Saturday, August 9, 2008

நாதமுனிகள்


ஆழ்வார்கள் பன்னிருவர் ன்னு சொன்னீங்க; அவங்க பாடினது தான் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ன்னு சொன்னீங்க... அதான் பன்னிருவரின் குறிப்புகளும் கொடுத்தாச்சே.... இனி நாம பாட்டு படிக்கப் போவலாம்ன்னு நினச்சா, இவங்க ஆருப்பா இடையில வந்து நடை பயில்றதுன்னு கேட்குறீங்களா?

பன்னிருவரின் வாழ்நாள் குறிப்புகள் பார்க்கும் போது அவங்க வாழ்ந்த காலத்த கவனிச்சீங்களா? எல்லாரும் வெவ்வேற ஊர்ல, வெவ்வேற காலத்த சேர்ந்தவங்க.... அவங்க எழுதினது எல்லாம் எங்கங்க, யார்யார்ட்ட இருந்துதுன்னு யார்க்குத் தெரியும். அவை அனைத்தும் இருந்தனவா, இல்ல காலத்தின் கோலம், ஞாலத்தின் நீளம் ன்னு காணக்கிடைக்கப் பெறவில்லை ஒரு வரில்ல விட்டுட்டாங்களா?

தமிழகமெங்கும் சிந்தி சிதறிக் கிடந்த முத்து மணிகளையெல்லாம், தேடி அலைந்து தெளிவாய்க் கோர்த்து, எம்பெருமானுக்கு நாளும் சூட்டி அழகு பார்க்க அருள் புரிந்தவர் நாதமுனிகள் அவர்கள்தான்.

பிறந்த காலம் - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு - சோபக்ருத ஆண்டு
மாதம் - ஆனி
திருநட்சத்திரம் - அனுசம்
திதி - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம் - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம் - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை, தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இவரது இயற்பெயர் திருவரங்க நாதன். ஆனால், இவர் சிறந்த யோகியாக இருந்ததால், இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.

இவர் தம் குடும்பத்தாருடன் பல வட மாநில திருத்தலங்களுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்ததோடல்லாமல், அவருக்குத் தாமே திருத்தொண்டும் புரிந்து கொண்டும் இருந்தார். ஒரு நாள், காட்டுமன்னனார் கோயிலில் திருவருள் புரியும் எம்பிரான் நாதமுனிகள் கனவில் வந்து வீரநாராயணபுரத்திற்கே மீண்டும் வருமாறு அழைத்தார்.

இறைவனின் திருவுளப்படி, வீரநாராயணபுரம் திரும்பிய நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று ஏகப்பட்ட இறைத் தொண்டு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள், அக்கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்,

ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய்அலைந்துகரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
திருவாய்மொழி 5-8-1

என்னும் பாடலில் தொடங்கி,

உழலையென்பின் பேய்ச்சிமுலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையேசரணாகக்கொண்ட குருகூர்ச்சடகோபன்
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத்தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே
திருவாய்மொழி 5-8-10
என்னும் பாடல் முடிய உள்ள பத்து பாடல்களையும் அவர்கள் பாடினர்.

அவற்றைக் கேட்ட திருவரங்க நாதமுனிகள், அப்பாடல்களில் தன்னை மறந்தார். அவர்களிடம், ''நீங்கள் கடைசியாகப் பாடிய பாட்டில், ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறதே, அப்படியென்றால், உங்களுக்கு அந்த ஆயிரம் பாடல்களும் தெரியுமோ?'' என்று வினவினார்.

அவர்களோ, ''இல்லை சுவாமி, எங்களுக்கு இந்த பத்து பாடல்கள் மட்டுமே தெரியும்'' என்று பதிலளித்தனர்.

அப்பாடலில் ''குருகூர்ச்சடகோபன்'' என்று வருவதால், அவர் திருக்குருகூர் சென்று விசாரித்தால் அவற்றைப் பற்றி அறிய இயலும் என்று திருக்குருகூர் சென்றார்.

அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை. இறுதியில், அவர் மதுரகவியாழ்வாரின் சீடனான பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில், அவர், '' திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன, தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த ''கண்ணிநுண்சிறுத்தாம்பு'' என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும்..... அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன அருளுவார்'' என்று பதிலளித்தார்.

அதைக்கேட்ட நாதமுனிகள், மிகுந்த உவகையுடன், பராங்குசதாசரிடம், கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை உபதேசமாகப் பெற்று, நேரே ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார். பன்னீராயிரம் முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார்.

இதனால் அகம் மகிழ்ந்த ஆழ்வார், அசரீரீயாய்த் தோன்றி நாதமுனிகளின் வேண்டுதலை வினவினார். நாதமுனிகளும், திருவாய்மொழியுடன் மற்ற பிரபந்த பாடல்களையும் அடியேனுக்கு அருளுமாறு வேண்டினார்.''

நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார்.

அவற்றைப் பெற்றபின்பும் அவர் யோகசமாதியிலேயே நிலைத்திருந்தார். மீண்டும் காட்டு மன்னனார் பெருமாள், அவரை திரும்ப வருமாறு அழைக்கவே மீண்டும் வீரநாராயணபுரம் புறப்பட்டார்.

அங்கு அவர் தான் பெற்ற புதையலை அனைவரும் அறியச் செய்தார். பிரபந்த பாடல்களை இனிய இராகம், தாளம் அமைத்தும், அதற்கேற்ற அபிநயம் பிடித்தும் இறைவன் முன் ஆடினார். இவ்வாறு அரையர் சேவைக்கு வித்திட்டதோடு அல்லாமல், தம் வழிவந்தோரையும் தொடரச் செய்தார்.

அரையர் சேவையை முதன்முதலில் தோற்றுவித்தவரும் இவரே! ஸ்ரீ வைணவ ஆச்சாரியப் பரம்பரையின் முதல் ஆச்சாரியரும் இவரே!

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்;
திரு நாதமுனிகள் திருவடிகளே சரணம்;

4 comments:

Anonymous said...

நாதமுனியின் பேரனான ஆளவந்தாரின் பேத்திக்கு பிள்ளையாக மலர்ந்தவர்தான், அதாவது ஆளவந்தாரின் பேரன் திருமலைநம்பியின் தங்கையான பூமிபிராட்டி என்பாருக்கு மகனாக வந்து உதித்தவர்தான் விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர் சரீயா தமீழ

தமிழ் said...

//நாதமுனியின் பேரனான ஆளவந்தாரின் பேத்திக்கு பிள்ளையாக மலர்ந்தவர்தான், அதாவது ஆளவந்தாரின் பேரன் திருமலைநம்பியின் தங்கையான பூமிபிராட்டி என்பாருக்கு மகனாக வந்து உதித்தவர்தான் விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர் சரீயா தமீழ//

நீங்கள் சொன்னது சரியே! தமிழில் தட்டச்சு பழகிவிட்டது போலிருக்கே..... :-))

Anonymous said...

சரீயா தமீழ
பேரனான
these three only iam typing
all others copy & paste

தமிழ் said...

சரீயா தமீழ
பேரனான
these three only iam typing
all others copy & paste//

ஹி ஹி தமிழ்லயே தட்டச்சு செய்தால் எளிமாயானதாக இருக்கும், முயன்று பாருங்கள்... ஒரு நாளிலேயே பழகிவிடலாம்... :-))