திருமழிசையாழ்வார்
பிறப்பு - கி.பி. ஆறாம் நூற்றாண்டு (520 - 620)
இடம் - திருமழிசை
மாதம் - தை
நட்சத்திரம் - மகம்
உங்களுக்கெல்லாம் இவரோட நண்பர் யாருன்னு தெரியுமா? கூட படிச்சவங்களா? இல்ல. பின்ன, பக்கத்து வீட்டுப் பையனா? இல்ல. வேற யாரா இருக்கும்?! தெரியலயா.... நான் சொல்றேன். இவரோட ப்ரெண்ட் பைவ் ஹெட் பாம்பு பெட்ல பள்ளி கொள்வாரே ஒருத்தர் அவர்தான் இவரோட ஃப்ரெண்ட்.
திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அதன் பலனாக அவர் மனைவியும் கருவுற்றார். வழக்கத்திற்கு மாறாக, 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர். அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும்.
அவர்கள் சென்ற பின், அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இவ்வதிசயமான சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.
ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.
கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.
திருமழிசையாழ்வார், திருவல்லிக்கேணியில் முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரை சந்தித்தார். சைவம், வைணவம், பௌத்தம் உள்ளிட்ட பல சமய நூல்களையும் கற்ற திருமழிசையாழ்வாருக்கு, இறைத்தத்துவத்தைப் பற்றிய குழப்பம் ஏற்பட்டது. அதை நீக்கி வைணவப்பேரொளியை அவர் மனத்தில் விதைத்தவர் நம் பேயாழ்வாரே ஆவார். பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.
அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார். திருவேக்கா - இந்த ஊர் யாருக்காவது நினைவிருக்கா. சரியாகச்சொன்னீர். நம் பொய்கையாழ்வார் பிறந்த அதே திருவேக்காதான். அங்கு சென்று, பொய்கையாழ்வாரைக் கண்டெடுத்த அதே யதோத்தகிரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.
அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.
ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.
மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.
மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.
ஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.
சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.
ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்; நம் திருமழிசையாழ்வார். எப்படின்னு கேளுங்க!
"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார்.
அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான். அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,
"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான். பாத்தீங்களா! தம் பக்தர் என்ன சொன்னாலும் கேட்டுகிறாரு. அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு இல்லீங்களா!
நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்தாங்க இல்லயா? அந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.
அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்) ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில் சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.
திருச்சந்த விருத்தத்தில் அவர் கூறுவது:
நின்றது எந்தை ஊரகத்து
இருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்து
எண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்;
பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும்
கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!
நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள் புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார், திருமழிசையாழ்வார்.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!
Monday, March 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment