Thursday, January 12, 2012

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

எட்டாம் திருமொழி - பொன்னியல்

(அச்சோப்பருவம் - அணைத்துக்கொள்ள அழைத்தல்) கலித்தாழிசை
 
பாடல் - 1 

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்! 

  பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி*
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட*
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்*
என்னிடைக்கோட்டரா அச்சோவச்சோ எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ.

பதவுரை: 

என்னது இது, பெரியாழ்வார் அச்சோ அச்சோ ன்னு சொல்றாரே; குட்டிக் கண்ணனுக்கு என்னாச்சோன்னுட்டு பதறாதீங்க. இறைவனைக் குழந்தையாப் பாவிக்கிற நம்ம பெரியாழ்வார், அக்குழந்தைத் தன்னை அணைத்துக்கொள்ள அழைக்கிறார். அச்சோப்பருவத்தின் முதற்பாடல், இந்தப்பாடலில் பொன்னியல், மின்னியல், தன்னியல் அப்படின்னு வருது. இயல் - ஒரு வகையான அறிவியில் ன்னு பள்ளியோடத்துல படிச்சிருப்போம். கணிதவியல், இயற்பியல், வேதியியல், சமூகவியல், வணிகவியல், பொருளியல், உயிரியல், பயிரியல், ஒளியியல், ஒலியியல்.... இப்படி ஏகப்பட்ட இயல் இருக்கு. அதுக்குப் பக்கம் பக்கமா, வகை வகையா புத்தகம் வேற. ஆனா, இங்க வந்திருக்கிற இயலுக்கு ஒரே வார்த்தையிலதான் அர்த்தம்; ஆனா வேற வேற பொருள், அது வருகின்ற இடத்துக்கேத்த மாதிரி. புரியலயா.. இயல் - இயல்பு(nature), ஒத்தல்(resemble), தகுதி. இதுதான் அர்த்தம் என்று கிடையாது. தான் சேர்கின்ற வார்த்தைக்கேற்ப பொருள் உடையது. பொன்னியல் - பொன்னாலான, பொன்னால் செய்யப்பட்ட தன்னியல் - தன்னுடைய இயல்பான செயல் மின்னியல் - மின்னலை உடைய
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி - பொன்னால் செய்யப்பட்ட கிண்கிணி, நெற்றிச்சுட்டி ஆகியவற்றை அணிந்து -- என்னது இது, பெரியாழ்வார் உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சு போடறாரே! ;-)
தன்னியல் ஓசை சலஞ்சலன் என்றிட - முதல் அடியில் உள்ளவற்றில் சல சலன்னு ஓசை செய்யக்கூடியது எது? கிண்கிணி. கிண்கிணி தன் இயல்பான சலன் சலன் னு ஓசை செய்திடுதாம்...
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல் - மின்னலைக் கொண்ட மேகம் வேகமாக விரைந்து வந்ததைப் போல 

மின்னியல் மேகம் - மின்னலை உடைய மேகம். மின்னல் எப்படி உண்டாகிறது?? நான் இப்ப ஏதாவது நேர் மின்னூட்டம், எதிர் மின்னூட்டம் ன்னு சொன்னா, பின்னூட்டத்துல என்னைய கன்னா பின்னா னு வைவாங்க... சோ, நாம பாட்டுக்கு பாட்டை பாப்போம். நீரோ, பனித்துளியோ நிறைந்த மேகத்துலதான் மின்னல் உண்டாகும். வறண்ட மேகம் வெண்மையா இருக்கும். நீருண்ட மேகம் கருப்பா இருக்கும். இப்ப எளிமையா புரிஞ்சுடும். மேகம் கருநிறம். மின்னல் பொன்னிறம். கருமேகம் கண்ணனுக்கும், பொன்மின்னல் கண்ணனின் அணிகலனுக்கும் ஒப்புமையாகும்.

என் இடைக்கு ஓட்டரா அச்சோவச்சோ எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ - பொன்னாபரணம் அணிந்த கார்முகில் வண்ணா, என் குலதெய்வமே! என் இடையில் அமர்ந்து கொள்ள ஓடோடி வருவாயாக! விரைந்தோடி வந்து என்னை அணைத்துக்கொள்வாய் என் ஐயனே! குழந்தைகள் நன்றாக நடக்கத் துவங்குகின்ற நாட்களில், அவர்கள் மெதுவாக நடப்பதில்லை. குடு குடுவென அடுத்தடுத்த அடிகளை விரைவாக எடுத்து வைப்பர். அதனால் தான், விரைந்தெதிர் வந்தாற்போல் ன்னு பெரியாழ்வார் குறிப்பிடுகிறார். 

பொருளுரை:
பொன்னலான கிண்கிணிகள் சலசலக்க, பொன்சுட்டி அணிந்த கார்முகில் வண்ணா, மின்னல் கொண்ட மேகம் விரைந்து எதிரே வந்ததைப் போல, ஓடி வந்து என் இடையில் அமர்ந்துகொள்வாயாக! எம்பெருமானே என்னை வந்து அணைத்துக் கொள்வாயாக!