Friday, July 4, 2008

பெரியாழ்வார்

பெரியாழ்வார்:காலம் - 7 ம் நூற்றாண்டு ( 700 - 785)
ஆண்டு - உருத்ரோண வருடம்
மாதம் - ஆனி
நட்சத்திரம் - (ஞாயிற்றுக் கிழமை) சுவாதி
திதி - ஏகாதசி
அம்சம் - கருடன்
பெற்றோர் - முகுந்தாச்சார்யார்; பதுமையார்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் திரு ராம ஆண்டான் என்பதே ஆகும். ஆனால், இவர் எப்பொழுதும் வடபெருங்கோயிலுடைய எம்பெருமான் நாராயணனையே சிந்தையில் கொண்டிருந்ததனால் இவர் விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்பெற்றார்.

சிறுவயதில் அவர் வேதங்கள் பயில்வதை விட இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அதிக நாட்டம் கொண்டவராயிருந்தார். அவர் எம்பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி அழகு பார்ப்பதிலேயே தன் சித்தம் செலுத்தினார்.

அது சரி இவருக்கு சின்ன வயசுலேயே ஒன்னுக்கு ரெண்டு பேரு இருக்கு, அப்புறமும் ஏன் இவர எல்லாரும் பெரியாழ்வார், பெரியாழ்வார் ன்னு அழைக்கிறாங்க?

அதுவும் சரி, அது என்ன பன்னிரண்டு ஆழ்வார்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் பெரிய ன்னு அடைமொழி?
கல் தோன்றி மண் தோன்றா காலத்தும் முன் தோன்றிய மூத்த ஆழ்வார்கள் மூவர் உள்ளனர், அந்த முதல் ஆழ்வார்களுக்கும் இல்லாமல்,
கடவுளே ஆழ்வாராக வந்துள்ளார் என்று கருதப்பட்ட நம்மாழ்வாருக்கும் இல்லாமல்,
மண்ணுலக மக்களுக்கு இறைவனாய் இருக்கும் மன்னர் குலத்தோன்றலான குலசேகர ஆழ்வாருக்கும் இல்லாமல்,
சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கும் இல்லாமல் நம் விஷ்ணு சித்தருக்கு மட்டும் ஏன் பெரிய ஆழ்வார் என்று அனைவரிலும் பெரியவராக அழைக்கும் வழக்கம்? அது ஏனென்றால்...

இந்த உலகத்தில ஒவ்வொருத்தரும் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உடைய மனிதர்கள் வரைக்கும், ஏன் இந்த உலகையே உருவாக்கி, காத்து, தீயனவற்றை அழிக்கும் அந்த கடவுளர்களும் கூட இம்மண்ணுலகில் பிறந்து வளர உறுதுணையாய் அமையும், இம்மண்ணில் நடமாடும் கண் கண்ட தெய்வங்களாக வாழும், நாம் தொழும் தெய்வம் - தாய்!

எந்த உலகத்திலும், எக்காலத்திலும் தாய்க்கும், தாய்ப்பாசத்திற்கும் ஓர் அளவை அறுதியிட்டுக் கூற இயலாது. அத்தகைய தாய்ப்பாசத்தோடும், தன்னலமில்லாத அன்போடும், அவன் நலனை மட்டுமே எப்பொழுதும் இறைவனிடம் வேண்டும் இயல்புடையவர்.

மனம், சொல், சிந்தனை அனைத்திலுமே குழந்தையாய் எம் பிரானை நினைத்து, மிகுந்த அக்கறையோடு இருந்ததால் அவர் மற்ற ஆழ்வார்களை விட உயர்ந்தவராய் கருதப்படுகிறார்.

பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில், பாண்டிய மன்னனான திருவல்லப தேவனுக்கு ஒரு ஐயம் எழுந்தது. அதாவது, நமக்கு இக்காலத்தில் எக்குறையும் இல்லாமல் வாழத் தேவையான செல்வங்கள் அனைத்தும் இருக்கின்றன. அடுத்த பிறவியிலும் நாம் சுகமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்று தன் குருவிடம் வினவினார்.

அவராலும், அரண்மனையிலிருந்த எவராலும் இக்கேள்விக்கு சரியானதொரு பதிலை அளிக்க இயலவில்லை. எனவே மன்னனின் குலகுருவான செல்வநம்பி, நாம் நாட்டிலுள்ள ஆன்றோர்கள் முன்னிலையில் இக்கேள்வியினை வைப்போம். அவர்களுள் சரியான பதிலை அளிப்பவர்களுக்கு நாம் பொற்காசுகளைப் பரிசாக அளிப்போம் என்று கூறினார்.

அதன்படியே மறுநாளே, போட்டி அறிவிக்கப்பட்டது. அன்று இரவு இறைவன் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி, 'பொற்கிழியை அறுத்து வா' என்று ஆணையிட்டார்.
மறுநாள் இறைவனின் ஆணைப்படி, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார், பெரியாழ்வார். மன்னன் அவர் முகத்தில் தெரிந்த பேரொளியை அறிந்து கொண்டு, இவரே தன் கேள்விக்கு சரியான பதிலை அளிக்கக் கூடியவர் என்று உணர்ந்து கொண்டு அவரை முன் சென்று வரவேற்றார்.

அவரிடம், 'ஐயா, நாம் மறுபிறவியில் துன்பமின்றி வாழ என்ன செய்ய வேண்டும்' என்று வினவினார்.

அப்பொழுது பெரியாழ்வார் கூறிய பதிலாவது, '
ஒருவருக்குப் பிறவி என்பதே துன்பமானது.
நாம் இப்பிறவியில் நன்மைகள் செய்தாலும் சரி, தீமைகள் செய்தாலும் சரி அவற்றை அனுபவிக்க நமக்கு பிறவி என்பது வந்து கொண்டேயிருக்கும்.எனவே துன்பமின்றி வாழ வேண்டுமானால், நாம் பிறவியின்றி வாழ வழி செய்ய வேண்டும்.

பிறவியின்றி வாழ, நாம் செய்வது நன்மையோ, தீமையோ அதை இறைவனின் பெயரால் செய்து அதன் முழுபலனையும் முதலும் முடிவும் இல்லாத யுகம் யுகமாய் அண்டசராசரம் அனைத்தையும் ஆட்சி புரியும் பெருமாளின் பொற்பாதத்திலே ஒப்படைத்துவிட வேண்டும்.

''நம் அனைவரையும் கண் பார்வையாலேயே மயக்குபவன், மாலவன்- திருமால் அவன். அவன் ஒருவனே நம் பாவ, புண்ணியங்களைப் போக்கி, உலகவாழ்வின் மயக்கத்தை நீக்குபவன்'' என்பதை தெள்ளத்தெளிவாய், வேதங்களில் உவமானம் கொண்டு எடுத்துக் கூறினார், பெரியாழ்வார்.

நாம் மட்டும் இறைவனின் திருவடிகளை சரணடைவதைவிட, நம் செயல்களையும் அவன் பொற்பாதம் பணித்துவிட வேண்டும்.' என்று கூறினார். உடனே, அந்த பொற்கிழி வளைந்து வந்து அவர் கைகளை எட்டியது. அங்கிருந்த அனைவரும் ஆழ்ந்த வியப்புடன் ஆழ்வாரைப் பார்த்தனர்.

மன்னர் மிகவும் மகிழ்ந்து, பெரியாழ்வாருக்கு பட்டர்பிரான் என்று பட்டமளித்து, அவரை, மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம், பொன்முடிப்புடன் யானையின் மேலேற்றி, நகர் வலம் வரவழைத்தார். இக்காட்சியைக் காண, கருட வாகனமேறி, சங்கும் சக்கரமும் தன் இரு தோள்களிலும் ஏக, திருமகளைத் தன் வலமார்பிலே தாங்க, தேவர்கள் அனைவரும் துதிக்க எம்பெருமான் காட்சித்தந்தார்.

இவ்வருங்காட்சியை மக்கள் அனைவரும் கண்டனர். அதைப்பார்த்த பெரியாழ்வார், மனம் பதைபதைத்தார். தன் பிள்ளை மேல் கண்ணேறு ஏதும் பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் இறைவன் மேல் திருப்பல்லாண்டு, பாடினார். மக்களும் அவருடன் இணைந்து பல்லாண்டு பாடத் துவங்கினர்.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோமொடும் நின்னொடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ் சன்னியமும் பல்லாண்டே!

அப்பாடா, இந்த பாசுரத்தைப் படிக்கற நமக்கே, பெருமாள் மேல கண்ணு வெச்சுடுற மாதிரி இருக்கே, அப்போ பாக்குறவங்க கண்ணுலாம் எப்படி இருந்து இருக்கும். அதை எல்லாம் நேர்ல பாக்குற ஆழ்வாருக்கு மனசு எப்படி வலிச்சுருக்கும். இந்த வலி தான் அவரை மற்ற ஆழ்வார்கள் கிட்ட இருந்து உயர்த்திக் காட்டுனது.

இவர் இறைவனுக்கு மட்டும் தாயாய் இருக்கவில்லை. அவர் துணைவியாருக்கும் (கோதை) தாயுமானவர்.

பாண்டிய நாட்டில் அவர் பெற்ற பரிசினை வடபெருங்கோயிலுடையானுக்கு (திருப்பதிக்கு) அளித்து விட்டு, வழக்கம் போல் இறைவனுக்கு மலர் கைங்கரியம் செய்வதைத் தொடர்ந்தார், பெரியாழ்வார்.
அன்பும், பக்தியும், பாசமும் சொட்ட சொட்ட பெரியாழ்வார் அருளியவை,

1.திருப்பல்லாண்டு
2.பெரிய ஆழ்வார் திருமொழி ஆகியன ஆகும். அது மட்டுமல்லாமல் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கிய மரபைத் தோற்றுவித்தவர், பெரியாழ்வார்.

பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டுதான் பாசுரங்களில் முதலாவதாகப் பாடப்படுவதாகும்.

ஓம் நமோ நாராயணாய நம!!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!

No comments: