திருப்பல்லாண்டு - பாடல் 1

பெரியாழ்வார் பாடல்களோட சிறப்பே அவரது பாடல்களில் ததும்பும் தாய்மை நிறைந்த பக்தியே! பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியே இந்த பட்டர் பிரான் தான். பெரியாழ்வாரைப் பற்றி நாம இங்க ஏற்கனவே பார்த்திருந்தோம்! அதனால இப்போ பாடல்களுக்கு வருவோமா!
ஒரு துளி அமுதம் உண்டால், உயிர்த்துளி நம்மை விட்டு என்றும் நீங்காது ன்னு சொல்வாங்க. அப்போ ஒரு அமுதக்கடலையே உண்டால்..... அந்த அமுதக் கடல்ல நீந்தி நீக்கமற நிறைந்துள்ள நிர்மலனடி தொழுவோமாக.
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
காப்பு குறள் வெண் செந்துறை
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*
உன்
செவ்வடி செவ்விதிருக்காப்பு.
நிகழ்வு:
கமலக்கண்ணன் கனவில் இட்ட கட்டளைக்கிசைந்து, பெரியாழ்வார் வல்லபதேவ பாண்டியனிடம் சென்று பரம்பொருள் யார் என்ற கேள்விக்கு? எங்கும் எப்போதும் எப்பொருளிலும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் பெருமாளே! என்று வேதங்களிலுள்ள ஆதாரங்களுடன் கூற பொற்கிழி தானே வளைந்து கொடுத்தது. பொற்கிழியை வென்ற விஷ்ணுசித்தனை பாண்டிய மன்னன், பட்டர்பிரான் என்னும் பட்டமளித்து பட்டத்து யானை மேல் ஏற்றி, கொட்டு மேளங்கள் முழங்க மிகுந்த மரியாதையுடன் ஒரு மன்னனைப் போல் பரிசிலுடன் அனுப்பி வைத்தான். ஊரார் அனைவரும் திரண்டு வந்து பட்டர்பிரானுக்குப் பூமாரி பொழிந்து பெரும் சிறப்பு செய்தனர். எம்பெருமானும் அக்காட்சியைக் காண கருட வாகனம் மீதேறி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலமாய்க் காட்சித் தந்தார்.
குறிப்பு: * குறியிட்டுள்ள இடங்களில், நிறுத்திப் படிக்க வேண்டும்
வானில் திடீரென்று ஆயிரம் ஆதவன் அவனியில் உதித்தப் பேரொளி தோன்ற, அதன் நடுவே குளிர்ந்த வெண்மேகமாய், கொள்ளை அழகுடன் கூடலழகர் காட்சித் தந்தார். உடனே அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் கூடலழகரைத் தரிசிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட விஷ்ணுசித்தர் சித்தம் சிதறினார். நெஞ்சம் பதறினார். அடியனாய் இருந்த அவர் சிந்தையில் தாய்மை குடியேறியது.
இறைவன் மேல் கண்ணேறு ஏதாவது பட்டுவிடுமோ? என்று கலங்கி நின்றார். கல்லடியில் தப்பித்தாலும் கண்ணடியில் தப்பிக்க இயலாதே என்று நடுநடுங்கிப் போனார். உடனே அனைவரின் சிந்தையையும் மாற்றும் வண்ணம், கார்முகில் வண்ணன் மேல் திருப்பல்லாண்டு பாடினார். அங்கு கூடியிருந்தோரும் அவருடன் சேர்ந்து பாடினர்.
அந்தப் பாடல் தான் இந்த திருப்பல்லாண்டு! பொருள்:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் - பலகோடி நூறாயிரம் ஆண்டு காலமாய் (infinitive) பல யுகங்களைக் கடந்தும் ஆதிக்கும் ஆதியான காலம் முதலாய் நின் திருவருட்கரங்களிலே உயிர்களை வைத்துக் காத்து அருள்புரியும் ஆதிகேசவனே,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா - குழந்தைக் கண்ணனுக்கு, தாய்மாமன் கம்சனே வில்லனாய் வாய்த்துவிட, அவன் குழந்தையைக் கொல்ல எத்தனையோ தந்திரங்கள் செய்தும், அவன் கெட்ட எண்ணம் நிறைவேறவில்லை. அதில் ஒன்று தான் மல்யுத்த வீரர்களுடன் வைத்த மற்போர்.
நின் செவ்வடி செவ்வித்திருக் காப்பு - எல்லா உயிர்களுக்கும், எக்காலத்தும் காப்பாய் அமையும் உம் செம்மையான திருவடிகளுக்கு பலகோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் திருவந்திக்காப்பு தொடரவேண்டுமாக!
பதவுரை:
தன்னுடைய திண்மையான தோள் வலிமையினால் கம்சனின் மற்போர் வீரர்களைத் தோற்கடித்த நீலமணிவண்ணனே, பல கோடி நூறாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து ஊழிதோறும் எல்லா உயிர்களையும் காக்கும் உன்னுடை சிவந்த செம்மையான திருவடிகளுக்கு பல கோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் திருக்காப்பு தொடர்வதாக!