Thursday, September 16, 2010

பெரியாழ்வார் திருமொழி 1 - 6 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
ஆறாம் திருமொழி - மாணிக்கக் கிண்கிணி

சப்பாணிப் பருவம் - கைக்கொட்டி ஆடும் பருவம்

(வெண்டளையால் வந்த கலித்தாழிசை)

பாடல் 1

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல்*

ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன்னுடைமணி*

பேணிப் பவளவாய் முத்திலங்க* பண்டு

காணிகொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி.

பொருள்:

மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல் -
சிவந்த மாணிக்கக் கல் பொருத்திய கிண்கிணி இனிய ஒலி எழுப்ப இடுப்பின் மேல்

கிண்கிணிக்கு இங்க பாருங்க
ஆர்ப்ப - ஒலி எழுப்ப
மருங்கு - இடுப்பு

ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் உடைமணி - சிறந்த பொன்னால் ஆன அரைஞான் கயிற்றில் ஆய்ந்து எடுத்த பொன்மணிகள் அணிந்தவனே
இப்படி இடுப்புல அணியும் அணிகலனுக்கு ஒரு தனிப் பெயர் இருக்கு. கண்டுபிடிங்க ;-)
ஆணிப்பொன் - பொன் வகைகளில் சிறந்தது.
ஆய்பொன்உடைமணி - ஆராய்ந்து தேர்ந்த பொன்னாலான மணி

பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு - பவளம் போல் சிவந்த வாயில் முத்தொத்த பற்கள் விளங்க, முன்பு

காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே சப்பாணி -(மாவலியிடமிருந்து)நிலத்தை இரந்து பெற்ற கைகளால் சப்பாணி கொட்டேன்! கரிய குழல்களைக் கொண்ட பிள்ளையே சப்பாணி கொட்டு!!

பதவுரை/விளக்கவுரை:

சப்பாணின்னா கைகளைக் கொட்டி விளையாடுவது. பிள்ளைய சப்பாணி கொட்டக் கூப்பிடணும். வெறும் கைகளால் கொட்டுன்னு கூப்பிட்டா குழந்தை கொட்டுமா? கைகளின் சிறப்புகளைத் தேடுறாரு. ஆககாகா, இந்தக் கைகளால தானே முன்னாடி மாவலி அரசன்ட்ட இருந்து இந்த நிலம் முழுதும் வேணும்னு இரந்து வாங்குனான்னுட்டு பிள்ளையக் கூப்பிட்டுத் தூக்குறாரு. கூடவே வேறு சில ஒலிகளும் கவனத்தை ஈர்க்குது. என்னது? தூக்குன பிள்ளை காலை உதைக்குது. இடுப்பை ஆட்டுது. சப்பாணி கொட்டலை. கெஞ்சுறாரு பெரியாழ்வார். மாணிக்கம் பொருத்திய கிண்கிணிகள் ஒலி எழுப்புது, இடுப்பில் மாட்டிய ஆணிப்பொன் கயிற்றில் அமைந்த தேர்ந்த பொன் மணிகளும் இசை எழுப்புது. முன்பொருநாள் மாவலி மன்னனிடம் இந்தத் தரை முழுதும் வேண்டிப் பெற்ற கைகளால் எனக்காக சப்பாணி கொட்டுன்னு கேட்கிறார். உடனே பிள்ளையும் சப்பாணி கொட்டுது. பெரியாழ்வாருக்கு நிறையலை. அப்பனே, உன் சிவந்த இதழ் விரிந்து முத்துப் பற்கள் தெரியும் படி சிரிப்பியே! அப்படியே உன் கருங்குழல்கள் (பிள்ளைக்கு இன்னும் தலை மொட்டை அடிக்கலை;-) அசைய தலையாட்டி சப்பாணி கொட்டுங்கிறாரு!! கொட்டுனானே!!!

15 comments:

தமிழ் said...

வாங்க... வாங்க...

ஆகா! அருமையா இருக்கு! அழகான பாட்டு! அழகான விளக்கம்! ஜ்டார்ட் மீஜிக்....

//
இப்படி இடுப்புல அணியும் அணிகலனுக்கு ஒரு தனிப் பெயர் இருக்கு. கண்டுபிடிங்க ;-)//

மணிமேகலை.

அக்காரக்கனி In Honey said...

கருங்குழற் குட்டனே! சப்பாணி!:)
பிள்ளைக்கு இன்னும் தலை மொட்டை அடிக்கலை:))

எந்த குல தெய்வ கோயிலுக்கு மொட்டை அடிப்பாங்க!

அக்காரக்கனி In Honey said...

இப்படி இடுப்புல அணியும் அணிகலனுக்கு ஒரு தனிப் பெயர் இருக்கு. கண்டுபிடிங்க ;-)

ஒட்டியாணம்
::)))))))))))

அக்காரக்கனி In Honey said...

nice thanks:)

குமரன் (Kumaran) said...

மொட்டை அடிச்சாச்சுங்க. மொட்டை அடிக்காட்டி இம்புட்டு முடி வளராது. குழலுமாகாது. :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆணிப்பொன் - பொன் வகைகளில் சிறந்தது//

ஓ...ஆபிசில் ஆணி பிடுங்கினாக்கா கொடுக்கப்படும் பொன் = ஆணிப்பொன் இல்லையா?

//எந்த குல தெய்வ கோயிலுக்கு மொட்டை அடிப்பாங்க!//

கண்னன் குல தெய்வம் யாரு? எங்கூரு வாழைப்பந்தல் பச்சையம்மா தான்! = அட காத்யாயினி அம்மனைச் சொல்றேங்க! அவளைத் தானே தோழி கோதை நேர்ந்து கொண்டு, பாவை நோன்பெடுத்து கைப்புடிச்சா?

//இப்படி இடுப்புல அணியும் அணிகலனுக்கு ஒரு தனிப் பெயர் இருக்கு. கண்டுபிடிங்க//

= மேகலை / ஒட்டியாணம் = ஆனா இதெல்லாம் பெண் பிள்ளைங்க போடுறது! Why putting all this to kannan boy?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மொட்டை அடிக்காட்டி இம்புட்டு முடி வளராது. குழலுமாகாது. :-)//

யப்பா மதுரைக்காரங்களா, ஓடியாங்க! கூடல் குமரன் சொல்வது சரியா? இல்லை முகவை மைந்தன் சொல்வது சரியா?

கூந்தலுக்கு மொட்டை அடிக்காமலேயே குழலுமா, குழலாதா?

இன்னொரு கூந்தல் பிரச்சனையா? நக்கீரா! என்னை நன்றாகப் பார்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கிண்கிணிக்கு இங்க பாருங்க//

எங்கே? ஒன்னும் காணலையே! Where is my kiN-kiNi? :)

இவரு எட்டடி பாஞ்சா, பொண்ணு பதினாறு அடி பாயுது; கிங்கிணி வாய்ச் செய்தானை தாமரைப் பூப்போலே-ன்னு!

கிங்கிணியில் (கால் சதங்கை) ஜல்-ஜல் முத்துக்கள் சிந்தி விடாமல் இருக்க, பாதி மூடிய தாமரைப் பூப் போல ஆபரணம் பண்ணி இருப்பாய்ங்க! அதுக்குள்ளாற மணிகள் கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும்! மணியை ஓட்டை வழியாப் பார்க்கலாம், ஆனா விழவும் விழாது! ஏன்னா கொள்கலம் பாதி மூடி பாதி தொற~ண்து இருக்கும்!

அது போல கண்ணன் பாதிக் கண்ணை மூடி பாதிக் கண்ணைத் தொறந்து வச்சிக்கிட்டு தூங்கறாப் போல பாவ்லா பண்ணுறானாம்!
கிங்கிணி வாய்ச் செய்தானை தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம் மேல் விழியாவோ?

எம்புட்டு நுணுக்கமா இவ அந்தக் கிங்கிணியைப் பார்த்து இருந்தாள்-ன்னா இப்படிப் பாடுவா? யம்மாடியோவ்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரி, இப்போ வழக்கமான கேஆரெஸ் டகால்ட்டி!

முகவை, தமிழ், முகில் - எனுக்கு ஒரு விசயம் தெரிஞ்சாகணும்! ஏன் இந்தப் பெரியாழ்வார் இப்படிப் "பொய் பேசறாரு"?

முன்னாடி என்னான்னா அத்தத்தின் பத்தாம் நாள்-ன்னும், திருவோணத்தான்-ன்னும் Date of Birth மாத்திக் கொடுத்தாரு! உரோகிணியில் பிறந்தவனுக்கு திருவோணத்தான்-ன்னு போலிச் சான்றிதழ்!

இப்போ என்னடா-ன்னா, "காணி" கொண்ட கைகளால் சப்பாணி-ன்னு பாடறாரே? அவன் வாங்கினது காணி நிலமா? காத தூர நிலமா? காணி நிலம் வேண்டும்-ன்னது பாரதியாச்சே! கண்ணன் அல்லவே! - Land Registration-லயும் போலிச் சான்றிதழா?

Oh my God, why this Periazhwar is "lying" so much? :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@முகவை ராம்

//வெண்டளையால் வந்த கலித்தாழிசை//

- இப்படின்னா என்ன? ஏதோ சுண்டெலியால் வெண்ணைய் தாழி உருண்டது-ன்னு சொல்ல வரீங்களா? :))

In Love With Krishna said...

//மாவலி அரசன்ட்ட இருந்து இந்த நிலம் முழுதும் வேணும்னு இரந்து வாங்குனான்னுட்டு *பிள்ளையக் கூப்பிட்டுத் தூக்குறாரு*.//

Indha paadalil enga Periyazhwar "தூக்குறாரு"-nnu solliyirukku?

அக்காரக்கனி In Honey said...

இன்னொரு கூந்தல் பிரச்சனையா? நக்கீரா! என்னை நன்றாகப் பார்! :)

பாத்தாச்சு பாத்தாச்சு நெத்தில ஒரு கண்ணும் தெரியலன்னாலும் குற்றம் குற்றமே!

நாட்டாமே! தீர்ப்ப மாத்தி சொல்லு!

அக்காரக்கனி In Honey said...

மொட்டை அடிக்கலனாலும் குழல் வளரும். இன்னைக்கும் பல ஆண் குழந்தைகள் முதல் மொட்டை அடிக்க தாமதம் ஆனதால் 7 or 8 வயசாகியும் பெண் பிள்ளையை போல குடிமி போட்டு இருப்பாங்க! பல இடங்களில் பார்க்கலாம்.
Ex:- நானும் அப்படித்தான் in smaal age.


கண்ணனுக்கு நீண்ட குழலும் புன்னைகையும் கூடவே பொறந்தது!

Radha said...

ஆழ்வார் மொழியில் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாசுர விளக்கங்கள் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. :-)

முகவை மைந்தன் said...

கருத்திட்டு மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி. என்னோட சுணக்கமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

தமிழ், அக்காரக்கனி! ரவி சொன்னாப்புல மேகலை, ஒட்டியாணம்லாம் பெண்கள் அணிவது. பாடல்களை ஒருமுறை அசை போடுங்க. கண்டுபிடிச்சிடலாம். அப்படியும் முடியலைன்னா நாளைக்கு விடை சொல்றேன்.

ஏங்க குமரன், 6 திங்கள் நிரம்பிய குழந்தைக்கு அதுக்குள்ள மொட்டை போட்டு குழல் ஆட முடி வளர்ந்துருச்சா ;-)

ரவி, HTML Tagன் பண்புகள்ல ஒரு எழுத்துப் பிழை. இப்ப சரி பண்ணிட்டேன்.

காணின்னா நிலம்னு பொருள் இருக்கே! மாவலிட்ட இருந்து நிலம் இரந்து வாங்குனதைத் தானே குறிப்பிடறார். காணின்னா நிலம், காணி நிலம்னா குறிப்பிட்ட பரப்பு உள்ள காணி :-) இதே மாதிரி நள் அப்படின்னா இரவு, நள்ளிரவுன்னா நட்ட நடு இரவு.

ரவி, அடுத்த முறை இப்படி வம்பிழுத்தா எனக்கு மட்டும் தனியா அஞ்சல் போட்டு விடையச் சொல்லிருங்க :-)

கலித்தாழிசைல வெண்பாவுக்குரிய தளைகள் அமைய எழுதுனா வெண்டளையால் வந்த கலித்தாழிசை!

In Love With Krishna - பிள்ளை கையையும் காலையும் ஏன் குழல்களையும் ஆட்டுதுன்னு நினைச்சுப் பாத்தேன். தூக்குனா அழகா காலை உதைஞ்சு தலைய ஆட்டுங்கள்ல. அதான் அப்படிச் சொன்னேன்;-)

Radha, முன் நாளிட்டுப் பாடல்களை தமிழ் வெளியிட்டுட்டாரு. டிசம்பர்ல இருக்க இடுகைகள் எல்லாம் இந்தத் திங்கள் போட்டது தான்.