Thursday, July 28, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 4

கன்னற்குடம் திறந்தாலொத்தூறிக் கணகண சிரித்துவந்து *
முன்வந்து நின்று முத்தம் தரும் என்முகில் வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத்தன் வாயமுதம் தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்*
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடைநடவானோ.

பொருள்:

கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து சிந்துகின்ற தித்திக்கும் சாறினைப் போன்று, எம்பெருமானின் பவளவாயிலிருந்து ஊறுகின்ற அமுதவூறலானது அவன் செவ்வாய்க் கடந்து வெளியே வழிகின்றது.
குழந்தைகளின் வாயில் சுரக்கின்ற உமிழ்நீரினை அவர்களால் வாயினுள்ளேயே வைத்திருக்கத் தெரிவதில்லை. அது வழிந்து அவர்களின் மேனியெங்கும் பரவும்.

அந்த அமுதஊறலைத்தான் பெரியாழ்வார், கருப்பஞ்சாற்றுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார். (கன்னல் - கரும்பு)

கணகண சிரித்து வந்து, முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில்வண்ணன் - மேனியோ கார்முகில் வண்ணம்! அவனின் சிவந்த திருவாயிலிருந்து வாயமுதம் வழிந்தோட, கணகண என்று வெண்கலம் போல் சிரித்துக் கொண்டே, கொஞ்சிக் கொஞ்சி, குழைந்து என் முன்னே வந்து நின்று முத்தம் தருகிறான், என் அருமை மைந்தன், கார்முகில் வண்ணன், கருணை மன்னன்.

பாத்தீங்களா, இதுதான் பெரியாழ்வாருக்கும், ஆயர்பாடி பெண்களுக்கும் உள்ள வித்தியாசம்!
பாலனென்று தாவி அணைச்சாக்க, மாலையிட்டவன் போல் வாயில் முத்தம் தந்துவிடுகிறானாம். அதைச் சொல்ல அந்தம்மாவுக்கு வெக்கம் வேறு வந்துவிடுகிறதாம்!

குழந்தைங்க முத்தமிட்டா சந்தோஷப்படனும்; வெக்கப்படப்படாது!... பெரியாழ்வார் எம்பெருமானைக், மழலை மாறாக் கண்ணனாகப் பார்க்கிறார்; மற்றவர்கள் மனங்கவர் கண்ணாளனாகப் பார்க்கின்றனர்.

திருமார்வன் - வடிவாய் அவன் வல மார்பினில் எப்போதும் வீற்றிருக்கும் திருமகள்! திருமகள் உறைகின்ற மார்வன், அதுதான் திருமார்வன்.

தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் - திருமார்வனைப் பெற்ற எனக்கு, அவனின் திருவாயமுதினைத் தந்து என்னை உயிர்ப்பிக்கிறான்.

திருமகள் உறைகின்ற திருமார்பை உடையவன், அவனையே நினைந்து உறைந்து போய்விட்ட என்னை, அவனே என்னிடத்து வந்து கரும்பினும் இனிய, பனியினும் தண்மையான வாயமுதம் என் முகத்தில் ஒட்ட முத்தம் தந்து உயிர்ப்பிக்கின்றான்.

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடைநடவானோ - தன் மேல் பகைமை கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள் மீது தளர்நடை நடந்து வருவாயா!

இது வரைக்கும் நல்லாத்தானே போயிட்டு இருந்தது. ஏன் திடீர்ன்னு இப்படி... முள்ளுச்செடியில் இருக்கும் அழகிய மலரினைப் போன்றவன், எம்பெருமான். செடியில் முள்ளாயிருப்பவனும் அவனே! அதே செடியில் மலராய் மலர்பவனும் அவனே! பாலகன் பிரகலாதனை பற்பல தீங்குகளிலிருந்து காத்தவனும் அவனே! அப்பிள்ளையின் அப்பனை, அவன் முன்னேயே வயிற்றைக் கிழித்துக் கொன்று, தன்னுள் கடத்திக் கொண்டவனும் அவனே!

இதுதாங்க தாயுள்ளம்! குட்டிக்கண்ணனே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தளர்நடையிட்டு நடை பழகுகிறான். அந்த நடையையும், தன் பகைவர்களைக் கொன்று அவர்களின் தலைமேல் நடந்து பழகுகிறானாம். வீரம் விளையும் மண்ணு!
(எற்று - எதிர்த்தல், பகை; மாற்றலர் - பகைவர்)

பதவுரை:

கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து, அச்சாறு வழிந்தோடுவதைப் போன்று, கண்ணனின் திருவாயிலிருந்து தித்திக்கும் வாயமுதம் மென்மேலும் ஊறி, மேனியெங்கும் வழிந்தோட, கணகணன்னு (கலீர் கலீர் என்று) வெண்கலப் பாத்திரம் உருளுவதைப் போன்று சிரித்துக் கொண்டே வந்து என் முன் நின்று, திருமகள் உறைகின்ற திருமார்பினை உடையவன்தனைப் பெற்ற எனக்கு முத்தமிட்டு உயிர் கொடுத்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான், அந்த கார்முகில் வண்ணன்! அவன், தன்னை எதிர்க்கும் பகைவர்களை எல்லாம் எதிர்த்து நின்று, வென்று அவர்களின் தலைகளின் மீது தளர்நடை நடந்து வருவானோ!

3 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

மிக்க நன்றி :)

நாடி நாடி நரசிங்கா! said...

கன்னற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கருப்பஞ்சாறு நிறைந்த குடத்திலிருந்து சிந்துகின்ற தித்திக்கும் சாறினைப் போன்று, எம்பெருமானின் பவளவாயிலிருந்து ஊறுகின்ற அமுதவூறலானது அவன் செவ்வாய்க் கடந்து வெளியே வழிகின்றது.
குழந்தைகளின் வாயில் சுரக்கின்ற உமிழ்நீரினை அவர்களால் வாயினுள்ளேயே வைத்திருக்கத் தெரிவதில்லை. அது வழிந்து அவர்களின் மேனியெங்கும் பரவும்.

அந்த அமுதஊறலைத்தான் பெரியாழ்வார், கருப்பஞ்சாற்றுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார்.(கன்னல் - கரும்பு) -௦

கன்னல் - கரும்பு இதுவும் புரிகிறது
குடம் இது புரிகிறது
திறந்தால் என்றால் என்ன?
ஒத்து என்றால் என்ன?
ஊறி இது புரிகிறது

இப்படி பாசுர வரிகளுக்கு நேரடியாக விளக்கம் கொடுப்பதைவிட

கன்னர்ற்குடம் திறந்தால் ஒத்து ஊறி - கரும்பு குடம் திறந்தால் வழிந்து ஊறும்
இது சரியா?

பொருளில்---- பெரியாழ்வாரின் பாசுர வரிகள் மாறாமல் எளிய தமிழில் கூறி விட்டு .. பிறகு விளக்கம் கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்

இப்படி போடும்போது பெரியாழ்வாரின் பாசுர வரிகளின் அர்த்தமும் தெரிந்து விடுகிறது . வரிகள் மனதில் ஓரளவு பதியும் . அதன் பிறகு வரும் விளக்கம் மேலும் சுவையுடன் உணர்ந்து படிக்க முடியும் அல்லவா :))

தமிழ் said...

உடைப்பு ஏற்பட்டோ, துளை விழுந்தோ, சாய்ந்துவிட்ட கருப்பஞ்சாறு நிறைந்த குடமோ - எப்படியோ அதில் திறப்பு ஏற்பட்டுவிட்டது.

அத்தகைய குடத்திலிருந்து, கருப்பஞ்சாறு வழிந்தோடுவதை நிறுத்தமுடியாது. அதுபோல், கட்டுப்பாடில்லாமல் வழிந்தோடுகிறது... குட்டிக் கண்ணனின் வாயிலிருந்து கருப்பஞ்சாற்றினும் இனிய அவன் வாயமுதம்!

மிக்க நன்றி! உங்களுக்கு எளிமையாக இருக்கும் முறையிலேயே தொடர்கிறோம்.