Monday, July 29, 2013

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அச்சோப்பருவம்- அணைத்துக்கொள்ள அழைத்தல்)
கலித்தாழிசை
பாடல் - 2


செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்*
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப*
சங்குவில் வாள்தண்டு சக்கர மேந்திய*
அங்கைக ளாலேவந்து அச்சோவச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ.

பதவுரை:

மிக மிக எளிமையான பாடல்! இந்தப் பாடலை தமிழ் மொழி அறிந்த அனைவராலும் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். தனியாக விளக்கம் என்று எதுவும் தேவைப்படாத ஒரு பாடல்.

செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்- செங்கமலப் பூ, அதாவது செந்தாமரை மலர். சிவந்த தாமரை மலரில் தேனுண்ணும் வண்டுகளைப் போல். (செந்தாமரை மலர் மேல் வண்டு மொய்த்தல்)பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப - பங்கி - கூந்தல்; உன் பவளச் செவ்வாய் மேல் கருங்கூந்தல் காற்றில் அலைபாய்ந்து வந்து படர.

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ ஆரத்தழுவா வந்து அச்சோ அச்சோ - அங்கை - உள்ளங்கை - திருச்சங்கு, வில், வாள், தண்டு மற்றும் திருச்சக்கரம் என்னும் பஞ்சாயுதங்களையும் உள்ளங்கைகளில் ஏந்தியிருக்கும் எம்பிரானே அச்சோவச்சோ! என் மனம் கரைந்து, என் ஆன்மா இளகும்படி ஆரத்தழுவாய்!


குட்டிக்கண்ணன் மழலை நடையில் வேகமாக ஓடி வருகையில், காற்றில் அலைபாயும் கூந்தல், அவனின் இதழ்மேல் ஒட்டிக்கொள்ளும். மழலைக்குழந்தைகளின் உதடு எப்பவும் காய்ந்திருக்காது. மென்மையும், ஈரத்தன்மையும், பொலிவும் எப்பொழுதும் இருக்கும். அந்த ஈரத்தில் ஒட்டிக்கொள்ளும் மென்கூந்தலை, செந்தாமரை மலரில் தேன் உண்ணும் வண்டுகளோடு ஒப்புமைப்படுத்தியுள்ளார் பெரியாழ்வார்.

பொருளுரை:

எம்பெருமானே! செந்தாமரை மலரில் தேன் உண்ணும் வண்டுகளைப் போல், உன் செவ்விதழ் மேல் கருங்கூந்தல் படர ஓடி வந்து, திருச்சங்கு, வில், வாள், தண்டு, திருச்சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களை ஏந்திய உள்ளங்கைகளாலே என் ஆன்மாவின் பாவங்களை கழுவுமாறு என்னை ஆரத்தழுவுவாயாக!

7 comments:

தமிழ் said...

வாசகர்கள் அனைவரிடமும் பதிவுகள் காலத்தாமதம் ஆனமைக்கு பணிவன்புடன் மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி இயன்ற அளவு, இறைவன் அருள் இருந்தால் அடிக்கடி பதிவிட முயல்வோம்!

தமிழ்த்திருக்கோயிலில் இறைவனை வணங்குவோம் வாரீர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

"அச்சோ" -ன்னு சொல்லக் கூடாது -ன்னு சில வீட்டுல சொல்லுவாய்ங்க, சின்ன பசங்க கிட்ட;
இங்கிட்டு பெரியாழ்வார் double அச்சோ போடுறாரு!:)
----

இந்தப் பாடல், ஓர் அழகான உவமை ஓவியம்!

வண்டுகள், ஒன்னு பின்னால ஒன்னு, line-ஆ வரும், பாத்து இருக்கீங்களா? தொலைவில் இருந்து பாத்தா, ஏதோ கருப்பு மாலை தொங்குறாப் போல இருக்கும்!

அப்படித் தொங்குதாம் = கண்ணன் கூந்தல்!

அப்போ வண்டு வாய் வைக்கும் பூ எது? = கண்ணன் வாய்!

இப்போ ரெண்டு உவமைகளும் பொருத்திப் படிங்க!
* செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
* பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப

வண்டு = கூந்தல்(க்கு உவமை)
பூ = வாய் (க்கு உவமை)
------

ஆனா முதல் வரியில் பூ, அதுக்குக் கீழே பங்கி -ன்னு (மாத்தி) இருக்கு!
முதல் வரியில் வண்டு, அதுக்குக் கீழே பவளவாய் -ன்னு (மாத்தி) இருக்கு!

இப்படி Order மாறுவது என்ன அணி? சொல்லுங்க பார்ப்போம்:)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!
= இதுல Order மாறலை! அதனால் நிரல் நிறை அணி

என் கேள்வி, Opposite Order = என்ன அணி?:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய//

ஐந்தாயுதங்களும், ஒரே பாசுர வரியில் கொண்டாந்துட்டாரே! ஆகா!

சங்கத் தமிழில் "ஐம்படைத் தாலி" -ன்னு ஒன்னு, ஆண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும்! இது ஒரு வீரத் தாலி! குழந்தைக்குக் காப்பு!

அதைக் குழந்தைக் கண்ணனும் அணிஞ்சிருக்கானோ என்னவோ?

குழந்தை, விளையாட்டாக் கையில் எடுத்துக் காட்டுது நகையை!
அடேய் குழந்தை, இது உன் நெசமான ஆயுதங்களும் அல்லவா? (திருமாலின்)

ஒன்னும் தெரியாப் போல, எப்படிப் பொக்கை வாயைக் காட்டுறான்?
திருட்டுக்கொட்டுக் குழந்தை - அச்சோ அச்சோவே!:)

தமிழ் said...

மொழி மாற்று!

தமிழ் said...

வணக்கம் கேயாரெஸ்! வருகைக்கு மிக்க நன்றி!

வெற்றிவேல் said...

வணக்கம் தமிழரசன் அய்யா...

தற்பொழுதுதான் வலைசரத்தில் தாங்கள் தங்கள் பெயரை விட்டு வந்துள்ளதை பார்த்தேன். தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து தங்கள் தமிழ்ப்பணி தொடர என் வாழ்த்துகள்.

என் தளம் http://iravinpunnagai.blogspot.com/

நான் தமிழர் வரலாற்று பற்றிய தேடலில் இறங்கியுள்ளேன்... தாங்கள் என் தளம் வந்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

தமிழ் said...

உறுதியாக வெற்றி!