பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்
பாடல் 9
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்
பாடல் 9
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!
பொருள்:
இப்பாடலில், குழந்தைக் கண்ணனின் தொட்டில் குறும்புகளை விவரிக்கிறார், பெரியாழ்வார்.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் - தொட்டிலில் படுக்க வைத்திருக்கும் போது, தொட்டில் துணி கிழிந்துவிடும் அளவுக்குத் தொட்டிலை உதைக்கிறான்; (கிடக்கில் - படுத்திருக்கும் பொழுது)
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் - இடுப்பில் தூக்கி உட்கார வைத்தால், விலா எலும்பை முறிச்சிடுறான்; (மருங்கு - விலாப்பகுதி, இடுப்புப்பகுதி, இடை; இறுத்திடும் - முறித்துவிடுவான்)
ஒடுக்கிப் புல்கில் உதரத்தேப் பாய்ந்திடும் - அருகில் என்னுடன் ஒடுங்கிப் படுக்கவைத்து, பாலூட்டும் போதும், மார்போடு சேர்த்துத் தூக்கித் தழுவிக் கொள்ளும் போதும் வயிற்றில் கதக்களி ஆடுகிறான்; (ஒடுக்கி - தன்னுடன் ஒடுங்கிப் படுக்க வைத்து, புல்கு - தழுவு; புல்கில் - தழுவிக் கொள்ளும் போது; உதரம் - அடிவயிறு)
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்! - அவன் செயும் இது போன்ற செயல்களைத் தாங்குவதற்கு உடலில் வலிமையில்லாமையால், நான் மெலிந்தே போய்விட்டேன், பெண்களில் சிறப்புடையவளே! (மிடுக்கு - வலிமை; நங்காய் - பெண்களில் சிறந்தவளே)
பதவுரை:
சிறப்பான குணங்களையுடைய பெண்ணே!, ''தொட்டிலில் படுக்க வைத்தால், தொட்டில் துணி கிழிந்துப் போகும் அளவினுக்குத் தொட்டிலை உதைக்கிறான்; அவனைத் தூக்கி இடுப்பில் உட்கார வைத்தால், அவன் போடும் ஆட்டத்தில் என் விலா எலும்பே முறிந்துவிடுகிறது; மார்போடு இறுக அணைத்துத் தழுவிக் கொண்டால், வயிற்றின் மேல் துள்ளுகிறான்; இந்த பொல்லாத குறும்பு குழந்தை செய்யும் குறும்புகளைத் தாங்கும் வலிமையில்லாததால் நான் மெலிந்தே போய்விட்டேன்,'' என்று யசோதைப் புலம்புகிறாள்
2 comments:
கிழிய உதைத்திடும்*
மருங்கை யிறுத்திடும்*
உதரத்தே பாய்ந்திடும்*
-ன்னு அஃறிணையில் சொல்லுகிறாளே!
கிழிய உதைப்பான்*
மருங்கை யிறுப்பான்*
உதரத்தே பாய்வான்*
-ன்னுல்ல இருக்கணும்?
அவ்வளவு படுத்திட்டானோ கொழந்தை? :)
@KRS...
ஆமாங்க கேயாரெஸ்!!
குழந்தைங்கள, பெரும்பாலும் அவங்க அம்மா, ஓவரா குறும்பு பண்ணினா, அப்படித்தான் சொல்லுவாங்க...
இது வெறுப்பினால கிடையாது... இதுவும் அதிகமான அன்பினாலத்தான்.... ;-))
அதுங்க என்னத்தான் ஓவரா குறும்பு பண்ணினாலும், அதற்காக என்னாதான் கண்டிச்சாலும், அதுக்கும் மேல அவங்க அந்த குறும்பை இரசிச்சு அவங்க அம்மாவோட மனசுக்குள்ள, ஒரு சுகமான இன்ப அடைப்பு ஏற்படும் பாருங்க.... அத வெறுமனே வார்த்தைகளாலல்லாம் சொல்லிட முடியாது!!
இந்த பாட்டுல்ல சொல்றது வந்து, கோபத்துலயோ, வெறுப்புலயோ இல்ல... தன் மகனைப் பற்றி ஒருவித பெருமை பொங்க பேசறா யசோதை... ;-))
Post a Comment