Wednesday, September 16, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 1



பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே
(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
பாடல் - 1

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்*
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க* என்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்.
(~ நுனையில் - நுனியில்)


பதவுரை:

வட்டு நடுவே வளர்கின்ற* மாணிக்க - வட்டுவின் நடுவில் வளர்கின்ற மாணிக்க மொட்டு (வட்டு -  பந்து, உருண்ட, திரட்சி, round; வட்டுக்கருப்பட்டி - கருப்பட்டி வெல்ல உருண்டை, jaggery ball;)
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்* - மாணிக்க மொட்டுவின் நுனியில் (நவரத்தினங்கள், நவமணிகள்: 

கோமேதகம் - Hessonite,

முத்து - Pearl,                 பவளம் - Coral,

வைரம் - Diamond,         வைடூரியம் - Lapis Lazuli; Cat’s Eye,

மரகதம் - Emerald,         மாணிக்கம் - Ruby,

நீலம் - Blue Sapphire,     புட்பராகம் - Yellow Sapphire; Topaz.)


சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க* என் - சிறு சிறு துளிகளாய்த் துளிக்கத் துளிக்க (சொட்டு - துளி)
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான். - என் மகன் வந்து என்னைப் பின்புறமாக வந்து அணைத்துக் கொள்வான், கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான்.   (குட்டன் - சிறுவன்; புறம் புல்குதல் - பின்புறமாக கட்டித் தழுவுதல்)

இங்கு புறம் புல்குவான் என்பதை, அணைத்துக் கொண்டான் என்று இறந்த காலத்தைக் குறிக்கிறதா அல்லது அணைத்துக் கொள்வான் என்று எதிர்காலத்தைக் குறிப்பதாய் வருகிறதா என்று குழப்பம் வரலாம். குழந்தைத் தன் தாயை ஒரு முறை மட்டும் அணைத்துக் கொள்வதில்லை. அதாவது, தன்னை எப்படியெல்லாம் முன்பு அணைத்துக் கொண்டானோ, அதுபோல இனிமேலும் என்னை வந்து என் குழந்தை அணைத்துக் கொள்வான் என்று உரைப்பது போல் புறம்புல்குவான் என்கிறார் பெரியாழ்வார்.

பொருளுரை:

இப்பாசுரத்தில் குழந்தை கண்ணனின் திருவுறுப்பை நேரடியாகக் குறிப்பிடாமல், உவமானப் பொருள்களை மட்டும் கூறி  பொருளைக் குறிப்பால் உணரவைக்கிறார். 

உருண்டு திரண்ட வட்டு (பந்து) நடுவில் வளர்கின்ற மாணிக்க(திருவுறுப்பு) மொட்டின் நுனியில், முளைக்கின்ற முத்தைப் போல் சிறு சிறுத் துளிகளாய் சிறுநீர் (முத்துத் துளிகள்) துளிகள், துளிக்கத்துளிக்க ஓடி வந்து என் பிள்ளை என்னை அணைத்துக் கொள்வான். கோவிந்தன் என்னை அணைத்துக் கொள்வான். 

Wednesday, September 9, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
தரவு கொச்சகக் கலிப்பா

பாடல் - 11

குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை*
அச்சோ வருகவென்று ஆய்ச்சி யுரைத்தன*
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்*
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.




பதவுரை:

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை* - நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை (நச்சுவார் - விரும்புவர், நச்சுதல் - விரும்புதல்)
அச்சோ வருகவென்று ஆய்ச்சி யுரைத்தன* -  அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்* - மச்சணி மாடப் புதுவைக் கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே. - நிச்சலும் பாடுவார் நீள்விசும்பு ஆள்வரே. (நிச்சலும் - எப்பொழுதும்; விசும்பு - வைகுந்தம், சுவர்க்கம், விண்ணுலகம்)

பொருளுரை:

தன்னை விரும்பி நினைப்பவர் முன் தோன்றி நிற்கும் பரம்பொருளான நாராயணனை அணைத்துக் கொள்ள வருமாறு ஆய்ச்சியான யசோதை அன்னை அழைத்தமையை அழகிய மாடங்கள் நிறைந்த புதுவை நகர் வேந்தரான பட்டர்பிரான்  பாசுரங்களாய்  அருளியுள்ளார். அப்பாசுரங்களை நித்தமும் பாடுபவர் விண்ணுலகை ஆள்வரே!


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை

பாடல் - 10

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட*
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட*
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.
(அருமறை - ஆர்மறை என்று பாடம்)




பதவுரை:

மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட* - இம்மண்ணில் என்றும் நிலைபெற்ற, உயர்ந்த வேதங்கள் நான்கும் முற்றிலும் மறைந்திட (மன்னிய - நிலைபெற்ற, உயர்வான; நான்மறை - நான்கு மறை; முற்றும் - முழுவதும் )

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகைமூட* - வேதங்கள் நான்கும் மறைந்துவிட்டமையால் அடர்ந்து, செறிந்த பேரிருள் சூழ்ந்து உலகை மூட (துன்னிய - நெருங்கிய )

பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க* அன்று - இவ்வுலகில் பேரிருள் சூழ்ந்தபின் அவ்விருளை நீக்குவதற்காக அன்று (பின்னிவ்வுலகினில் - பின் இவ்வுலகினில், பேரிருள் - அடர்ந்த இருள்; நீங்க - விலக்க, அன்று - அன்றைய நாளில்)

அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ. (அருமறை - ஆர்மறை என்று பாடம்) - அன்னமாய் திருவவதாரம் புரிந்தவனே அச்சோவச்சோ! வேதங்களை மீட்டு, இவ்வுலகிற்கு ஒளியை அளித்தவனே அச்சோவச்சோ (அன்னமதானானே - அன்னம் அது ஆனானே - அன்னமாகத் திருவவதாரம் புரிந்தவனே; அருமறை - அரிதான வேதம்)

பொருளுரை:

உயர்ந்த வேதங்கள் நான்கும் மறைந்திட்டமையால், அடர்ந்த பேரிருள் எங்கும் சூழ்ந்து இவ்வுலகை மூட, பின்னர், இந்த உலகின் இருளை அகற்றி ஞான ஒளியைத தருவதற்காக அன்று அன்னமாகத் திருவவதாரம் புரிந்தவனே அணைத்துக் கொள்ள வருவாயாக! அரிய வேதங்களை மீட்டு அகிலத்திற்கு ஒளியைத் தந்தவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!



Tuesday, September 8, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 9

கண்ட கடலும் மலையும் உலகேழும்*
முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று*
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள*
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ.





பதவுரை:

கண்ட கடலும் மலையும் உலகேழும்* - கண்ணில் தென்பட்ட அலைகடல் முதல் வானுயர்ந்த மலைகள் உட்பட ஏழு உலகும் (கண்ட - கண்ணில் தென்பட்ட)

முண்டத்துக் காற்றா முகில்வண்ணாவோ! என்று* - என் கையில் உள்ள இந்த பிரம்மக் கபாலத்திற்குப் போதவில்லையே முகில் வண்ணனே நாராயணா! ஓ! என்று  (முண்டத்துக்கு - கபாலத்திற்கு முண்டம்~தலை; ஆற்றா - ஆற்றவில்லை, போதவில்லை; முகில்வண்ணா, ஓ! என்று - ஓ! முகில் வண்ணா என்று அழைக்கிறார் சிவபெருமான்)

இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள* - சடைமுடியில் மாலையணிந்த ஈசன் இரந்துக் கேட்க (இண்டை - மாலை, பூமாலை; ஈசன் - சிவபெருமான்; இரக் கொள்ள - யாசிக்க, பிச்சைக் கேட்க )



மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ. - சிவபெருமானின் கையிலிருந்த பிரம்ம கபாலத்தை நிறைத்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! தன் திருமார்பில் ஸ்ரீவத்சம் என்று அழைக்கப்படும் திருமகளின் அடையாளமான மருவினை உடையவனே அச்சோவச்சோ!  (மண்டை நிறைத்தானே - சிவபெருமான் கையில் திருவோடாயிருந்த பிரம்மகபாலத்தை நிறைத்த மகாவிஷ்ணு; மார்வில் - மார்பில்; மறுவனே - மறு, மச்சமுடையவனே )

பொருளுரை:

! முகில்வண்ணா! அண்டமுழுவதும் கண்ணில் தென்பட்ட இடமெங்கும், ஆழ்கடலும் வானளாவிய மலைகளும் அனைத்து உலகங்களும் என் கையில் திருவோடாய் உள்ள இந்த பிரம்ம கபாலத்திற்குப் போதவில்லையே என்று இரந்து கேட்ட சிவபெருமானின் கையிலிருந்த பிரம்ம கபாலத்தை நிறைத்தவனே என்னை அனணைத்துக் கொள்ள வருவாயாக! தன் திருமார்பில்  திருமகளின் வடிவமான ஸ்ரீவத்சம் என்னும் மறுவினை உடையவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 8

என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ.




பதவுரை:

என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்* - இது என்ன மாயம்? என் தந்தை இதைப் பற்றி முன்பே அறியவில்லை. மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் தானம் கேட்க வந்த பொழுது மூன்றடி உயரத்தில் வாமனனாய் வந்தார். தானம் தருவதாக வாக்கு அளித்த பின், விண்ணும் மண்ணும் அடங்க நீண்டு உயர்ந்து வளர்ந்த திரிவிக்கிரமனாய் உருவத்தை மாற்றிய உடன், மகாபலிச்சக்கரவர்த்தியின் மகன் நமுசி என்பவன் குறுக்கிட்டு மகாவிஷ்ணுவிடம் தருக்கம் புரியத் துவங்கினான். (என்னிது - என்ன இது; என்னப்பன் - என் அப்பன்~ என் தந்தை; அறிந்திலன் - அறிந்து இலன் )

முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன* - முன் என்ன உருவத்தில் நீ வந்தாயோ அவ்வுருவிலேயே இருந்து நீ அளக்க வேண்டும் என்று கூறி  (முன்னைய - முன்பு; வண்ணம் - வடிவம்; அளவாயென்ன - அளவாய் என்ற)

மன்னு நமுசியை வானில் சுழற்றிய* - அளக்கவிடாமல், திரிவிக்கிரமனனின் காலைப் பிடித்துக்கொண்டான் நமுசி. அப்பொழுது இறைவன் அளப்பதற்காக தன் திருப்பாதத்தை ஓங்கிய பொழுது காலைப்பிடித்துக் கொண்டிருந்த நமுசி, விண்ணில் பறந்து சுழன்றினான்.  (மன்னு - பிடி; நமுசி - மகாபலியின் புதல்வன்)

மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ. - அவண்ணம் நமுசியை வானில் சுழற்றிய மின்னல் ஒளிப் போன்ற பொலிவான திருமுடியை அணிந்தவனே அணைத்துக் கொள்வாயாக! திருவேங்கடம் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்பவனே அணைத்துக் கொள்வாயாக!  (மின்னுமுடியனே - மின்னல் போன்ற ஒளி பொருந்திய திருமுடியை அணிந்தவனே; வேங்கடவாணனே - திருவேங்கடத்தில் வாழ்பவனே)

பொருளுரை:

மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியின் யாகத்திற்கு மூன்றடி உயரமுடைய வாமனனாக வந்து தன் காலால் அளந்த மூன்றடி நிலம் வேண்டும் என்று கூறினார். மகாபலிச்சக்கரவர்த்தியும் தானமளிப்பதாய் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, மூன்றடி உயர வாமனனோ, விண்ணும் மண்ணும் அடங்க உயர்ந்து வளர்ந்த திரிவிக்கிரமனாய் மாறியதைக் கண்டதும் மகாபலியின் புதல்வன் நமுசி என்பவன் இது என்ன மாயம்? என் தந்தை இதைப்பற்றி முன்பு அறியவில்லை. தானம் கேட்ட பொழுது என்ன உருவத்தில் வந்தாயோ, அவ்வுருவிலேயே இருந்து நீ மூன்றடி நிலம் அளந்து கொள்ளவேண்டும் என்று வாதிட்டு, மகாவிஷ்ணுவை அளக்க விடாமல், அவரின் திருப்பாதத்தைப் பற்றிக் கொண்டான். 

மகாவிஷ்ணு அளப்பதற்காகத் தன் திருப்பாதத்தை விண்ணில் ஓங்கிய பொழுது, பாதத்தைப் பிடித்துக் கொண்டிருந்த நமுசியும் விண்ணில் உயரப் பறந்து வானில் சுழன்றான். அவ்வண்ணம் நமுசியை வானில் சுழற்றிய மிகவும் ஒளிபொருந்திய திருமுடியை அணிந்தவனே அணைத்துக் கொள்வாயாக! திருவேங்கடம் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்பவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!

Sunday, September 6, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் 7



மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்க திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.

பதவுரை:

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்* - மூவுலகையும் வென்று பெரும் புகழ் பெற்ற மகாபலிச்சக்கரவர்த்தியின் வேள்விக்கு அந்தண சிறுவனாய் வந்த வாமனனுக்கு பலிச்சக்கரவர்த்தி, அவ்வந்தண சிறுவனின் வேண்டுகோளின் படி மூன்றடி நிலத்தைத் தானமளிக்க முயன்ற போது, (மாவலி - மகாபலிச் சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரன்; வேள்வி - யாகம்)

தக்க திதன்றென்று தானம் விலக்கிய* - மகாபலி அளிக்கப் போகும் தானம் சரியானது அல்ல. மகாவிஷ்ணுவே தேவர்களுக்காக இந்திரலோகத்தை மீட்க வந்திருக்கிறார் என்று அசுரகுரு எச்சரித்த பின்னும் பலிச்சக்கரவர்த்தி தானம் அளிக்க முயன்ற போது, வண்டு உருவில் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துத் தானத்தைத் தடுத்த, (தக்கது இது அன்று என்று - இது சரியான செயல் அல்ல என்று; தானம் விலக்கிய - தானத்தைத் தடுத்த)

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய* சக்கரக்கையனே!  அச்சோவச்சோ- வாமனனிடத்து மகாபலியின் தானத்தைத் தடுத்த அசுரகுருவான  சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் தன் வலக்கரத்திலிருந்த தர்ப்பைப் புல்லால் கிளறிய, வலக்கரத்தில் சக்கராயுதம் தரித்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! (சுக்கிரன் - அசுரர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியார்; துரும்பு - தர்ப்பைப் புல், சக்கரக்கையன் - திருச்சக்கரத்தைக் கரத்தில் ஏந்தியவன்)

சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. - இடக்கரத்தில் திருச்சக்கரம் தரித்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! (சங்கம் இடத்தானே - இடக்கரத்தில் திருச்சங்கைத் தரித்தவனே)




வாமனாவதாரம்: 


மாபெரும் கிருஷ்ண பக்தனாகிய பிரகலாதனின் பேரனான, மகாபலிச் சக்கரவர்த்தி இம்மண்ணுலகிற்கு மட்டுமல்லாது, இந்திரலோகத்தையும் கைப்பற்றி மூவுலகிற்கும் தன்னிகரில்லாத பேரரசராய் தானமும், தவமும் தவறாத தர்ம ஆட்சி புரிந்து வந்தான். 


இந்திரலோகத்தை, மகாபலியிடம் இழந்த தேவர்கள், தங்களின் குலகுருவான பிருஹஸ்பதியிடம்(குரு பகவானிடம்) அடைக்கலம் தேடினர். அவரும் இந்திரன் முதலாய தேவர்களைச் சென்று திருமாலின் திருவடியில் சரண் அடையுமாறு அறிவுரை கூறினார். இந்திரனும் திருமால் திருப்பாதம் சென்று தங்கள் இந்திரலோகத்தை மீட்டத் தருமாறு முறையிடவே, திருமாலும் தேவர்களின் துயர் தீர்க்க கசியப முனிவருக்கும், அதிதி முனி பத்தினிக்கும் புத்திரராக திருவவதாரம் புரிந்தார். 


இந்திரலோகத்தைக் கைப்பற்றிய மாவலிச்சக்கரவர்த்தி, மூவுலகையும் எவ்வித குறையுமின்றி நல்லாட்சி புரிந்து வந்தான். மாவலி உலக நலனுக்காகவும், தான் பெற்ற இந்திரபதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு யாகங்களும், யாகத்தின் நிறைவில் தான தர்மங்களும் புரிந்தான்.


ஒருமுறை மகாபலியின் யாகத்திற்கு, அந்தண சிறுவனான வாமனன் எழுந்தருளினார். வாமனரை மகாபலி பணிவன்போடு வரவேற்று, உபசரித்தார். பின் வாமனருக்குத் தன்னால் அளிக்கவல்லது யாது என்று வினவினார். 


வாமனரோ, தன் திருப்பாதத்தால் அளந்த மூன்றடி நிலம் மட்டும் போதும் என்று கூறவே, மகாபலியோ அது தமக்குப் போதாது இன்னும் வேறு ஏதாவது தரக்கூடுமோ என்று கேட்டார்.


வாமனரும் தன் பாதத்தால் அளந்த மூன்றடி நிலம் மட்டும் போதும் என்று உறுதியாகக் கூறினார். வாமனரின் கோரிக்கைப்படி, அவர் கேட்டதை தானமளிக்க மகாபலிச் சக்கரவர்த்தித் தயாரானார். 


வாமனராய் வந்திருப்பவர் யார் என்பதை அறிந்து கொண்ட அசுரகுருவான சுக்கிராச்சாரியார் மகாபலியை எச்சரித்தார். இந்த அந்தண சிறுவன் யார் என்பதை அறியாது நீ தானமளிக்கப் போகிறாய். இவர் மகாவிஷ்ணு, தேவர்களுக்கான இந்திரலோகத்தை மீட்க வாமன உருவில் வந்திருக்கிறார். ஆகவே நீ செய்யப்போவது உமக்கு உகந்த காரியமல்ல என்று அறிவுரை கூறி மகாபலிச் சக்கரவர்த்தியைத் தடுத்து நிறுத்தினார்.


குருவின் வார்த்தையைக் கேட்ட பின்னும் மகாபலிச் சக்கரவர்த்தி, தம்மால் கொடுத்த வாக்கை மீற இயலாது. மேலும் வந்திருப்பது மகாவிஷ்ணு என்றால், அதைவிட பெரும் பேறு தமக்கு வேறு இல்லை, ஆகவே பின்விளைவு யாதாயினும் வாமனரிடத்துத் தன் வாக்கை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி, கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து தானமளிக்கத் துவங்கினார்.


அசுர குலகுருவான சுக்கிராச்சாரியார், சிறு வண்டாக உருமாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்து, தானத்தைத் தடுக்க முயற்சித்தார். வாமனரோ, தன் வலக்கையிலிருந்த தர்ப்பைப் புல்லைக் கொண்டு துவாரத்தை சரி செய்வது போல் வண்டு உருவிலிருந்த சுக்கிராச்சாரியாரின்  கண்ணைக் கிளறிவிட்டார். வலி பொறுக்காத சுக்கிராச்சாரியாரும் கமண்டலத்திலிருந்து வெளிவந்தார். 


பின் மகாபலி, வாமனர் கேட்ட மூன்றடி நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு கமண்டலத்திலிருந்து நீரை வார்த்துக் கொண்டிருந்த போது, வாமனரோ, திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நீண்டு உயர்ந்தார். குறுமாலவனாய் வந்த திருமால் பெருமாள் ஆனார்.


திரிவிக்கிரமனான பெருமாள், முதலடியில் பாதாளஉலகம் உள்ளிட்ட மண்ணுலகையும், இரண்டாமடியில் விண்ணுலகையும் அளந்துவிட்டார். மகாபலிச் சக்கரவர்த்தியின் மூவுலகையும் இரண்டே அடியில் அளந்துவிட்ட பெருமாள், வாயினுள்ளே அண்டசராசரத்தை அன்னைக்குக் காட்டிய வைகுந்த பிரான், மூன்றாமடியை எங்கு வைத்து அளப்பது என்று மகாபலியிடம் வினவினார். 


மகாபலி, தன்னையே பெருமாளுக்கு அர்ப்பணித்து, மூன்றாமடியைத் தன் சிரசில் வைத்து அளந்தருளுமாறு வேண்டினார். அதன்படியே திரிவிக்கிரமனும், தன் மூன்றாமடியை மகாபலிச்சக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டார்


இந்திரலோகத்தை தேவர்களுக்கும், பாதாள லோகத்தை மகாபலிக்கும் அளித்தார் மகாவிஷ்ணு, அதுமட்டுமல்லாது, மகாபலியின் கொடைத் தன்மைக்கும், பேரன்புக்கும், உயிர்கள் பால் கொண்ட பெருங்கருணைக்கும், பெருந்துன்பம் வரும் என்று அறிந்த பின்னும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மனத்திண்மைக்கும் அசுரகுலச் சக்கரவர்த்தியான மகாபலிக்கு அடுத்து வரும் சாவர்ணி மனுவந்திரத்திலே இந்திரபதவியையும் அளித்தருளினார். 


நீதி:


 இக்கதையில், என்ன இது மகாவிஷ்ணுவே இப்படி வஞ்சகமாக உருமாறி வந்து இந்திரலோகத்தை பலிச்சக்கரவர்த்தியிடமிருந்து பறிக்கலாமா? இது சரியா என்று எண்ணலாம். 


மகாபலியின் பெருமையை நம் அனைவருக்கும் எடுத்துக் காட்டவே இந்த திருவவதாரம். நாம் இறைவனை தேடி, ஓடி ஓடிச் சென்று சரணாகதி அடைய முயல்வோம். ஆனால், இறைவன் தானே அவதாரம் புரிந்து வந்து தன் திருவடியை ஒருவரிடத்து அளிக்க வந்துள்ளார் என்றால் இப்பெரும் பேறு மகாபலியன்றி வேறு எவருக்கும் கிட்டியதில்லை. 


பரம்பொருளான இறைவன், நம்மிடம் வேண்டுவது சொத்தையோ, செல்வத்தையோ அல்ல. பூரண சரணாகதி. தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதையே அவர் எதிர்பார்க்கிறார். குலம், கோத்திரம் போன்ற பிறவி சாயங்களைத் தாண்டி, தூய உள்ளமும், பூரண சரணாகதியுமுமே ஒருவருக்கு முக்தியை அளிக்கவல்லது. அத்தகையோரின் உள்ளத்து மலர்மிசை இறைவன் ஏகுவான்.


பொருளுரை:


இந்திரலோகம் உட்பட மூவுலகத்தையும் வென்று, தானத்திலும் தவத்திலும் சிறந்து பெரும் புகழ் பெற்ற மாவலிச் சக்கரவர்த்தியின் வேள்வியில் அந்தண சிறுவனாய் வாமனாவதாரம் புரிந்து சென்று, மாவலியிடம் தான் கேட்ட மூன்றடி நிலத்தைத் தானமளிக்க முயன்ற மாவலிச் சக்கரவர்த்தியை எச்சரித்து, பின்னும் வண்டாக உருமாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துத் தானத்தைத் தடுக்க முயன்ற அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் கண்ணை, வலக்கரத்திலிருந்த தர்ப்பையால் கிளறிய சக்கரக்கையனே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக! இடக்கரத்தில் திருச்சங்கைத் தரித்தவனே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக!