Monday, January 18, 2021

பெரியாழ்வார் திருமொழி 1- 9 - 9

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 9

 கற்பகக் காவு கருதிய காதலிக்கு *

இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில் *

நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள் *

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.


பதவுரை:

(இந்திரன் காவினில்) கற்பகக் காவு கருதிய காதலிக்கு  - தேவலோகத்தில், இந்திரனின் அரண்மனை நந்தவனத்தில் இருந்த கற்பகச் சோலையின் அழகைக் கண்டு அதன்பால் ஆர்வம் கொண்டார், கண்ணனின் மனைவியான சத்தியபாமா. 

அவ்வண்ணமே, தன்னுடைய அந்தப்புர நந்தவனமும் அரிய வகை மரங்களுடன் அழகுற அமைய வேண்டுமென்று எண்ணிய சத்தியபாமாவின் விருப்பத்தை மனத்தினாலேயே அறிந்த கண்ணபெருமான், 

(கா - சோலை ~ Flower garden, grove)

இப்பொழுது ஈவதென்று (இந்திரன்) (காவினில்)  - அக்கணமே, தன் மனைவியின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக, 

(ஈவதென்று - நிறைவேற்றுவதென்று ~ மனைவியின் விருப்பப் பொருளை அளிப்பதென்று), 

நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்  - பூலோகத்தில் சத்தியபாமா வின் அரண்மனை நிலா முற்றத்துள் அக் கற்பகச் சோலையவே நிலைக்கச் செய்து, 

நிற்கச் செய்து என்று குறிப்பிட்டிருந்தால், கண்ணபிரான் ஒரு மரத்தைக் கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆனால்,

'நிற்பன' என்று பன்மையில் குறிப்பிட்டமையினால், கண்ணன் அந்த கற்பகச் சோலையில் இருந்து பல வகையான மரங்களையும் கொணர்ந்ததாக அறியலாம். 

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் - எப்படி சத்தியபாமாவின் எண்ணத்தை வார்த்தைகளால் அல்லாது,  எண்ண ஓட்டத்திலேயே அறிந்து, அவ்வாவினை நிறைவேற்றினானோ, அவ்வண்ணமே வந்து நான் அழைக்காமலேயே, நான் எதிர்பார்க்காத வண்ணம் ஓடி வந்து என்னைப் புறம் புல்குவான்; தேவர்களுக்கெல்லாம் தலைவனான என் கண்ணபெருமான் என்னைப் புறம்புல்குவான்.

(உம்பர்கோன் - தேவர்களை வென்று கற்பகக் காவினைக் கொணர்ந்தமையால்)



குறிப்பு:

    அன்பர்கள் யாரேனும் கற்பக மரம் என்றால் என்ன என்று தெளிவாக எடுத்துரைத்தால், அடியேன் வணக்கத்துடன் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். 

கூகுளில் தேடினால், தமிழில் தேடும் பொழுது ஒரு விதமான பதிலும், ஆங்கிலத்தில் தேடும் பொழுது வேறு விதமான பதிலும் கிடைக்கின்றன. 

பின்வருவன wikipedia-வில் இருந்து...... 

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது கற்பக மரம்பாரிஜாதம்ஹரிசந்தனம்சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

https://en.wikipedia.org/wiki/Kalpavriksha

Kalpavriksha is also identified with many trees such as parijata (Erythrina variegata), Ficus benghalensisAcaciaMadhuca longifoliaProsopis cinerariaDiploknema butyracea, and mulberry tree (Morus nigra tree). 

Erythrina variegata - இதற்கு கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு. (மந்தாரம்)

Ficus benghalensis - ஆல் அல்லது ஆலமரம்.

Madhuca longifolia - இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம்

Prosopis cineraria - வன்னிமரம்

Diploknema butyracea - The Indian butter tree

mulberry tree -  முசுக்கட்டை

மேலும்,

பூலோகக் கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்படுகிறது, 

தென்னை மரம் -  இப்படியாகப் பல மரங்கள் 'கற்பகம்' என்று தமிழில் தேடினால் கிடைக்கின்றன. 

பொருளுரை:

இந்திரனின் நந்தவனத்தின் அழகைக் கண்டு வியந்த சத்தியபாமாவின் விருப்பத்தை அறிந்து கண்ணபெருமான், உடனடியாக அக்கற்பக சோலையையேக் கொண்டு வந்து தன் காதல் மனைவியான சத்தியபாமாவின் அந்தப்புர நந்தவனத்தில் வைத்துத் தழைக்கச் செய்தவன் என்னைப் புறம்புல்குவான். தேவாதி தேவன் என்னைப் புறம்புல்குவான்!

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய!



1 comment:

பொன். கோ. எத்திராசன் said...

கற்பகம்  என்றால்  நமது அறிவின் 3 நிலைகளில் இரண்டாவது நிலையைக் குறிக்கும் . நமது அறிவானது                                  *******காமதேனு எனும் துவக்க நிலையில் 'காம' என்றால் ஆசைவயப்படும்  நிலையில்  இயங்கும் 'பசு' என்றால் உயிர் . அதாவது உயிர்களாகிய நாம் புலன்களின் இன்பத்தில் அளவு முறை எனும் ஒழுக்கங்களை மீறி ஈடுபட்டு துன்பத்தில் துவளாமல் இருக்க                                         *********                                                கற்பகம் - கற்பு அகம்  கற்பு என்றால் ஒழுக்கத்தில் உறுதியாக நிலைத்து இருத்தல்   அகம் என்றால் உள்ளம் . கற்பக மரம் என்றால் ஒழுக்கத்தில் நிலைத்திருக்கும உள்ளம் உடையவராக மரம் போல் வேர், தண்டு, கிளை, இலை, பூ,, காய், கனி, பயறு , தானியம், கொட்டை, விதை என எல்லாவகையிலும் வாழும் உயிர்களுக்கு உயிர்ப்பளிக்கும் உணவாகவும், ஊட்டமாகவும், நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயனாவது போன்று எண்ணம் சொல் செயல்களால் இசைவாக தனது உடல் குடும்பம் சுற்றம் தொழில் சமுதாயக் கடமைகளை உடலாலும் அறிவாலும் ஆற்றும் தகுதியும் திறமையும் எவ்வுயிர்க்கும் துன்பம் விளைவிக்காத ஒழுக்கமுடன் ,  துன்பம் படும் உயிர்களுக்கு தன்னார்வமுடன் துன்பத்திலிருந்து விடுபட உதவும் நேயமுடன் வாழும் நிலையே கற்பக மனம் (மரம் ).         ******* இத்தகைய நிலையில் தொடர்ந்து வாழும் போது  எந்த சூழலிலும்  அழகான சிந்தைகளை விட்டு வழுவாது வாழ்வது சிந்தாமணி ஆகும் சிந்தை மணியான (அழகான) நிலை ஆகும்.