Friday, April 4, 2008

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்

நம் மதுரகவியாழ்வார் அவதரித்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 745 - 805)
இடம் - திருக்கோலூர்
ஆண்டு - ஈசுவர
மாதம் - சித்திரை
நட்சத்திரம் - சித்திரை(வெள்ளிக் கிழமை)
அம்சம் - வினதை (கருடன்)

நம் மதுரகவி ஆழ்வார் யாரென்று உங்களுக்கெல்லாம் நினைவிருக்குமென்று எண்ணுகிறேன். நம்மாழ்வாரின் மாணவன் தான் நம் மதுரகவியாழ்வார்.

'வைத்த மாநிதி பெருமாள்' வீற்றிருக்கும் திருக்கோலூர் என்னும் ஊரில், எந்நாளும், எப்பொழுதும் எம்பெருமானின் திருநாமத்தையே உச்சரித்து, அவர்பாலும், அவர்தம் அடியவர்பாலும் அன்பு செலுத்தும் அந்தணர் குலம் தோன்றிய மாணிக்கமே மதுரகவியாழ்வார் ஆவார்.

இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர். ஆனால், நிறைகுடம் ததும்பாது என்பதற்கேற்ப, நிரம்ப கற்ற இவருக்கு, நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் பற்றிக் கொள்ள புனித யாத்திரை மேற்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.

கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று ஸ்ரீமன் நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யா வை அடைந்தார். அங்கு அவர்தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.

அதன்பின் நடந்தவை உங்களுக்கே தெரியும். ஆமாம், நம் நம்மாழ்வாரை பார்க்க வைத்தது, அவரை பேச வைத்து அவரிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரத்தை திருவாய்மொழியாய் பெற்று, அவற்றிற்கு இனிய பண் அமைத்து, பாடியது எல்லாம் நம் மதுரகவியாழ்வாரே ஆவார்.

இவர் நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவர்மேல், கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் 11 பாக்களைக் கொண்ட பாடல் ஒன்றைப் பாடினார். இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும். இத்திறவுகோல் இல்லாவிடில், நமக்கு அந்த மகா பெரிய பொக்கிஷமே கிடைச்சிருக்காது, அது எப்படிங்கறத பின்னால சொல்றேன்... 'பின்'னால இல்ல... அப்பாலிக்கா சொல்றேன். ;-)

சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். 'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம். அவர் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று துவங்கும் 11 பாசுரங்களைத் தன் குருமேல் அந்தாதி முறையில் பாடினார். 4000 திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல.

நம்மாழ்வாரை நாம் அழைக்கும், 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே! அதோடு 'அளவில்லா ஞானத்து ஆசிரியர்' என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.

மதுரகவியாழ்வார், நமக்களித்தப் பேரருள் இத்துடன் முடிந்துவிடவில்லை. அவர் இன்னும் பலவும் செய்தருளியிருக்கிறார். நமக்கு நம்மாழ்வாரப் பத்தி ஓரளவுக்குத் தெரியும், ஆனா அவர் எப்படி இருப்பார் ன்னு யாருக்காவது தெரியுமா? அந்த பெரும் பாக்கியத்த நமக்கு அளித்தவர் மதுரகவியாழ்வார் தான்.

எப்படின்னு கேக்குறீங்களா? அதாவது, தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார். ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த விக்ரகம் வேறு ஒருவருடையது. அப்பொழுது, நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, 'இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின்(பவிஷ்யத் ஆச்சார்யார்)விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார். இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.

அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.

எனக்கு ஒரு சந்தேகம், மதுரகவி என்னும் பெயர் மதுரகவியாழ்வாரின் உண்மையான பெயரா? இல்லை வழங்குப் பெயரா? நான்கு வகை(ஆசுகவி, சித்திர கவி, விஸ்தார கவி, மதுரகவி)கவிகளில் ஒன்றுதான் மதுரகவி! அதான் ஒரு சின்ன டவுட்.

அப்படின்னா விகடகவி ன்னா என்னான்னெல்லாம், குறுக்கால கேட்கப்படாது! விகடகவி என்பது கவிஞரைக் குறிக்கும் சொல் அல்ல. அது நகைச்சுவையாய் பேசி, வினையாடுபவரைக் கூட குறிக்கும்.... ;-)

ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!

No comments: