Saturday, August 8, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 3

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்*
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்*
ஆணொப்பார் இவன் நேரில்லைகாண்* திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே.

பொருள்:

இந்த பாசுரத்தில், பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார் என்றால் - குழந்தைக் கண்ணனைப் பார்க்கச் சென்ற, ஆயர் குல மக்கள் அவனைக் கண்டதும் அவர்கள் என்னவெல்லாம் பேசிக் கொண்டனர் என்பதை கூறுகிறார். பொதுவாகவே ஏதேனும் ஒரு நிகழ்ச்சி என்றால், அங்கு ஒரு சலசலப்பு, ஒரு பரபரப்பு இருக்கத்தானே செய்யும். அதுவும், தெய்வமே குழந்தையாய் பிறந்துவிட்ட இடத்தில் இந்த சலசலப்பு, பரபரப்புக்குப் பஞ்சமிருக்குமா என்ன?? அந்த சலசலப்பைத்தான் அவர் என்னன்னு விளக்கமாக சொல்கிறார்.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் - பேணிச் சீருடையா??? என்னது கண்ணன் பிறந்த உடனேயே பாதுகாத்து வெச்சிருந்த சீருடை(uniform)யை மாட்டிவிட்டுட்டாங்களா??? அப்படின்னு குதர்க்கமா நினச்சிடாதீங்க.... :-))

கம்சனிடமிருந்து பாதுகாக்கப்பட்ட, பலவித சிறப்புகள் நிறைந்த, புகழ் மிகுந்த குழந்தை கண்ணன் பிறந்த மாளிகைக்கு (பேணி - பாதுகாத்தல்; சீருடைப் பிள்ளை - சீர் உடைய குழந்தை --- சீர் - சிறப்பு, புகழ், செழுமை; பிறந்தினில் - பிறந்த இல்லத்தினுள் )

காணத்தாம் புகுவார் புக்குப் போதுவார் - குழந்தை கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, கண்ணனைப் பார்க்கச் செல்பவர்களும், அவனைப் பார்த்து, மகிழ்ந்து அருள் கூறிவிட்டுத் திரும்பிவருபவர்களும் (புகுவார் - மாளிகைக்குள் செல்பவர்கள்; புக்கு - புகுந்து, நுழைந்து; போதுவார் - வருவார், திரும்ப வருபவர்கள்)

ஆணொப்பார் இவன் நேரில்லைக் காண் - குழந்தையைப் பார்ப்பவர்களும், பார்த்துவிட்டு வருபவர்களும் இவனைப் போன்ற ஒரு ஆண்மகன் இந்த உலகில் எங்குமே இல்லை என்று வியந்து கூறினர். அதாவது, இக்குழந்தைக்கு ஒப்புமை சொல்லக்கூடிய அளவிற்கு எந்த ஆண்மகனும் இதுவரை பிறந்ததே இல்லை; அத்தகைய ஒரு தனித்துவம் மிகுந்த இறையொளி வீசும் அருட்குழந்தை அவர்கள் குலத்தில் பிறந்துள்ளான் என்று பெருமையுடன் பேசிக் கொண்டனர்.

திருவோணத்தான் உலகாளும் என்பார்களே - திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவனான இவன், இந்த ஏழு உலகங்களையும் ஆளப்போகிறான் என்றும் அவர்கள் பேசிக் கொண்டனர்.

பதவுரை:

கம்சனிடமிருந்து பாதுகாக்கப்பட்ட, இறையொளி வீசும், சிறந்த புகழ்களை உடைய குழந்தையான கண்ணன் பிறந்திருந்த நந்தகோபருடைய மாளிகைக்கு, குழந்தையைப் பார்க்கச் சென்றவர்களும், பார்த்துவிட்டுத் திரும்புவர்களும் என்னென்ன பேசிக் கொண்டார்கள் என்றால், ''இந்த உலகத்திலேயே இதுவரைக்கும், இக்குழந்தைக்கொப்பான ஆண்மகன் பிறக்கவேயில்லை. திருவோணத்தில் பிறந்தவனான இவன் அகில உலகத்தையும் ஆளப்போகிறான்'' என்று பேசிக் கொண்டனர்.

17 comments:

Srivasudha said...

thamizh maamaa, ongaloda blog romba nannaa irukku.
vasudha

தமிழ் said...

ரொம்ப தேங்க்ஸ் டி செல்லம்! அடிக்கடி வந்து படிச்சி ஒங்க அப்பாவுக்கு சொல்லு!

தமிழ் மாமா!

Anonymous said...

Jai sriram
superb sir., how is it are you reading paasurams and explain in your knowledge or you read any books and type in your blog. tell me which book i also reading sir

தமிழ் said...

நன்றிகள் திரு ஸ்ரீகமலக்கண்ணியம்மன் அவர்களே,

//how is it are you reading paasurams and explain in your knowledge or you read any books and type in your blog. tell me which book i also reading sir//

பாசுரங்களைப் படித்து, எனக்குத் தெரிந்த விளக்கங்களுடன், இன்னும் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, கருத்துகளைச் சேர்க்கின்றேன். அவைகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், மேல் விளக்கங்களுக்கும், பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு விளக்கமளிக்கின்றோம். சில நண்பர்கள், அவர்களுடைய விளக்கங்களையும் பின்னூட்டுகின்றார்கள். அவைகள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.

Anonymous said...

Your explaining so much in one paasuram sir
Realy I seen more number of devotional blog
And search anybody feeding paasuram feeding
I think your first person feeding paasuram meanings in internet
Please copywrite vaangikonga
Totally 4000 thousand prabhandam apx ur feeding monthly 10 paasuram
Take time will be above 30 years . u explain paasuram and padavurai its simple and take time less
Iam sorry seekiram padittu vidavendu enra aasaiyil koorivitten.
regards
rajesh narayanan
http://narasimmah.blogspot.com
http://srikamalakkanniamman.blogspot.com

தமிழ் said...

இராஜேஷ், நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. Copy right வாங்க முயற்சிக்கின்றோம். தங்களைப் போன்ற இன்னும் ஏராளமான ஆண்மீகப் பதிவர்களும், அதில் ஆர்வமுள்ளவர்களும், வந்து படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மற்றும், தமிழில் எவ்வளவு சொற்களும், பொருள்களும் குவிந்துள்ளன என்று எண்ணும்போது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் தாங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

தமிழ்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பேணிச் சீருடை விளக்கம் நல்லா இருக்கு தமிழ்! :)
நான் கூட கண்ணனுக்கு பிறந்த மேனி யூனிஃபார்மோ-ன்னு நினைச்சிட்டேன்! :)

//காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்//

//(புகுவார் - மாளிகைக்குள் செல்பவர்கள்; புக்கு - புகுந்து, நுழைந்து; போதுவார் - வருவார், திரும்ப வருபவர்கள்)//

போதுவார் என்றால் திரும்ப வருபவர் என்றா பொருள்?
நீராடப் போதுவீர், போதுமினோ? -ன்னு கேட்கிறாளே! நீராடப் போறா மாதிரி-ல்ல இருக்கு? நீராடி முடிச்சி வந்தா மாதிரி இல்லையே! :)

எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக் கொள்-ன்னு வேற வருதே!
கொஞ்சம் வெளக்கத்தைச் சரி பாருங்க அண்ணாச்சி! :)

தமிழ் said...

பேணிச் சீருடை விளக்கம் நல்லா இருக்கு தமிழ்! :)
நான் கூட கண்ணனுக்கு பிறந்த மேனி யூனிஃபார்மோ-ன்னு நினைச்சிட்டேன்! :)//

ஹி ஹி ஹி, ரொம்ப நன்றிங்க அண்ணாச்சி! விளக்கம் நல்லாருக்குன்னு கிண்டல் செய்ததற்கு. :-))

இது நான் விளக்கம் னு சொல்லலை. ஒரு சின்ன துண்டு போட்டு வெச்சேன். வித்தியாசமா இருக்கட்டுமே ன்னு... ஈஈஈஈஈ...

தமிழ் said...

//(புகுவார் - மாளிகைக்குள் செல்பவர்கள்; புக்கு - புகுந்து, நுழைந்து; போதுவார் - வருவார், திரும்ப வருபவர்கள்)//

போதுவார் என்றால் திரும்ப வருபவர் என்றா பொருள்?
நீராடப் போதுவீர், போதுமினோ? -ன்னு கேட்கிறாளே! நீராடப் போறா மாதிரி-ல்ல இருக்கு? நீராடி முடிச்சி வந்தா மாதிரி இல்லையே! :)//

ஆமாங்க அண்ணாச்சி, இந்த இடத்துல, நந்தகோபருடைய மாளிகைக்குள்ள போய் குழந்தையை பார்த்தவங்களும், ''பார்த்துவிட்டுத் திரும்பினவங்களும்'' அப்படின்னு தான் வரும். இது சரிதான்.

போதுதல் ன்னா - செல்லுதல், அகலுதல் ன்னு பொருள். :-))

தமிழ் said...

போதுவார் என்றால் திரும்ப வருபவர் என்றா பொருள்?
நீராடப் போதுவீர், போதுமினோ? -ன்னு கேட்கிறாளே! நீராடப் போறா மாதிரி-ல்ல இருக்கு? நீராடி முடிச்சி வந்தா மாதிரி இல்லையே! :)//

நீங்க சொல்றது சரிதான் அண்ணாச்சி. தமிழில் பல சமயம், நாம பக்கத்துல இருக்கற சொற்களைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.

நீராடப் போதுவீர் ன்னாக்க, நீராடச் செல்லுங்கள் ன்னு பொருளாகும். அதுவே,

நீராடிப் போதுவீர் ன்னாக்க, நீராடிவிட்டு செல்லுங்கள் அப்படி ன்னு வரும். சரியா??

இந்த பாசுரத்துலயும் அப்படித்தான், ''புகுவார் புக்குபோதுவார்'' - மாளிகைக்குள் புகுபவர்களும்ய புகுந்து செல்பவர்களும்... :-)) சரிதானே, அண்ணாச்சி!

எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக் கொள்-ன்னு வேற வருதே!
கொஞ்சம் வெளக்கத்தைச் சரி பாருங்க அண்ணாச்சி! :)//

எல்லே! இளஞ்சிங்கமே! இன்னும் உறங்குதியோ! போந்து ன்னாக்க 'வந்து' ன்னு பொருள்!

''எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்''

போந்தாரோ ன்னாக்க, போயிட்டாங்களா ன்னு பொருள் இல்ல. எல்லாரும் போந்தாரோ - எல்லாரும் வந்துவிட்டார்களோ?(வந்துவிட்டார்களா)

போந்தார் போந்தெண்ணிக் கொள் - வந்துட்டாங்க, வந்து நீயே கணக்குப் பண்ணிக்க...

சரிங்களா அண்ணாச்சி!! நீங்க தான் தோழியோட தோழனாச்சே! அதனால என்னவிட இந்த பாசுரத்துக்கல்லாம் பொருள் உங்களுக்குத்தான் நல்லாவே தெரியுமே! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

போதுதல் = வருதல்!

நல்லாச் சொன்னீங்க தமிழ்/முகில்! :)
சும்மானாங்காட்டி வெளையாடினேன்!
போதுதல் பற்றிய விவாதம், குமரன் பதிவில்...இங்கே!

//நீராடப் போதுவீர் ன்னாக்க, நீராடச் செல்லுங்கள் ன்னு பொருளாகும்.//

இல்லை, அப்பவும் வருதல்-ன்னு தான் பொருள்! சும்மானா உங்களைக் கன்ஃப்யூஸ் பண்ணக் கேட்டேன்! அப்பவும் உறுதியா விளக்கத்தில் நிக்கறீங்களா-ன்னு பார்க்க! :))))

நீராடப் போதுவீர் = நீராட வந்திருப்பவர்களே,
போதுமினோ? = வரீங்களா? கெளம்பலாமா? :)

எல்லாரும் போந்தாரோ-க்கு நீங்களே சொல்லிட்டீங்க!

விண்ணீல மேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் "போந்தானே"
-என்றும் இன்னொரு இடத்தில் கோதை பாடுகிறாள்!

போதுதல் என்பதற்கு ஒழுகுதல் என்ற பொருளும் சில இடங்களில் உண்டு!
"அறன் அறிந்து போதுதல் சான்ற வர்க்கெல்லாம் முறைமை" என்பது பழந்தமிழ்ப் பாட்டு (கலித்தொகை என்று நினைக்கிறேன்)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

போதுதல் = வருதல்!

நல்லாச் சொன்னீங்க தமிழ்/முகில்! :)
சும்மானாங்காட்டி வெளையாடினேன்!
போதுதல் பற்றிய விவாதம், குமரன் பதிவில்...இங்கே!//

நான்தான் அப்பவே சொன்னன் ல்ல, தோழியோட தோழனுக்குத் தெரியாம இருக்குமா என்ன... ;-))

இணைப்புக்கு நன்றி, இரவி!!

தவறைத் திருத்தியமைக்கும் மிக்க நன்றி, இரவி !! ;-))

இரவிக் கெதிர் மின்மினி ஆடுவதோ!! ன்னு தான் தோணுது. உங்க (இரவி, குமரன்)வலைப்பூவப் பாத்தா... இருந்தாலும் ஒரு சிறுமுயற்சி.... ;-))

அதனால், பிழைகளிருப்பின் பொறுத்துத் திருத்தியருள வேண்டுகிறோம்!!

குமரன் (Kumaran) said...

இவரு திருவோணத்தானா? நான் இவரு ரோகிணியில பொறந்தவர்ன்னு இல்லை நெனைச்சுக்கிட்டு இருக்கேன். பெரியாழ்வார் தப்பா சொல்றாரோ?

தமிழ் said...

@KRS...
நீராடப் போதுவீர் ன்னாக்க, நீராடச் (செல்லுங்கள்)

ன்னு பொருளாகும். அதுவே,

நீராடிப் போதுவீர் ன்னாக்க, நீராடிவிட்டு (செல்லுங்கள்) அப்படி ன்னு வரும். சரியா??//

இந்த வரிகள் தவறான பொருளுடன் உள்ளன... பிழைக்கு மன்னிக்கவும்!!

சரியான பொருள், நன்றி இரவி....
''நீராடப் போதுவீர் = நீராட வந்திருப்பவர்களே,
போதுமினோ? = வரீங்களா? கெளம்பலாமா? ''
------------------------------
போந்து ன்னாக்க 'வந்து' ன்னு பொருள்!
------------------------------

போதுதல் = வருதல்!

நல்லாச் சொன்னீங்க தமிழ்/முகில்! :)
சும்மானாங்காட்டி வெளையாடினேன்!

இந்த மிகப் பெரிய தப்பைப் பண்ணினவ முகில் தான்... அவங்க இல்ல.... ;-))

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

இவரு திருவோணத்தானா? நான் இவரு ரோகிணியில பொறந்தவர்ன்னு இல்லை நெனைச்சுக்கிட்டு இருக்கேன். பெரியாழ்வார் தப்பா சொல்றாரோ?//

அதுதாங்க எனக்கும் குழப்பமா இருக்கு... இப்ப இரண்டாவது திருமொழி ல்ல ஆறாவது பாட்டுல்ல, அத்தத்தின் பத்தாம் நாள் ன்னு சொல்றாரு... இதல்லாம் பத்தி எனக்கு ஏதும் தெரியல..

தெரிஞ்சவங்ககிட்டத் தான் கேக்கணும்... நீங்களும், இரவியும் தீர்த்து வைப்பீங்கன்னு பார்த்தா.. நீங்களே கேள்வி கேக்குறீங்களே... ;-)))

குமரன் (Kumaran) said...

இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ?

இரவியே வந்து சொல்லட்டும். பந்தல்ல இப்ப போட்டிருக்கிற ஓணம் சிறப்பு இடுகையில பெருமாள் திருவோணத்தான்னு அவர் சொல்லியிருக்காரு. அதனால நம்ம ஐயத்தைத் தீர்க்க சரியான ஆளு அவரு தான். :-)

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ?

இரவியே வந்து சொல்லட்டும். பந்தல்ல இப்ப போட்டிருக்கிற ஓணம் சிறப்பு இடுகையில பெருமாள் திருவோணத்தான்னு அவர் சொல்லியிருக்காரு. அதனால நம்ம ஐயத்தைத் தீர்க்க சரியான ஆளு அவரு தான். :-)//

பெருமாள் திருவோணத்தான் ஆக இருக்கலாம்!! ஆனால், திருவோணத்தான் உலகாளுமென்பார்களே ன்னு கண்ணனைத்தான பெரியாழ்வார் சொன்னாரு.

அத்தத்தின் பத்தாம் நாள் ன்னா முன்னாடி பத்து நாளா?? பின்னாடி பத்து நாளா?? thats my question... :-)) english correcta?? :-))