Sunday, May 15, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 2

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல*
நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக*
அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்*
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ.

பொருள்:

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல - சிவந்த அந்தி நேர வானத்தில் இருக்கும் பிறைநிலவானது, நமக்கு அது மரக்கிளையில் நுனிக்கொம்பின் இடையில் இருப்பது போல் தோன்றும்.

அந்த காலத்துல, மரங்கள் அடர்ந்து இயற்கை வளம் மிகுந்திருந்தது. அதனால மரக்கிளையின் உச்சியில் னு பாடிருக்காங்க. இப்போ பாடினா, அந்த தண்ணிடேங்க் மேல, இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில, செல்போன் டவர் உச்சியில ன்னு பாடிருப்பாங்க. என்னத்த சொல்ல. சரி டாபிக் மாற வேணாம். பாட்டுக்கு வருவோம்.

இன்னும் முழுதாக இருட்டவும் இல்லை. சூரியன் இல்லாத செங்கிரணங்களின் ஒளியில், கீழ்வானில் தோன்றும் பிறைநிலவைப் போன்று, அந்த பிறை நிலவை எந்த கோணத்தில பார்க்கிறாங்கன்னா, சமவெளிப் பகுதியிலோ, கடல்தாயின் மடியிலோ அல்ல. ஒரு மரக்கிளையின் நுனிப்பகுதியில், அதன் கிளைகளுக்கிடையில்! இந்த அழகிய, ரம்மியமான காட்சியை ஒத்திருந்தது எது?
(செக்கர் - சிவந்த(செவ்வானம்))

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண்பல் முளையிலக - குட்டிக்கண்ணனின், மலர் விரிவதைப் போன்று இதமாய், இனிமையாய் சிரித்த சிவந்த வாயின் வீங்கிய ஈறில் புதிதாக முளைத்து எட்டிப்பார்க்கும் குளிர்ந்த பால் வெண்பற்கள் விளங்க

வாய்த்திண்ணை: அது என்ன வாயா இல்ல கால்வாயா? திண்ணை, மேடை எல்லாம் வெக்கிறதுக்கு ன்னு கேக்காதீங்க. :-)) குழந்தைகளுக்குப் பல் முளைவிட்டு வெளில வரும்பொழுது ஈறுப்பகுதி சிவந்து, கொஞ்சம் சுரந்துப் போய் இருக்கும்(வீங்கினாப் போல). அதத்தான் வாய்த்திண்ணை ன்னு சொல்லிருக்கார் பெரியாழ்வார்.

துவர் - சிவப்பு; துவரம்பருப்பு - துவரம் பருப்பு தோல் சிவப்பா இருக்கும். சிவந்த தோல் உடையதால துவரம்பருப்பு; அதே மாதிரிதான் பச்சைப்பயறு(பாசிப்பருப்பு)

நளிர் - குளிர்; பேச்சுவழக்கில இருக்குற வார்த்தை. தண்ணியில அதிக நேரம் பிள்ளைங்க விளையாடினாக்க, "தண்ணில ரொம்ப நேரம் இருக்காதீங்க, நளிர் எடுக்கும், காய்ச்சல் வந்துடும்" னு சொல்வாங்க. கேட்டுருக்கீங்களா?
(நக்க - நகைக்க, சிரித்த; செந்துவர் - செக்கச் சிவந்த; துவர் - சிவப்பு; வாய்த்திண்ணை - வீங்கிய ஈறு; நளிர் - குளிர்)

அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் - இடையில் சங்குமணிகள் கோர்த்த அரைஞாண் கயிறும், மார்பில் பொன்னாலான ஆபரணமும் அணிந்து, அனந்தன் அணை மேல் அறிதுயில் புரிபவனான எம் பிரான்

ஆமைத்தாலின்னா, அகன்ற பெரிய பதக்கமுடைய ஹாரத்தை சொல்றாங்களோ, தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.
(அக்கு-சங்குமணி)

தக்க மாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ - தரமான நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் புதல்வனே தளர்நடை நடவாயோ!

ஒப்புமை:
செக்கர்வானம் -செந்துவர் வாய்
நுனிக்கொம்பு -வாய்த்திண்ணை
சிறுபிறை -நளிர்வெண்பல்

பதவுரை:
மயங்கும் மாலைப்பொழுதில் மரக்கிளையின் நுனிக்கொம்புகளுக்கிடையில் தோன்றி மின்னும் பிறைநிலவைப் போல புன்சிரிப்பு தவழும் உன் பவழவாயில், சுரந்து சிவந்திருக்கும் ஈறில் முளைத்துவரும் பால்வெண் பற்கள் ஒளிவீச, சிற்றிடையில் கலகலக்கும் சங்குமணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண் கயிறும், மார்பில் ஒளிரும் பொன்ஆபரணமும் அணிந்து, பாற்கடலில் அனந்தன் என்னும் பாம்பணையில் அறிதுயில் புரியும் என்பிரானே! தேர்ந்த நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் மைந்தனே தளர்நடை நடவாயோ!

12 comments:

தமிழ் said...

மே 12, அன்று பதிவேற்றிய இந்த பாடல், பிளாக்கரில் காணாமல் போய்விட்டது.

ஊருக்குப் புறப்படும் சமயத்தில், அதை மீண்டும் எழுத நேரமில்லை என்ன செய்ய என்று எண்ணியிருந்த போது, அண்ணன் கேயாரெஸ் அவர்கள் தேடி மீட்டுத் தந்துள்ளார்.

அவருடைய மிகப்பெரிய உதவியினால், அவர் மின்னஞ்சலில் இருந்து நகல் எடுத்து ஒட்டியிருக்கிறேன். கேயாரெஸ் அவர்களுக்கு நம்முடைய மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க மிக்க நன்றி, கேயாரெஸ்!
-தமிழ்

தமிழ் said...

நரசிம்மரின் நாலாயிரம்:

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல*
நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக*

அடா அடா அடா! என்னாமா கவிதை ஊத்துது கண்ணன் மேலே. எப்படி இதெல்லாம் :)
--------------------------------

அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் - இடையில் சங்குமணிகள் கோர்த்த அரைஞாண் கயிறும், மார்பில் பொன்னாலான ஆபரணமும் அணிந்து, அனந்தன் அணை மேல் அறிதுயில் புரிபவனான எம் பிரான்
இப்போ கூட சில பசங்க
தங்கத்துல மீன் போலவே செஞ்சு கழுத்துல
மீன் தாலி மாட்டிக்கிட்டு பந்தா பண்றாங்க

ஆமை தாலின்னா
பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்தாருள்ள அதே போல ஆமை வடிவத்தில் செய்ய பட்ட ஆபரணம்
:)
-----------------------------------

superb Explanation
thanks:)

தமிழ் said...

கேயாரெஸ்:

//செக்கரிடை நுனிக்கொம்பில்//

பேரே நல்லா இருக்கு-ல்ல?
என்னமா தமிழ் கொஞ்சுகிறது பெரியாழ்வாரின் சொல்லாட்சியில்...

வானம் செவப்பா இருக்கும் போது எப்படி நிலா தெரியும்? :)
பெரியாழ்வார் சும்மானா அடிச்சி விடறாரா? இல்லீனா தமிழரசன் அடிச்சி விடறாரா? :))

தமிழ் said...

கேயாரெஸ்:

மாலை நேரச் செக்கர் வானத்தில், நிலா ரொம்ப மெல்லீசாத் தெரியும்! பளீர் வெண்மை இருக்காது! அது போல இருக்காம் கண்ணன் பல்லு! முளைப் பல்லு பார்த்து இருக்கீங்க-ல்ல? பளீர் வெண்மை இருக்காது! கொஞ்சம் டல்லாத் தான் இருக்கும்! அது மாதிரி!

பெரியாழ்வார்/தமிழரசன் ரெண்டு பேரும் எம்புட்டு நுணுக்கமாப் பார்த்து இருந்தாங்க-ன்னா, இந்த உவமையைச் சொல்லுவாங்க! ஆகா!

இனியது கேட்கின் தனி நெடு வேலோய்,
இனிது இனிது, தமிழே இனிது!
----------------------------------

* கரும்பச்சை மரம் = கண்ணன் மேனி
* அதன் விரிந்த உச்சிக் கிளை = கண்ணன் விரிஞ்ச வாய்
* செக்கர் வானம் = வாயுள்ளே இருக்கும் ஈறு,நாக்கு
* மங்கலான நிலா = புது முளைப் பல்லு

இப்போ பெரியாழ்வார் வரையும் ஓவியம் தெரியுதா?
அதான் இந்தச் "செக்கரிடை நுனிக்கொம்பில்" பாசுரத்தின் சிறப்பு!
---------------------------------

//வாய்த்திண்ணை//

இதுவும் அழகான சொல்லாட்சி! இன்னிக்கி வாயாலேயே முழம் போடும் அரசியல்வாதிகள், திண்ணைப் பேச்சு/வெட்டிப் பேச்சு பேசறவங்க வாயை, வாய்த் திண்ணை-ன்னு சொல்லலாம்! :)

திண்ணை எப்பவுமே வீட்டுக்கு வெளியே, ஆனா வீட்டுக்கு உள்ள தான் இருக்கும்! :)
அதாச்சும் கொல்லை, கூடம், ரேழி, கதவு, அப்பறமா திண்ணை! கதவை மூடினாலும் திண்ணை தொறந்தே தான் இருக்கும்!
அதே போல நாக்கை மூடினாலும் (உள் அடக்கினாலும்), ஈறு எல்லாம் தொறந்தே தான் இருக்கு! சின்னக் குழந்தை-ல்ல? அதான் மேடாத் தெரியுது! பார்த்தாரு பெரியாழ்வார்! வாய்த் திண்ணை-ன்னே பாடிட்டாரு! :))
------------------------------

//(அக்கு-சங்குமணி)//

அப்படியா?
அப்போ "அக்கு" வேறு ஆணி வேறு-ன்னு சொல்றோமே, அப்படின்னா என்ன?
---------------------------------

//ஆமைத்தாலின்னா, அகன்ற பெரிய பதக்கமுடைய ஹாரத்தை சொல்றாங்களோ, தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்//

நீங்க ஆமை வடை சுட்டு, எனக்குத் தாங்க! நான் ஆமைத் தாலி பற்றிச் சொல்றேன்! :)
தாலி பெண்ணடிமைத்தனம் அல்ல! அன்று ஆண் பிள்ளைக்கும் தாலி உண்டு! பாசுரங்களில் நிறைய வரும்! மீதி பதில், நீங்க தரும் வடையைப் பொறுத்து! :)

தமிழ் said...

@நரசிம்மரின் நாலாயிரம்....

ஆமாங்க குட்டிக் கண்ணனோட கள்ளிருக்கும் கண்களப் பார்த்தா, மனசுத் துள்ளிக் குதிச்சுடுது நம்ம பெரியாழ்வாருக்கு. அது அப்படியே பாட்டா வந்துடுது. ரொம்ப இரசனையுள்ளவர்!

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

ஆமைத்தாலில்ல, டாலர் மட்டும் ஆமை வடிவத்துல இருக்குமா... இல்ல காசு மாலை மாதிரி குட்டி குட்டி ஆமையாக் கோத்து மாலை போல போட்டுருப்பாங்களா?#டவுட் :-)

தமிழ் said...

@கேயாரெஸ்...

பெரியாழ்வார், உள்ளத்தில் குட்டிக் கண்ணனக் கொஞ்சுறாரு. அதுவே அவர் பாட்டுல, கொஞ்சும் தமிழா பக்தர்கள் நெஞ்சத் தொடுது.

வானத்துல, கார்மேகம் சூழ்ந்து கருத்திருந்தா மட்டும் தான் நிலா தெரியாது. மற்றபடி பகல்ல கூட நிலா தெரியும். ஆனா நிலா வெளிச்சம் தான் தெரியாது.

ஏன்னா, நிலாவே சூரியன்ட்ட இருந்து வெளிச்சத்த கடன் வாங்கித்தான், இந்த பூமி மேல வாரி இறைக்குது.

சாயங்கால நேரத்துல, சூரியன் மேற்கப் போனப்புறம் கிழக்கப் பாருங்க ஒரு வெளிச்சமில்லாத வட்டமா நிலா தெரியும்.

தமிழ் said...

@கேயாரெஸ்...

அதான் அருமையா சொல்லிட்டீங்களே, அப்புறமும் எதுக்குத் தெரியாத மாதிரியே கேக்குறீங்க.

நுணுக்கமாக் கவனிச்சது பெரியாழ்வார். அவர் சொன்னத நான் அப்படியே காப்பி அடிச்சு சொல்றேன். அவ்ளோதான்.

தமிழ் said...

@கேயாரெஸ்...

தமிழில் எப்போமே, நெறைய வார்த்தைகள் அதனோடு இணைந்து வருகிற அக்கம் பக்கத்து வார்த்தைகள், பாடலின் பொருள் போன்றவைக்கேற்ப அந்த வார்த்தைகளின் அர்த்தம் வேறுபடும்.

அக்கு வேறு ஆணி வேறு ன்னா, சுத்தமா பிரிச்சு ஆராய்ஞ்சுடுறது ன்னு அர்த்தம்.

ஆமைத்தாலிக்கும் பெண்ணடிமைத்தனத்துக்கும் என்ன சம்மந்தம்??

Narasimmarin Naalaayiram said...

டாலர் மட்டும் ஆமை வடிவத்துல இருக்குமா... இல்ல காசு மாலை மாதிரி குட்டி குட்டி ஆமையாக் கோத்து மாலை போல போட்டுருப்பாங்களா?#டவுட் :-)


சிங்கிளா இருந்தாதான் ரொம்ப நல்லா இருக்கும்
கண்ணனுக்கு
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதான் அருமையா சொல்லிட்டீங்களே, அப்புறமும் எதுக்குத் தெரியாத மாதிரியே கேக்குறீங்க//

நமக்குத் தெரிந்திருந்தாலும் அதைச் சொல்வதைக் காட்டிலும்,
இன்ன பிற அடியவர்களைத் திளைத்துத் தேடிச் சொல்ல வைப்பது என்பதே குணானுபவம்! அதுவே பெருமாள் உள்ளத்துக்கு உகப்பானது!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரி, விளையாட்டு போதும்! இனி விளக்கங்கள்!

அக்கு=எலும்பு!
ஆணி=சதை,தோல், உடம்பு!

அக்கு வேற, ஆணி வேற-ன்னா=?

எலும்பில் சதை ஒட்டிக்கிட்டு தான் இருக்கும்! என்ன பிரிச்சாலும், கொஞ்சூண்டு சதையாச்சும் ஒட்டிக்கிட்டு இருக்கும்! ஆட்டுக் கறி சாப்பிடறவங்களுக்குத் தெரியும்:)

அதே தான்! அக்கு வேறு ஆணி வேறு-ன்னு பிரிப்பது ரொம்பக் கடினம்! அதைச் செய்ய வல்ல திறமையாளர்களைத் தான், அக்கு வேறு ஆணி வேறு-ன்னு பிரிச்சி மேய்ஞ்சிட்டான்-ப்பா என்று சொல்லுகிறோம்!

அக்கு=எலும்பு! ஏதோவொரு விலங்கின் (புலிப் பல், யானைத் தந்தம்) எலும்பால் செய்த வடம்! அக்கு வடம்! சங்கு வடம் என்றும் கொள்ளலாம்! தட்டில்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நீங்க இங்க பேசிக்கிட்டா மாதிரி...
ஆமைத் தாலி = குட்டிக் குட்டியா பல ஆமைகள் உருவம் பொறிச்ச தாலி எல்லாம் இல்ல! :))

அக்காலத்தில் ஆண்களும் தாலி அணிவது உண்டு!
அதான் பெண்ணடிமைத்தனம் அல்ல என்று குறிப்பிட்டேன்!

தாலம் = பனை ஓலை! காதோலை,கருகமணி இன்னும் நாட்டுப்புறத் தெய்வங்களுக்குச் சார்த்துவார்கள்!
பெண் பனையின் ஓலை=தாலில் மஞ்சள் பூசி அணிவதே தாலி!

ஐம்படைத் தாலி = சங்கு சக்கரம் முதலான ஐம்படை உருவம் கோர்த்துக் கட்டிய தாலியை, பிள்ளைகளுக்கு அணிவிப்பது பழக்கம்!
மாமைத் தாலி = மாங்காய் உருவம் பொறித்த பொன் தாலியையும் பிள்ளைகளுக்கு அணிவிப்பது வழக்கம்! (காசுமாலை, மாங்காய் மாலை போல)
மாமை = மஞ்சள், மா என்று நிறம் குறிக்க வந்த வேர்ச்சொல்!

இந்த மாமை தான்...திரிந்து ஆமை ஆகியது!
கண்ணன் மா(ஆ)மைத் தாலி அணிந்துள்ளான்! அதையே ஆழ்வாரும் குறிப்பிடுகிறார்!