Sunday, October 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

பாடல் 5
எழிலார் திருமார்புக்(கு) ஏற்கும் இவையென்(று)
அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ

பொருள்:

எழிலார் திருமார்புக்(கு) ஏற்கும் இவையென்(று) - வடிவான உன் மார்புக்கு ஏற்றவை என்று

அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு - அழகிய ஐந்தாயுதத்தை (பெருமாளின் அடையாளங்களான சங்கு, எஃகம், வாள், தண்டு, வில் ஆகியவையே ஐந்தாயுதம்) அருமையான சங்கிலியில் கோர்த்துக் கொணர்ந்த

ஆரம் - முத்து/மணி கோர்த்த கழுத்தணி

வழுவில் கொடையான் வயிச்சி ரவணன் - குற்றமற்ற கொடையாளனான குபேரன்

வழு - குற்றம்
வழு + இல் - வழுவில்

தொழு(து)உவ னாய்நின்றான் தாலேலோ தூமணி வண்ணனே தாலேலோ - உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கின்றான் தூய மணியின் நிறங்கொண்டவனே கண்ணுறங்கு


பதவுரை:

உன்னுடைய அடையாளங்களான ஐந்தாயுதம் பொருத்திய சங்கிலியை எழில் நிறைந்த மார்புக்குச் சூட்டுவதற்காக கொண்டு வந்த குற்றமில்லாத கொடையாளனான குபேரன் உன்னைத் தொழுது உன் அருகிலேயே நிற்கிறான். தூய மணியின் நீல வண்ணம் கொண்டவனே கண்ணுறங்கு.

14 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட
பிரமன், சிவபெருமான், இந்திரன், அமரர்கள்-ன்னு வரீசையாய்ச் சொல்லிட்டு, இன்னிக்கி குபேரனா? இப்படி ஆளாளு Gift கொடுத்துக்கிட்டே இருந்தா நான் கூட கோகுலத்தில் பிறந்து இருப்பேனே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முன்பே சொன்னது போல், எம்பெருமானுக்குத் தேவாசுர பேதங்கள் கிடையாது! குபேரன் அசுர குலம் தான்! ஆனால் சிறந்த பக்தி பூண்ட கொடையாளன்!

இறைவன் முகம் பார்க்கும் கண்ணாடி போலத் தான்! - தேவன்/அசுரன் என்ற பேதம் கண்ணாடிக்குக் கிடையாது! நாம் எதை அணிந்து கண்ணாடியில் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான் இறைவன்!

இந்திரனின் பிள்ளை ஜெயந்தன்! குலத்தால் தேவன்! சீதையிடம் இழிவாக நடக்கப் போய் தலை குனிந்தான்! இன்றும் அவனைத் தேவன்-ன்னு சொல்வதில்லை! "காகாசுரன்" என்று அசுரன் என்றே சொல்கிறார்கள்!

பிரகலாதன் அசுரன் தான்! ஆனால் அவனை அசுரன் என்று யாரும் சொல்வதில்லை! பிரகலாத ஆழ்வான் என்றே போற்றுகிறார்கள்! பக்த பரம்பரையைச் சொல்லும் போது வியாசர், வசிஷ்டர் இவர்களுக்கும் முன்னாலேயே, முதலில் பிரகலாதன் பேரைச் சொல்லி விட்டுத் தான், இவர்கள் பேரையே சொல்கிறார்கள்!

அந்த அடிப்படையில் இந்தப் பாட்டு, குபேரன் என்னும் அசுரன் அளித்த காணிக்கையாக, தேவ-அசுரர் என்று பாகுபாடு இன்றி, பெருமானிடம் அன்பு கொள்வதையே காட்டுகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அழகிய ஐந்தாயுதத்தை (பெருமாளின் அடையாளங்களான சங்கு, எஃகம், வாள், தண்டு, வில் ஆகியவையே ஐந்தாயுதம்) //

எஃகம் என்றால் என்ன முகவை மைந்தன்? சக்கரமா?
இது போல் வேறெங்கும் புழங்குகிறதா என்று அறியத் தாருங்களேன்!

1. சக்கரம் = சுதர்சனம்
2. சங்கு = பாஞ்சசன்னியம்
3. வாள் = நந்தகம்
4. தண்டு (கதை) = கெளமோதகி
5. வில் = சாரங்கம்
இவையே அதனதன் பெயர்கள்!

அங்கையில் நேமி, சங்கு, வாள், தண்டோ(டு)
அடல் சராசனமும் தரித்தோன்-ன்னு பாடல், இதற்கு Memory Tip போல உதவும்! :)

Radha said...

உவன் என்பதற்கு அருகில் நிற்பவன் என்று பொருளா?
இவன், உவன் இரண்டும் ஒரே பொருள் தரும் பதங்களா? இல்லை வித்தியாசம் இருக்கிறதா?

முகவை மைந்தன் said...

@KRS
எஃகம்ன்ற சொல்லுக்கு இரும்பாலான கூரிய ஆயுதம்னு தான் பெரும்பாலான இடங்கள்ல பொருள் காட்டி இருக்காங்க. ஆனா, வட்டு என்ற பொருளும் இருக்கு. சக்கரம்னு பொருள் கொள்றதை விட உருக்கல் ஆன கூர்மையான (பல் உடைய) வட்டுன்னு எடுத்துக் கொள்வது இன்னும் சிறப்பாப் பட்டது.

@Radha
உவன் என்பது இருவர் உரையாடலில் எதிர் இருப்பவரின் அருகில் இருப்பவரைக் குறிப்பது. தோலைபேசி உரையாடலில் எதிர் முனையில் இருப்பவரின் அருகில் இருப்பவரை உவன் என்று சுட்டலாம். ஈழ வழக்கில் இன்னும் பயன்பாட்டில் இந்த சொல் இருக்கிறது.

சுணக்கத்திற்கு மன்னிக்கணும்.

முகவை மைந்தன் said...

குபேரன் பற்றிய தகவலுக்கு நன்றி இரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராதா
முகவை சொன்னதற்கே சற்றே மேலதிகமாக...

உவன்! = தமிழ் மொழியில் உள்ள அழகான ஒரு சொல்!

ஆங்கிலத்தில் பார்த்தீங்க-ன்னா ஒருத்தன் தொலைவில் இருந்தாலும் He தான்! கிட்டக்க இருந்தாலும் He தான்! ஆனால்...
"அ"வன் = தொலைவில் இருப்பவன்
"இ"வன் = அண்மையில் இருப்பவன்
"உ"வன் = இதற்கு இடையில் இருப்பவன்! கிட்டக்கவும் இல்ல! தூரமும் இல்ல! ஆனால் முன்னிலை - முன்னாலேயே இருக்கான் :)

அதாச்சும்...
1st Person = தன்மை
2nd Person = முன்னிலை
3rd Person = படர்க்கையில்...உவன் என்பது முன்னிலை படர்க்கைச் சுட்டு!

எடுத்துக்காட்டாச் சொல்லட்டுமா?
நானும் முகவையும் சிங்கையில் நேரில் பார்த்துக் கொள்ளும் போது,
* நீங்களும் கிட்டக்கவே இருந்தா உங்களை "இவன்"-ன்னு சொல்லுவோம்!
* நீங்க சென்னையில் இருந்தா, உங்களை "அவன்"-ன்னு சொல்லுவோம்!
* நீங்களும் கிட்டக்க தான் இருக்கீக, ஆனா எங்க ரெண்டு பேருக்கும் chicken vindaloo வாங்கியார counter-க்கு போயிருக்கீங்க-ன்னா, அப்போ நீங்க = உவன்! :)

ராதா சான்ஸே இல்லடா! நல்லவன்-டா! நமக்காக உவனே ஆர்டர் வாங்கியாரப் போயிருக்கான்! உவனே பில்லும் கட்டீருவான்! :))
அதான் "உவன்" ரகசியம்!

நம்மாழ்வாரும் "உவன்"-ன்னு பல முறை சொல்லுவாரே!

இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்,
அவையும் அவரும் தன் னுள்ளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்!

அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்,
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சுழலுள் ளானே

Radha said...

Thanks for the long explanation Ravi.
பாசுரத்திற்க்கும் நன்றி. ஆனால் non-veg items-க்கு எல்லாம் பில் நான் கட்ட மாட்டேன். :)

குமரன் (Kumaran) said...

குபேரன் அசுர குலமா? யட்சன் என்று நினைத்தேனே?!

உவன் என்றால் அருகிலும் இல்லாமல் விலகியும் இல்லாமல் நடுவில் இருப்பவன். முன்பு இந்திரனும் உவனாய் நின்றான்; இப்போது குபேரன் உவனாய் நிற்கிறான். :-)

முகவை மைந்தன் said...

இங்க நடந்த கந்த புராணச் ணொற்பொழிவுல குபேரன் இராவணின் தம்பின்னும், அவனை அடிச்சுத் துரத்திட்டு இலங்கையில் இராவணன் அரசாண்டான்னும் சொன்னாங்க. நம்ம இரவி சொன்னதை இ(நி)ணைச்சுப் பாத்தேன்.

முனைவர் ச.இரமேஷ் said...

அஇஉ அம்மூன்றும் சுட்டே என்கிறது தொல்காப்பியம்,உது என்பது நடுவே உள்ளது,சப்பானிய மொழியிலும் இந்த உவன் என்ற சுட்டு உள்ளதாக பொற்கோ கூறியுள்ளார்.

முகவை மைந்தன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவரே!

Mahadevan said...

Test

Mahadevan said...

Strange person reading pasurams and giving explanation ordering non veg..is he lost on the way?