Saturday, March 22, 2008

அறிமுகம்

பல்வேறு காலகட்டங்களில் தமிழ் குறித்தான விவாதங்களில் புழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை முன் வைக்க இயலாமல் குறுகி நின்றதுண்டு. அது மொழியின் குறை அன்று. அறிந்து கொள்ளாமை தமிழரின் குறையே. பிற மொழிச் சொற்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் பொருட்டு தமிழ் சொற்களை இலக்கிய வீதியில் அல்லவா தேட வேண்டும். அதில் முதல் கட்டமாக திருக்குறளுக்குப் பொருள் எழுதினோம், ஒரு குழுவாக. இதோ இரண்டாவது அடி இப்போது எடுத்து வைத்திருக்கிறோம்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனும் வைணவப் பாடல்களின் திரட்டு பற்றி கண்ணதாசன் பற்றிய குறிப்பு ஒன்றில் முதன் முதலாக அறிந்தேன். தன்னுடைய சொற்செறிவிற்கு நாலாயிரம் பாடல்களும் மனப்பாடமாகத் தெரிவதும் ஒரு காரணம் எனக் கூறி இருந்தார். அதிலிருந்து அப்பாடல்களை முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலிட்டே இருந்தது.

எனவே இந்த பதிவுதளத்தின் முதல் நோக்கம் தமிழ் சார்ந்தது. வாசிப்பவரால் இறைவனைக் காண முடிந்தால் மகிழ்ச்சியே. எங்களால் முடிந்த வரை அனைத்துப் பாடல்கள் குறித்த தனித் தகவல்களை இணைக்க முயல்வோம். அதனால் அனைத்து இடுகைகளுமே இற்றைப் படுத்தலுக்கு உட்பட்டவையே, இந்த அறிமுகப் பதிவு உட்பட.

ஆழ்வார்களின் பாசுரங்களை, வைணவர்களோ இல்லை ஆன்மீகம் சார்ந்தவர்களோ தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த அமுதத்தை அருந்தி அனுபவித்து மகிழலாம்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம்:

திவ்யம் - புனிதம், தூய; பிரபந்தம் - கட்டு, தொகுப்பு.


லைப்பு வட மொழியில இருக்கே! அப்போ பாடல்களும் வடமொழியான்னு நினைச்சுக்காதீங்க!!தமிழுக்குப் பாசுரங்களா, இல்லை பாசுரங்களுக்குத் தமிழா?? என்று பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு தமிழும் பக்தியும் அதில் இரண்டறக் கலந்துள்ளது.

அமுதத்திரட்டில், வேதங்களின் சாரம் முழுக்க முழுக்க உள்ளது. வட மொழியில் தான் வேதங்கள் கற்க முடியும், கேட்க முடியும் என்ற நிலையை மாற்றி, தமிழரும் வேதத்தின் சாரத்தை அறிய ஆழ்வார்கள் என்னும் அவதாரப் பெருமான்கள் தோன்றி, நமக்கு அந்த அரிய புதையலை அளித்தருளினர்.

A for Aeroplane என்பது சரியா இல்லை, A for எறும்பு என்பது சரியா?

வடமொழியில் வேதம், எந்த இடத்தில் என்ன பொருளைச் சொல்கிறது என்பது வெறும் மனனம் மட்டும் செய்தவர்களால் அறிய இயலாது...

சுருங்கக் கூறின், ஒரு சொல்லின் உயிரும் உணர்வும், பொருளும் பயனும் தாய் மொழியில் மட்டுமே வெளிப்படும்.

அந்த தமிழ் வேதத்தை எங்களுடன் இணைந்து நீங்களும் அறிந்து மகிழவே இந்த சிறு முயற்சி. இதில் பிழை ஏதும் இருந்தால், நீங்கள் அறிந்தவற்றை தாராளமாகப் பின்னூட்டத்தில் வந்து சொல்லலாம். எங்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கும், வலைப்பதிவுக்கு வருகைத் தந்து ஆதரவு அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் கோடி!!!

வாங்க முதல்ல ஆழ்வார்களப் பத்தி அறிந்து கொள்வோம்.....

எம்பெருமான் திருவடிகளே சரணம்!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!!

No comments: