Sunday, May 24, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 3

திருப்பல்லாண்டு - பாடல் 3

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர் களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

பெரியாழ்வார், இறைவன் மேல் கண்ணேறு பட்டுவிடாமல் தடுப்பதற்காக, அங்கு குழுமியிருந்த மக்களின் கவனத்தைத் திருப்பவும், இறைவனுக்கு வாழ்த்து கூறவும், அங்கிருந்த மக்களையும் தம்மோடு பல்லாண்டு பாட அழைக்கி்றார். அவர் எத்தகைய மக்களை அழைக்கிறார் என்று பார்ப்போம்!

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் - இறைவனுக்குத் திருத்தொண்டுகள் புரிந்து, அதன் மூலம் இறைவனின் மனதில் நிலையான இடம்பிடித்து, அவன் திருவடியில் பெருவாழ்வு வாழ ஆசை கொண்டுள்ளவர்கள் இங்கு இருப்பார்களேயானால் அவர்கள் அனைவரும் எம்முடன் வந்து சேர்ந்து முழுமனதுடன் பல்லாண்டு பாடி, இறைவனுக்குத் தொண்டுகள் புரிய வாருங்கள். அதன் விளைவாக உங்களுக்குக் கிடைக்கும் மெய்வாழ்வினையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்களாக! (வாழாட்பட்டு - நிலைவாழ்வினுக்கு ஆசைப்பட்டு, மண்ணும் - சேர்ந்துக் கொள்ளும், மணமும் - பலன், கொண்மின் - பெற்றுக் கொள்ளுங்கள்)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் - ''காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா'' என்பதற்கேற்ப பொய்யான இந்த தேகத்தை வளர்க்கவும், சாண் வயிற்றை நிரப்பவும் நிலையற்ற இந்த தேக நலனை மட்டுமே நினைத்து, அதற்காக கூழுக்கு ஏங்கி மற்ற சாதாரன மனிதரிடம் அடிமைத் தொழில் செய்பவர்கள் யாரும் இங்கு இருப்பார்களானால், அத்தகையவர்களை, எந்நாளும் இறைவனையே நினைத்து, வணங்கி, அவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே கடமையாக நினைப்பவர்கள் நிறைந்த எங்கள் குழுவி்ல் சேர்த்துக் கொள்ள மாட்டோம்! (கூழாட்பட்டு - உணவுக்கு ஆசைப் பட்டு, புகுதலொட்டோம் - சேரவிடமாட்டோம்)

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் - ஏழு தலைமுறைகளாக எந்த பாவ வினைகளும் செய்யாமலிருந்து, ஏதொரு பழிச்சொல்லிற்கும் ஆளாகதவர்கள் நாங்கள்! (ஏழாட்காலும் - ஏழு+ஆள்+கால்--ஏழு தலைமுறை காலங்களாக, பழிப்பு - பழிச்சொல்)

இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - இராவணன் உள்ளிட்ட அசுரர்கள் வாழ்ந்த இலங்காபுரியை வானரப் படையைத் திரட்டிக் கொண்டு சென்று போரிட்டு, அரக்கர்கள் அனைவரையும் அழித்த மாவீரன் ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பல்லாண்டு கூறுவோமாக! (இராக்கதர் - இராஷ்சதர்-- அசுரர்கள், பொருதான் - போர்புரிந்தவன்)

பதவுரை:

இப்பாடலில், இராவணன் தலைமையில் இருந்த அசுரர்களை எல்லாம், வானர சேனைக் கொண்டு எதிர்த்துப் போரிட்டு வென்ற இராமபிரானுக்குப் பல்லாண்டு பாடுகிறார், பெரியாழ்வார். அவருடன் இணைந்து பல்லாண்டு பாட, இறைவன்பால் மெய்யான அன்புள்ளவர்களை அழைக்கிறார். அவ்வாறு இறைதொண்டு செய்வதால் கிடைக்கும் மெய்வாழ்வினையும் அவர்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறார். இவர்கள் ஏழு தலைமுறைகளாக யாதொரு பழிப்புக்கும் உள்ளாகதவர்கள்! வெறும் கூழு(உணவு)க்கு ஏங்கி ஏனையோரிடம் அடிமைத் தொழில் புரிவோரை, அவர் சேர்த்துக் கொள்ள மறுப்பதாகத் தெரிவிக்கிறார்.

12 comments:

தமிழ் said...

இப்பாடலில் வரும் மண்ணும் மணமும் என்பதற்கு வலையுகிலும் சரி, நேரிடையாகவும் சரி பல பதில்கள் வருகின்றன; உங்களது கருத்துகளையும் பின்னூட்டத்தில் பதியுங்கள்;

நாம் விவாதிக்கலாம், பல வித்தியாசமான செய்திகளையும்`பகிர்ந்து தெரிந்து கொள்ளலாம். :-))

தமிழ் said...

திரு.கேயாரெஸ் அவர்களின் கருத்து,
மண்ணும் கொள்மின் = இறைவன் தொண்டில் ஈடுபடல் (மண்=மண்ணைப் போல் உறுதியாக ஈடுபடல்)

மணமும் கொள்மின் = விதியே என்று ஈடுபடாமல், விரும்பி ஈடுபடல் (மணம்=வாசனை பரிமளிக்க ஈடுபடல்)

மண் என்பதைத் திருமண்காப்பு என்றும் மணம் என்பதைத் துழாய் என்று கொள்வாரும் உண்டு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஏழாட்காலும் பழிப்பிலோம்//

அது என்ன ஏழு தலைமுறை கணக்கு, தமிழ்?
முதல் தலைமுறையில் பழிப்பில்லை என்பது ஏழாம் தலைமுறைக்கு எப்படி தெரியும்? இது ரொம்ப நாளாக் கேட்க நினைச்ச கேள்வி! நீங்க மாட்டிக்கிட்டீங்க! :)

தமிழ் said...

//
அது என்ன ஏழு தலைமுறை கணக்கு, தமிழ்?
முதல் தலைமுறையில் பழிப்பில்லை என்பது ஏழாம் தலைமுறைக்கு எப்படி தெரியும்? இது ரொம்ப நாளாக் கேட்க நினைச்ச கேள்வி! நீங்க மாட்டிக்கிட்டீங்க! :)//

அவர் தலைமுறைகளைத் தானேங்க சொல்றாரு.... பிறவிகளை இல்லல்ல....

இதுக்கு ரெண்டு காரணம்,

1. மரபியல் --- உயிரணுக்கள்
2. சூழ்நிலையியல் --- அவங்க எப்படிப்பட்டவங்க ங்கறதத்தான், வீட்டில இருக்குற பெரியவங்க எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருப்பாங்களே...

இந்த காலத்துலத்தான் எல்லாம் தனிக்குடித்தனமா இருக்கு.... அதனால, குழந்தைங்க இருக்குற சூழ்நிலையோட பாரம்பரியம் வித்தியாசமா போயிடுச்சு....

நாடி நாடி நரசிங்கா! said...

இந்த தேகத்தை வளர்க்கவும், சாண் வயிற்றை நிரப்பவும் நிலையற்ற இந்த தேக நலனை மட்டுமே நினைத்து, அதற்காக கூழுக்கு ஏங்கி மற்ற சாதாரன மனிதரிடம் அடிமைத் தொழில் செய்பவர்கள் யாரும் இங்கு இருப்பார்களானால், அத்தகையவர்களை, எந்நாளும் இறைவனையே நினைத்து, வணங்கி, அவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே கடமையாக நினைப்பவர்கள் நிறைந்த எங்கள் குழுவி்ல் சேர்த்துக் கொள்ள மாட்டோம்! (கூழாட்பட்டு - உணவுக்கு ஆசைப் பட்டு, புகுதலொட்டோம் - சேரவிடமாட்டோம்)
ENRU Sollum periyaalwar... yaam tinamum office senru velaikku senru varugiren .. emmai avargal kuzhul serkamaataara..,,

தமிழ் said...

ENRU Sollum periyaalwar... yaam tinamum office senru velaikku senru varugiren .. emmai avargal kuzhul serkamaataara..,,//

---------------------

வாங்க இராஜேஷ் நாராயணன்,
நீங்க சொல்றது, மனிதராய்ப் பிறந்த எல்லாருக்கும் பொருந்தும். ;-))

பெரியாழ்வார்தான் பாசுரத்தின் முதலடியிலேயே சொல்லிடறாரே! -வாழாட்பட்டு நின்று உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்! அப்படின்னு...

வாழாட்பட்டு நிற்பவர்களை, பெரியாழ்வார் கண்டிப்பாக அவர் குழுவில் சேர்த்துக் கொள்வார். :-))

நாடி நாடி நரசிங்கா! said...

Perumaleeeeeee govinda govinda govinda
Romba nanringa sir yaamum periyalwar kuzhuvil serndu kondom
Hey!! Ya!hoooooooooooooo
http://srikamalakkanniamman.blogspot.com

நாடி நாடி நரசிங்கா! said...

Ayya one personal doubt (out of this part). Sri ramanujarai patri siridu paditirukiren,..
Ramanuja daasar enru lot of Vishnu baktargal peryar vaittu kolla kaaranam ennavo!!1
Sambanda sambandigalukkum viduperu koduppom enru perumal koorinaara?? I have doubt….

தமிழ் said...

காலத்தாமதத்திற்கு மன்னிக்கவும்!! ;-))

இராமனுஜன் - இராமனின் தம்பி யான இலக்குவணன். (அனுஜன் - தம்பி)


''சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமால்க்கு அரவு!''

இப்படி, ஒரு நொடியும் இறைவனை விட்டு அகலாது, எந்நாளும் அவன் நலம் நாடும் ஆதிசேஷனின் அம்சம் தான் இலக்குவணன்.

எம்பெருமானுக்குத் தன்னை வணங்குபவர்களைவிட தன் அடியவர்களை மதித்து நினைப்பவர்களைத்தான் மிகவும் பிடிக்கும். (ஆதி - முதல்; சேஷன் - அடியவன்)
எண்ணற்ற யுகங்களாய் இறைவனுடனேயே என்றும் இருப்பவன் ஆதி சேஷன்.

இராமாவதாரத்தில், இராமனின் அனுஜனான இலக்குவணன் இறைவனை எந்த அளவு மதித்து, அவர்மேலும் பிராட்டியார் மேலும் அன்பும் பக்தியும் பூண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்...

அத்தகையதொரு தூய்மையான இறைஅன்பும், இறைத் தொண்டும் ஒவ்வொருவரும் தனக்குள் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவரின் வழியைப் பின்பற்றுவதற்கு அடையாளமாகத் தான் ''இராமானுஜதாசன்'' (இறைவனின் அடியவனுக்கு அடியவன்) என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்.

நாடி நாடி நரசிங்கா! said...

Adiyenukku adiyenin panivaana namaskaarams
Tamil ayya avargale sri ramanujar patriya tangal karuttuku emadu
Paripoorna nanriyai terivittu kolgiren.
om namo narayanaaya!

தமிழ் said...

இராஜேஷ் அவர்களே, தாங்கள், தமிழில் தட்டச்சு செய்யலாமே!

விவரங்களுக்கு, தயவுசெய்து மின்னஞ்சல் செய்யுங்கள்.

தாங்கள் அலுவலகத்தில் இருந்தாலும், தமிழில் தட்டச்சு செய்ய இயலும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி!
தமிழ்

நாடி நாடி நரசிங்கா! said...

I dont know ur mail id sir,
and how to type tamil sir?