திருப்பல்லாண்டு பாடல் 11
இப்பாசுரத்தை இரு முறை சேவிக்க வேண்டும்!
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் *அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பல பரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.
பொருள்:
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் - தீய, கூடாத பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாத, சிறந்த திருக்கோட்டியூர் மக்களின் தலைவனான,(அல்வழக்கு - தீய பழக்கவழக்கங்கள், கோட்டியர் - திருக்கோட்டியூரில் வாழும் மக்கள், கோன் - தலைவன், மன்னன்)
அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன் - உன்னைப் பற்றிய எண்ணங்களே எப்பொழுதும் கொண்டு, உனக்குத் திருச்சேவகம் புரிந்த, மேலான செல்வநம்பியைப் போல் திருமாலே, அஞ்சனவண்ணனே! நானும் நினைவுத் தெரிந்த நாளாக உன்னையே நினைத்து உனக்கு சேவை செய்து கொண்டுவரும் பழமையான அடியவன்!(அபிமான - எண்ணம், நினைவு; துங்கன் - உயர்ந்தோன்; பழவடியேன் - பழமையான அடியவன்)
நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி - தூய எண்ணத்துடன், உள்ளன்போடு, நல்ல செயல்களினால் உன்தன் உறைவிடமாய் இருக்கும் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறி உன்தன் புனித பெயர்களையும் புகழையும் பாரெங்கும் பரவி
பலவகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே - பல வகைகளிலும் தூய்மையானவனே, உனக்குப் பல்லாண்டு கூறுவேனே! (பவித்திரன் - தூய்மையானவன்)
பதவுரை:
திருமாலவனே! தீய பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாத சிறந்த மக்களான அணிக்கோட்டியூர் மக்களின் தலைவனான செல்வநம்பி, எப்பொழுதும் உன்னைப் பற்றிய நினைவும், உனக்குச் சேவகமும் புரிந்த மேலான நம்பியினைப் போல் நானும் பிறந்தது முதல் உனக்கே என்றும் திருச்சேவை புரியும் பழமையான அடியவன்! பலவகையிலும் தூய்மையானவனே, அன்பின் வழியில் நமோ நாராயணாவென்று கூறி, உன் புனிதப் பெயர்களையும் புகழையும் உலகெங்கும் பரவச் செய்து, உனக்குப் பல்லாண்டு பாடுவேனே!
3 comments:
//அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல//
செல்வ நம்பி என்பவர் பெரியாழ்வாரின் குரு/ஆசிரியர்! திருக்கோட்டியூரர்! பாண்டியனிடம் அமைச்சராகவும் இருந்தார் என்று ஒரு குறிப்பு உண்டு! அவரைத் தான் அபிமான துங்கன் செல்வனைப் போலவே நாங்களும் அடியோம் என்று ஆழ்வார் குறிப்பதாகக் கொள்வாரும் உண்டு!
//நல் வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பல பரவி//
நாமம் பல பரவி என்று ஆயிரம் நாமங்களைக் குறிப்பால் உணர்த்தினாலும், "நாராயண" என்பது தான் அனைத்து நாமங்களுக்கும் மூலமானது என்று காட்டுகிறார்!
அதையே தான் கடைசி ஆழ்வாரான திருமங்கை மன்னனும், "நாடி நான் கண்டு கொண்டேன், நாராயணா என்னும் நாமம்" என்று முடித்து வைக்கிறார்!
//அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல//
செல்வ நம்பி என்பவர் பெரியாழ்வாரின் குரு/ஆசிரியர்! திருக்கோட்டியூரர்! பாண்டியனிடம் அமைச்சராகவும் இருந்தார் என்று ஒரு குறிப்பு உண்டு! அவரைத் தான் அபிமான துங்கன் செல்வனைப் போலவே நாங்களும் அடியோம் என்று ஆழ்வார் குறிப்பதாகக் கொள்வாரும் உண்டு!//
விளக்கங்களுக்கு நன்றி, கேயாரெஸ்!
Post a Comment