Tuesday, July 28, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து!
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் - 2

ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்*
நாடுவார் நம்பிரான் எங்குத்தானென்பார்*
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே.

பொருள்:

இந்த பாடல், கண்ணன் பிறந்ததால், ஆயர்களும் ஆய்ச்சியரும் எவ்விதம் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர் என்று நம் கண் முன் காட்டுவதாய் உள்ளது.

ஓடுவார் - கண்ணன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஆயர் குல ஆடவரும் பெண்டிரும் நந்தகோபருடைய மாளிகையை நோக்கி விரைந்து ஓடினர்;
விழுவார் - முதல் பாடலில் சொல்லியிருந்த வண்ணம், எண்ணெய் சுண்ணம் கலந்த கண்ணன் முற்றத்தில் இருக்கும் அளற்றில்(சேற்றில்) வழுக்கி விழுந்தனர்; ஆயினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாது, விரைந்தெழுந்து கண்ணனை நோக்கி ஓடினர்;
உகந்தாலிப்பார் - பெரும் மகிழ்ச்சி ஆரவாரக் கூச்சல் போட்டு ஒருவரை ஒருவர் உணர்ச்சிப் பெருக்கோடு தழுவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
(உகந்தாலிப்பார் - உகந்து+ஆலிப்பார் - விரும்பி, மகிழ்ச்சியோடு + கூச்சலிடல், ஆரவாரம் செய்தல்)


நாடுவார் நம்பிரான் எங்குத்தானென்பார் - நாடுவார் நம்பிரான் எங்குற்றானென்பார் - மாளிகைக்குள் வந்ததும், எங்கே எங்கள் தலைவன்? எங்கே எங்கள் தலைவன்? எங்கள் தலைவன் எங்கிருக்கின்றான்? என்று கண்ணன் பிறந்திருந்த, இடத்தைத் தேடிச் செல்வர்.

பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று - குழந்தைக் கண்ணன் பிறந்துவிட்ட மகிழ்ச்சி வெள்ளப் பெருக்கில், அவனைத் துதித்துப் போற்றி இன்சுவைப் பாடல்கள் பாடினர்; பல வகையான இசை வாத்தியங்கள் முழங்கின; ஏறுகோட்பறையை உணர்ச்சிப் பொங்கக் கொட்டி முழக்கினர்

ஆடுவார்களும் ஆயிற்று ஆயர்பாடியே - இசைவாத்தியங்களின் இன்னிசைக்கேற்ப பலர் நடனம் புரிந்தனர்; இப்படியாக ஆடலும் பாடலும் மிகுந்தொலிக்கும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கிப் போயிருந்தது ஆயர்பாடி.

பதவுரை:

கண்ணன் பிறந்ததும், ஆயர்பாடியில் இருந்த அனைவரும் எவ்வாறு ஆரவாரித்தனர் என்பதை விளக்குவதாய் உள்ளது இந்த பாடல்:

கண்ணன் பிறந்ததும், ஆயர்பாடியில் இருந்த அனைவரும் அவனைக் காண்பதற்காக விரைந்து, நந்தகோபருடைய மாளிகைக்கு ஓடி வந்தனர். அப்பொழுது அவர்கள், மாளிகை முற்றத்தில் இருந்த எண்ணெயும் சுண்ணமும் கலந்த சேற்றில் வழுக்கி விழுந்தனர்; அதையும் அவர்கள் பொருட்படுத்தாது விரைந்து எழுந்து ''அவர்களின் தலைவன் எங்கு இருக்கின்றான்?'' என்று கண்ணன் பிறந்திருந்த இடத்தைத் தேடிச் சென்றனர்; குழந்தை கண்ணனைக் கண்ட ஆயர்கள் அனைவரும் அவனைத் துதித்து பாடியும், பலவகையான இசைக்கருவிகளை முழக்கியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உகந்து+ஆலிப்பார்
ஆலிப்பார் என்றால் தழுவிக் கொள்ளுதலா இல்லை ஆரவாரம் செய்தலா?

ஏறுகோட்பறை-ன்னா என்ன தமிழ்?

தமிழ் said...

//உகந்து+ஆலிப்பார்
ஆலிப்பார் என்றால் தழுவிக் கொள்ளுதலா இல்லை ஆரவாரம் செய்தலா? //

இங்கு, ஆலிப்பார் என்றால், மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர் என்றும், மகிழ்ச்சியுடன் தழுவிக்கொண்டனர் என்றும் கூட பொருள் கொள்ளலாம். மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் கரு.

//ஏறுகோட்பறை-ன்னா என்ன தமிழ்?//
இது ஒரு வகையான இசைக்கருவி. ஐந்திணைகளில், முல்லைத் திணைக்கு உரித்தான இசைக்கருவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி தமிழ்!
ஏறுகோட்பறை முல்லைத் திணைக்கு உரித்தான இசைக்கருவியா? அட, கண்ணன் முல்லைத் திணைக்காரன் அல்லவா? பொருந்தி வருகிறது!

தமிழ் said...

திணை இரண்டு வகைப்படும்:
புறத்திணை
அகத்திணை.

புறத்திணை என்பது பன்னிரு வகைப்படும். அவை,
வெட்சி நிரை கவர்தல்
மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேற் செல்லுதல் வஞ்சியாம்
உட்காது எதிரூன்றல் காஞ்சி
எயில் காத்தல் நொச்சி - அது
வளைத்தல் ஆகும் உழிஞை
அதிரப் பொருவது தும்பையாம்
போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்

இந்த ஒன்பதோடு, பாடாண்திணை, கைக்கிளைத் திணை, பெருந்திணை ஆகிய மூன்றும் புறத்திணை ஆகும்.

கைக்கிளைத் திணை என்பது ஒருதலைக் காதல்,
பெருந்திணை என்பது பொருந்தா காதல் ஆதலால், இவை இரண்டும் அகத்திணையில் வகைப்படுத்தப்படவில்லை.

அகத்திணை ஐந்து வகைப்படும். அவை,
குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல்,
பாலை.

முல்லைத் திணை:

முதற்பொருள் என்பது, திணைக்குரிய நிலமும், பொழுதும் ஆகும். பொழுது-- பெரும்பொழுது
சிறுபொழுது என இரண்டு வகைப்படும்.

கருப்பொருள் என்பது, திணைகளின் இயல்புகளுக்கு ஏற்ப அங்கு இருக்கும் பொருள்கள் மற்றும் மக்கள் சூழல் ஆகியவற்றைக் குறிக்கும். திணைக்குரிய கருப்பொருள்கள் பதினான்கு வகைப்படும்.

உரிப்பொருள் என்பது மக்களின் மனநிலையைக் குறிப்பதாகும். அதாவது, அவர்களின் உணர்வுகளைக் குறிக்கும்.

முல்லைத்திணை:

முதற்பொருள்-
நிலம் - காடும் காடு சார்ந்த இடமும்
பொழுது- பெரும்பொழுது - கார் காலம்
சிறுபொழுது - மாலை

கருப்பொருள்-

தெய்வம் - திருமால்
மக்கள் - ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர், குறும்பொறை நாடன், கோவலர், தோன்றல், கிழத்தி, மனைவி, பொதுவர், பொதுவியர்.
பறவை - காட்டுக் கோழி
விலங்கு - முயல், மான்
ஊர் - பாடி, பள்ளி, சேரி
நீர் - சுனைநீர், ஆற்றுநீர்(காட்டாறு)
பூ - முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்
மரம் - கொன்றை, காயா, குருந்தம்
உணவு - முதிரை, வரகு, சாமை
பறை - ஏறுகோட்பறை
யாழ் - முல்லையாழ்
பண் - முல்லைப்பண்

உரிப்பொருள்:

காத்திருத்தலும், இருத்தல் நிமித்தமும்

நாடி நாடி நரசிங்கா! said...

Om namo narayanaaaaaaaaaaaaaaaaaaaaya!
Pala naatkal alwarkal pala paasurangalukku artam teriyaamal
Irunda emmai ponra siraargalukku padattudan koodiya vilakkangal
Koduttu varum tangallai paaraatta tagudiyillai emakku……….
4000 paasurangalaiyum vilakkuveergal enra nambikkaiyudan…….
Perumal arulodum aasiyodum valarga tangal sevai….
Om namo narayanaaaaaaaaaaaaaaaaaaaaaya!

regards
http://narasimmah.blogspot.com

தமிழ் said...

மிக்க நன்றிகள் திரு. இராஜேஷ், மனிதர்களின் வாழ்வில், இறுதி வரை வரும் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று, "நம்பிக்கை". அதனால்தானே, எம்பெருமான் என்றாவது அருளிச்செய்வான் என்ற நம்பிக்கையுடன் எல்லோரும் பயணிக்கின்றோம். அதே போல, நானும், நானாகப் பாடாவிட்டாலும், அடியார்களாகிய, ஆழ்வார் பெருமக்கள் பாடியருளிச்சென்றதை, மீண்டும், மனமாறப் பாடி, அதை என் கருத்துக்கு புரியும் அளவுக்கு, எழுதிப் பழகுகிறேன் என்றுதான் கூற வேண்டும். அவைகள் தாங்கள் மற்றும் என் போன்ற பெருமாளின் "சிறார்களுக்கு" புரிகின்றது என்றால், அதற்காக, மிக்க மகிழ்ச்சி!

தாங்களைப் போன்றோரின் ஆசிகளும், ஊக்கமும் இருக்கும்போது, 4000 பாக்களும் எழுதுவிடுவோம்!

அன்புடன், தமிழ்

குமரன் (Kumaran) said...

ஆலிங்கணம் செய்வார் என்பதையே ஆலிப்பார் என்று பெரியாழ்வார் சொன்னதாகப் படித்திருக்கிறேன் தமிழ். அதனால் இங்கே உகந்து ஆலிப்பார் என்ற சொற்றொடர் மகிழ்ச்சியுடன் தழுவிக்கொள்வதைத் தான் குறிக்கிறது என்று எண்ணுகிறேன்.

ஏற்கோட்பறையைப் பற்றி கேட்டவுடன் திணை விளக்கம் தந்தீர்கள் பாருங்கள். எதிர்பார்க்கவில்லை. அருமை. :-)

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

ஆலிங்கணம் செய்வார் என்பதையே ஆலிப்பார் என்று பெரியாழ்வார் சொன்னதாகப் படித்திருக்கிறேன் தமிழ். அதனால் இங்கே உகந்து ஆலிப்பார் என்ற சொற்றொடர் மகிழ்ச்சியுடன் தழுவிக்கொள்வதைத் தான் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். //

ஆலித்தல் என்றால் களித்தல், மகிழ்தல், ஒலித்தல் என்று பொருள்.

ஆலிப்பு என்றால் ஆரவாரம் என்று பொருள்.

எனக்கு என்ன சொல்லணும் னு தெரியலையே... ;-(( இப்ப நான் என்ன சொல்லனும்...

தமிழ் said...

ஏற்கோட்பறையைப் பற்றி கேட்டவுடன் திணை விளக்கம் தந்தீர்கள் பாருங்கள். எதிர்பார்க்கவில்லை. அருமை. :-)//

அது இஸ்கூல் ல்ல படிச்சது... கொஞ்சம் தூசு தட்டி, விக்கிய பாத்து எழுதுனது... ;-))