Tuesday, June 23, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 10

திருப்பல்லாண்டு - பாடல் 10

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட
அந்நாளே* அடியோங்களடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள்தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து* ஐந்தலைய
பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே!

பொருள்:

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட அந்நாளே - எந்நாளில் எங்களின் இறைவனான உமக்கு நாங்கள் அடியவர்கள் என்று எழுதப்பட்டதோ அந்நாளே,

அடியோங்களடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் - அந்நாளிலேயே இந்த அடியவர்களின் குடிகளும் குலமும்( எங்கள் குலத்தவரும், குடும்பத்தவரும்) வீடு பேறு அடைந்து உய்வு பெற்றுவிட்டோம்! (வீடு - முக்தி)

செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து - கண்ணனின் உண்மையான தாய் தந்தை தேவகியும் வாசுதேவனும்! ஆனால், கம்சனின் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனை அழிக்கும் என்று அசரீரி சொன்னதைக் கேட்டு கம்சன், அவன் தங்கையையும் தங்கையின் கணவனையும் சிறையிலடைத்து வைத்து, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாய்க் கொன்றுவிட்டான்.

தேவகியின் ஏழாவது குழந்தையான பலராமன் கருவிலேயே ரோகிணியின் கருவிற்கு மாற்றப்பட்டது.

எட்டாவது குழந்தையான கண்ணன், ஆவணித்திங்கள், தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் திருஅவதாரம் புரிந்தார். கண்ணன் அவதரித்த நள்ளிரவிலேயே வாசுதேவன் தன் ஆயர் குலத் தோழனான நந்தகோபர் மற்றும் யசோதையிடம் குழந்தையைத் தந்துவிட்டு அவர்களின் பெண்குழந்தையை மாற்றிக் கொண்டு இரவோடு இரவாக சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.

கம்சன் அக்குழந்தையை சுவற்றிலடித்துக் கொல்ல முயன்ற பொழுது, ''அது, கம்சா! உன்னை அழிக்கப்போகும் கண்ணன் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக அறிவித்து விட்டுப் பறந்து சென்றது!''

கோகுலத்தில் நந்தகோபர் யசோதையிடம் கண்ணன் சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்தான். அதனையறிந்த கம்சன், கண்ணனை வடமதுரைக்கு(மதுரா) வரவழைத்து நயவஞ்சகமாகக் கொன்றுவிடவேண்டுமென்று எண்ணினான்.

தனுர்யாகம் என்னும் யாகம் ஒன்றை நடத்தி, அதற்கு சிறுவன் கண்ணன் கண்டிப்பாக வரவேண்டுமென்று அழைப்புவிடுத்தான். ஆனால், கோகுலத்திலுள்ள எவரும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் கண்ணன், அவர்கள் அனைவரையும் சமாதானப் படுத்தி, தான் மதுரைக்குச் செல்வதன் விவரத்தை எடுத்துக் கூறி, அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் மதுரைக்குச் சென்றவுடன், அங்கு யாகத்திற்காக வைக்கப்பட்டிருந்த மிகவும் கனமான வில்லை நோக்கி விரைந்து சென்று அதை தன்இடது கையினால் இறகைத் தூக்குவது போல் தூக்கி உடைத்தான். வில்லொடிந்த ஓசையானது பேரிடி முழக்கம் போல் அகிலமெங்கும் எதிரொலித்தது. யாகத்திற்குரிய வில் உடைந்துவிட்டதால் அது யாகத்தின் காரியகர்த்தாவான கம்சனுக்கு உகந்தது அல்ல, என்னும் செய்தியறிந்து மிரண்டுபோய் விட்டான் கம்சன். அதன் பிறகு கம்சன் ஏவிவிட்ட தடைகளையும் மீறி கம்சனை இறைவன் வதம் புரிந்து, தன் தாய் தந்தையரை மீட்டதோடு, மதுராபுரியின் ஆட்சியையும் கம்சனின் தந்தையான உக்கிரசேனரிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வைத்தான் ''செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து'' அப்படின்னு சொல்றார் பெரியாழ்வார். செம்மையான திருநாளில் பிறந்து (தோன்றி)வடமதுரைக்குச் சென்று வில்லை ஒடித்த கண்ணபிரானே! ( செந்நாள் - செம்மை+நாள்- சிறந்த நாள், தோற்றி - தோன்றி- பிறந்த, சிலை - வில், குனித்து - உடைத்து)

ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே - ஐந்து தலைகளைக் கொண்ட படமெடுத்தாடும் நாகத்தின் தலைமேல் பாய்ந்து நடனம் புரிந்தவனே!

யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் (அ) காளியன். அது தன் விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த ஒரு உயிரினமும், தாவரங்களோ, விலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது.

ஒரு நாள் பிருந்தாவனத்திலே, தன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது. அதை எடுக்க கண்ணன் அங்கு சென்றபொழுது ஆயர் குல சிறுவர்கள் அனைவரும் தடுத்தனர். அவர்கள் பேச்சைக் கேளாமல் கண்ணன் அங்கு செல்லவே, அவர்கள் அச்சமுற்று கோபியர்களிடம் சென்றுரைத்தனர்.

கண்ணனோ, கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.
சிறுவர்கள் அழைத்து வந்த கோபியர்களோ, தங்களின் கண்ணனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அஞ்சி அவர்களும் கூவி அழைத்துப் பார்த்தனர்; ஆனால் கண்ணன் யார் பேச்சையும் கேட்பதாயில்லை.

நீரின் சலனத்தால் உறக்கம் களைந்த காளிங்கனோ சினமுற்று கண்ணனைப் பின்னிக் கொண்டான்.

இதைக்கண்ட கோபியர்கள் சிலர் மூர்ச்சித்துப் போயினர். கண்ணனைத் தடுக்கச் சென்ற ஆயர்களையும் பலராமன் தடுத்துவிட்டார்.

கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று, தன் புல்லாங்குழலை இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.

இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போது, அண்ட சராசரமே திரண்டு வந்து தன் தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன் தலைத் தூக்கும் போதெலாம், இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும் சோர்வுற்று மரணபயம் கொண்டு, செய்வதறியாது திகைத்தான். அவனின் மனைவியர் வந்து இறைவனிடம், தங்களின் கணவரை விட்டுவிடும்படி இறைஞ்சினர். இறைவனும் காளிங்கனைக் கொல்லாது, அதன் ஆணவத்தை மட்டும் கொன்று திருவருள் புரிந்தான்.

கண்ணனின் இந்த விளையாட்டைத்தான் ''ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே'' என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (ஐந்தலைய - ஐந்து தலைகளை உடைய, பைந்நாகத்தலை - படமெடுக்கும் பாம்பின் தலை).

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே - உனக்குப் பல்லாண்டு கூறுவோமாக!

பதவுரை:

ஆயர்குலக் குழந்தாய் கண்ணனே! எந்த நாளில் நாங்களெல்லாம் உமக்கு அடியவர்கள் என்று எழுதப்பட்டதோ அன்றே, எங்கள் குலத்தினர் அனைவரும் வீடு பேறு பெற்றுவிட்டோம்! மிகவும் உன்னதமான நாளில் மதுரா நகரத்து உதித்தவனே, நீ அன்று கம்சனின் தனுர் யாகத்திற்கான வில்லை ஒடித்ததோடு, காளிங்க நாகத்தின் விஷம் நிறைந்த தலைப்பகுதியில் காளிங்க நடனம் புரிந்தவனே! உனக்குப் பல்லாண்டு கூறுவோமாக!

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுதப்பட்ட
அந்நாளே//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

என்னை எம்பெருமானுக்கு எழுதி வைத்து விட்டார்கள்-ன்னு சொல்லும் போதே இனிக்கிறது! :))
பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம், குறை ஒன்றுமில்லாத கோவிந்தா...
உன் தன்னோடு உறவேல் நமக்கு
இங்கு ஒழிக்க ஒழியாது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து//

ஒருவன் மிதிலையில் வில் வளைத்தான்!
இவன் மதுரையில் வில் வளைத்தானோ? :)

தமிழ் said...

//ஒருவன் மிதிலையில் வில் வளைத்தான்!
இவன் மதுரையில் வில் வளைத்தானோ? :)//

மிதிலை நகரில் வில் வளைத்தது, வளைகரத்தாளை மணம் முடிக்க!!

மதுரையில் வில் வளைத்தது, வக்ர எண்ணத்தானின் கதை முடிக்க....
பெற்றோரை சிறை மீட்க...

firstfight2020 said...

திருப்பல்லாண்டில் எத்தனை பாடல்கள் உள்ளன. மற்றும் பெரியாழ்வார் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன.