Friday, March 28, 2008

ஆழ்வார்கள்

எம்பிரான் பெயரில் பூமாலையொடு பாமலையும் சூட்டி அழகுப் பார்த்து அதன் மூலம் வைணவம் உலகத்தில் தழைத்து நிற்கவும், அமுதத் தமிழ் மொழியின் பெருமையை உலகு உணரச்செய்யவும், மானுடனின் அகப்பிணிகள் நீங்கி, நாணிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து பெருமாளின் பொற்பாதம் அடைய, ஆழ்வார்கள் என்னும் பன்னிரு அவதார புருஷர்கள் அருளிய பொக்கிஷமே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் என்னும் அமுதத் திரட்டு ஆகும்.

ஒரு வாய் அமுதம் உண்பவர்க்கே மரணம் என்பது இல்லையாயின், தொகுக்கப் பெற்ற நாலாயிரம் அமுத வெள்ளத்தை உண்பவர்க்கு என்ன ஆகும் என்று உரைக்கவும் வேண்டுமோ! ஒவ்வொருவரின் பிறவியின் நோக்கமே பிறவியின்மை என்னும் நிலையை அடைவதற்கான வழியை அறிவதே! அவ்வழியை இப்பொக்கிஷத்தில் நாம் கண்டறிய முடியும். தண்ணீர் பருகப் பருகத் தாகம் தீரும்; தமிழைப் பருகப் பருகத் தாகம் பெருகும். அறிவுத்தாகம், அருட்தாகம் இரண்டினுக்கும் தீர்வு இத்தீந்தமிழ் பாடல் தொகுப்பில் உள்ளது.

ஆயர்க் குல ஆதவனின் பேரருளைப் பெற நமக்குப் பேருதவியாய் இருந்த அந்த பன்னிரு ஆழ்வார்கள் என்னும் அவதார புருசர்களின் திருப்பெயர்கள் இதோ.

பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவியாழ்வார்
குலசேகரஆழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார் ஆவர்.

இவர்கள் திருமாலின் பெயரில் நெக்குருக, நெஞ்சுருகப் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத்திவ்ய பிரபந்தம் ஆகும். ஆழ்வார்கள் அனைவரும் பாடியது அய்யன் பெருமாளின் பெயரில் மட்டுமே என்றாலும் அவை பாடப்பெற்ற காலங்கள் வேறு வேறு. வெவ்வேறு காலங்களில் இயற்றப்பெற்ற இப்பாசுரங்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் பெயரில் நமக்கு அருளியவர் நாதமுனி ஆவார். இப்பாசுரத்தை நூல் என்று சொல்வதை விட பாடல்களின் தொகுப்பு என்னும் சொல்லே சாலப் பொருந்தும்.

இந்து சமயத்தில் வைணவ மார்க்கத்தைப் பின்பற்றுவோர் நாலாயிரத் திவ்ய பிரபந்த பாடல் தொகுப்பை வேதத்திற்கு இணையாக மதிக்கின்றனர். அதனால் இது "வைணவ வேதம்" என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெயரில் என்றால், அது எந்த ஊரில் வீற்றிருக்கும் இறைவனுக்கு என்று எண்ணுகிறீர்களா? இவை அனைத்தும் ஒரே தலத்தில் இருக்கும் தெய்வத்தைப் பற்றி பாடியவை அல்ல. ஆனால் ஒரே தெய்வத்தைப் பற்றியது. யார் தெரியுமா? நின்று, இருந்து, கிடந்து என்று எந்த நிலையிலும் நமக்கு அருள் பாலிக்கும் திருமாலின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி பாடப்பெற்றது.

முதலில் நாம் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளலாம் வாங்க.

ஓம் நமோ நாராயணாய நம!!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!

3 comments:

Bharathiraja said...
This comment has been removed by the author.
Anonymous said...

022Tnks fr the info.. was vry vry usefyl to me..

Anonymous said...

022Tnks fr the info.. was vry vry usefyl to me..