Friday, January 15, 2021

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 8

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 8

 மூத்தவை காண முதுமணற் குன்றேறி *

கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி *

வாய்த்த மறையோர் வணங்க * இமையவர்

ஏத்தவந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.


பதவுரை:

மூத்தவை காண முதுமணற் குன்றேறி * - மூத்தவை காண, முதுமணற் குன்று ஏறி - 

மூத்தவை காண - வயதான கால்நடைகள், தம்மை எளிதில் காணும் படியாக, 

முதுமணற் குன்று ஏறி ~ முது மணற்குன்று ஏறி - நீண்ட நாட்களாய்க் குவிந்து, உயரமான மணற் மேடு - பாறையான இடங்களிலும், புது மணலிலும் புல் அவ்வளவாக வளர்ந்து இருக்காது.  

கண்ணனுக்கு மாடுகளை மேய்த்து வருவதில் ஏராளமான ஆனந்தம். அவரோ சிறுவன். கண்ணனுடன், கன்றுகுட்டிகள் துள்ளிக் குதித்து விளையாட்டாக அவருடன் எல்லா இடங்களுக்கும் சென்றுவிடும். 

ஆனால், வயதான கால்நடைகளால் மேடான இடங்களுக்கு அவ்வளவு எளிதாகச் செல்ல இயலாது.

அத்தகைய, வயதான கால்நடைகளும் தம்மைக் காண வசதியாகவும், தாமும் அனைத்து கால்நடைகளையும் கண்காணிப்பதற்கு ஏதுவாக மேடான இடத்தில் ஏறி ... 

(மூத்தவை - வயதான கால்நடைகள்; 

முது மணற் குன்று - நீண்ட நாட்களாய்க் குவிந்திருந்த மணற் மேடு)



கூத்துஉவந் தாடிக் குழலால் இசைபாடி * -  கூத்து உவந்து ஆடிக் குழலால் இசைபாடி - 

ஆனந்தமாக நடனமாடிக் கொண்டும், புல்லாங்குழலில் இனிமையான கீதங்களைப் பாடிக் கொண்டும் மிகுந்த மகிழ்ச்சியோடு கண்ணன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். 

இங்கு இரண்டு காரணங்கள் சுட்டப்படுகின்றன: 

1) கண்ணனின் மகிழ்ச்சி,

2) புல் மேய்ந்து கொண்டே, எங்காவது வேறு திசையில் சென்று விட்டக் கால்நடைகளுக்குத் தாம் இருக்குமிடத்தை இன்னிசையால் உண்ர்த்துகிறார் கண்ணன்.

வாய்த்த மறையோர் வணங்க * இமையவர் - வாய்த்த மறையோர் வணங்க, இமையவர் ஏத்த - 

 (வாய்த்தல் - சித்தித்தல் - To be obtained; 

மறையோர் - முனிவர்கள்; 

இமையவர் - தேவர்கள்; 

ஏத்த - புகழ, துதிக்க: ஏத்துதல் - புகழ்தல், துதித்தல்.)

ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். - இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்; எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.


பொருளுரை:

ஆயர்பாடியில் கண்ணனுக்கு ஆநிரைகளை மேய்த்து வருவதில் அளவிலா ஆனந்தம். நெடுங்காலமாய்க் குவிந்து, குன்று போல் உயர்ந்திருந்த மணற் மேட்டிற்கு ஆநிரைகளை ஓட்டி வருகிறார் கண்ணபெருமான். ஏனெனில் அத்தகைய இடத்தில் தான் புற்கள் செழிப்பாகவும் செறிவாகவும் வளர்ந்திருக்கும். பார்ப்பதற்கே மிகவும் பசுமையாகவும் இருக்கும். 

ஆநிரைகளை பசுமையான மணற்மேட்டிற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி வந்துவிட்டு, மேட்டின் உச்சியில் தான் ஏறிக் கொள்கிறார். இதனால் குன்றின் மேல் ஏற இயலாத வயதான கால்நடைகளால் எளிதில் மணற் குன்றின் அடிவாரத்தில் நின்றபடியே நன்றாக கண்ணனைக் காண இயலும். 

குன்றின் மேல் நின்று ஆனந்தமாய் நடனம் ஆடியும், புல்லாங்குழல் இசைத்தும் கன்றுகுட்டிகளுடன் விளையாடிக் கொண்டும் குதூகலமாய் இருக்கிறார், குட்டிக் கண்ணன்.  

விண்ணுலகில் இருந்து, இந்தக் காட்சியைக் காண சித்திக்கப்பெற்ற முனிவர்கள் வணங்குகிறார்கள்; தேவர்களோ உயர்வாகப் புகழ்கிறார்கள். 

ஆனந்தக் கண்ணனின் ஆனந்த வெள்ளம் ஆநிரைகளைக் கடந்து, ஆயர்பாடியைக் கடந்து, மண்ணிறைந்து, விண்ணிறைந்து எங்கெங்கும் பரவுகிறது.

ஆநிரைகளுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் பேரின்பத்தையும் பேரருளினையும் ஒன்றாக அளிப்பவன் ஓடி வந்து என்னைப் புறம் புல்குவான்; என் தேவாதி தேவன் என்னைப் புறம் புல்குவான்.

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 


No comments: