிறீவில்லிபுத்தூர் வாழ் பட்டன் (பெரியாழ்வார்)பாடியதை எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே - ஒன்று விடாமல் படிப்பவர்க்கு இடர் என்றும் இல்லை. பதவுரை: கண்ணனைக் கொல்லும் வஞ்சத்துடன் வந்த பூதகியின் முலைப்பால் உண்ட மைநிறக் கண்ணனை இடையர் குல ஆய்ச்சி தாலாட்டிய சிறப்பினை மறை ஓதுவோர் நிறைந்த திருவில்லிப் புத்தூர் பட்டன் பாடிச் சிறப்பித்த பாடல்களை குறைவின்றி சொல்பவர்களுக்கு துன்பம் என்பது இல்லை. பொதுவாக இது போன்ற பத்துகள் அல்லது தொகுப்புப் பாடல்களின் இறுதியில் நூலாசிரியர் பற்றிய குறிப்பும் இந்தப் பாடல்களைப் பாடுவதால் கிடைக்ககூடிய பயன்கள் பற்றிய குறிப்பும் வருகிறது. பின்னாடி ஒரு ஒப்பீடு செஞ்சு பாக்கணும்.

Sunday, October 25, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 9 மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் வெய்ய கலைப்பாகி கொண்டுஉவ ளாய்நின்றாள் ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத் தனையானே தாலேலோ
பொருள்:
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும் - உடலிலிருந்து வெளிப்படும் நறுமணத்துக்காக நாற்றப் பொடியும், மஞ்சளும் நல்லா கவனிங்க கண்ணனுக்கு இயற்கை மணம் இல்லை ;-) அறிவியல் படி பாத்தா உண்டு ;-))) ஒருவேளை பெரிய ஆளானாத் தான் உடல்மணம் உண்டாகுமோ! நானப்பொடி - நறுமணப் பொடி (ச்)நானப் பொடின்னு வைச்சுக்குங்க. குளிக்கும் போது கண்ணனுக்கு நறுமணப் பொடியும், மஞ்சளும் பூசிக் குளிப்பாட்டுறாங்க. அதுனால உடலிலிருந்து அந்தப் பொடிகளின் மணம் கமழ்கிறது. செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் - அழகான பெரிய கண்களுக்குத் தடவ மையும், நெற்றியில் சிவப்பு வண்ணமிட்டு செய்ய - அழகான அஞ்சனம் - மை குளிச்ச பிள்ளைக்கு கண்ணுக்கு மை தடவி, சிந்துரமும் இடுகிறார்கள் . கன்னத்துல ஒரு பொட்டு வைப்பாங்களே, அது வழக்கம் இல்லையோ?? வெய்ய கலைப்பாகி கொண்டுஉவ ளாய்நின்றாள் - விரையும் மானில் ஏறி வரும் காளி உனக்குத் துணையாக நின்றாள். வெய்ய - விரைந்து கலைப்பாகி - கலைமானின் பாகி (பாகனுக்குப் பெண்பால்) ஐயா அழேல் அழேல் தாலேலோ அரங்கத் தனையானே தாலேலோ - அரங்கத்தில் பள்ளி கொண்ட தலைவனே அழாது கண்ணுறங்கு ஒரு சின்ன இலக்கணக் குறிப்பு எதுகைனா அடியின் இரண்டாவது எழுத்து ஒன்றி வருதல். அதோட முதல் எழுத்து குறில்னா எல்லா அடிகள்லயும் முதல் எழுத்து குறில் தான் வரணும். மாறி வந்தாத் தவறு. மெய், செய்ய, வெய்ய வந்துருக்க எதுகைக்கு ஐயா எப்படிப் பொருந்தும்? இங்க தான் ஐகாரக் குறுக்கம் வருது. ஐ நெடிலாக ஒலிக்காம அய்யான்னு குறுகி ஒலிக்கும். அதனால எதுகை வந்துருச்சே!! பதவுரை: உன் நறுமணக் குளியலுக்கு நாற்றப் பொடியும், மஞ்சளும் செய்து, குளித்த பின் பெரிய கருவிழிகளில் பூச மையும், நெற்றியில் இட சிந்துரமும் விரையும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட காளி (அ) துர்க்கை உனக்குத் துணையாக இருக்கின்றாள் அரங்கத்தில் பள்ளி கொண்ட அய்யனே அழாது கண்ணுறங்கு

Saturday, October 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 8 கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ
பொருள்:
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை - இடுப்புக் கச்சையோடு, தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் அணியும் வளை இவற்றோடு கச்சு - இடுப்பில் இறுக்கிக் கட்டும் பட்டை (belt) சுரிகை - குறுவாள் காம்பு - பட்டாடை உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ - நெற்றியில் அணிய மணி ஆடும் சுட்டியும், ஒப்பற்றத் திருவடிகளுக்கு பொன்னாலான பூவும் நிரைப்பொற்பூ - நிரைந்திருக்கும் பொற்பூ கால்களை நிரைக்கும் பொற்பூவா அல்லது (நிலத்தில்) நடக்கும் போது அடி எடுத்ததும் அங்கே ஒரு மலர் காட்டுவாங்களே, அந்த மாதிரியா? தாமரை மணாளனுக்கு தங்க மலராமா? நடக்கட்டும். அச்சு தனுக்கென்று அவனியாள் போத்தாள் - அச்சுதன் என்றழைக்கப் படும் உனக்காக நிலமகள் அனுப்பி இருக்கிறாள் இங்கன ஏன் அச்சுதன் பேர் குறிப்பிடுறார் ஆழ்வார்? அச்சுதன் என்ற பெயரின் விளக்கத்தில் பொருள் புரியுமோ? நச்சு முலையுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ - பூதகியின் நச்சுப்பால் உண்ட நாராயணனே அழாது கண்ணுறங்கு பதவுரை: இப்போது நிலமகள் முறை! மிடுக்கான தோற்றத்துக்கென்று பொருட்களைச் பட்டியலிட்டு அனுப்புகிறாள். இடுப்புக்கு கச்சு, அதில் சொருக தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் பொருத்தத் தங்க வளை, நெற்றியில் ஆடும் மணிச்சுட்டி, திருவடிகளை நிரப்பும் பொற்பூவும் அச்சுதன் என்று பெயர் பெற்ற உனக்கு நிலமகள் தந்திருக்கிறாள். பூதகியை அவளின் முலை நச்சுப் பால் உண்டு முடித்த நாராயணனே நான் தாலாட்ட நீ அழாது கண்ணுறங்கு.

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 7 கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ
பொருள்:
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும் - நறுமணம் நிறைந்த நல்ல துளசியைக் கையால் கண்ணி தொடுத்து கான் - மணம் கான் + ஆர் - கானார் நறுமை - நன்மை (பயக்கும்) துழாய் - துளசி வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் - வானின் செழுமை மிகுந்த சோலையிலிருக்கும் கற்பகத் தருவின் பூக்களால் நெருக்கித் தொடுத்த மாலையை வாசிகை - மலர்களால் செறிவாகத் தொடுக்கப் பட்ட மாலை தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் - தேன் நிறைந்த மலர் மேல் வைத்துத் திருமகள் அனுப்பி இருக்கிறாள். தேன் நிறைந்த மலரில் இருக்கும் மங்கைன்னும் படிக்கலாம். இதெல்லாம் உடன் தொக்கத் தொகைன்னு சொல்வாங்க. கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ - குடந்தையில் படுத்தவாறு இருக்கும் தலைவனே அழாது கண்ணுறங்கு பதவுரை: வானோர்கள் வந்து பரிசளித்தாகி விட்டது. இப்போது தாமரைச் செல்வியே பரிசளிப்பதாகச் சொல்கிறார் பெரியாழ்வார். மங்கை உறையும் மார்புக்கு நறுமண மாலை சூட்டுவதாகச் சொல்கிறார். எப்படிப் பட்ட மாலை? நறுமணம் மிக்க நல்ல துளசி இலைகளை கண்ணியாகத் தொடுத்து, கற்பகத் தருவின் மலர்களை செறிவாகக் கோர்த்துத் தன் கையால் செய்த மாலையை அனுப்புகிறாள். இப்ப உனக்கு மனசு நிறைஞ்சுதான்னு கேட்டுத் தாலாட்டுகிறார் தாயுமான ஆழ்வார்.

Monday, October 5, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து 
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி 
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் 
கலித்தாழிசை பாடல் 6 

ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும் 
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான் சோதிச் 
சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ
பொருள்:

ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும் - ஓலி எழுப்பும் கடலின் ஒளி பொருந்திய முத்தால் ஆன ஆரமும் ஓதம்னா பேரொலி, ஆர்ப்பரிப்பு. அதனால ஓதம்னால கடல்னு பண்புப் பெயர் உண்டு. படைகள் ஆர்பரிக்கும் போருக்கும் ஓதம்னே பெயர். 

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் - உயர் வகைப் பவளமும் வண்ணச் சரிகையும் சந்தம் - வண்ணம். இந்தப் பொருள் கொண்டு இணை மற்றும் பாடல் வகைக்களுக்கு இனிமையான தமிழ் சொல் கூறலாம். சந்த விருத்தம் - வண்ணப் பெருக்கு இங்க பாருங்க. 

மாதக்க வென்று வருணன் விடுதந்தான் - உனக்குச் சிறப்பானது என்று மழைக் கடவுள் தந்தனுப்பி இருக்கிறான் மா - பெரியது, சிறப்பானது மாதக்க - உன் சிறப்புக்குத் தக்கது 

சோதிச் சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ - அழகிய தோள்கள் ஏந்தும் புகழ் வீசும் முடியுடையவனே கண்ணுறங்கு 

பதவுரை: 

மழைக்கும் கடலுக்கும் தலைவன் வருணன். அவன் தன்னிடத்தே இருந்து விளையும் பொருள்களான முத்து, பவளம் போன்றவற்றோடு வண்ணம் நிறைந்த சரிகைகளையும் உனக்குச் சிறப்பாக இருக்கும் என்று அனுப்பி இருக்கிறான். அழகிய தோள்களில் அமைந்த சிறப்பு வாய்ந்த முடி சூடிய கண்ணனே கண்ணுறங்கு

Sunday, October 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 5
எழிலார் திருமார்புக்(கு) ஏற்கும் இவையென்(று)
அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ

பொருள்:

எழிலார் திருமார்புக்(கு) ஏற்கும் இவையென்(று) - வடிவான உன் மார்புக்கு ஏற்றவை என்று

அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு - அழகிய ஐந்தாயுதத்தை (பெருமாளின் அடையாளங்களான சங்கு, எஃகம், வாள், தண்டு, வில் ஆகியவையே ஐந்தாயுதம்) அருமையான சங்கிலியில் கோர்த்துக் கொணர்ந்த

ஆரம் - முத்து/மணி கோர்த்த கழுத்தணி

வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் - குற்றமற்ற கொடையாளனான குபேரன்

வழு - குற்றம்
வழு + இல் - வழுவில்

தொழு(து)உவ னாய்நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ - உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கின்றான் தூய மணியின் நிறங்கொண்டவனே கண்ணுறங்கு


பதவுரை:

உன்னுடைய அடையாளங்களான ஐந்தாயுதம் பொருத்திய சங்கிலியை எழில் நிறைந்த மார்புக்குச் சூட்டுவதற்காக கொண்டு வந்த குற்றமில்லாத கொடையாளனான குபேரன் உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கிறான். தூய மணியின் நீல வண்ணம் கொண்டவனே கண்ணுறங்கு.

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 4
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ

பொருள்:

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் -
சங்கில் வலம்புரிச் சங்கையும் அருள் தரும் திருவடிகளுக்கு கொலுசும்

சங்கின் வலம்புரி - சங்கிற் சிறந்த வலம்புரி
சேவடிக் கிண்கிணி - போன பாட்டில் ஏற்பட்ட குழப்பம் இந்தப் பட்டில் தான் தீர்ந்தது. கிண்கிணி கொலுசு தான்.

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் - உள்ளங்கையில் ஏந்தும் சரிவளையும், தோளில் அணியும் காப்பும் , அரைஞான் கொடியும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் - உயர்நிலையாம் வானுலகின் அமரர்கள் தந்தனுப்பி இருக்கிறார்கள்

அங்கண் - சிறந்த இடம்
விசும்பு - வானுலகம்

செங்கண் கருமுகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ - சிவந்த கண்கள் கொண்ட கருமுகில் வண்ணனே. தேவகி பெற்ற சிங்கமே உனக்குத் தாலாட்டுப் பாடுகின்றேன்.

பதவுரை:

சிறப்பு மிகுந்த வானுலகத்தில் இருந்து அமரர்கள் உனக்கு மாற்று அணிகலணாக வலம்புரிச் சங்கையும், திருவடிக் கொலுசுகளும், சரிகையும், தோள்காப்பும், அரைஞான் கொடியும் தந்திருக்கிறார்கள். சிவந்த கண்களை உடைய தேவகி பெற்ற சிங்கமே உனக்குத் தாலாட்டுப் பாடுகின்றேன். குழந்தைக்கு கண்கள் சிவந்திருக்காதே! சிங்கத் திருவுருவால் சிவந்த கண்களையுடைய தேவகியின் மைந்தனேன்னு படிச்சா சரியா வரும் ;-).

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 3
எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ

பொருள்:

எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு -
அழகிய மார்பினை உடைய எங்கள் தலைவனுக்கு

தம்பிரான் - தலைவன்

தாமரைத் தாளர்க்கு இந்திரன் தானும் - தாமரை மலர் போன்ற குளிர்ந்த திருவடிகள் கொண்டவனுக்கு கொண்டவனுக்கு இந்திரன் தானும்

சந்தம் அழகிய எழிலுடைக் கிண்கிணி - இனிய இசையை எழுப்பும் கொலுசினை

கிண்கிணி - கொலுசு, சதங்கை (அப்ப கிலு,கிலுப்பு கிடையாதா)

தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ - உனக்குத் தந்து உன்னருகில் நிற்கின்றான். தாமரைக் கண்கள் கொண்டவனே உனக்குத் தாலேலோ

பதவுரை:

ஒருநிறைத் தலைவர்கள் கண்ணனுக்கு பரிசு தந்தாகி விட்டது. இந்திரனும் தன் பங்குக்கு திருவடிகளுக்கு கொலுசு தருகிறானாம். என்ன இருந்தாலும் அசுரர் எழுச்சி கண்ட போதெல்லாம் அடைகலம் அடைந்தது திருமாலின் திருவடிகள் தானே. அந்த நன்றி உணர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமல்லாது கூடவே இருந்து பணிவிடை வேறு செய்வானாம். எனவே அடியார்களுக்கு மலர் போன்று இரங்கிய கண்கள் கொண்டவனே உன்னைத் தாலாட்டுகிறேன்.

Wednesday, September 30, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 2
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ

பொருள்:

உடையார் கனமணியோடு ஓண்மா துளம்பூ - பெருஞ்செலவம் உடையவர்களிடம் மட்டுமே இருக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த மணிகளோடு அழகிய மாதுளம்பூவை

கனம் - சிறப்பு
ஒண் - ஒப்பற்ற, சிறந்த

இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு - இடையே கோர்த்த எழில் நிறைந்த அரையில் அணியும் வடத்தை

தெழ்கு - இடுப்பில் அணியும் அணிகலன்

விடையேறு காபாலி ஈசன்விடு தந்தான் - காளையின் மீது ஏறிவரும் காபாலம் என்னும் கூத்தை உடைய சிவன் அனுப்பி இருக்கிறான்

விடை - காளை

காபாலி - சிவன் பிரமனின் (ஐந்தாவது)தலையைக் கொய்து அந்த மண்டை ஒட்டை வைத்துக் கொண்டு ஆடும் கூத்து.

பதிவர் குமரனின் கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து என்ற பதிவிலிருந்து

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ - அதனைப் பெற்றுக் கொண்டு அழாதிருப்பாயாக, உலகம் அளந்த பெருமாளே அழாதிருப்பாயாக

பதவுரை:

நீ அழும் குரல் கேட்டு உன் மாப்பிள்ளை பெருஞ்செல்வர்கள் தங்களுக்குப் பெருமை எனப் போற்றும் அரிய மணிகளோடு அழகிய மாதுளம்பூக்களை இடையே கோர்த்த எழில் நிறைந்த அரைஞான் கயிரொன்றை அனுப்பி இருக்கிறான். அதை நான் உனக்குத் தருவேன். அதனைப் பெற்றுக் கொண்டு முன்பு உலகம் அளந்த பெருமாளே அழாதிருப்பாயாக.

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.

பொருள்:

மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே வயிரத்தைப் பதித்து; மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று.

மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும்.
செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன்.

அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில்

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அதை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்தான்.

மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ -
குள்ளச் சிறுவனாய் மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியில் உலகத்தை அளந்தவனே தாலேலோ! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.

பதவுரை:

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.

அளந்து - சிந்தித்து

Sunday, September 20, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் 
கலித்தாழிசை 
குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்! 
பாடல் 1 - 3 - 1 

மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி* 
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்* 
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்* 
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.
பொருள்:
மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே மின்னல் போல் ஒளிரும் வயிர மணிகளைப் பதித்து; மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று. ஆங்கிலத்தில் ரூபி என்று அழைப்பார்கள். அது சிவந்த நிறத்தில் இருக்கும். அத்தகைய மாணிக்கக் கற்களைப் பதித்து, அவற்றிற்கிடையில் வைரக்கற்களைப்பதித்து...
மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும். செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து 

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன். அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில் 

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அனுப்பி வைத்தான்; நானிலத்தில் உனக்கு நிகரான நன்தொட்டில் கிடைத்திராதென்று எண்ணி, தூய பசும்பொன்னால் செய்யப்பட்ட அழகிய சிறிய தொட்டிலில், பொலிவான மாணிக்கக் கற்களும், அவற்றிற்கிடையில் எடுப்பான வைரக்கற்களையும் பதித்த அழகிய தொட்டிலை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்திருக்கின்றான். 

மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகனே! குள்ளமான வடிவில் வந்த எங்கள் குருவே! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்! மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியிலேயே உலகத்தை அளந்த உத்தமனே சத்தமின்றி கண்ணயற உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.

கதைச்சுருக்கம்: 

இறைவனின் பத்து அவதாரங்களில் ஐந்தாவதாக வருவது 'வாமன அவதாரம்'. மகாவிஷ்ணு, உலகம் உய்வடையவும், நீதி நிலைபெறவும், பத்து விதமான திருவவதாரங்கள் கொண்டு இவ்வுலகுக்கு வந்தாரென்று அறிந்திருக்கிறோம்..

முதலாவதாக மச்சாவதாரம் - கடல்நடுவே வீழ்ந்த சதுர் வேதம் தனைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்; மச்சம் - மீன் 

இரண்டாவதாக கூர்மாவதாரம் - அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் - கூர்ம அவதாரம்; கூர்மம் - ஆமை 

மூன்றாவதாக வராகாவதாரம் - பூமியைக் காத்திட ஒருகாலம் நீ புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்; வராகம் - பன்றி 

நான்காவதாக நரசிம்மாவதாரம் - நாராயணா என்னும் திருநாமம் நிலைநாட்டிட இன்னும் ஒரு அவதாரம் - நரசிம்ம அவதாரம்; சிம்மம் - சிங்கம் 

ஐந்தாவதாக வருவதுதான் வாமனாவதாரம் - மாபலி சிரம் தன்னில் கால்வைத்து இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்!- வாமன அவதாரம்! வாமனன் - குள்ளன் 
அப்படினு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 'திருமால் பெருமை' என்னும் திரைப்படத்தில் பாடிருப்பார். மேற்கண்ட இந்த அவதார வரிசைகளைப் பாருங்கள் ஒருவிதமான பரிணாம வளர்ச்சியை ஒத்துஇருப்பதை அறியலாம். பூமியில் முதன் முதலில் உயிரினங்கள் உருவானது கடலில்தான். அதிலும் குறிப்பாக அமீபா. அவதாரம் என்னும் சொல்லுக்கு 'இறங்கிவருதல்' என்று பொருள் ஆகும். சரி பொதுவான சங்கதிகள் போதும்! கதைக்கு வருவோம்!

வாமனாவதாரம்: 

  கேரள நன்னாட்டில் திருவோணம் என்னும் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதை நாம அறிவோம். அதற்கும் வாமனாவதாரத்துக்கும் என்ன தொடர்பு?? மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 'பக்த பிரகலாதன்' னின் பேரனாவான். ஆ! அச்சோ! அப்போ அசுரனா?? ஏன், அசுரக் குலத்துல தோன்றினா அசுரனாத்தான் இருக்க வேண்டுமா?? பிரகலாதன் என்ன அசுரனா?? பக்தன் பிரகலாதாழ்வான் என்று தானே சொல்கிறோம்! பிரகலாதாசுரன் என்று சொல்வதில்லையே. பயங்கரமான நாராயண பக்தியும், அவன் பால் பேரன்பும் கொண்ட பிரகலாதனின் மடியில் தவழ்ந்து விளையாடி, பக்திமயமான கதைகளைக் கேட்டு, அன்பும் அறனும் குழந்தைவயது முதலே ஊட்டப்பெற்று வளர்ந்த இந்த மகாபலிச்சக்கரவர்த்தியும் ர்ர்ர்ரொம்ப ர்ர்ர்ரொம்ப நல்லவராத்தான் இருந்தார். அவர், தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான். மகாபலியின் திறைமையைக் கண்டு அச்சமுற்று, வருத்தமுற்ற தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனராம். அதேசமயம், உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது, உலக உயிர்கள் அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம். ஆனால், ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு. வல்லவரு. யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவரு; தானம் செய்வதில் தன்னைவிட தலைசிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம். தான்தான் தானத்தின் தலைவன் என்கிற அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர் ஆட்சி புரிந்து, விண்ணுலகம், மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி. மகாபலியும் முக்திபெறுகின்ற காலம் வந்தாயிற்று! மகாவிஷ்ணு, காசியப முனிவருக்கு மகனாக வந்து, வாமனனாகத் திருவவதாரம் புரிந்தார்.

வாமனனாக வந்த இறைவன், ஒரு கையில் கமண்டலம், மறுகையில் ஒரு குடையும் கொண்டு, உடலை மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டு, குள்ளமான உருவத்துடன், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்றான். சிறுவனாக வந்த வாமனனிடம், மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?' என்று கேட்டார். வாமனன், தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி அளவுடைய நிலம் வேண்டும் என்று யாசித்தார். மகாபலிச்சக்கரவர்த்தியும் தருவதாக ஒப்புக் கொண்டு, சிறுவனுக்குக் கொடுக்க எத்தனிக்கும் வேளையில் அரசவையில் இருந்த அவரது குருவான சுக்கிராச்சாரியர், வந்திருப்பது யாரென்று, தன் ஞானத்தால் அறிந்தார். மகாவிஷ்ணுவே இப்படி உருமாறி வந்தால், இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறதென்பதை உணர்ந்து, அவர் சக்கரவர்த்தியிடம் 'வேண்டாம்!' என்று இடைமறித்தார். மாவலிச் சக்கரவர்த்தியோ, ஒரு சிறுவனின் தேவையைக் கூட நிறைவேற்ற இயலாத தான் ஒரு மன்னனா?? இப்பாலகனுக்குத் தராவிட்டால், தான் இதுவரை செய்த தர்மங்களால் என்ன பயன்?? எல்லாவற்றிற்கும் மேல், கொடுத்த வாக்கை எப்படி மீறுவது?? என்று சிந்தித்துவிட்டு, தன் குருவின் சொல்லையும் மீறி தானம் அளித்தார். வாமனனும் அளக்க ஆரம்பித்தான். அதற்கு முன் அவன், விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் பெற்றார். மாவலியும் இறைவனின் திருவுருவைத் தரிசித்தான். வாமனனாய் வந்தவன், வானமளவு நெடிதுயர்ந்து, முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார். மூன்றடியில், இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாது திகைக்கவே.... மாவலித் தலைகுனிந்து, இறைவனிடம் வணங்கி நின்று, மூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார். இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து, முக்தி பெற்றான். வாமன அவதாரம் வதத்திற்காக அல்ல! முக்திக்காக(வீடுபேற்றிற்காக)!! முன்னமே, இரண்யகசிபு வதத்தின் பொழுது, பிரகலாதனுக்கு இறைவன் கொடுத்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? இனி, பிரகலாதனின் வம்சத்தில் எவரையும் வதம் செய்வதில்லை என்று இறைவன் சொன்ன சொல்லையும் மீறவில்லை. ஆனாலும், இறைவனிடம், ஆண்டிற்கொரு முறைத் தான், தன் மக்களை வந்து காண அனுமதி வழங்கியருள வேண்டினான். இறைவனின் ஒப்புக் கொள்ளவே, ஒவ்வொரு ஆண்டும் திருவோணத் திருவிழா அன்று மகாபலிச் சக்கரவர்த்தி தன் மக்களை வந்து காண்பதாக கேரளம் மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் மக்கள் நம்பி, தங்கள் மன்னனை வரவேற்க ஊரே திருவிழாக்கோலம் பூண்டு, அத்தப்பூ கோலமிட்டுத் தங்கள் சக்கரவர்த்தியை வரவேற்கின்றனர். முதன் முதலாக மனித உருவில் இறைவன் எடுத்தத் திருவவதாரம்- 'வாமன அவதாரம்'! 

இறைவனின் திருமேனி சம்மந்தத்தை விட, திருவடி சம்மந்தம் கிடைப்பதே பெரும்பேறாகும்! நம் பாவங்கள் முழுமையையும் நீக்கி, நம் புண்ணியங்கள் அனைத்தையும் அவனே ஏற்றுக் கொண்டு, நமக்கு நித்திய வாழ்வு தந்து உய்விப்பது இறைவனின் திருவடியே ஆகும். திருவள்ளுவரும், இறைவனைத் திருவடியாய்த்தான் பார்க்கிறார். பெருமாள் கோயில்களில், கோயில் அர்ச்சகர் நம் தலையில் சடாரி என்று ஒன்றை சாற்றுவார். அது வேறு ஒன்றும் இல்லை, இறைவனின் திருவடியே ஆகும். சடாரி ன்னா என்னான்னு கேக்குறீங்களா?? கிரீடம் மாதிரி ஒன்ன பெருமாள் கோயில் ல நம்ம தலையில வைப்பாரு, கோயில் அர்ச்சகர். அதற்குப் பெயர் தான் சடாரி! 

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.

பதவுரை: 

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார். 

பின்குறிப்பு: ஒரு சிறு உதவி! இப்பாடலில் இடைச்செருகலாக வந்த கதைச்சுருக்கம் தேவையா? இல்லையா? என்று கூறுங்கள். நீங்கள் விரும்பினால், இந்த பதிவை வைத்திருக்கலாம் இல்லாவிட்டால் நீக்கிவிடலாம். :-) -தமிழ்