Saturday, August 29, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 5
கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி*
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்*
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை*
அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ.



பதவுரை:

இந்த பாடல் படிக்கும் போது, இதே எட்டாம் திருமொழியில் முன் படித்த , இந்த பாடல் நினைவுக்கு வருகிறதா? எட்டாம் திருமொழி, பாடல் 3...

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு*
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த*
அஞ்சன வண்ணனே! 

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி - வீரக்கழலையணிந்த மன்னர்கள் சூழ்ந்த அவையில் ஒளிக்கதிர் போல் இருந்து, (கழல் - வீரக்கழல்)

எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் - பலராமனும், கண்ணபெருமானும் பஞ்சபாண்டவர்களுக்கு தூதாய் துரியோதனனின் அரசவைக்குள் தோன்றுகையில், எவரும் ஆயர்குல கண்ணனுக்கு எழுந்து மரியாதை செய்தலாகாது என்று ஆணையிட்ட துரியோதனனே, தானே எழுந்து,  பின் எவரும் அறியா வண்ணம் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு உன்னை(கண்ணனை) பார்க்கும், (எழலுற்று - தன்னிச்சையாய் எழுந்து, மீண்டே - தன்னிலைக்குத் திரும்பி, இருந்து - அமர்ந்து, உன்னை - கண்ணபெருமானை, நோக்கும் - பார்க்கும்)

''காவன்மன்னவர்முகங்கடோறுமிருகண்பரப்பியமர்கருதுவோ
ரேவலின்கண்வருதூதனாமிடையனின்றுநம்மவையிலெய்தினால்
ஓவலின்றியெதிர் சென்று கண்டுதொழுதுறவுகூரிலினியுங்களூர்
தீவலஞ்செயவடர்ப்பனென்று நனிசீறினான் முறைமைமாறினான்.''
- வில்லிபாரதம் (உத்தியோக பருவம்)

முறைமைமாறினான்(முறை தவறி நடக்கும் துரியோதனன்), காவல் மன்னவர் முகங்கள் தோறும் இருகண் பரப்பி, அமர் கருதுவோர்(பஞ்ச பாண்டவர்கள்) ஏவலின்கண் வரும் தூதனாம் இடையன், இன்று நம் அவையில் எய்தினால், எதிர் சென்று, கண்டு, தொழுது, உறவுகூரில்,  ஓவலின்றி இனி உங்கள் ஊர் தீவலஞ்செய அடர்ப்பன்(வருத்துவன்) என்று நனிசீறினான்(நனி - உரிச்சொல், மிகுதியான கோபத்துடன் கூறினான்). 

சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோவச்சோ! -  உறவும், நட்பும் நிறைந்த சுற்றம் பெரிது உடைய துரியோதனனை, அனல் பறக்க பார்த்தவனே அணைத்துக் கொள்வாயாக! (சுழல் - சூழல், துச்சோதனன் - திருதிராஷ்டிரனின் புதல்வன் - துரியோதனன், அழல் - நெருப்புக் கொழுந்து, அனல், விழித்தானே - பார்த்தானே ); 

"அழல விழித்தானே - மின்னியல் மேகம் என்று முதல் பாடலில் பெரியாழ்வார் குறிப்பிட்டமையை நினைவு கூர்க. கருணையே உருவான கார்முகில்வண்ணனின் அழலவிழிப் பார்வை ~ மின்னல் பார்வை "






ஆழியங்கையனே! அச்சோவச்சோ!- தன் வலக்கரத்தில் சுடர் மிகுந்த திருச்சக்கரத்தை ஏந்திய பெருமாளே அணைத்துக்கொள்வாயாக! (ஆழியங்கையனே - ஆழி-அம்-கையனே - அங்கையில் திருவாழியை உடையவனே, சுதர்சன சக்கரத்தை ஏந்திய பெருமாள், மகாவிஷ்ணு)
        
பொருளுரை:

     பீஷ்மர், துரோணாச்சாரியார், துரோணரின் மகன் அசுவத்தாமன், விதுரன், கர்ணன், சகுனி உள்ளிட்ட வீரக்கழலை அணிந்த மன்னர்களும், உறவினர்களும் சூழ்ந்த அரசவையிலே கதிர் ஒளி போல் மிகுந்த பிரகாசத்துடன் வீற்றிருந்த துரியோதனன், அவையில் உள்ள எவரும் பஞ்சபாண்டவர்களின் தூதனாக வரும் கண்ணபெருமானுக்கு எழுந்து மரியாதையோ, நலம் பாராட்டுதலோ இருத்தல் கூடாது என்று ஆணையிட்டிருந்தாலும்,  அவனியில் ஆயிரம் சூரியன் உதித்தாற் போல் பலராமனும், கண்ணபெருமானும் தோன்றிய உடன், பீஷ்மர், துரோணர், விதுரன் உள்ளிட்ட பெரியோர்கள் அனைவரும் சென்று பலராமனையும் கண்ணபெருமானையும் வணங்கி வரவேற்றனர். அவையின் நடுவில் கதிரொளி போல் வீற்றிருந்த துரியோதனனும் தன்னையறியாது எழுந்துவிட்டான். 

உடனே எவரும் அறியா வண்ணம் தன் அரியணையில் மறுபடி அமர்ந்து கொண்டு  கண்ணனை வெறுப்போடும், சினத்துடனும் நோக்கிய பெரிய சுற்றத்தையுடைய துரியோதனனை எரிசூரியன் போல் கூர்ந்து நோக்கினவனே அணைத்துக்கொள்ள வருவாயாக!

(வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு!) தன் வலக்கரத்தில் சுடர் மிகுந்த திருவாழி என்னும் திருச்சக்கரம் ஏந்தியவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!

No comments: