Monday, July 27, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து!
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்
(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
கலிவிருத்தம்

இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!


வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்றே.

பொருள்:

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளமைந்த மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் - கண்ணன், கேசவன், நம்பி பிறந்த ஈனில்; அதாவது, அழகிய ஒளி நிறைந்த கண்களை உடையவனே, கேசி என்னும் குதிரை வடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனே, கேசவா, அண்டக் குலத்துக்கதிபதியானவனே! நீ திருவவதாரம் புரிந்த கோகுலமானது,

கண்ணன் - ஒளி நிறைந்த கண்களை உடையவன்;
கேசவன் - கேசி என்னும் குதிரை வடிவில் இருந்த அசுரனை வதம் புரிந்தவன். கிருஷ்ணாவதாரத்தில், கண்ணனைக் கொல்வதற்காக கேசி என்னும் அசுரனை அனுப்பினான். ஆனால், இறைவனோ அந்த அசுரனை வதம் புரிந்து கேசவன் என்னும் பெயர் பெற்றான்;
பிறந்தினில் - பிறந்த ஈனில் - ஈன் அப்படின்னா ஈனுதல் - பிரசவித்தல்; இல் - இல்லம், மனை, வீடு - கண்ணன் பிறந்த கோகுலத்தை இங்கு குறிக்கிறது.

கண்ணன் பிறந்தது மதுரா நகரின் சிறைச்சாலையில் என்றாலும், அது யசோதாவுக்குத் தெரியாது. அவள் கண்ணன் தனக்குப் பிறந்த குழந்தை என்றே நினைத்திருந்தாள்.

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட - கோகுலத்தில் கண்ணன் பிறந்த நன்னாளை முன்னிட்டு ஆயர்களனைவரும் நறுமண எண்ணெயையும், வண்ணப் பொடிகளையும் எதிர்படுவோர் அனைவர் மேலும் ஒருவர் மேல் ஒருவர் தூவி மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.

கண்ணன் முற்றம் கலந்து அளறாயிற்று - கோகுலத்தில் கண்ணன் பிறந்திருந்த நந்தகோபர் மாளிகையின் பரந்து விரிந்திருந்த முற்றமானது, நறுமண எண்ணையும் வண்ணப் பொடிகளும் கலந்ததினால் சேறாய் மாறியிருந்தது! (முற்றம் - வீட்டின் முகப்பில் காற்றும், ஒளியும் வருவதற்கு ஏதுவாய் அமைத்த ஒரு பரந்த திறந்த இடம்; அளறு - சேறு )

கண்ணன் பிறந்தது, வடமதுராவில், ஆனா பெரியாழ்வாரோ திருக்கோட்டியூரைக் குறிப்பிடுகிறாரே என்று கேட்கிறீங்களா??? அதாவது, திருக்கோட்டியூர் பெருமானான பேரழகுமிக்க, சாந்த சொரூபியான ஸ்ரீ சௌமியநாராயணரையே குழந்தைக் கண்ணனாகப் பாவித்து, பிள்ளைத்தமிழ் பாடுகிறார்.

பதவுரை:

ஒளி நிறைந்த நீண்ட கண்களையுடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணன் பிறந்த திருநாளை முன்னிட்டு, அழகிய, நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த, உயரமான மாளிகைகள் நிறைந்த திருக்கோட்டியூரானது, கோகுலத்தை மிஞ்சும் வண்ணம் பேரெழில் பெற்றது; ஆயர்களும், ஆய்ச்சியரும், தங்கள் முன் எதிர்படுவோர் அனைவர் மீதும் நறுமண எண்ணையையும், வண்ணப் பொடிகளையும் தூவிக் குதூகலித்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி ஆரவாரச் செய்கையினால், கண்ணன் வீட்டின் பரந்த முற்றமும் நறுமண எண்ணெயும், வண்ணப் பொடியும் கலந்த சேறாய் மாறியிருந்தது.

பெரியாழ்வார் திருமொழியின் இந்த முதல் பத்து முழுதும் திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் மீது பாடப்பட்ட மங்களாசாசனம் ஆகும்.

மங்களசாசனம் என்றால் ஏதேனும் திருத்தலத்தில் இருக்கும் தெய்வத்தைத் தரிசித்து, அந்தத் திருத்தலத்தையும், அங்கு இருக்கும் தெய்வத்தையும் பற்றிப் பாடுவது.

18 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வந்தாச்சே....
இன்னிக்கி மொதல்லயே கேள்வி தான்! :)

//வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்//

திருக்கோட்டியூர்-லயா கண்ணன் பொறந்தான்? வட மதுராவில் சிறைக்குள்ள-ல்ல பிறந்தான்? அப்படி இருக்க பெரியாழ்வார் எப்படி இப்படி மாத்திப் பாடலாம்? திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்...-ன்னு எப்படிச் சொல்லலாம்? சொல்லுங்க தமிழ் சொல்லுங்க! :)))

தமிழ் said...

என்ன ரவி சார், இன்னைக்கு முழுசா பாட்டை படித்து விட்டீர்கள், ஆனால், பதிவைப் படிக்கவில்லை போலும்!!!!!! :))

தாங்களின் வினாவிற்குப் பதிவிலிருந்தே விடை, இதோ...

//கண்ணன் பிறந்தது மதுரா நகரின் சிறைச்சாலையில் என்றாலும், அது யசோதாவுக்குத் தெரியாது. அவள் கண்ணன் தனக்குப் பிறந்த குழந்தை என்றே நினைத்திருந்தாள்.//

//கண்ணன் பிறந்தது, வடமதுராவில், ஆனா பெரியாழ்வாரோ திருக்கோட்டியூரைக் குறிப்பிடுகிறாரே என்று கேட்கிறீங்களா??? அதாவது, திருக்கோட்டியூர் பெருமானான பேரழகுமிக்க, சாந்த சொரூபியான ஸ்ரீ சௌமியநாராயணரையே குழந்தைக் கண்ணனாகப் பாவித்து, பிள்ளைத்தமிழ் பாடுகிறார்.//

என்ன சார் ஓகேதானே! வேறு விளக்கங்கள் இருப்பின், தயவுசெய்து பகிர்ந்துகொள்ளவும்.

வருகைக்கும், வினவியதற்கும் நன்றிகள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்த சார் மோர் எல்லாம் வேணாம்! உங்கள் அடியேன் பொடியேனைப் பாத்து இப்படிச் சொல்லலாமா?

//இன்னைக்கு முழுசா பாட்டை படித்து விட்டீர்கள், ஆனால், பதிவைப் படிக்கவில்லை போலும்!!!!!! :))//

ஹா ஹா ஹா
அதெல்லாம் படிக்காம இருப்போமா? Offline-ல சேமிச்சிப் பேருந்திலாச்சும் படிப்போம்-ல்ல?

யசோதையைப் பொறுத்தவரை அவன் இல்லத்தில் தான் பிறந்தான்! சிறையில் அல்ல! அதனால் பிறந்தினில் என்பது ஓக்கே!

நான் கேட்டது,
பெரியாழ்வார் ஏன் திருக்கோட்டியூரை மட்டும் அப்படிப் பாவிக்கணும்?
அவரு ஊரு வில்லிபுத்தூரு! பக்கத்துலயே வேறு பல கோயில் எல்லாமும் இருக்கு! எதுக்கு அம்புட்டு தூரம் போயி திருக்கோட்டியூரைப் பாவிக்கணும்? உங்கள இன்னிக்கி விடறதா இல்ல! :))

தமிழ் said...

//இந்த சார் மோர் எல்லாம் வேணாம்! உங்கள் அடியேன் பொடியேனைப் பாத்து இப்படிச் சொல்லலாமா? //

கண்ணா, ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ....

உலகத்துல உன்னவிட பெரியவன் யாரும் கிடையாது, அதனால நீ ஆருக்கும் பயப்படாத... அதே மாதிரி உன்னவிட சின்னவன் ஆரும் கிடையாது, அதால நீ ஆரையும் தாழ்வா நினைக்காத.... இதுதான் சார் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியப் பெருமாள், சந்திரனுக்கு சொன்னது... இதுதான் சார் அவனுக்கு வேதவாக்கு....

இத நாமலும் எடுத்துக்கலாமே... அதால நம்மக்கிட்ட பேசும்போது அடியேன், பொடியேன், சட்னியேன், சாம்பாரேன், குருமாயேன் ல்லாம் வேணாமே... :-))))

தமிழ் said...

//இன்னைக்கு முழுசா பாட்டை படித்து விட்டீர்கள், ஆனால், பதிவைப் படிக்கவில்லை போலும்!!!!!! :))//

ஹா ஹா ஹா
அதெல்லாம் படிக்காம இருப்போமா? Offline-ல சேமிச்சிப் பேருந்திலாச்சும் படிப்போம்-ல்ல?//

ஹி ஹி ஹி....

ஆனா உங்கப் பதிவல்லாம் நான் 0ff line ல்ல சேமிச்சு வெச்சு பேருந்திலல்லாம் படிக்கவேமாட்டேன்....

ஏன்னா, நான் அலுவலகத்துக்கு நடந்துல்ல போயிட்டு வர்ரேன்.... அவ்வ்வ்... :-)))1

தமிழ் said...

//
நான் கேட்டது,
பெரியாழ்வார் ஏன் திருக்கோட்டியூரை மட்டும் அப்படிப் பாவிக்கணும்?
அவரு ஊரு வில்லிபுத்தூரு! பக்கத்துலயே வேறு பல கோயில் எல்லாமும் இருக்கு! எதுக்கு அம்புட்டு தூரம் போயி திருக்கோட்டியூரைப் பாவிக்கணும்? உங்கள இன்னிக்கி விடறதா இல்ல! :))//

பரவாயில்லங்க, உங்களுக்காச்சும் எவ்ளோ பெரிய கை... நியூயார்க்குல இருந்துட்டே பெங்குளூரு ல்ல இருக்க என்ன விடாம பிடிச்சுருக்கீங்களே... உங்களுக்கு ''கைநீளன்'' ன்னு பட்டம் கொடுத்துட்டேன், அதையும் சேர்த்து விடாம பிடிச்சுக்கோங்க... :-))))

உண்மையான காரணம் என்னன்னுல்லாம் அடியேனுக்குத் தெரியாது.... பாருங்க எனக்கும் ஒட்டிக்கிச்சு உங்க அடியேன்... ;))

ஏழுலகமும் இரணியன் கிட்ட மாட்டிக்கிட்டு, திண்டாடினப்போ, அவனால நெருங்கவேமுடியாத ஒரு இடமா இருந்தது, கதம்பமகரிஷி இருந்த இந்த திருக்கோட்டியூர்தான்.

இரணியனுக்குப் பயந்து, மும்மூர்த்திகள் உட்பட இந்திரன் உள்ளிட்ட தேவகணங்கள் அனைவரும் இரணியன்ட்ட இருந்த தப்பிப்பதற்கு இந்த திருக்கோட்டியூருக்கு வந்தனர். அதுமட்டுமல்லாது, நரசிம்ம அவதாரம் எடுப்பதற்கான திட்டமெல்லாம் இங்கத்தான் கூடி ஆலோசித்து முடிவு பண்ணாங்க...

அதனால, தேவகணங்கள் அனைவரும், மும்மூர்த்திகளோடு இந்த மண்ணுலகத்தில் வந்து தங்கிய பெருமை திருக்கோட்டியூருக்கு இருந்ததால பாடியிருப்பாரோ...

அதுமட்டுமல்லாது, குழந்தையான நரசிம்மன் தோன்றுவதற்குத் திட்டம் போட்ட இடங்கறதால, இந்த இடத்தை ஆயர்பாடியா உருவகிச்சிருக்கலாம்...

பிள்ளைத்தமிழ் ன்னாவே, இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவதுதானே... அவர் திருக்கோட்டியூர் இறைவனை குழந்தையாகப் பாவித்துப் பாடிருக்காரேத் தவிர, கண்ணன் பிறந்தது பத்தி இங்கு பேசல....

திருக்கோட்டியூர் இறைவனைத்தான் கண்ணனா பாவிச்சிருக்காரு...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//
நான் கேட்டது,
பெரியாழ்வார் ஏன் திருக்கோட்டியூரை மட்டும் அப்படிப் பாவிக்கணும்?
அவரு ஊரு வில்லிபுத்தூரு! பக்கத்துலயே வேறு பல கோயில் எல்லாமும் இருக்கு! எதுக்கு அம்புட்டு தூரம் போயி திருக்கோட்டியூரைப் பாவிக்கணும்? உங்கள இன்னிக்கி விடறதா இல்ல! :))//

இதோ...விடை...வடை எல்லாம் :)

மற்ற எல்லா இடங்களிலும், இரண்யகசிபுவின் மிரட்டலால், தேவரும், முனிவரும், இன்னும் பெரிய பெரிய தியானம் ஞானம் தவஞ் செய்த ரிஷிகள் கூட, நாராயண நாமத்தை விட்டு விட...

இரண்டே இடங்களில் தான்
"நாராயண" நாமம் தடைப்படாமல் இருந்ததாம்!

1. இரண்யகசிபுவின் வீடு = பிரகலாதனால் :)
2. திருக்கோட்டியூர்

அதான் இங்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கோஷ்டியாகக் கூடி, நரசிம்ம அவதாரம் வர வேண்டி, திட்டம் இட்டனர்! வேண்டிக் கொண்டனர்!

இப்படி எந்நேரமும் விடாது, அவன் திருநாமம் என்னும் பாதுகாப்பு இருக்கும் என்று தான் பெரியாழ்வார், கண்ணனை, கம்சன் கண்ணிலிருந்து மறைத்து, இங்கு வளர்க்கிறார்!

இன்னொன்றும் கவனியுங்கள்! இப்படி எப்போதும் விடாத நாராயண நாமம் கொண்டது திருக்கோட்டியூர்!
அதனால் தான் இராமானுசருக்கும், இங்கேயே அந்த மந்திரம் உபதேசம் ஆகியது, திருக்கோட்டியூர் நம்பிகளால்!
பின்னர் கோபுரத்தின் மேல் இருந்து ஊருக்கே உபதேசம் ஆகியது!

குமரன் (Kumaran) said...

நல்ல உரையாடல். 'குருமாயன்' இரவி பதில் சொல்லலையேன்னு நினைச்சேன். சொல்லிட்டாரு. :-)

இரவி, பெருகலாதன் இருப்பதால் பொன்னாகன் வீட்டில் நாராயண நாமம் இருந்தது - சரி. திருக்கோட்டியூரில் ஏன் இருந்தது என்று சொல்லவில்லையே? ஏன் அது?

தமிழ் said...

விளக்கமான விடைக்கு மிக்க நன்றி கேயாரெஸ்! ;-))

தமிழ் said...

வாங்க குமரன்,

நடக்கட்டும்! நடக்கட்டும்!! ;-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நல்ல உரையாடல். 'குருமாயன்' இரவி பதில் சொல்லலையேன்னு நினைச்சேன். சொல்லிட்டாரு. :-)//

ஹிஹி! தக்காளி குருமா-வா? இல்லை கறி குருமாவா? :)

அடியேன் குரு"மாயன்" இல்லைப்பா! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே தான்! :)

//இரவி, பெருகலாதன் இருப்பதால் பொன்னாகன் வீட்டில் நாராயண நாமம் இருந்தது - சரி. திருக்கோட்டியூரில் ஏன் இருந்தது என்று சொல்லவில்லையே? ஏன் அது?//

எப்பப்பாரு என் கிட்டயே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? :)
நான் இந்த ஆட்டைக்கு வரல! அடியேன் அறிந்திலேன்! மீ தி எஸ்கேப்பு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இத நாமலும் எடுத்துக்கலாமே... அதால நம்மக்கிட்ட பேசும்போது அடியேன், பொடியேன், சட்னியேன், சாம்பாரேன், குருமாயேன் ல்லாம் வேணாமே... :-))))//

யோவ் அண்ணாச்சி!
அடியேன்-ன்னா ஓவர் பணிவு-ன்னு எல்லாம் அர்த்தம் இல்லை!
அடிகளைப் பற்றிக் கொள்கிறவர்கள் அடியார்கள்!
அதான் அடியைப் பற்றிக் கொண்டு பேசுவதால் "அடியேன்"!

இது அதீத பணிவைக் குறிக்கும் சொல் என்பதெல்லாம் நாமளா கற்பனை! :)

இப்படிக்கு,
அடியேன் :)
என்னைய அடிச்சிறாதீங்க! :)

தமிழ் said...

//இரவி, பெருகலாதன் இருப்பதால் பொன்னாகன் வீட்டில் நாராயண நாமம் இருந்தது - சரி. திருக்கோட்டியூரில் ஏன் இருந்தது என்று சொல்லவில்லையே? ஏன் அது?//

எப்பப்பாரு என் கிட்டயே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? :)
நான் இந்த ஆட்டைக்கு வரல! அடியேன் அறிந்திலேன்! மீ தி எஸ்கேப்பு! :)//


திருக்கோட்டியூரில், கதம்ப மகரிஷியின் ஆசிரமத்திலிருந்து நாராயண நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது.

திருக்கோட்டியூருக்கு, தேவர்கள் மும்மூர்த்திகள் எல்லாரும் வந்ததே கதம்ப முனிவரின் ஆசிரமத்திற்குத்தான்...

சரிதானே... ;-))

தமிழ் said...

@KRS...
யோவ் அண்ணாச்சி!
அடியேன்-ன்னா ஓவர் பணிவு-ன்னு எல்லாம் அர்த்தம் இல்லை!
அடிகளைப் பற்றிக் கொள்கிறவர்கள் அடியார்கள்!
அதான் அடியைப் பற்றிக் கொண்டு பேசுவதால் "அடியேன்"!//

என்னது, யோவ் வா... இங்க பாரு தம்பி, பப்ளிக்கால்லாம் இப்படி கூப்பிடப்படாது... ;-))) நல்லால்ல ஆமாம், அப்புறம் அழுதுடுவேன்!! ;-))

யாரோட அடிகளைன்னும் சொன்னா தெளிவா இருக்கும்... இப்படி மொட்டத்தாத்தா குட்டையில விழுந்த மாதிரி சொன்னா, எங்களுக்கு எப்படி புரியுமாம்.... ;-))

சொல்றதத் தெளிவா சொல்லு தம்பி... ;-))

Arunmozhi said...

Periyalwar went to meet his close friend Selvanambi who was in the Srivallapandians court (arasavai). Selvanambi was pandians minister and raja brohithar.Selvanambi resides in thirukostiur.That day is Krishna Jeyanthi. The place is full of festival.... Periyalwar went and prayed to SowmiyaNarayanaPerumal. In Periyalwars mind the temple looked like the Nandhagobars Palace and that village looked like ayarpadi and also the perumal like Kannan.So periyalwar thought himself as yosadha and sung this song and tells us what he saw in his mind

Arunmozhi said...

srivalla pandiyanin arasabail selvanambi yenbavar minister and arasa brohitharaga erunthar. Avarum Periyalwarum friends. Selvanambiya meet pana periyalwar thirukostiuruku ponar. Aniki krishana jeyathi. Thirukosturee vilaa kolama erunthathu. atha patha periyalwaruku somiyanarayanar kovil nandhagobar aranmanayavum, thirukostiur ayarpadiyavum, sowmiyanarayana perumal kannanavum manakaanuku therunjanga....Periyalwar thanna yosadhaiyaa ninachuuu entha paatlam paditaar....nuu nan oru book la padichenn..

தமிழ் said...

தங்கள் வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அருண்மொழி!

தொடர்ந்து வாங்க!

Srinivasan J said...

எட்டு வயதில் சந்தை சொல்லி கொண்டு பலமுறை பெருமாளுக்கு ஆராதனம் சொல்லிண்டு இருக்கேன் விரிவான அர்த்தம் உணர்த்தியதற்கு அடியேனின் அநேக நமஸகாரம்