திருப்பல்லாண்டு பாடல் -12
இப்பாசுரத்தை இரு முறை சேவிக்க வேண்டும்!
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை* சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே.
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே.
பொருள்:
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை - பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்கவென்று பரிசுத்தமான இறைவனை, பரமபதத்தின் நாயகனை, (பவித்திரன் - பரிசுத்தமானவன், பரமேட்டி - பரமபதத்தில் இருக்கும் தலைவன்,மகாவிஷ்ணு)
சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் - சாரங்கம் என்னும் வில்லினை ஏந்திய இறைவன் (சாரங்கபாணி) மேல் மிகவும் விருப்புற்று, திருவில்லிபுத்தூரில் வாழும் விட்டுசித்தன் உறைத்த பல்லாண்டினை, (சார்ங்கம் - திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான வில்லின் பெயர்)
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாவென்று - மிகவும் உன்னதமானதென்று உணர்ந்து இந்த திருப்பல்லாண்டினை விருப்புற்று உரைப்பவர்கள் அனைவரும் நமோ நாராயணா என்னும் திருநாமம் பாடி (நவிலுதல் - சொல்லுதல்)
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே - பல்லாண்டு காலத்திற்கும் உடற்கூட்டினுள்ளும், அண்ட வெளியிலும் ஜீவனாய் இருக்கும் பரமாத்வான பிரானைச் சூழ்ந்திருந்து, அவனை அருகிலிருந்து வணங்கும் பேற்றினைப் பெறுவர். அத்தகைய பேரருளாளர்களுக்கும் பல்லாண்டு பாடுவோமாக!
பதவுரை:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் என்று, பரிசுத்தமானவனை, பரமபதத்தின் தலைவனை, சாரங்க வில்லினைக் கொண்ட வில்லாளனை, திருவில்லிப்புத்தூர் வாழ் விட்டுசித்தன் என்னும் பெரியாழ்வார் மிகவும் உன்னதமான அன்புடன் பாடிய இந்த திருப்பல்லாண்டு பாடல்களை மிகவும் புனிதமானது என்று உணர்ந்து, திருப்பல்லாண்டினை விருப்புற்று ஓதுபவர்கள் அனைவரும் பல்லாண்டு காலத்திற்கும் ஓம் நமோ நாராயணா என்னும் திருநாமம் பாடி, பரமாத்மாவாய் விளங்கும் இறைவன் நாராயணனினைச் சூழ்ந்து நின்று போற்றும் பாக்கியத்தினைப் பெறுவர். அத்தகைய பாக்கியம் பெற்ற பேரருளாளர்களுக்கும் பல்லாண்டு பாடுவோமாக!
ஓம் நமோ நாராயணாய!
திருமாலின் திருவடிகளே சரணம்!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
எம்பெருமான் அடியவர்கள் திருவடிகளே சரணம்!!!
திருப்பல்லாண்டு முற்றிற்று!!
ஓம் நமோ நாராயணாய!
திருமாலின் திருவடிகளே சரணம்!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
எம்பெருமான் அடியவர்கள் திருவடிகளே சரணம்!!!
9 comments:
ஆகா...
இப்படி நான் ஊர் சுற்றி வருவதற்குள் பல்லாண்டை இம்புட்டு எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் முடிச்சிட்டீங்களே!
இருங்க, "எந்தை தந்தை" பதிவில் இருந்து ஒவ்வொன்னா வாரேன்! :)
//பரமேட்டி - பரமபதத்தில் இருக்கும் தலைவன்//
பரம + ஏட்டியா?
பரமேட்டிக்கு மேலும் விளக்கம் கொடுங்க தமிழ்!
//பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்தேத்துவர் பல்லாண்டே//
இந்தப் பாசுரம் நூற்பயன் என்னும் நூலினை ஓதி உணர்வதால் விளையும் பயனைச் சொல்லும்!
இறைவனுக்கே பல்லாண்டு ஓதுவதால் என்ன பயன்? - பொன், பொருள், புகழ்???
அனைத்திலும் மேலான பரமாத்மனை
1. சூழ்ந்து = அடியவர்களோடு சூழ்ந்து
2. இருந்து = என்றென்றும் நிலைத்து இருந்து
3. ஏத்துவர் = நித்ய கைங்கர்யம் என்னும் நிலைத்த திருத் தொண்டில்..
பல்லாண்டே! பல்லாண்டே!
//பரமேட்டி - பரமபதத்தில் இருக்கும் தலைவன்//
பரம + ஏட்டியா?
பரமேட்டிக்கு மேலும் விளக்கம் கொடுங்க தமிழ்!//
பரம+ஏட்டியா?? இப்படி ஏட்டிக்குப் போட்டியா எல்லா வலைகளிலும் ஒரே கேள்வியா அடுக்குனா எப்படி கேயாரெஸ்??? :-))
ஆமாங்க, பரம+ஏட்டி ன்னு சாவிப்பலகைல்ல(keyboard)தட்டுனாத்தான் பரமேட்டின்னு வரும்!! :-))
ஆனா, பெரியாழ்வார் சொன்னது பரமேஷ்டியை.... வடமொழி எழுத்துகளைத் தவிர்ப்பதற்காகவே பெரியாழ்வார் பரமேட்டின்னு சொன்னார். இருஷிக்+ஈசனை, இருடீகேசன் ன்னு சொன்ன மாதிரி...
பரமேஷ்டி ---- பரமேட்டி - அப்படின்னா பரம் பொருள்! பரம்பொருள் ன்னு நாம சொல்லும் பொழுது, ஒவ்வொருத்தர்க்கும் அவரவர் தெய்வம் பரம்பொருளாக இருக்கும்! கண்திறவா சிசுக்களுக்கு, கருவில் சுமக்கும் தாயைப்போல....
பெரியாழ்வார் பரம்பொருள், பரமேட்டின்னு நினைச்சுப் பாடினது வைகுந்த வாசனை, அடியவர் நேசனை, அகில உலக நாயகனை, திருமகள் தேவனை, திருமாலவனை.... திருமால் அவனே பெரியாழ்வார்ப் பாடிய பரமேட்டி!!
பரமபதத்தில் இருக்கும் தலைவன் என்று சொன்னது, வைகுந்தத்தில் நடுநாயகமாகமான இறைவனைக் குறிப்பதற்காக!
இந்த வலைப்பூ ஆன்மீகத்தைப் பற்றியதாக இல்லாவிட்டாலும், நூலாசிரியரின் கருத்துகள், எண்ணங்கள், தவறாகப் பொருள் புரிந்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக, குறிப்பால் சொல்லாது, குறித்துக் கூறினேன்! மற்றபடி,
பரமேஷ்டி - பரமேட்டி - பரம்பொருள்!! இதுதான் பொருள்.
//இந்தப் பாசுரம் நூற்பயன் என்னும் நூலினை ஓதி உணர்வதால் விளையும் பயனைச் சொல்லும்!//
ஆமாம் கேயாரெஸ், திவ்யப் பிரபந்தத்தின் பாடல்கள் அனைத்தின் சாரமும் இந்த திருப்பல்லாண்டின் பன்னிரு பாடல்களுக்குள்ளே இருக்கின்றது!
அதனால் தான் இது அனைத்திற்கும் முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது.
முதல் பாடலில், இறைவனின் செவ்வடிக்குக் காப்பிட்டார் பெரியாழ்வார்!
இரண்டாம் பாடலில், முதலாவதாக அடியொமொடும் என்று அடியவர்களைக் குறித்துவிட்டு, அதன்பிறகு திருமகள், திருசக்கரம், பாஞ்ச சன்னியம் என்று வரிசையாகப் பாடியுள்ளார்!
அதன்பிறகு இறைவனையே வேண்டும் அன்பர்களைப் பல்லாண்டு பாட அழைக்கிறார்!
அதோடு நின்றுவிடாது, தான் யார் என்பதை அறிந்துணர்ந்து, அந்த ஞானநிலையிலேயே இன்பம் கண்டு இருந்துவிடாது, அதற்கும் அடுத்த மேற்படியான இறைவனின் பரமபத நிலையை அடைவதற்காகவும்,
இறைவனையும் அறியாது, தன்னையும் உணராது, அறியாமை இருளில் வெறும் பொருள் தேடி அலையும் அடியவர்களையும் கூழாட்பட்டு நின்றவர்களை முதலில் தவிர்ந்தாலும், அதன்பிறகு, பண்டைக் குலத்தைத் தவிர்ந்து, அண்டக்குலத்து அதிபதியின் அடிசேர அழைக்கிறார், பெரியாழ்வார்!
அடியவர், திருமகள், திருச்சக்கரம், திருசங்கு என அனைவரையும் இறைவனோடு சேர்த்துக் குறிப்பிட்ட ஆழ்வார், கருடாழ்வாரைப் பற்றி ஏன் இங்கு ஏதும் குறிப்பிடவில்லை??!!
தெரிந்தவர்கள் விளக்குங்களேன்...
//இறைவனுக்கே பல்லாண்டு ஓதுவதால் என்ன பயன்? - பொன், பொருள், புகழ்???//
பொன்னும் பொருளும் மண்ணுள் போகும் தேகத்திற்கேயன்றி, ஆன்மாவிற்குத் தேவையில்லாதன.
ஆன்மாவிற்குத் தேவையானவை எல்லாம், பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்குத் தெப்பமான இறைவனடியே!!
யாண்டும் இடும்பையின்றி ஆன்மா வாழ வேண்டுமானால், அது வேண்டுதல் வேண்டாமை இலாத இறைவனடி சேரவேண்டும்!!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியேயானாலும், கண்மூடியாய் ஒன்றை அடைவதைவிட, தேடி தேடிக் கிடைப்பது பேரின்பமானது!!
இறைவனுக்கேப் பல்லாண்டு ஓதுவதன் பயன், நீக்கமற நிறைந்தவனை விட்டு என்றும் நீங்காதிருந்து அவனுக்கு சேவை செய்து,வைகுந்தத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்காகத்தான்!!
//பரமேஷ்டி - பரமேட்டி - பரம்பொருள்!! இதுதான் பொருள்.//
தமிழ்,
பரமேட்டி என்பது தமிழ் வார்த்தை தான் என்று அதற்கு ஏதேனும் ஒரு விளக்கம் தந்துவிடுவீர்களோ என்று
நினைத்து ஒரு வித ஆவலுடன் கீழே வந்து பார்த்தேன்.
உண்மையில் நான் பல நாட்களாக பாசுரங்களை இணையத்தில் இடுவதற்கு சரியான துணை நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்தேன். தெய்வாதீனமாக (நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் மூலமாக) உங்கள் பதிவினை அறிய நேர்ந்தது. தங்கள் குழுவில் இன்னொரு நபருக்கு இடம் உண்டா ?
அப்படி உள்ளது எனில் ஒரு புது நபர் நுழைவதற்கு தகுதிகள், வரைமுறைகள் உண்டா? அவ்வாறு இருப்பின் அவற்றை அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். தங்களுக்கு வசதி படும் நேரத்தில் இந்த பின்னூட்டம் தங்களுக்கு எந்த முகவரியில் இருந்து மின்னஞ்சல் செய்யப் படுகிறதோ அந்த முகவரிக்கு மறுமொழி அளிக்குமாறு வேண்டுகிறேன்.
~
நன்றி,
ராதா
தமிழ்,
நீங்க சென்னை வாசி என்று தவறாக நினைத்து கேட்டு விட்டேன். மன்னிக்கவும். இது சற்றே கடினமான காரியம். நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கும். நான் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று கண்ணன் திருவுள்ளம் போல.
Again sorry for the trouble.
~
Radha
Post a Comment