பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அச்சோப்பருவம்- அணைத்துக்கொள்ள அழைத்தல்)
கலித்தாழிசை
பாடல் - 2
செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்*
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப*
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய*
அங்கைக ளாலேவந்து அச்சோவச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ.
பதவுரை:
மிக மிக எளிமையான பாடல்! இந்தப் பாடலை தமிழ் மொழி அறிந்த அனைவராலும் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். தனியாக விளக்கம் என்று எதுவும் தேவைப்படாத ஒரு பாடல்.
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்- செங்கமலப் பூ, அதாவது செந்தாமரை மலர். சிவந்த தாமரை மலரில் தேனுண்ணும் வண்டுகளைப் போல். (செந்தாமரை மலர் மேல் வண்டு மொய்த்தல்)
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப - பங்கி - கூந்தல்; உன் பவளச் செவ்வாய் மேல் கருங்கூந்தல் காற்றில் அலைபாய்ந்து வந்து படர.
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோ அச்சோ - அங்கை - உள்ளங்கை - திருச்சங்கு, வில், வாள், தண்டு மற்றும் திருச்சக்கரம் என்னும் பஞ்சாயுதங்களையும் உள்ளங்கைகளில் ஏந்தியிருக்கும் எம்பிரானே அச்சோவச்சோ! என் மனம் கரைந்து, என் ஆன்மா இளகும்படி ஆரத்தழுவாய்!
குட்டிக்கண்ணன் மழலை நடையில் வேகமாக ஓடி வருகையில், காற்றில் அலைபாயும் கூந்தல், அவனின் இதழ்மேல் ஒட்டிக்கொள்ளும். மழலைக்குழந்தைகளின் உதடு எப்பவும் காய்ந்திருக்காது. மென்மையும், ஈரத்தன்மையும், பொலிவும் எப்பொழுதும் இருக்கும். அந்த ஈரத்தில் ஒட்டிக்கொள்ளும் மென்கூந்தலை, செந்தாமரை மலரில் தேன் உண்ணும் வண்டுகளோடு ஒப்புமைப்படுத்தியுள்ளார் பெரியாழ்வார்.
பொருளுரை:
எம்பெருமானே! செந்தாமரை மலரில் தேன் உண்ணும் வண்டுகளைப் போல், உன் செவ்விதழ் மேல் கருங்கூந்தல் படர ஓடி வந்து, திருச்சங்கு, வில், வாள், தண்டு, திருச்சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களை ஏந்திய உள்ளங்கைகளாலே என் ஆன்மாவின் பாவங்களை கழுவுமாறு என்னை ஆரத்தழுவுவாயாக!