Sunday, June 14, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 6

திருப்பல்லாண்டு பாடல் - 6

எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திருவிழவில்
அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை*

பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.

பொருள்:

எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் - நான், என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் பாட்டனார் தொடங்கி முதல் வந்த இந்த ஏழு தலைமுறைகளாக நாங்கள் வழிவழியாக வந்து இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்கின்றோம். (எந்தை - என் தந்தை, நான் + என் தந்தை என்று இருவரையும் இங்கு சுட்டுகிறது, மூத்தப்பன் - தந்தையின் தந்தை, தாத்தா)

திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளன்று அந்தி மாலைப் பொழுதில் ஆளரி (ஆளரி - ஆள்+அரி, மனிதன்+சிங்கம்) வடிவில் திருவவதாரமெடுத்து இரண்யகசிபு என்னும் அசுரனை வதம் செய்தவனை, அதாவது

இது ஒரு பெரிய்ய கதைங்க.... இதச் சொல்லனும்னா நாம இரண்யகசிபு உருவான ஆதி முதல் மூலத்திலிருந்து வரவேணும்....

கதைச் சுருக்கம்:

வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, நம் பெருமான் அவர்கள் இருவரையும் மனிதர்களாகப் பிறக்க சாபம் அளித்துவிட்டார்.

உடனேப் பதறிப்போன, பாலகர்கள் தங்களால், இறைவனைப் பிரிந்து ஒருகாலும் இருக்க இயலாது என்று இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கதறினர். கருணாமூர்த்தியான நம் இறைவனும் அவர்களுக்காக மனமிறங்கி, உங்களுக்கு நான் இரண்டு சந்தர்ப்பங்களைத் தருகிறேன். * நீங்கள் என் அடியவர்களாக ஏழு பிறவிகள் பிறந்து (சிலர் நூறு என்று கூறுகின்றனர்) அதன் பிறகு என்னை வந்து அடைகிறீர்களா? இல்லை, ** மூன்று பிறவிகள் என்னை எதிர்ப்பவர்களாக, கொடிய அசுரர்களாக இருந்து என்னை வந்து அடைகிறீர்களா? என்று வினவினார்.

அதற்கு, அந்த பாலகர்கள், எங்களால் நீண்ட காலம் தங்களைப் பிரிந்து இருக்க இயலாது, எனவே, தங்களை எதிர்ப்பவர்களாகப் பிறந்தாலும் விரைவில் தங்களிடம் வந்து சேர்ந்தால் போதும் இறைவா! என்று வேண்டினர். அதோடு இறைவனிடம், மேலுமொரு வரமும் வேண்டினர், அவர்களின் பிறப்புகளுடைய நிறைவு இறைவனால் அன்றி, வேறு எதனாலும் நிகழக்கூடாது என்று கேட்டனர். இறைவனும் அவ்வாறே திருவுளம் புரிந்தார்.

அந்த துவார பாலகர்கள்தான், கிருத (சத்திய) யுகத்தில் இரண்யாக்ஷ்ன் மற்றும் இரண்யகசிபுவாகவும், திரேதாயுகத்தில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், துவாபர யுகத்தில் சிசுபாலர் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறந்தனர்.

''நிழலின் அருமை வெயிலில்,
வெயிலின் அருமை குளிரில்,
அன்பின் அருமை பிரிவில்'' ன்னு சொல்ற மாதிரிஇறைவனின் திருவருளையும், அவனே கருணைக் கடலின் எல்லை என்பதையும் உலக மக்களுக்கு ஏன் தேவர்களுக்கு உணர்த்திய பெருமை இந்த துவார பாலகர்களுக்கு உண்டு.

சரி, இப்ப சங்கதிக்கு வருவோம்.... துவார பாலகர்களின் முதல் பிறவியில் காசியப முனிவருக்கும் அவரது மனைவியருள் ஒருவரான திதி க்கும் இரட்டைக் குழந்தைகளாக இந்த பாலகர்கள் பிறந்தனர். இரட்டையர்களில் மூத்த மகனுக்கு இரணியகசிபு என்றும், இளையவனுக்கு இரண்யாக்ஷன் என்றும் பெயரிட்டனர். இரண்யாக்ஷனை வராக அவதாரம் எடுத்து வதம் செய்தார், மகாவிஷ்ணு. இதனால், மிகவும் கோபமுற்ற அவன் அண்ணன் இரண்யகசிபு, மகாவிஷ்ணுவைத் தன் பரம விரோதியாக நினைத்து, அவனை(ரை) எதிர்த்து சண்டையிடவும், அழிக்கவும் வேண்டி பிரம்மதேவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். தவத்தின் பலனாக, அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனும், அவன் கேட்ட வரத்தை வேறு வழியின்றி அருளினார்.

அப்படி அவர் என்ன வரம் கேட்டார்??? தனக்கு மரணம் பகலிலோ, இரவிலோ நிகழக்கூடாது. அதுமட்டுமல்லாமல் வீட்டின் உள்ளேயும் நிகழக்கூடாது, வெளியேயும் கூடாது, மனிதனோ, வேறு எந்த விதமான மிருகமோ, நீர்வாழ்உயிரினங்கள், பறவைகள், தேவர்கள், அசுரர் என யாராலும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. ஆயுதங்கள் ஏதும் என்னை தாக்கி அழிக்கக் கூடாது. பூமியிலும் நான் இறந்துபடக் கூடாது, ஆகாயத்திலும் நான் இறக்கக் கூடாது என்று ஏகப்பட்ட 'கூடாது' நிபந்தனைகளை வரமாக வேண்டினான்.

இரண்யகசிபு தவம் புரியச் செல்லும் வேளையில், அவன் மனைவியான கயாது, கருவுற்றிருந்தாள். அதையும் கூட பொருட்படுத்தாமல், அவன் மனைவியைத் தனியே விடுத்து, அரண்மனை வாசம், அரச வாழ்க்கை அனைத்தையும் துறந்து, தவம் புரிய தனிமையான ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டான். அவன் தவம் முடித்து வரும் முன்னமேயே, கயாது ஒரு அழகிய புதல்வனைப் பெற்றெடுத்திருந்தாள். அந்தக் குழந்தைதான், பிரகலாதன்.

பிரகலாதன் சிறுவனானதும், அவனை குருகுலம் அனுப்பி வைத்தனர், பெற்றோர். அங்கே அவர்கள் கற்றுத் தந்த பாடங்களைப் படிக்க மறுத்ததோடல்லாமல், அவர்களையும் நாராயணனின் திருநாமம் சொல்லச் சொன்னான். குருகுலம் முடித்து,அரண்மனைக்குச் சன்ற நாட்களில், இரண்யகசிபு அவனை அன்போடு அணைத்து, குருகுலத்தில் பயின்றவற்றைக் கூறுமாறு கேட்டான். அப்போது, பிரகலாதன் ''ஓம் நமோ நாராயணாய'' என்று அமைதியாகப் பதிலளித்தான்.

இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்த இரண்யகசிபு, பிரகலாதனையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்த குருவையும் கடிந்துக் கொண்டான். பிரகலாதனை மீண்டும் குருகுலம் அனுப்பி, அவனுக்கு நல்ல முறையில் பாடம் கற்பித்து (அவர்களுக்கு நல்லனவானவற்றை உபதேசிக்குமாறும்) ,முக்கியமாக பிரகலாதன் நாராயணபுராணம் பாடுவதை நிறுத்தச் செய்யுமாறும் கூறினான்.

அவர்களும் மன்னனுக்குப் பயந்து, எவ்வளவோ பிரயத்தப்பட்டுப் பார்த்தனர். ஆனால், ஒரு பயனும் இல்லை. அவனை, அடித்து வதைத்தாலும், அன்பாய் உரைத்தாலும், பாவமாய் கெஞ்சினாலும் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்த இடத்தில் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தேகம் வரலாம், வரவேண்டும். அது எப்படி ஒரு அசுரக் குலத்தில் பிறந்தவனுக்கு சதா சர்வகாலமும் இறைவனைப் பழிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் குலத்தில் இப்படி ஒரு விதிவிலக்கு என்று???

அதாவது, கயாது கருவுற்றிருந்த சமயம் தானே இரண்யகசிபு தவம் புரியத் தனித்துச் சென்றான். அப்போது, அவன் இல்லாத சமயத்தில், கயாதுவைக் கடத்திச் சென்றுவிட்டான், இந்திரன். அவன் கயாதுவின் கருவைக் கொல்ல முயன்ற பொழுது, நாரதர் அவனைத் தடுத்து, கயாதுவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார். அவர் பாதுகாப்பில் இருந்த கயாதுவுக்கு, நாரதர் அடிக்கடி, நாராயணனைப் பற்றியும், எல்லா நல்ல விஷயங்களையும் கதையாகக் கூறினார். அவற்றை எல்லாம் கயாது மட்டுமல்ல, அவள் வயிற்றில் இருந்த கருவும் கேட்டது. கேட்டு, அவற்றை எல்லாம் தனக்குள் பத்திரமாக உள்வாங்கிக் கொள்ளவும் செய்தது. அன்று நாரதர் விதைத்த வித்துதான், இன்று செடியாக வளர்ந்து பிரகலாதனை இவ்வாறெல்லாம் பேசவைக்கிறது.

எப்படி, பெற்றோர் இந்தியராயினும், தாய் கர்ப்பக் காலம் முழுதும்அமெரிக்காவில் இருந்தால், அக்குழந்தைக்குப் பெற்றோரின் சாயல் வந்தாலும், அக்குழந்தையின் நடத்தையில் அமெரிக்க மண்வாசனைக் கலந்திருக்கும், இதை நான் என் மகனிடமே கண்டிருக்கிறேன். ஒரு பெண் கருவுற்றிருக்கும் பொழுது, அவள் நல்ல விசயங்களைக் கேட்பதோடு, படிப்பதோடு அல்லாமல், நல்லனவற்றையே சிந்திக்கவும் வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், கயாதுவும், பிரகலாதனும்!!

சரி சங்கதிக்கு வருவோம், குருகுலத்தில், அவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போகவே, பிரகலாதனை மீண்டும் கொண்டு வந்து அவன் தந்தையிடமே ஒப்புவித்து மன்னிப்புக் கேட்டனர்.

இரண்யகசிபுவும், தன் மகனை சிறையில் அடைத்து கோரப் பசிக்கும், கொடிய தாகத்திற்கும் இரையாக்கினான். அப்பொழுதும், பிரகலாதன், ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தையே திருவமுதாக உண்டான். மெலிந்த தேகத்தோடும், களைப்புற்ற முகத்தோடும் பிரகலாதனை எதிர்பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அப்பொழுதும் விடாது, அவனை மதம் பிடித்த யானையின் முன் நிறுத்தினர், யானை பிரகலாதனை மிதிக்காமல், வதைக்காமல், மதித்து, வணங்கி நின்றது.

அடுத்து, கொடிய விஷப்பாம்பு, கொழுந்து விட்டெரியும் வெந்தணலினுள் புகுத்துதல் என்று எத்தனை எத்தனையோ சோதனைகள்!! எல்லாம் பயன்றறுப் போகவே, கடைசியாக, பால் அன்னம் ஊட்டிய அன்னையின் கையாலே நச்சுத் தரச் செய்தான் அந்த இரணியகசிபு!!

எத்தனை சோதனைகள் சுட்டாலும், வேதனைகள் வதைத்தாலும் பிரகலாதனின் உள்ளம் நாராயண என்னும் நாமத்தை மறக்க நினைக்கவும் இல்லை, அவன் திருவாய் எட்டெழுத்து மந்திரத்தை ஓதாமல் இருந்ததும் இல்லை. அதுவே, அவனுக்கு உயிராகவும், அவனைக் காக்கும் காப்பாகவும் இருந்தது.

வாழ்வில் எத்தனை அடிகள் விழுந்தாலும், நாராயணனின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டால் அடிகள் அனைத்தும், இறைவனை அடைய நமக்குக் கிடைத்தப் படிகளாக மாறிவிடும், இது பிரகலாதன் வாழ்வில் மெய்யாயிற்று.

தந்தையே, நாராயணா! என்னும் திருநாமம் சொல்பவர்களுக்கு எந்த குறைவும் என்றும் வாராது!அவனை நினைப்பதும் பேசுவதுமே நமக்கு உய்வினை உண்டாக்கும்! எங்கும், எதிலும், என்றும் இருப்பவன் என் நாராயணனே! என்று பிரகலாதன் சொன்னதும், கோபத்தின் உச்சிக்கேச் சென்றுவிட்டான்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி, அவனை ஆட்கொண்டது! ஏற்கனவே, சினம் இரண்யகசிபுவின் நெருங்கிய பங்காளி!! இன்று, அவனுக்குள்ளேயும் புகுந்துவிட்டான்!! உரத்தக் குரலில் எங்கும் இருக்கும் உன் நாராயணன் அவனை எந்நாளும் எதிரியாக நினைக்கும் என் மாளிகையில் இருக்கிறானா? இங்குள்ள பொருள்கள் எதிலாவது இருக்கிறானா? எங்கு இருக்கிறான், உன் நாராயணன்? என்று முழங்கினான்.

அவன் எங்கும் இருக்கிறான் தந்தையே! இந்த மாளிகையிலும் உள்ளான், இங்குள்ள அனைத்திலும் உள்ளான்; பேசும் என்னிலும் உள்ளான், கேட்கும் உங்களிலும் உள்ளான்; இங்கு உள்ள அனைவரிடத்தும் இருக்கிறான்; அவன் பெரிய தூணிலும் இருப்பவன், சின்னஞ்சிறு தூசியிலும் இருப்பவன்!!

உன் கூற்று மெய்யானால், உன் நாராயணன் எங்கும் இருப்பவனானால், இப்பொழுதே, இதோ இந்த தூணை உடைக்கிறேன், அவன் இருக்கிறானா, இல்லையா? என்று பார்த்துவிடுகிறேன், என்று கூறி தன் கதையால் தூணை வேகமாகத் தாக்கினான், இரணியகசிபு.

அவ்வளவுதான், அந்த தூண் இரண்டாக உடைந்து, அதனுள்ளிருந்து, மகாவிஷ்ணு வந்தார். சாந்த சொருபியாக அல்ல, சாதாரண மனிதராகவும் அல்ல. உலகத்திலே இல்லாத ஒரு உருவத்துடன், வயதான சிங்க உருவத்தில், கிழ சிங்கத்தின் கர்ஜனையுடன், உக்கிரமான முகத்துடன் நரசிம்ம உருவத்தில் வந்தார் மகாவிஷ்ணு!!! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய!! ஓம் நமோ நாராயணாய!!!

--வந்து இப்போ என்னப் பண்ணப் போறார்?? தன்னை அவமானப் படுத்தியதற்குத் தண்டிக்கப் போறாரா?? இல்லை, தன் பக்தனுக்கு சோதனை மேல் சோதனைத் தந்த பாவத்திற்கு அவனைக் கொல்லப்போறாரா?? அவனைத்தான் கொல்ல முடியாதே, விலங்குகளால் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது ன்னு ஏற்கனவே, ஏகப்பட்ட ''கூடாது'' களை அவன் பிரம்மாவிடம் வரமாகப் பெற்றுவிட்டானே??!! அப்படின்னா, பிரம்மா கொடுத்த வரம் பொய்யாகப் போகுதா??


கொஞ்சம் பொறுங்கள், அவர் வயசான சிங்கத்தின் உருவத்தில் தான் வந்தார். அதே நரைத்த பிடரி மயிர், கோரைப் பற்கள், கூரிய நகங்கள், உக்கிரமான கண்கள்... ஆனால், தேகம்? தேகம் எப்படி இருந்தது?? மனித தேகம்...

ஆம் மனித தேகம் கொண்ட சிங்கத்தை எங்கயாவது, யாராவது பார்த்திருக்கோமா? குறைஞ்சபட்சம் அந்தமாதிரி ஒரு குட்டி? சிங்கக் குட்டியாவது கண்டதுண்டா? இல்லையே.. கண்டதே இல்லையே, ஏன்னா அப்படி ஒரு உயிரினம் எங்குமே இருந்ததில்லை...

எத்தனை ''கூடாது'' நிபந்தனைகள் விதித்தாலும், அத்தனைக்கும் மீறிச் செயல்படக்கூடியவன், நம் இறைவன்!! வல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு!!
ஆனால் , இந்த சீனிவாசனுக்கு வல்லவன், அவன் மட்டுமே!! ஓம் நமோ நாராயணாய!!

--ம்ம்.. சரி அவதாரம் எடுத்தாயிற்று, இனி வதத்தை முடித்து, சாபத்தைத் தீர்த்தருள் புரியவேண்டியதுதானே!

எதற்கும் ஒரு காலம் இருக்கிறதன்றோ! வேளையறிந்துதான் வேலை செய்ய வேண்டும்! இரண்யகசிபு பெற்ற வரத்தின் படி, இரவும் அல்லாத, பகலும் அல்லாத பொழுது வர வேண்டுமே!

--அப்ப அதுவரைக்கும், ஒரு கோப்பைத் தேநீர் குடித்துவிட்டு, நாளிதழ் படிக்கலாமா??

தேநீர் கொடுத்து, குழைந்து குழைந்து குசலம் விசாரிக்க, நாராயணன் என்ன இரண்யகசிபுவின் மாமனா?? மச்சானா?? இரண்யகசிபு, இப்படி ஒரு புதிரான வரம் வாங்கியதே, நாராயணனை துவம்சம் செய்யத்தான்?? பழிக்குப் பழி ஐயா, பழிக்குப் பழி!! அதனால் நாராயணனைக் கண்ட மாத்திரம் துவங்கியது, போர்.

--ஆமாம், போர்!!

அந்தி மாலை மயங்கும் சந்தியா காலம் வரும் வரை, இருவருக்கும் யுத்தம்!! சந்தியா காலமும் வந்தது, கண் இமைக்கும் ஒரு நொடிப் பொழுதில், நரசிங்கம் வாயிற்படிமேல், இரண்யகசிபு, நரசிங்கத்தின் மடிமேல்.... அவ்வளவுதான்....

இரண்யகசிபு எவ்வளவு திமிரினாலும் முடியவில்லை, நரசிம்மத்தின் முகம் அதிஉக்கிரமானது, நரம்புகள் புடைத்தன, விண்ணை முட்டும் கர்ஜணை!!! ஓம் நமோ நாராயணாய!

அங்கிருந்த அனைவரும், பிரம்மா, சிவன், தேவர்கள், முனிவர்கள் தேவலோகத்தினர் உட்பட அனைவரும் நடுநடுங்கி, நாராயண வென்னும் திருநாமம் சொல்லி கண் கொட்டாது, அசைவற்று, மூச்சுவிடவும் மறந்து நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்!!

நரசிம்மர், தன் நகங்களாலேயே இரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, குடலை உருவி மாலையாக அணிந்துக் கொண்டு, அவன் இரத்தத்தையும் குடித்தார். அவதாரம் நோக்கம் நிறைவேறியது!! இருந்தாலும் நரசிம்மரின் உக்கிரம் மட்டும் குறையவே இல்லை! அதைக் கண்டு அனைவருக்கும் திகில் இன்னும் விடவில்லை, என்ன செய்வதென்று அறியாமல் பிரம்மனும், சிவனும் திகைக்க, பிரகலாதன் மட்டும் முதலில் இறைவனை நெருங்கிச் சென்றான்!
தந்தை மிகுந்த கோபத்துடன் இருக்கும் போது, மனைவி தரும் குவளைத் தண்ணீரை விட, குழந்தையின் செவ்விதழ் ஓரம் தவழும் புன்சிரிப்பு கோபத்தைத் தணித்துவிடுவது போல்....

குழந்தையின் கோபம் தணிந்தது!

--என்னது?!! இவ்ளோ நடந்தப்புறம் குழந்தையா??!!

ஆமாம், குழந்தைதான்! அவதாரம் பிறந்த ஒரு நாள் கூட ஆகாத சிறு மொட்டு, நரசிங்கம்!! மலரை விட மொட்டு சிறிது கடினமானது :-))

அதன் பிறகு திருமகள் ஐயனிடம் செல்ல, நரசிங்கர் நரசிம்மர்-மகாலெஷ்மி சகிதமாக அனைவருக்கும் காட்சியளித்து திருவருள் புரிந்தனர்!!
பின் பிரகலாதனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்?

''இறைவா, உன்னை என்றும் மறவாத உள்ளம் வேண்டும். உன்னை அவமதித்த என் தந்தைக்கு எந்த விதமான பாவங்களும் வந்து சேராமல் காத்தருள வேண்டும்!உலக வாழ்வின் மீது ஆசை, பற்று, மோகம் இல்லாத நிலை வேண்டும். என்றும் உன் அடியனாகவே வாழ திருவருள் வேண்டும்!'' என்று வேண்டினான், பிரகலாதன்.

இறைவன், குழந்தையே பிரகலாதா! என்னை மனமார நினைத்து வணங்குபவர்களின் தலைமுறைகளுக்கு எந்தவிதமான துன்பங்களும் வந்து சேர்வதில்லை. என் திருவடிகள் மேல் பற்றுக் கொண்டவர்களை எந்தப் பற்றும் பற்றுவதில்லை! நீயே இந்த பூவுலகில் மன்னனாக என்றும் இருந்து இறுதியில் என் திருவடி வந்து சேர்வாயாக!! என்று ஆசி கூறிச் சென்றார்.

அதன் பிறகு பிரகலாதன் தந்தையின் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு, முறைப்படி, பெரியவர்களால், மன்னவனாக முடிசூட்டப்பட்டான்!!

இந்த நரசிம்ம அவதாரம் எடுத்தது சுவாதி நட்சத்திரத்தில், ஆந்திர மாநிலத்திலுள்ள, அகோபிலம் என்னும் இடமாகும்! அதுமட்டுமல்லாமல், கருடாழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்த திவ்யதேசத்தில் 9 விதமான நரசிம்ம தோற்றங்களுடன் பெருமாள் திருவருள் புரிகிறார்! ...

திருவோணத் திருவிழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை - திருவோணத் திருநாளில், பொழுது சாய்ந்தவுடன் காண அரிதான மனித உடல் கொண்ட சிங்கத்தினைப் போல் அவதரித்து, அசுரரான இரண்யனை அழித்தவனை (அந்தியம் - பொழுது சாய்ந்துவிட்ட நேரம், போது - பொழுது, அரியுரு - சிங்க உரு, அரி - பகைவன்)
பந்தனைத் தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே! - இரண்யகசிபு என்னும் அசுரனை அழித்த நரசிங்கத்தின் அசதித்தீரப் பல்லாண்டு பல்லாண்டென்று பாடுவோமாக! (பந்தனை - அசதி,களைப்பு)

பதவுரை:

நான், என்தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை, அவரது தாத்தா என்று ஏழு தலைமுறைகளாகத் தொடர்ந்து எந்தவிதக் குறையுமில்லாது இறைவனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து வருகிறோம்! திருவோணத் திருநாளன்று, மாலைப் பொழுதில் மிகவும் அரிதான உருவமான ஆளரி (நரசிம்ம அவதாரம்) உருவமெடுத்து, பகைவனான இரண்யகசிபுவை அழித்தவனுக்கு, அந்த களைப்புத் தீரவேண்டுமென்று அவனுக்குப் பல்லாண்டுப் பாடுவோமாக!!

பி.கு - திருவோணத் திருநாளானது, மகாபலி என்னும் மன்னன் நினைவாக, வாமன அவதாரத்தில் இருந்துக் கொண்டாடப்படுவது! அதை ஏன் நரசிம்ம அவதாரத்தோடு இணைத்துக் கூறுகிறார் என்று புரியவில்லை!! தயவுசெய்து தெரிந்தவர்கள் வந்து கூறுங்களேன்! நரசிம்மரானவர், வயதான தோற்றத்துடன் இருந்தாலும், அவர் சிறிது காலம் மட்டுமே இருந்த குழந்தை! சங்கு சக்கரத்துடன், கருடாழ்வாருடன் வந்த திருமகள்நாராயணனுக்கே காப்பிட்டவர்! அதனால, இந்தக் குழந்தைக்கு ஏதும் தீங்கு வந்திடக் கூடாது என்று மறைத்துப் பாடினாரோ??!! -தாய்மைப் பலமாகப் பேசுவது போல் உணர்வு!

14 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்லா விளக்கமா விளக்கி இருக்கீக இந்தப் பதிவில்! :)
படமெல்லாம் சூப்பரு!

//அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை//

//இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு,
அவர்கள் இருவரையும் மனிதர்களாகப் பிறக்க சாபம் அளித்துவிட்டார்//

ஒரு சின்ன திருத்தம் கதையில்!
There are always two sides to a coin! தவறு ஜய விஜயர்கள், முனிவர்கள்-இரண்டு பேர் மேலும் தான்! :)

இறைவன் தான் எடுக்க இருக்கும் அவதாரங்களுக்குத் தன்னுடன் பூவுலகம் வரச் சம்மதமா என்று ஜய விஜயர்களைக் கேட்க, அவர்கட்கோ தயக்கம்! மோட்சத்தை விட்டு, பூவுலகம் போய் கஷ்டப்படணுமா-ன்னு!

மண்ணுலக உயிர்கள் கடைத்தேறும் பொருட்டு, பகவானே பிறக்கும் போது, தாங்களும் செல்வோமே என்ற மனப்பான்மை இல்லாமல், சற்றே தயங்கினார்கள். சரி-ன்னும் சொல்லலை! மாட்டோம்-ன்னும் சொல்லலை! இறைவன் சிரித்தான்!

அந்த நேரம் பார்த்து சனகாதி முனிவர்கள் நால்வரும் பரமனைச் சேவிக்க வந்தார்கள்!ஆனால் அங்கிருந்த அடியவர்களைச் சேவிக்காமல், ஏதோ தங்களுக்கும் பரமனுக்கும் Direct Connection போல, அனுமதி பெறாமல் ஏதேச்சாதிகாரமாக உள்ளே நுழைய முற்பட்டனர்!

அவர்கள் வந்த நோக்கம்: பரப் பிரம்மத்துக்கு உருவம் இருக்குதா என்று இறைவனையே சோதித்துப் பார்க்கத் தான்! இறைவனைச் சோதனை செய்யும் முன், தங்கள் பணிவைச் சோதித்துக் கொள்ள முனிவர்கள் அறியவில்லை!

ஆலயத்தில் அடியார்களைச் சேவித்து, கருடாழ்வாரைச் சேவித்து, ஜய விஜயர்களிடம் முகமன் சொல்லி, அனுமதி பெற்று இன்முகத்துடன் நுழைய வேண்டும் என்பதே ஆலய வழிபாட்டு முறைமை!

இதை மீறிய முனிவர்கள் முதல் குற்றவாளிகள்!

இவ்வாறு மீறியவர்களைச் சற்று அன்புடன் எடுத்துச் சொல்லி இருக்கலாம்! ஜய விஜயர்கள் ஒரு முறை எடுத்துச் சொன்னார்கள்! கேளாத பட்சத்தில் தங்கள் பொற் பிரம்பால் அடிக்க வந்தனர்! இது தான் தவறு!

அப்போது முனிவர்கள் ஜய விஜயர்களைச் சபிக்க...
அனைவரின் முன்னும் பெருமான் தோன்றினார்.

"முனிவர்களே, பரப்பிரம்மத்துக்கு உருவம் இருக்கா?" என்று நையாண்டியாய் கேட்க, முனிவர்கள் தலை கவிழ்ந்தனர்!

இரு பக்கத் தவற்றினையும் எடுத்துக் காட்டிய இறைவன்...
முனிவர்கள் சாபத்தைச் சற்றே மாற்றி அமைத்தான்!

அடியார்களாக நூறு பிறவிகளா? எதிரிகளாக மூன்றே பிறவிகளா? என்று கேட்க, பெருமானைப் பிரிந்து இருக்க மாட்டாத ஜய விஜயர்கள் எதிரிகளாகப் பிறந்தொழிந்து சீக்கிரம் வருவதையே விரும்பினார்கள்!

பகவான் கேட்ட போது தயங்கியவர்கள், இப்போது அவதார காலத்தில் பிறக்கும் சூழலைத் தானே உண்டாக்கிக் கொண்டார்கள்! :)

அதே போல்...
அன்று ஜய விஜயர்களையும் அடியார்களையும் மதிக்கத் தவறிய முனிவர்கள்...
அதே ஜயவிஜயர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபுவாகப் பிறந்த போது...

உயிருக்குப் பயந்து "ஓம் இரண்யகசிபுவே நமஹ"-ன்னு மூச்சுக்கு மூச்சுக்கு சொல்ல வேண்டி வந்தது! :)))

இப்படி ஒன்றோடு ஒன்று கோர்த்து விட்டு, இறைவன் உணர்த்தும் பாடம் தான் அதிசயம்! எதை எதோடு கோர்த்து உணர்த்துகிறான் என்பது அதிசயத்திலும் அதிசயம்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எப்படி, பெற்றோர் இந்தியராயினும், தாய் கர்ப்பக் காலம் முழுதும்அமெரிக்காவில் இருந்தால், அக்குழந்தைக்குப் பெற்றோரின் சாயல் வந்தாலும், அக்குழந்தையின் நடத்தையில் அமெரிக்க மண்வாசனைக் கலந்திருக்கும், இதை நான் என் மகனிடமே கண்டிருக்கிறேன்//

ஹா ஹா ஹா!
Watz up Daddy? Walk in style! Gotcha? :)) - MaaRan

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவதாரம் பிறந்த ஒரு நாள் கூட ஆகாத சிறு மொட்டு, நரசிங்கம்!! மலரை விட மொட்டு சிறிது கடினமானது :-))//

சூப்பரு! மொட்டு தானா மலர்ந்தா தான் உண்டு! பிரிச்சி எல்லாம் மலர வைக்க முடியாது! நல்ல எடுத்துக் காட்டு! :)

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி - "எங்கும்"
நாடி நாடி ***நரசிங்கா*** என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!

- நம்மாழ்வார்

"அரி-முகன்" அச்சுதன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

- கோதை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பந்தனை - அசதி,களைப்பு//

பகவானுக்கு எப்படி அசதி வரும்? விளக்குங்க தமிழ், விளக்குங்க! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திருவோணத் திருநாளானது, மகாபலி என்னும் மன்னன் நினைவாக, வாமன அவதாரத்தில் இருந்துக் கொண்டாடப்படுவது! அதை ஏன் நரசிம்ம அவதாரத்தோடு இணைத்துக் கூறுகிறார் என்று புரியவில்லை!!//

ஹிஹி!
பாட்டை இப்படி மாத்திப் படிக்கோனும்!

வந்து வழிவழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்!
*******
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை

ஆளரி (நரசிம்மம்) தோன்றியது சுவாதி நட்சத்திரம்!
சுவாதி நாளான அந்திப் போதில், சிங்க உருவாகி, எதிரியை அழித்தவனை...

திருவோணத் திருவிழவில் என்பது தனி! பெருமாளின் உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுவது திருவோணம் (எ) சிரவணம்! பொதுவாக எல்லா ஆலயங்களிலும் இந்தத் திருவோண நாள் என்று புறப்பாடு இருக்கும்! அந்தத் திருவோணப் புறப்பாட்டுத் திருவிழாவில், எந்தை தந்தை...என்று பல தலைமுறையாக கலந்து சேவிக்கிறோம் என்று ஆழ்வார் பாடுகிறார்!

தமிழ் said...

ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே!!! :-))))

தமிழ் said...

//ஒரு சின்ன திருத்தம் கதையில்!
There are always two sides to a coin! தவறு ஜய விஜயர்கள், முனிவர்கள்-இரண்டு பேர் மேலும் தான்! :)//

ஓ அப்படியா!!

எங்க பாட்டி சொன்ன கதையில இந்த துவார பாலகர்கள் மட்டும் தான் கெட்டவங்களா இருந்தாங்க!!

அவங்க ல்லாம் எவ்ளோ பெரிய முனிவர்ங்க அவங்க கிட்ட போய் இந்த துவார பாலகர்கள் வம்பு இழுத்து, வணங்கிட்டுத்தான் உள்ள போகோணும்ன்னு சொல்லிப்புட்டாங்க.

அப்படி சொல்லலாமா? அவங்கல்லாம் பெரியவங்கதானே.... அப்படின்னு எங்க பாட்டி ஒரு மழை நாள் இராத்திரி கதை சொன்னாங்க என் சின்ன வயசுல... அதத்தான் கொஞ்சம் தூசு தட்டி எழுதினேன்...

பெரிய திருத்தத்தை சின்னதுன்னு சொல்லிட்டீங்களே!!! ரொம்ப ரொம்ப நன்றி விளக்கத்துக்கு...

உங்களுக்கு இந்த மாதிரி ஒரு டெம்ப்ளெட் உருவாக்கி வெச்சிக்கணும் போல இருக்கே!!! :-))

தமிழ் said...

//
இறைவன் தான் எடுக்க இருக்கும் அவதாரங்களுக்குத் தன்னுடன் பூவுலகம் வரச் சம்மதமா என்று ஜய விஜயர்களைக் கேட்க, அவர்கட்கோ தயக்கம்! மோட்சத்தை விட்டு, பூவுலகம் போய் கஷ்டப்படணுமா-ன்னு!

மண்ணுலக உயிர்கள் கடைத்தேறும் பொருட்டு, பகவானே பிறக்கும் போது, தாங்களும் செல்வோமே என்ற மனப்பான்மை இல்லாமல், சற்றே தயங்கினார்கள். சரி-ன்னும் சொல்லலை! மாட்டோம்-ன்னும் சொல்லலை! இறைவன் சிரித்தான்!//

பகவானே பூலோகம் வந்திடும் போது, இவங்களுக்கு அங்கு என்ன வேலை... பகவானோடு கூட வந்துட வேண்டியது தானே....

வைகுந்தத்தைப் பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை என்று நினைத்தனரோ??!!

தமிழ் said...

//
அடியார்களாக நூறு பிறவிகளா? எதிரிகளாக மூன்றே பிறவிகளா? என்று கேட்க, பெருமானைப் பிரிந்து இருக்க மாட்டாத ஜய விஜயர்கள் எதிரிகளாகப் பிறந்தொழிந்து சீக்கிரம் வருவதையே விரும்பினார்கள்!//

பாலகர்களைக் கேட்ட பெருமான், ஏன் அவர்களை முறைப்படி வணங்காது வந்த முனிவர்களை ஏதும் கேட்கவில்லை???

பின்னாளில் ஓம் இரண்யகசிபுவே நம: என்று சொல்ல வைத்தாலும், அந்த நேரத்தில் அவர்களை ஏதும் கேட்கவில்லை பாத்திங்களா?? அது ஏன்?? ஏன்??

தமிழ் said...

//பகவானுக்கு எப்படி அசதி வரும்? விளக்குங்க தமிழ், விளக்குங்க! :)//

பகவான் மேல கண்ணேறு படும் போது, பகவானுக்கு அசதி வரக்கூடாத :-))

தமிழ் said...

//பகவானுக்கு எப்படி அசதி வரும்? விளக்குங்க தமிழ், விளக்குங்க! :)//

விளக்கம்:

என்னங்க கேயாரெஸ் இதுக்கெல்லாம் விளக்கம் கேட்கறிங்க...

பகவானுக்கு அசதி செயற்கைக்கோள் ல்ல வரும்... :-)))

தமிழ் said...

//
ஹிஹி!
பாட்டை இப்படி மாத்திப் படிக்கோனும்!

வந்து வழிவழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்!//

ஓஓஓ... செரி, செரி... இப்ப எனக்கு விளங்கிடுத்து....

BTW,

உங்க திருவிழாவில் quarter (கால்) காணாப் போயிடுத்து....

தமிழ் said...

//நல்லா விளக்கமா விளக்கி இருக்கீக இந்தப் பதிவில்! :)//

Alright, now tell me...

விளக்கோ விளக்குன்னு விளக்குனுது நானா?? நீங்களா???...

//படமெல்லாம் சூப்பரு!//

ஓஓஓ, ஊர் சுத்தினேன் சொல்லிப்புட்டு படம் பார்த்தீயளா.... என்னன்ன படம்...??? :-))

ச்ச்ச்சும்ம்மாஆஆ.... நன்றி தல!!