Sunday, October 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 3
எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ

பொருள்:

எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு -
அழகிய மார்பினை உடைய எங்கள் தலைவனுக்கு

தம்பிரான் - தலைவன்

தாமரைத் தாளர்க்கு இந்திரன் தானும் - தாமரை மலர் போன்ற குளிர்ந்த திருவடிகள் கொண்டவனுக்கு கொண்டவனுக்கு இந்திரன் தானும்

சந்தம் அழகிய எழிலுடைக் கிண்கிணி - இனிய இசையை எழுப்பும் கொலுசினை

கிண்கிணி - கொலுசு, சதங்கை (அப்ப கிலு,கிலுப்பு கிடையாதா)

தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ - உனக்குத் தந்து உன்னருகில் நிற்கின்றான். தாமரைக் கண்கள் கொண்டவனே உனக்குத் தாலேலோ

பதவுரை:

ஒருநிறைத் தலைவர்கள் கண்ணனுக்கு பரிசு தந்தாகி விட்டது. இந்திரனும் தன் பங்குக்கு திருவடிகளுக்கு கொலுசு தருகிறானாம். என்ன இருந்தாலும் அசுரர் எழுச்சி கண்ட போதெல்லாம் அடைகலம் அடைந்தது திருமாலின் திருவடிகள் தானே. அந்த நன்றி உணர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமல்லாது கூடவே இருந்து பணிவிடை வேறு செய்வானாம். எனவே அடியார்களுக்கு மலர் போன்று இரங்கிய கண்கள் கொண்டவனே உன்னைத் தாலாட்டுகிறேன்.

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கிண்கிணி - கொலுசு, சதங்கை (அப்ப கிலு,கிலுப்பு கிடையாதா)//

ஹிஹி! கிலுகிலுப்பை அப்பவே கண்டு புடிச்சிட்டாய்ங்களே!

கிண்கிணி என்பது ஒரு வகை மணி!
அதுவே சதங்கை, கொலுசு ஆகி விடாது!

மூடிய தாமரை மொட்டு போல இருக்கும் மணிக்குள், உருளை போல் ஒரு குந்துமணி போட்டு, ஒலி எழுப்புவது கிண்கிணி!

கிண்கிணி என்பது கொலுசிலோ சலங்கையிலோ கட்டப்படும் மணி! சில சமயம் கை வளையிலும் கூடக் கட்டப்படும்! குச்சியில் கட்டி கிலுகிலுப்பை போலவும் பயன்படுத்திக்கலாம்!

தண்டை அணி வெண்டையும்
கிண் கிணி சதங்கையும்
தன் கழல் சிலம்புடன் கொஞ்சவே
-ன்னு முருகப் பெருமான் திருப்புகழ்!

கிண்கிணி வாய்ச் செய்தானைத் தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ? என்று தோழி திருப்பாவையில் கேட்பாள்!

அதாச்சும் கிண்கிணியைப் போல் பாதி திறந்தும் திறவாத தாமரை மொட்டுக் கண்களைக் கொஞ்சமா கொஞ்சமா விரிச்சி விரிச்சி எங்களப் பாரு-ன்னு பாடுகிறாள்!

கிண்கிணி படத்டோடு, விளக்கமும் இங்கே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எந்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு//

இதுலயே என்னமா சந்தமும் வந்துருச்சி! அருமை!

//அசுரர் எழுச்சி கண்ட போதெல்லாம் அடைகலம் அடைந்தது திருமாலின் திருவடிகள் தானே//

அதே திருவடிகள் தான் அசுரர்களையும் ஆட்கொண்டது! மாவலியை ஆட்கொண்டது! பிரகலாதனை ஆட்கொண்டது! வீடணனை ஆட்கொண்டது!

திருவடிகளுக்கு தேவாசுர பேதங்களே கிடையாது! சந்தம் அழகிய தாமரைத் தாள்!

குமரன் (Kumaran) said...

எம் தம்பிரானார் எழில் திரு மார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக் கண்ணனே தாலேலோ

ஆகா - அருமையாக இருக்கிறது. எம் தம்பிரானார் என்றாலும் சரி; எந்தன் பிரானார் என்றாலும் சரி தான். எழில் மார்வர்க்கு என்றாலும் சரி; திருமார்வர்க்கும் என்றாலும் சரி தான். சந்தம் அழகிய தாமரைத் தாள் என்றாலும் சரி; சந்தம் அழகிய எழில் உடைக் கிண்கிணி என்றாலும் சரி தான். தன் பணிவு தோன்ற அவன் என்று சொல்லும் படி விலகி நிற்காமலும் இவன் என்று சொல்லும்படி அணைந்து நிற்காமலும் உவன் என்று சொல்லும் படி நடுவில் நிற்கிறான் இந்திரன் என்றாலும் சரி; உவந்து நிற்கிறான் என்று சொன்னாலும் சரி தான்.

தாமரைத் தாள்களுக்குக் கிண்கிணி தந்த போது அக்கிண்கிணி அவனுடைய தாமரைக்கண்களை ஒத்திருந்ததால் அவற்றையும் இந்திரன் கண்டு பாடுகிறான் போலும்.

முகவை மைந்தன் said...

@ரவி
கொள்ளலாமே, நீங்களும் கவனிச்சிங்களா! அருமையான ஓசை நயம்.

@குமரன்
குமரன், பெருமாள் பேரச்சொன்னா நல்லாத் தலை ஆட்டுவீங்க போல இருக்கே. உணர்வுல ஒன்றிட்டா வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதனால தான் இறை அடியார்களுக்கு துன்பமே இல்லை போல.