Wednesday, May 27, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 4

திருப்பல்லாண்டு பாடல் - 4

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராய ணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.

பொருள்:

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து கூடும் மனமுடையீர்கள் -நாம் என்னதான் முக்தி பெற்றாலும் நமது ஆன்மா மட்டுமே முக்தி நிலையை அடையும். நமது உடலானது இந்த மண்ணையே சென்றடையும். இங்கு ஏடு என்னும் சொல் உடலைக் குறிக்கின்றது. ஆனால், அந்த உயிர் தமக்கு வேண்டிய புண்ணிய காரியங்களைச் செய்ய உடலே கருவியாக அமைகின்றது. ஆகவே, உயிரானது உடலைவிட்டு பிரிவதற்கு முன்னே, எங்கள் குழுவில் வந்து இணையும் எண்ணம் உடையவர்கள், ( ஏடு - உடல், குழாம் - குழு, புகுந்து - இணைந்து)

வரம்பொழிவந்து ஒல்லைக் கூடுமினோ - மனிதர்கள் தங்களுக்குத் தாமே வரைமுறைகள் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ''இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித நிலை; எப்படியும் வாழலாம் என்பது மிருகநிலை'' என்று வரைமுறையுடன் வாழ்தல் நல்லதே ஆயினும், அவை இறைவனை அடையத் தடையாய் இருத்தலாகாது. ஆகவே, அத்தகைய தடைகளைத் தவிர்த்துவிட்டு, விரைந்து எங்கள் குழுவில் வந்து இணைவீர்களாக!(வரம்பொழி வந்து - வரம்புகளை அழித்து வந்து, வரம்பு - தடை, ஒல்லை - விரைவில்)

நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே - இந்த நாடு, நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் நன்கு அறியும் வண்ணம் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தைப் பாடும் மனமுள்ள பக்தர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் வந்து பல்லாண்டு கூறுங்கள்! (பாடுமனமுடைப் பத்தர் - பாடும் மனம் உடைய பக்தர், பத்தர் - பக்தர், இறைவனடியான்)

பதவுரை:

தமது உடல் பூமிக்குள் செல்லும் முன்னே, எங்கள் குழுவில் வந்து இணைந்து இறைவனை வணங்கும் எண்ணம் கொண்டவர்கள், அவர்களின் தடைகளை எல்லாம் அழித்துவிட்டு விரைந்து வந்து சேர்ந்துகொள்ளுங்கள். இந்த நாடு நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் அறியுமாறு ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஓதும் மனமுடைய பக்தர்கள் இருப்பார்களாயின் அவர்களும் வந்து நம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறுங்கள்!

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாடுமனமுடைப்பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே//

பாடத் தெரிந்த பக்தர்களைத் தான் கூப்பிடுவேன்-ன்னு சொல்லலை பாருங்க ஆழ்வார்!
பாடும் மனசு இருந்தாலே போதும்.....வந்து பல்லாண்டு சொல்லுங்கள் என்று ஆசை உடையோர் எல்லாரையுமே அழைக்கிறார்!

//வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ!//
ஆகமம், சட்டதிட்டம் என்று சதா வரம்புக்குள்ளேயே சிக்கிக் கொள்ளாமல், பகவானை விரைவில் பாவிக்குமாறு சொல்கிறார்!

//நாடுநகரமும் நன்கறிய நமோநாராய ணாயவென்று//
நமோ நாராயணாய
நமோ நாராயணாய
நமோ நாராயணாய

Madiwala Mokkai Sangam said...

what is the best feature of tamil langauge

தமிழ் said...

Welcome & thanks for visiting us Madivala Mokkai Sangam!

1. Tamizh is one of the very very few languages with variety. Other languages in this category are, Greek, English(Scottish, Walesh)

2. Tamizh has a very long history of more than 2500 years and the origin of other south indian languages like Malayalam and Kannada

3. Very sweet in terms of pronunciation, writing, singing, better than any languages in the world.

4. Incomparable and unique alphabets

Hope I answered your questions, to some extent.

வாங்க சார் மற்ற பாடல்களை எல்லாம் படித்து, உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

தமிழ் said...

//பாடத் தெரிந்த பக்தர்களைத் தான் கூப்பிடுவேன்-ன்னு சொல்லலை பாருங்க ஆழ்வார்!
பாடும் மனசு இருந்தாலே போதும்.....வந்து பல்லாண்டு சொல்லுங்கள் என்று ஆசை உடையோர் எல்லாரையுமே அழைக்கிறார்!//

பாடுவதற்கு மனமிருந்தாலே, அவர்களுக்கு பாடுவதற்கு அருளிடுவான் திரு, என்பது ஆழ்வாரின் அசைக்க முடியாத நம்பிக்கை!

//ஆகமம், சட்டதிட்டம் என்று சதா வரம்புக்குள்ளேயே சிக்கிக் கொள்ளாமல், பகவானை விரைவில் பாவிக்குமாறு சொல்கிறார்!//

மிக்க சரி, நாராயணனை தரிசிக்க நல்ல நேரம் தேவை இல்லை. அவனை தரிசிப்பது நல்லது. ஆகவே, நன்று என்பதை இன்றே செய் எனக் கூறுகிறார்.