Monday, March 31, 2008

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்பிறப்பு - கி.பி. ஆறாம் நூற்றாண்டு (520 - 620)

இடம் - திருமழிசை

மாதம் - தை

நட்சத்திரம் - மகம்உங்களுக்கெல்லாம் இவரோட நண்பர் யாருன்னு தெரியுமா? கூட படிச்சவங்களா? இல்ல. பின்ன, பக்கத்து வீட்டுப் பையனா? இல்ல. வேற யாரா இருக்கும்?! தெரியலயா.... நான் சொல்றேன். இவரோட ப்ரெண்ட் பைவ் ஹெட் பாம்பு பெட்ல பள்ளி கொள்வாரே ஒருத்தர் அவர்தான் இவரோட ஃப்ரெண்ட்.திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அதன் பலனாக அவர் மனைவியும் கருவுற்றார். வழக்கத்திற்கு மாறாக, 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும்.அவர்கள் சென்ற பின், அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இவ்வதிசயமான சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.திருமழிசையாழ்வார், திருவல்லிக்கேணியில் முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரை சந்தித்தார். சைவம், வைணவம், பௌத்தம் உள்ளிட்ட பல சமய நூல்களையும் கற்ற திருமழிசையாழ்வாருக்கு, இறைத்தத்துவத்தைப் பற்றிய குழப்பம் ஏற்பட்டது. அதை நீக்கி வைணவப்பேரொளியை அவர் மனத்தில் விதைத்தவர் நம் பேயாழ்வாரே ஆவார். பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார். திருவேக்கா - இந்த ஊர் யாருக்காவது நினைவிருக்கா. சரியாகச்சொன்னீர். நம் பொய்கையாழ்வார் பிறந்த அதே திருவேக்காதான். அங்கு சென்று, பொய்கையாழ்வாரைக் கண்டெடுத்த அதே யதோத்தகிரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.

மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.

ஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.

சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.

ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்; நம் திருமழிசையாழ்வார். எப்படின்னு கேளுங்க!


"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"

என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான். அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான். பாத்தீங்களா! தம் பக்தர் என்ன சொன்னாலும் கேட்டுகிறாரு. அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு இல்லீங்களா!

நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்தாங்க இல்லயா? அந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.

அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்) ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில் சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.

திருச்சந்த விருத்தத்தில் அவர் கூறுவது:

நின்றது எந்தை ஊரகத்து
இருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்து
எண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்;
பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும்
கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!

நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள் புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார், திருமழிசையாழ்வார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!

Friday, March 28, 2008

பொய்கையாழ்வார்; பூதத்தாழ்வார்; பேயாழ்வார்.

உங்களுக்கெல்லாம், ஒரே வருடத்துல, ஒரே மாதத்துல, ஒரே வாரத்துல செவ்வாய், புதன், வியாழன் என்னும் அடுத்தடுத்த மூன்று நாட்கள்ல அவதரித்த மூவேந்தர்கள பத்தி சொல்லட்டுமா?

மூவேந்தர்கள் -ன்னு நான் சொன்னது நம்ம சேரன், சோழன், பாண்டியன் இவங்கள இல்ல. நான் சொன்னது மூவுலகத்தையும் ஆளும் பிரானின் பிரியமான மூவரைப் பத்தி. அவங்க மூணு பேரும் யாரென்றால், அவங்கதான், நான் சொன்ன பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர். தெரிஞ்சுடுச்சா! அவங்களேதான்1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்.

இம்மூன்று பெரியவர்களும் அவதரித்த ஆண்டு - கி. பி. 460 - 540 (5 ம் நூற்றாண்டு)

பொய்கையாழ்வார்:

பொய்கையாழ்வாரின் அவதாரத் திருக்குறிப்புகள்:

ஊர் - காஞ்சி
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - திருவோணம் (ஷ்ரவணம்)
திதி - சுக்லாஷ்டமி(செவ்வாய்)

பொய்கையாழ்வார் பிறப்பு பற்றிய உண்மை அறியப்படவில்லை. தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார்.

பூதத்தாழ்வார்:

ஊர் - மகாபலிபுரம்
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - அவிட்டம்(தனிஷ்டம்)
திதி - நவமி (புதன் கிழமை)

மகாபலிபுரம் - இத்திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். (ஸ்தல ஸயன பெருமாள்)
பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் - குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும்.

அம்சம் ல்லாம் மென்மையா, மணமா, அழகாத்தான் இருக்கு; ஆனா பேர் மட்டும் ஏன் பூதம் ன்னு வெச்சி இருக்காங்க? அதாவது, பூதம் ன்னா, அது மாத்ரூ பூதமோ, இல்ல வேற ஆவிப் பூதமோ கிடையாது. பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.

பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

பேயாழ்வார்

ஊர் - மயிலாப்பூர்
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - சதயம்
திதி - தசமி(வியாழன்)

பேயாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களில் ஒன்றான வாளின்(நாதங்கம்) அம்சமாவார். இவரும் மயிலாப்பூரில் உள்ள திரு ஆதி கேசவ பெருமாளின் திருத்தலத்தில் இருக்கும் திருக்கிணற்றில் மலர்ந்திருந்த செவ்வல்லி மலரிலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இவர் பெயர் ஏன் பேய் ஆழ்வார் என்று வந்தது என்று தெரியுமா? இவர், ஊர் ஊராக... எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு பேயைப் போல் திரிந்து வந்ததால், அவருக்கு 'பேய் ஆழ்வார்' என்று பெயர் வந்தது.

இம்மூவரும் 'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை நம்மாழ்வார், 'இன்கவி பாடும் பரம கவிகள்' என்று போற்றுகிறார்.

பொய்கையாழ்வார், தத்துவ ஞானத்திலிருந்து எவ்வாறு பர ஞானம் உருவாகிறது என்றும்,
பூதத்தாழ்வார், பர ஞானம் எவ்வாறு பர பக்தியாக மலர்கிறது என்றும்,
பேயாழ்வார், பரபக்தி எவ்வாறு பரம பக்தியாக நிறைகிறது என்றும் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் மூவரின் பிரபந்தமும் ஒன்றாக இணைந்து 'இயற்பா' என்று அழைக்கப்படுகிறது.

இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர். ஆனால் வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை. பின் எப்படி? இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன. இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல! இம்மூன்று அன்புக்கடலையும் எம்பிரான் சங்கமிக்க வைத்த இடம் திருக்கோவிலூர் ஆகும்.

ஓம் நமோ நாராயணாய நம!!
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஆழ்வார்கள்

எம்பிரான் பெயரில் பூமாலையொடு பாமலையும் சூட்டி அழகுப் பார்த்து அதன் மூலம் வைணவம் உலகத்தில் தழைத்து நிற்கவும், அமுதத் தமிழ் மொழியின் பெருமையை உலகு உணரச்செய்யவும், மானுடனின் அகப்பிணிகள் நீங்கி, நாணிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து பெருமாளின் பொற்பாதம் அடைய, ஆழ்வார்கள் என்னும் பன்னிரு அவதார புருஷர்கள் அருளிய பொக்கிஷமே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் என்னும் அமுதத் திரட்டு ஆகும்.

ஒரு வாய் அமுதம் உண்பவர்க்கே மரணம் என்பது இல்லையாயின், தொகுக்கப் பெற்ற நாலாயிரம் அமுத வெள்ளத்தை உண்பவர்க்கு என்ன ஆகும் என்று உரைக்கவும் வேண்டுமோ! ஒவ்வொருவரின் பிறவியின் நோக்கமே பிறவியின்மை என்னும் நிலையை அடைவதற்கான வழியை அறிவதே! அவ்வழியை இப்பொக்கிஷத்தில் நாம் கண்டறிய முடியும். தண்ணீர் பருகப் பருகத் தாகம் தீரும்; தமிழைப் பருகப் பருகத் தாகம் பெருகும். அறிவுத்தாகம், அருட்தாகம் இரண்டினுக்கும் தீர்வு இத்தீந்தமிழ் பாடல் தொகுப்பில் உள்ளது.

ஆயர்க் குல ஆதவனின் பேரருளைப் பெற நமக்குப் பேருதவியாய் இருந்த அந்த பன்னிரு ஆழ்வார்கள் என்னும் அவதார புருசர்களின் திருப்பெயர்கள் இதோ.

பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகரஆழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார் ஆவர்.

இவர்கள் திருமாலின் பெயரில் நெக்குருக, நெஞ்சுருகப் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்கள் அனைவரும் பாடியது அய்யன் பெருமாளின் பெயரில் மட்டுமே என்றாலும் அவை பாடப்பெற்ற காலங்கள் வேறு வேறு. வெவ்வேறு காலங்களில் இயற்றப்பெற்ற இப்பாசுரங்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் பெயரில் நமக்கு அருளியவர் நாதமுனி ஆவார். இப்பாசுரத்தை நூல் என்று சொல்வதை விட பாடல்களின் தொகுப்பு என்னும் சொல்லே சாலப் பொருந்தும்.

இந்து சமயத்தில் வைணவ மார்க்கத்தைப் பின்பற்றுவோர் நாலாயிரத் திவ்ய பிரபந்த பாடல் தொகுப்பை வேதத்திற்கு இணையாக மதிக்கின்றனர். அதனால் இது "வைணவ வேதம்" என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெயரில் என்றால், அது எந்த ஊரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு என்று எண்ணுகிறீர்களா? இவை அனைத்தும் ஒரே தலத்தில் இருக்கும் தெய்வத்தைப் பற்றி பாடியவை அல்ல. ஆனால் ஒரே தெய்வத்தைப் பற்றியது. யார் தெரியுமா? நின்று, இருந்து, கிடந்து என்று எந்த நிலையிலும் நமக்கு அருள் பாலிக்கும் திருமாலின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி பாடப்பெற்றது.

முதலில் நாம் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளலாம் வாங்க.

ஓம் நமோ நாராயணாய நம!!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!

Saturday, March 22, 2008

அறிமுகம்

பல்வேறு காலகட்டங்களில் தமிழ் குறித்தான விவாதங்களில் புழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை முன் வைக்க இயலாமல் குறுகி நின்றதுண்டு. அது மொழியின் குறை அன்று. அறிந்து கொள்ளாமை தமிழரின் குறையே. பிற மொழிச் சொற்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் பொருட்டு தமிழ் சொற்களை இலக்கிய வீதியில் அல்லவா தேட வேண்டும். அதில் முதல் கட்டமாக திருக்குறளுக்குப் பொருள் எழுதினோம், ஒரு குழுவாக. இதோ இரண்டாவது அடி இப்போது எடுத்து வைத்திருக்கிறோம்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனும் வைணவப் பாடல்களின் திரட்டு பற்றி கண்ணதாசன் பற்றிய குறிப்பு ஒன்றில் முதன் முதலாக அறிந்தேன். தன்னுடைய சொற்செறிவிற்கு நாலாயிரம் பாடல்களும் மனப்பாடமாகத் தெரிவதும் ஒரு காரணம் எனக் கூறி இருந்தார். அதிலிருந்து அப்பாடல்களை முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டே இருந்தது.

எனவே இந்த பதிவுதளத்தின் முதல் நோக்கம் தமிழ் சார்ந்தது. வாசிப்பவரால் இறைவனைக் காண முடிந்தால் மகிழ்ச்சியே. எங்களால் முடிந்த வரை அனைத்துப் பாடல்கள் குறித்த தனித் தகவல்களை இணைக்க முயல்வோம். அதனால் அனைத்து இடுகைகளுமே இற்றைப் படுத்தலுக்கு உட்பட்டவையே, இந்த அறிமுகப் பதிவு உட்பட.

ஆழ்வார்களின் பாசுரங்களை, வைணவர்களோ இல்லை ஆன்மீகம் சார்ந்தவர்களோ தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த அமுதத்தை அருந்தி அனுபவித்து மகிழலாம்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம்:

திவ்யம் - புனிதம், தூய; பிரபந்தம் - கட்டு, தொகுப்பு.


லைப்பு வட மொழியில இருக்கே! அப்போ பாடல்களும் வடமொழியான்னு நினைச்சுக்காதீங்க!!தமிழுக்குப் பாசுரங்களா, இல்லை பாசுரங்களுக்குத் தமிழா?? என்று பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு தமிழும் பக்தியும் அதில் இரண்டறக் கலந்துள்ளது.

அமுதத்திரட்டில், வேதங்களின் சாரம் முழுக்க முழுக்க உள்ளது. வட மொழியில் தான் வேதங்கள் கற்க முடியும், கேட்க முடியும் என்ற நிலையை மாற்றி, தமிழரும் வேதத்தின் சாரத்தை அறிய ஆழ்வார்கள் என்னும் அவதாரப் பெருமான்கள் தோன்றி, நமக்கு அந்த அரிய புதையலை அளித்தருளினர்.

A for Aeroplane என்பது சரியா இல்லை, A for எறும்பு என்பது சரியா?

வடமொழியில் வேதம், எந்த இடத்தில் என்ன பொருளைச் சொல்கிறது என்பது வெறும் மனனம் மட்டும் செய்தவர்களால் அறிய இயலாது...

சுருங்கக் கூறின், ஒரு சொல்லின் உயிரும் உணர்வும், பொருளும் பயனும் தாய் மொழியில் மட்டுமே வெளிப்படும்.

அந்த தமிழ் வேதத்தை எங்களுடன் இணைந்து நீங்களும் அறிந்து மகிழவே இந்த சிறு முயற்சி. இதில் பிழை ஏதும் இருந்தால், நீங்கள் அறிந்தவற்றை தாராளமாகப் பின்னூட்டத்தில் வந்து சொல்லலாம். எங்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கும், வலைப்பதிவுக்கு வருகைத் தந்து ஆதரவு அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் கோடி!!!

வாங்க முதல்ல ஆழ்வார்களப் பத்தி அறிந்து கொள்வோம்.....

எம்பெருமான் திருவடிகளே சரணம்!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!