Friday, August 5, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து 
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை 
(தளர்நடைப் பருவம்) 
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் 
  பாடல் 8 

  பக்கம் கருஞ்சிறுப்பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய * 
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர* 
மக்களுலகினில் பெய்தறியா மணிக்குழவியுருவின்* 
தக்கமாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ.

பொருள்: 

பக்கம் கருஞ்சிறுப்பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய - மலையின் மேலுள்ள, கரிய, சிறிய, சிறிய பாறைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்தோடும் அருவிநீரின் மேல், சூரிய ஒளியோ, சந்திர ஒளியோ படுகின்ற வேளையில் அந்நீர் பிரகாசிப்பதைப் போன்றது (பகர்ந்து - ஒளிர்ந்து, அனைய - போன்ற)

அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர - குட்டிக்கண்ணனின் இடையில் அணிந்துள்ள அரைஞாண்கயிற்றில் உள்ள சங்குமணிகள், அவன் நடக்கும் போது, இடுப்பிலுள்ள மேடு, பள்ளங்களில் ஏறி, இறங்கி அசைந்தாட (அக்குவடம் - சங்குமணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண்கயிறு, இழிந்தேறி - இழிந்து+ஏறி - இறங்கி, ஏறி; தாழ அணி அல்குல் - தாழ்வான, அழகான, குட்டிக்கண்ணனின் பிறப்புறுப்பு, புடை பெயர - அசைந்தாட) 

மக்களுலகினில் பெய்தறியா மணிக்குழவியுருவின்- இப்பூமியிலுள்ள மாந்தர் எவருக்கும் வாய்த்திராத அளவுக்கு அழகுடைய என் மழலைச் செல்வமே (பெய்து அறியா - பெற்று அறியாத, பெற்றிடாத; மணி - அழகு; குழவி உருவின் - குழந்தை வடிவின்) 

தக்கமாமணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ - மேன்மையான, பெரிய நீலமணியின் வண்ணனே, வாசுதேவா தளர்நடை நடவாயோ! (தக்க- மேன்மை மிகுந்த) 

பதவுரை: 

பூவுலகில் உள்ள மானிடர் எவருக்கும் வாய்த்திராத அளவுக்கு பேரழகுடைய என் மழலைச் செல்வமே! மலையின் மேலுள்ள சின்னஞ்சிறு பாறைகளின் இடுக்குகளிலும், அம்மலையின் மேடு பள்ளங்களிலும் வழிந்தோடும் அருவிநீரின் மேல் சூரிய ஒளி அல்லது சந்திர ஒளி படும்போது, பிரகாசிப்பதைப் போன்று, மேன்மையுடைய நீலமணிவண்ணனின் அரைஞாண்கயிற்றில் கோர்க்கப்பட்ட சங்குமணிகள் இடுப்பிலுள்ள மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கி, பிறப்புறுப்புடன் சேர்ந்து அசைந்தாட, வாசுதேவனே நீ தளர்நடை நடந்து வருவாயாக!