Thursday, April 3, 2008

நம்மாழ்வார்

நம்மாழ்வார்:

அடுத்ததாக நாம பார்க்கப் போறது, நம்ம ஆழ்வார்.
யார்ரா அது நம்ம ஆழ்வார்?

அவர்தாங்க நம்மாழ்வார்.
அது தெரியுது. யாரு அந்த நம்ம ஆழ்வார்?

நான் சொன்னது நம்ம ஆழ்வார் தான், ஆனா நம்மாழ்வார்.
ஏன்டா, காலங்காத்தாலே வந்து கழுத்தறுக்குற. சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லு.

நான் ஒழுங்காத்தான் சொல்றேன். நம்மாழ்வார்.... நம்மாழ்வார்... நம்மாழ்வார்.... இப்பவாவது புரியுதா?
ம்..... புரிஞ்சு போச்சு, எனக்கு புரிஞ்சு போச்சு... வேதம் தமிழ் செய்த மாறன், சடகோபன் அப்படின்னு ல்லாம் சொல்வாங்களே, அவரைத்தானே சொன்னேன்.

அப்பாடா! ஆமாம் பா, ஆமாம். அவரேதான்...
ம்.. ம்... சொல்லு கேப்போம்!

நம்மாழ்வார்

பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு(765 - 800)
ஆண்டு - பிரமதி
மாதம் - வைகாசி
நட்சத்திரம் - விசாகம் (வெள்ளிக் கிழமை)
அம்சம் - சேணைத்தலைவர் (விஸ்வக் சேணர்)

நம்மாழ்வார், ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டாருப்பா. இல்லாங்காட்டி, அவர் த்வாபர யுகத்துல பிறந்துருப்பார். நம்மாளு கிருஷ்ணன நேர்லயே பாத்து, 'ஹாய்' சொல்லியிருப்பார். அது சரி, அந்த கிருஷ்ணனே இங்க வந்து ஆழ்வாரா பிறக்கும் போது, எப்படி த்வாபர யுகத்திலயே மறுபடியும் பிறக்க முடியும்! ;-)

நம்மாழ்வார், பிறந்தது கலியுகத்தின் ஆரம்ப காலத்தில். கரியர், உடைய நங்கையார் என்போரது திருமகவாய், பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில், அதாவது திருக்குருகூரில் பிறந்தார். இவரது பிறப்பே, ஒரு அதிசய பிறப்பாகும்.

ஆண்டவன் இருக்குற இடத்துல அதிசயம் ந்டக்காம இருந்தாதான் அதிசயம். அப்படி இருக்கும் போது, ஆண்டவனின் அவதாரங்களாக, அவதரித்த ஆழ்வார்கள் வாழ்வில் அதிசயம் நடப்பது என்பது சகஜம் தானே.

நம்மாழ்வார் வாழ்க்கையில் என்ன அதிசயம் நடந்தது ன்னா, அவர் பிறந்த கணம் முதல், ஒருமுறை கூட, கண்ணைத்திறக்கவும் இல்லை, உணவும் உண்ணவில்லை, வாய் திறந்த அழக்கூட இல்லையாம். சமத்துப் பையன் இல்ல... ;-)

இதனால் கலக்கமுற்ற அவர்தம் பெற்றோர், அவரை திருக்குருகூரில் வீற்றிருக்கும், ஆதிநாதர் திருக்கோயிலிலுள்ள, இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டனர். இயல்பான நிலையிலிருந்து மாறி பிறந்ததனால், அக்குழந்தையை மாறன் என்று அழைத்தனர்.

அதன்பிறகு, அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.

அந்த புளியமரம் யாருன்னு யோசிச்சீங்களா? அம்மரம் வேறு யாருமில்லை. நம் ஆதிசேஷனேதான்.

பதினாறு ஆண்டு காலம், நம்மாழ்வார் இந்த மோன நிலையிலேயே தான் இருந்தார்.

அதன்பிறகு, வட நாட்டில், அதாவது அயோத்தியில், மதுர கவியாழ்வார் - இவரும் நம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரே! தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.

அவர், தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.

வயோதிகரான மதுர கவியாழ்வார், அச்சிறுவனைப் பார்த்த மாத்திரத்திலே, அவனை இறைவனின் அவதாரமாகக் கண்டுவிட்டார். அவர், நம்மாழ்வாரைப் பேச வைப்பதற்காக, அவரிடத்தில் இவர் ஒரு புதிர் போட்டார்.

அந்த புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?


இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அதைத் தின்று; அங்கே கிடக்கும்.

அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.

என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

இதுவே, அந்த புதிரில் பொதிந்திருந்த பொருள். பாத்தீங்களா, எவ்வளவு அழகா, ரெண்டே வார்த்தையில, தெள்ளத் தெளிவா தெளிய வெச்சுட்டார், நம்மாழ்வார். அதுக்காத்தான் ஞானம் வேணும் கிறது.

ம்... சரி நம்ம சங்கதிக்கு வருவோம். இந்த பதில கேட்டதும், நம்ம மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கிப் போனது. அப்பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, 'என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய், ஐயனே' என்று வேண்டினார்.

நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். அது மட்டுமல்லாது, நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே. ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

அது சரி, நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லை. பின்ன எப்படி பாசுரங்கள் ல்லாம் பாடினாரு? பாசுரம் ங்கறது, எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. என்ன ஒரு மகிமை பாருங்கள்!

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும. அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.

நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து, நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

ஓம் நமோ நாராயணாய நம!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!

3 comments:

அண்ணாமலை..!! said...

ஒருமுறை கூட, கண்ணைத்திறக்கவும் இல்லை, உணவும் உண்ணவில்லை, வாய் திறந்த அழக்கூட இல்லையாம். சமத்துப் பையன் இல்ல... ;-)

இது போன்ற தங்களின் விவரிப்பு மற்றும் உள்நுழைப்புகள் ரசிக்க வைக்கிறது..!!
வாழ்க.!!

chidambaram h said...

best wishes

G said...

THAT WAS VERY FINELY NARRATED THAT I CAN HOLD THAT IN MY MEMORY FOR A LONG TIME -"VEDHAM THAMIZL SEITHA MAARAN"-- GOOD ONE

THANK YOU