Sunday, June 21, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 9

திருப்பல்லாண்டு பாடல் - 9

உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்:

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு - இறைவா! எம்பெருமானே! நீ உடுத்துக் களைந்த, உன் திருமேனித் தழுவிய பட்டாடைகளையே நாங்கள் உடுத்திக் கொள்வோம்; உனக்குத் திருவமுது செய்தபின், அமுதுக்கிண்ணத்தில் மிஞ்சியிருக்கும் கற்பூரம் மணக்கும, கமலப்பூ மணக்கும் உன் வாய்ச்சுவையையும் நாற்றமும் ஒருங்குக் கொண்ட இறைஉணவையே நாங்கள் உண்ணுவோம்! (பீதகவாடை - பீதகம் + ஆடை - - பீதகம் -பட்டுபீதாம்பரம்;கலத்ததுண்டு - கலத்தது + உண்டு - உணவுக் கலத்தில் உள்ளதனை உட்கொண்டு )

தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் - உனக்கென்றேத் தனியாகத் தோட்டம் வைத்து, அதில் இருக்கும் சிறந்த திருத்துழாய் மலர்களைக் கொண்டு வடிவாய் வணக்கத்துடன் தொடுத்த மலர்மாலைகளை உனக்கு நாங்கள் அணிவிப்போம்! அதை நீ அணிந்து மகிழ்ந்து எங்களுக்குத் திருவருள் புரிவாய்; பின் நீ சூடிக் களைந்த திருத்துளசி மாலைகளையே அணிந்துக் கொள்ளும் உம் அடியவர்கள் நாங்கள்! (துழாய் - துளசி)


விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் - நீ எந்த திசையில் என்ன வேலை எங்களுக்கு இட்டாலும், அவற்றை எல்லாம் நின் திருவடிப் பெயராலே, விரைந்து, திருத்தமாக முடித்துவிட்டு, திருவரங்கநாதா! திருவோணத் திருநாளில், (கருமம் - பணி, வேலை)

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே! - ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் தன்னையே பாயாக விரித்து, படமெடுக்கும் பாம்பினையே பஞ்சணையாகப் பள்ளிக் கொள்ளும் திருவரங்கநாதனுக்கு நாம் பல்லாண்டு கூறுவோமாக! ( பைந்நாகணை - பைந்நாக அணை - படமெடுக்கும் நாகத்தினை பஞ்சணையாகக் கொள்ளுதல்)

பதவுரை:

எங்கள் இறைவனே, திருவரங்கநாதா! நீ உடுத்திக் களைந்துபோட்ட, உன் திருமேனித் தொடர்புடைய பட்டாடையையே நாங்கள் உடுத்தி, நின் திருவமுது சுவைத்தபின், எஞ்சிய உணவையே நாங்களும் உண்டு, நீ களைந்துவிட்ட திருத்துளசி மாலைகளையே நாங்களும் அணிந்து கொண்டு, நீ எத்திசையில் என்ன வேலையிட்டாலும் அவற்றினை விரைந்து முடிக்கும் அடியவர்களான நாங்கள், படமெடுத்தாடும், ஐந்து தலைகளைக் கொண்ட ஆதிசேஷனைப் பஞ்சணையாகக் கொண்டு, அதன் மேல் துயில்கொள்ளும் திருவரங்கப் பெருமானே, உமக்குகந்த திருவோணத் திருநாளில் நாங்கள் பல்லாண்டு பாடுவோமே!

6 comments:

Unknown said...

Arumai Arumai.

தமிழ் said...

வணக்கம் விவேக், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்! தொடர்ந்து வந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எம்பெருமானுக்கு ஆட்பட்டவர்கள், அவனைக் கணவனாகக் கொண்ட குலமகளைப் போலவே இருப்பார்கள்!

அவன் உடுத்துக் களைந்ததை உடுத்து
அவன் உண்டு சுவைத்ததைச் சுவைத்து...
அவன் சூடிக் களைந்ததைச் சூடி...
இப்படி ஒரு காதல்! :))

ஆனால் ஒரே ஒருத்தி மட்டும் தான் சூடிக் களைந்ததை அவனுக்குக் கொடுத்தாள்! சூடிக் கொடுத்த சுடர் கோதை ஆனாள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவரங்கநாதா! உனக்கான திருநட்சத்திரமான திருவோணத் திருநாளில்//

அரங்கனின் நட்சத்திரம் ரேவதி! பதிவில் திருத்தி விடுங்கள்!

திருவோணத் திருவிழவில்-ன்னு நரசிங்க பாசுரத்திலும் வந்ததல்லவா? அதே பொருள் தான் இங்கும்! அவனுக்கு உகந்த திருவோண நாள் புறப்பாட்டில் வந்து எல்லாரும் பல்லாண்டு கூறுகிறோம்!

தமிழ் said...

//ஆனால் ஒரே ஒருத்தி மட்டும் தான் சூடிக் களைந்ததை அவனுக்குக் கொடுத்தாள்! சூடிக் கொடுத்த சுடர் கோதை ஆனாள்! :)//

ஆடிப்பூரம் அன்னிக்கு கோதைக்குப் பிறந்தநாள்!! இன்னிக்குத்தான்...

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே*
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே*
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே*
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே*
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே*
உயரரங்கர்க்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே*
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே*
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பாதங்கள் வாழியே.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர் - நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

தமிழ் said...

//அரங்கனின் நட்சத்திரம் ரேவதி! பதிவில் திருத்தி விடுங்கள்!//

திருத்தியாகிவிட்டது கேயாரெஸ்!!

மிக்க மிக்க நன்றி!!