Tuesday, June 11, 2019

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

எட்டாம் திருமொழி - பொன்னியல்

(அச்சோப்பருவம் - அணைத்துக்கொள்ள அழைத்தல்)

கலித்தாழிசை

பாடல் 4



நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன*
தேறிஅவளும் திருவுடம் பில்பூச*
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க* அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ. 

பதவுரை:

நறுமணமிகுந்த சந்தனத்தை, தங்களுக்கு சிறிதளவுத் தருமாறு, கண்ணன் கேட்க, மனம் துணிந்த கூனியும், அவர்களின் திருவுடலில் பூசிவிட்டதனால், அவளின் நெடுங்காலமான கூனினை உடலினுள்ளே மறையும்படி, அவள் உடலை நிமிர்த்துமாறு உருவினவனே அணைத்துக் கொள்வாயாக! எம்பெருமானே, கண்ணனே ஓடி வந்து அணைத்துக் கொள்வாயாக!!

நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன - நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன -
கிருஷ்ணாவதாரத்தில், தேவகியின் எட்டாவது குழந்தையான கண்ணன், கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்து வருகிறான் என்ற உண்மையை அறிந்த கம்சன், கோகுலத்திலேயேக் கொல்வதற்காகப் பலவிதமான அசுரர்களை அனுப்பினான். அனைத்து அசுரர்களையும் குழந்தை கண்ணன் அழித்து, வெற்றிக் கொண்டு, ஆனந்தமாய் வளர்ந்து வந்தான். கோகுலத்தில் கண்ணனைக் கொல்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்தான் கம்சன். மேலும் கண்ணன் தன் கண்முன்னால் கொல்லப்பட வேண்டுமென்னும் ஆவல் கொண்டு, வஞ்சகமாக மதுரா நகருக்கு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பது போல் வரவழைத்தான்.

அவ்வழைப்பை ஏற்று மதுரா நகருக்கு வந்த பதின்மவயது சிறுவர்களான, அண்ணன் பலராமனும், கண்ணனும் மதுரா நகரின் இராஜவீதியில் உலா வந்தனர். அப்போது எதிரே,  சந்தனம் முதலான நறுமணத்திரவியங்களையும், பூச்சுகளையும் அரசனான கம்சனுக்காகக் கொண்டு வந்துக் கொண்டிருந்தாள், ஓர் பெண். அப்பெண்ணின் முதுகில் கூனும், கால்கள் வளைந்தும், ஒருவிதமான சமச்சீரற்ற தோற்றத்தில் இருந்தாள்.

அப்பெண்ணிடம், நறுமணமிகுந்த, மிகவும் நேர்த்தியான அச்சந்தனப் பூச்சைத் தமக்கும், தம் தமையனார் பலராமருக்கும் கொஞ்சம் தர இயலுமோ? என்று குறும்புத்தனமாகக் கேட்டான், கண்ணன்.
(நாறிய- நறுமணம் மிகுந்த, சாந்தம்- சந்தனக்குழம்பு; நமக்கு- கண்ணன் மற்றும் பலராமன்; இறை - கொஞ்சம், சிறிதளவு; நல்கு- கொடு, தா; என்ன- என்று கேட்க)
தேறி அவளும் திருவுடம்பில் பூச - கண்ணனின், அழகிலும், குறும்புத்தனத்தாலும் ஈர்க்கப்பட்ட அக்கூனிப் பெண்ணும், கம்சனின் சினத்திற்கு ஆளாக நேரிடுமே என்று அஞ்சாமல், மனம் துணிந்து அவர்களின் திருவுடம்பில் பூசினாள்! (தேறி- மனம் துணிந்து)

ஊறிய கூனினை உள்ளே யொடுங்க 
அன்று ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ- 
- ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று ஏற உருவினாய்! - கம்சனுக்காகக் கொண்டு சென்ற சந்தனாதிப் பூச்சுகளக் கூனி, கண்ணனுக்கும், பலராமனுக்கும் பூசிவிட்டபடியால், அதற்கு நன்றி கூறும் விதமாக, கண்ணன் அப்பெண்ணுக்கு பதிலுதவி செய்ய விரும்பினார். பிறவி முதல் அவளுடைய உடலில் ஊறி, ஊன்றி வளர்ந்திருந்த கூனையும், வளைந்த காலையும், முகத்தில் இருந்த கோணலையும் சரி செய்ய விரும்பினார். கூனிப்பெண்ணின் கால்கள் மேல் தன் காலை வைத்து அழுத்தி, அவள் முகத்தில் மோவாயைத் தன் கைகளால் பிடித்துத் திருப்பி, முதுகிலிருந்த கூன், அவள் உடலினுள்ளே ஒடுங்கும் படி நிமிர்த்தினார். இதனால், அக்கூனிப் பெண்ணும் தன் இளமையான உடலின் கூனும், கோணலும் மறைந்து அழகிய வடிவம் பெற்றாள்! அவளது அகத்தோற்றத்தின் அழகும், பண்பும், துணிவும், அவளது புறத்தோற்றத்திலும் தோன்றியது!! (ஊறிய-வளர்ந்த, பெருகிய; கூன்- வளைவு; ஒடுங்கு- குறுகு, முடிவு;ஏற -  முழுவதும்)

பொருளுரை:

நறுமணமிகுந்த, உயர்ரக சந்தனக் குழம்பைத் தனக்கும், தன் தமையனுக்கும் சிறிதளவு தருமாறு கண்ணன் கேட்க, கண்ணனின் அழகால் ஈர்க்கப்பட்ட கூனியும், கம்சனின் தண்டனைக்கு அஞ்சாமல், மனம் துணிந்து அவர்களிருவரின் திருவுடம்பில் பூசினாள். அவ்வன்பிற்கு நன்றியாக, கண்ணன், பிறவிலேயே அவள் உடலில் ஊறியிருந்த கூனையும், வளைந்த காலையும், கோணலான முகத்தையும் சரிசெய்ய எண்ணி, அவளது கூன் உள்ளே ஒடுங்கி மறையும் வண்ணம், அவள் கால் மேல் உன் காலை வைத்து அழுத்தி, முகத்தையும் திருப்பி, அவளது உடல் சமச்சீர் தன்மையை அடையும் வண்ணம் உருவினாயே! என் கண்ணே, ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்வாயாக! எம்பெருமானே என்னை அணைத்துக் கொள்வாயாக!!


No comments: