திருமங்கையாழ்வார்:
பிறந்த காலம் - 8 ம் நூற்றாண்டு
பிறந்த ஆண்டு - நள ஆண்டு
பிறந்த மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - கார்த்திகை
திதி - பௌர்ணமி (வியாழக்கிழமை)
அம்சம் - சாரங்கம் (வில்)
சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள திருக்குறையலூர் என்னும் கிராமத்தில், ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர், வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே திருமங்கையாழ்வார் ஆவார். அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.
சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தோடு வேதங்களும், முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.
அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக வழங்கினார்.
எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர். சோழ அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால் (வேங்கையின் மைந்தன் என்னும் நூலில் நீங்கள் படித்திருக்கலாம்...பர மற்றும் உடையவர் என்னும் பட்டப்பெயர் மன்னர்களின் பெயருக்கு முன் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும் என்று) இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக முடிசூட்டப்பட்டார்.
ஒரு முறை, நீலருக்கு.... சுமங்கலி என்னும் தேவகன்னிகையைக் காண நேரிட்டது. என்னாது, தேவகன்னிகையை ஒரு மனிதன் காண்பதா???
அட ஆமாம்பா, மெய்யாலுமேதான், சுமங்கலி என்னும் தேவகன்னிகை கபிலமுனி என்னும் முனிவரின் சாபத்தினால் சாதாரண மானுடப்பெண்ணாகப் பூலோகத்திலே பிறந்து குமுத வல்லி என்னும் பெயர் கொண்டு வளர்ந்தார். தன் பிறவியை பற்றி முழுதும் அறிந்த அந்தப் பெண், தன் தந்தையிடம், மணந்தாள் ஆலிநாடனையே மணப்பேன், என்று கூற, அவள் தந்தையும் அதற்கு சம்மதித்தார்.
விதியும் வந்து விளையாட,
மதியும் அதன் வழியில் தள்ளாட,
காலத்தின் கட்டுப்பாட்டில் கிடக்கும் மானுடர்களான நீலரும், குமுதவல்லியும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் காண நேர்ந்தது.
மங்கையர் கோனின் மனதைத் திருடிய அந்த தேவகன்னிகையைக் கண்ட மாத்திரத்திலேயே, நீலருக்கு அவள் மேல் காதல் அலர்ந்தது.
கண்டதும் காதல்; அவள்
கைப் பிடிக்கவும் ஆவல்;
கண்களெல்லாம் அவளின் தேடல்;
உள்ளமோ அவளிடமே ஓடல்...
தன் விருப்பத்தை அப்பெண்ணிடம் வெளிப்படுத்திய பொழுது, குமுதவல்லியார், அவருக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அதாவது,
1. அவர் பஞ்சசம்ஸ்காரம் செய்துக் கொள்ள வேண்டும்
2. ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பெருமாள் பக்தர்களுக்கு அமுது படைக்க வேண்டும், ஓராண்டு கால அளவிற்கு. அவர்கள் பாதம் கழுவிய நீரால் நம் தலை கழுவ வேண்டும்.
இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்...
எப்படி நிறைவு செய்தார்??
பஞ்சசம்ஸ்காரம் என்பதை நல்வினை சடங்குகள் என்று தமிழில் சொல்லுவர். அதாவது,
1. தாப சம்ஸ்காரம் - (தாபம் என்றால் சூடு என்று பொருள்) பெருமாளின் திருஅடையாளங்களாகிய சங்கு, சக்கரத்தில், வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கையும் நிரந்தரமாகத் தரிப்பது.
2. புண்ட்ர சம்ஸ்காரம் - (திருமண் காப்புத் தரித்தல்) இறைவனின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, பன்னிரு இடங்களில் திருமண் அணிதல். அதாவது,
கேசவாய நம என்று கூறி நெற்றியில் திருமண் அணிய வேண்டும். இதேபோல், நாராயணாய நம என்று நாபியிலும் மாதவாய நம என்று மார்பிலும் கோவிந்தாய நம என்று நெஞ்சிலும் விஷ்ணுவே நம என்று வலது மார்பிலும் மதுசூதணாய நம என்று வலது புயத்திலும் த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும் வாமனாய நம என்று இடது நாபியிலும் ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும் ரிஷிகேசாய நம என்று இடது தோளிலும் பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும் தாமோதராய நம என்று பிடரியிலும் திருமண் தரிக்க வேண்டும்.
3. நாம சம்ஸ்காரம் - (நாமம் என்றால் பெயர்) அதாவது, பெருமாளின் பெயர் அல்லது அவரது அடியவர்களான ஆசார்யர்களின் பெயர்கள் ஏதாவது ஒன்றை வைத்து, அப்பெயரின் முடிவில் தாசன், அடியவன் என்று வருமாறு குருவால் பெயர் வைக்கப் பெறுதல்.
4. மந்த்ர சம்ஸ்காரம் - (மந்த்ரம் - மந்திரம்) எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.
5. யாக சம்ஸ்காரம் - (யாகம் - பூசை, ஆராதணை) திருவாராதணை மற்றும் பூசை செய்யும் முறைகளை முறையாகக் கற்றுக் கொள்ளல்.
இவை ஐந்தனையும் குருவிடமிருந்து (ஆசார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும். பஞ்ச சம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட ஒருவர் வேத முறைப்படி வைணவராகிறார். இதன் மூலம் அவரது உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் வைணவநெறிக்கான நல்வினைகளும், சிந்தனைகளும் அவர் மனத்தில் பதிய ஆரம்பிக்கும்.
அது சரி, நீலர் இந்த பஞ்ச சம்ஸ்காரத்தை எந்த குருவிடமிருந்து பெற்றுக் கொண்டார்??? நீலருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த அந்த குரு யார்??? யார்?? யார்????
யார் அந்த குரு தெரியுமா???
அவர்தான் குருவுக்கெல்லாம் குருவானவர். குற்றமில்லா குணத்தவர். குறையொன்றும் வைக்கா குறையற்றவர்... எம்பெருமான் திருநறையூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்....
இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நம்ம நீலர்தான்.
2. கட்டியவள் பேச்சை மீறலாம், காதலியின் பேச்சை.... அய்யோ! அபச்சாரம், அபச்சாரம்.... மீறவேப் படாது.....
இரண்டாவது வேண்டுகோளையும் இளைக்காமல் ஏற்றுக் கொண்டு, அதன்படி செய்தார்.
நாம என்ன சொன்னாலும் இவர் கேட்குறாருப்பா, இவருதான் உலகத்திலேயே ரொம்ப ரொம்ப நல்லவரு.... நல்லவரு மட்டுமா? நல்லவர், வல்லவர், என் உள்ளக் கள்ளவர் என்று... நீலர், குமுதவல்லியின் திருமணம் இனிதே நடந்தேறியது.
இரண்டாவது கடனை நிறைவேற்றும் போது, அவர் சளைக்காவிட்டாலும், அவரிடமிருந்த செல்வம் இளைத்துவிட்டது. அவரிடம் இருந்த செல்வம் குறைந்ததால், அவரால் கப்பம் செலுத்த இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட சோழப் பேரரசன் அவரது அரசைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அவர் அதற்காகக் கவலைப் படவில்லை.
எப்படியாவது அடியவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதிலேயே திண்மையான எண்ணம் கொண்டார். ஆனால், அவர் கையில் தான் பொருள் இல்லையே, பின் வெறும் எண்ணம் மட்டும் எப்படி நிறைவேறும்.... கானல் நீரில் தாகம் எவ்வாறு தீரும்??? வெறுங்கையில் எப்படி முழம் போட முடியும்....? எப்படி? எப்படி?? ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த, ஆழ்ந்த சிந்தனை.....அதன் இறுதியிலே ஒரு ஆச்சரியமான முடிவு...
அதுதான், 'நாலு பேருக்கு நல்லது ன்னா எதுவுமே தப்பில்ல' அப்படின்னு, அவர் தன் முயற்சிக்காக எந்த செயலையும் செய்வதற்குத் துணிந்தார்.
அதாவது, பொருட்தேவைக்காக வழிப்பறி செய்ய ஆரம்பித்தார். அது எப்படிங்க, ஒரு வைணவர், அதுவும் இறைவனிடமே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டவர், அவர் எப்படி வழிப்பறியெல்லாம் செய்வார் என்று நீங்க கேட்கறது எனக்குப் புரியுது...
காரணமின்றி காரியமில்லை!! ஆனா, அவர் சிந்தை முழுதும் முகுந்தனின் அடியவர்களுக்கு அன்னமிடுவதிலேயே மூழ்கி இருந்தது. என்ன காரியம் செய்தாகிலும், எம்பிரானின் அடியவர்களுக்கு அழிபசி தீர்ப்பதில்தான் கவனம் முழுதும் இருந்தபடியால், அவர் செய்வது சரியா? முறையா? என்று கூட சிந்தை செய்யவில்லை.
ஆனா, நீங்க என்ன சொன்னாலும் தப்பு தப்புதான்?? வழிப்பறிங்கறது எவ்வளவு பெரிய தப்பு.... விதிதான் அவர இப்படி எல்லாம் செய்ய வைக்குதுன்னா, விதியை விதிக்கும் வித்தகன் இதை எல்லாம் பொறுமையா வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தார்?? அவராவது வந்து தன் அடியவர்களுக்கு ஒருவர் தவறான வழியில் அன்னமிடுகிறாரே, என்று அவருக்கு உதவலாம் இல்லையா???
ஆமாம் உதவலாம்...
என்ன ஆமாம் உதவலாம்..??? இறைவன் வந்தாரா? தடம் மாறிய தன்யனைக் காப்பாற்றினாரா?
அமைதியா இருப்பா... ஆண்டவன் வருவான்... அருளுவான்.... அதற்கான காலம் நேரம் வாய்க்க வேண்டாமா???
பாட்டும் அவனே... பாவமும் அவனே..... பாவமும் அவனே... பாவத்திற்கு சம்பளமும் அவனே.... புண்ணியமும் அவனே.... புண்ணும் அவனே... புண்ணுக்கு மருந்தும் அவனே... மருந்தும் அவனே.... விருந்தும் அவனே... எல்லாமும் அவனே... எல்லாவற்றிலும் அவனே.... வினைக்கு வித்திடுபவனும் அவனே.... வினையும் அவனே.... வினையின் விளைவும் அவனே... வினையால் வீழ்த்துபவனும் அவனே... வினையை வீழ்த்துபவனும் அவனே....
அத்தகையவனுக்குத் தெரியாதா?? எதை, எக்காலம் வரைக்கும் செய்ய வைக்க வேண்டும் என்று??? எங்கு முடிச்சு போட வேண்டும், எந்த இடத்தில் முடிச்சியை அவிழ்க்க வேண்டும் என்று...
முடிச்சியை அவிழ்க்கும் காலம் வந்தது... கருணை வெள்ளம் பொங்க ஆரம்பித்தது; இறைவனும் இறைவியும் மணக்கோலம்பூண்டு, திருமங்கையிலுள்ள திருமணங்கொல்லை என்னும் கானகத்தின் வழியே, திருமண ஊர்வலமாய், கல்யாண கானங்கள் இசைக்க சென்று கொண்டிருந்தனர்.
ஏன் அவங்கல்லாம் அந்த பக்கமா போகனும்???
ஏன்னா, பரகாலனும் அவனது, பட்டாளங்களும் பதுங்கியிருக்கும் பகுதி அது... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு தப்பாகலாம், கமலக்கண்ணன் போட்ட கணக்கு தப்பாகுமா??
பரகாலனும் அவனது கூட்டத்தினரும், திருமணக் கூட்டத்தை வழிமறித்து, அங்கிருந்த அனைவரின் பொருட்களையும் கைப்பற்றினர், மணமக்களின் உடைமைகள் உட்பட... எல்லாமும் கவர்ந்த பின்பும், கள்ளழகரின் காலில் ஒரு மெட்டி மட்டும் மீதம் இருந்தது... மீதம் இருந்த மெட்டியையும் கழற்ற முயன்றார், நீலர். எவ்வளவு முயன்றும் இயலவில்லை அந்த காலனால், பர காலனால்.
எவ்வளவு முயன்றும் அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது. சரியென்று, அவர்கள் அந்த மெட்டியை விட்டு விட்டு, மற்ற உடைமை கள் அனைத்தையும் மூட்டையில் கட்டித் தூக்க முயன்றனர். ஆனால், அந்த முயற்சியும் வீணாய் போனது... எவ்வளவு முயன்றும் அவர்களால் முடியவில்லை. ஆனால் முடிந்தது... பரகாலனின், பாவகாலம் முடிந்தது.
அதாவது, முடிவடையும் நேரம் வந்தது... உடனே கோபம் கொண்ட பரகாலன், 'ஏய்! நீ ஏதோ மந்திரம் செய்து விட்டாய் அதனால் தான், என்னால் கழற்றவும் இயலவில்லை, கவர்ந்ததைக் கொள்ளவும் முடியவில்லை. என்ன மாயம் செய்தாய், என்ன மந்திரம் செய்தாய், உண்மையை சொல்' என்று ஆத்திரத்துடன் கல்யாண மாப்பிள்ளையிடம் கத்தியை நீட்டி மிரட்டினார்.
உடனே, மாதவனின், மந்தகாசம் சிந்தும் முகத்தில் தவழ்ந்த மந்திர புன்னகையுடன், நம் கலியா! என்னும் பெயரிட்டு, 'நம்கலியா, வா, என் அருகில் வா, உனக்கு நான் அந்த மந்திரத்தை சொல்கிறேன்,' என்று அருகில் அழைத்து, நம் கலியனின் காதிலே,
தீயவற்றிற்கு எட்டாத, தின்னத் தின்னத் தெவிட்டாத தேனினும் இனியதாய, நூற்றெட்டு திருத்தலத்தின் தலைவனின், பாவங்களனைத்தையும் வெட்டுபவனின் பெயர் கொண்ட அந்த எட்டெழுத்து மந்திரத்தை நம்கலியனின் காதிலே பக்குவமாய் "ஓம் நமோ நாராயணா" என்று ஓத நம் கலியனின் கர்மங்கள் அனைத்தும் கழிந்தன.
எம்பெருமான், பெரிய பிராட்டியுடன் கருட வாகனத்தில் இருந்து அவருக்கு அருள் பாலித்துவிட்டு மறைந்தார். இல்லை, இல்லை... நம் கலியன் அந்த இறைவனைத் தனக்குள்ளே ஆழ்த்திக் கொண்டார், தானும் அந்த இறைவனுக்குள்ளே ஆழ்ந்தார்.
அந்த கணமே, நம் கலியனுக்குள்ளே, கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம் கரையை உடைத்து அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது. இறைவன் மீதான அன்பும், பக்தியும் மடைதிறந்த வெள்ளமென பாசுரங்களாய் பெருக்கெடுத்தது. ஆழ்வாரின் மீதான ஆண்டவனின் அருள், ஆழ்வாரின் மனத்திற்குள்ளிருந்து உடைந்து கண் வழியே கண்ணீராய், திருவாய் வழியே திவ்யமொழிகளாய் வெளிப்பட்டது.
அதுமுதல், இறைவன் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அவரது அருள்கடலிலே ஆழ்ந்து, ஆழமான கருத்துடைய பாடல்களைப் பாடிப் பாடி பரவசம் கொண்டார்.
எப்படி, வில்லும் வாளும் ஏந்திய வீரனின் வாயில் பக்திமயம் பொங்கும் கானங்களா??? ஆமாம் பா ஆமாம்.... ஏன் சந்தேகமா??? அவர் இன்னும் பழைய பரகாலன் இல்ல, புதிய நம் கலியன், திருமங்கையாழ்வார்... அவர் பாடாமல், பின் எவரால் பாட இயலும்?? அதுவும், அவர் பாடின பாடல்கள் ஒன்றா? இரண்டா??
திருமங்கையாழ்வாரின் அருள் ஆக்கங்கள்:
பெரிய திருமொழி 1084
குறுந்தாண்டகம் 20
நெடுந்தாண்டகம் 30
திருவெழுக்கூற்றிருக்கை 1
சிறிய திருமடல் 40
பெரிய திருமடல் 78.
இப்போ புரியுதுங்களா?? ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... ஆம், நன்மைகள் ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே.... துணைவியுடன் இருந்து அருள் பாலிக்கும் ஒரே ஆழ்வார், திருமங்கையாழ்வார்தான்.
நாற்கவி:
1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது
2. சித்திரக்கவி - பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது
3. விஸ்த்தாரக்கவி - விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது
4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது
இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
Monday, July 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆகா எங்க ராபின்ஹூட் ஆழ்வாரா!
அருமை! அருமை!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
ஒவ்வொரு ஆழ்வாரின் படமும் போடுங்களேன் தமிழ்!
அந்தந்த ஆழ்வாரின் ஒரு எளிமையான பாசுரத்தை அடியேன் இங்கு இடுகிறேன்!
திருமங்கை மன்னனின் பாசுரம்
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்!
அடியவர்கள் என்ற பக்த குலத்தில் கொண்டு சேர்பிக்கும்!
நிலையான செல்வம் எதுவோ அதைத் தரும்! (நித்ய விபூதி)
அடியவர் படு துயர் எல்லாம் தரைமட்டமாக்கும்!
வற்றாத வான் போகமான திருவீடு (மோட்சம்)அளிக்கும்!
திருவருளும், பரமபதத்திலும் பெரிதான பெருநிலமான கைங்கர்யம் என்னும் திருத்தொண்டு அளிக்கும்!
உள்ளத்து வலிமை தரும்! மற்றும் எல்லாம் தரும்!
பெற்ற தாய் ஒரு பிறவிக்குத் தான்! ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் தாயாய் இருந்து ஆயின செய்யும்!
நலம் தரும் சொல்!
நான் கண்டு கொண்டேன்!
நாராயணா என்னும் நாமம்!
வருக! வருக!! தங்கள் வரவு நல்வரவு ஆகுக!! பிறந்த நாள் வாழ்த்துகள் இரவி சங்கர்!!
எண்ணியவற்றையெல்லாம், எண்ணியவண்ணம் எய்த எம்பெருமான் எந்நாளும் உம்முடன் இருப்பாராக!!
பிறந்த நாள நல்வாழ்த்துகள்!!
இந்த வலைப்பூவே, பாசுரங்களை அதன் பொருளோடு எழுதுவதற்காக, நாங்கள் எடுத்துள்ள ஒரு சிறு முயற்சி...
பாசுரங்களைக் கொடுப்பதற்கு முன், ஒரு சிறு முன்னுரையாக நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு என்று எழுதுவதற்காக, ஒவ்வொரு ஆழ்வாரைப் பற்றியும் எழுதினோம்!!
ஆனால், அதுவே ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு பதிவு போட்டாலும் பத்தாது என்கிற அளவிற்கு வந்துவிட்டது.
பாடல்களை அதன் பொருளோடு உள்ளே எழுதுவதால், நான் எந்த பாடலையும் இங்கு குறிப்பிடவில்லை!! இருந்தாலும் தங்களின் விலைமதிப்பில்லா கருத்திற்கு நன்றி!! நன்றி!!
தங்கள் வருகையையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டுகிறோம்!
இந்த பாசுரம் பிரபந்தத்தின் முழு சாரத்தையும் கொண்டுள்ள பாடல்! பொருளுடன் குறிப்பிட்டமைக்கு நன்றி!!
http://ottakuthar.blogspot.com/
உங்கள் விமர்சனத்திற்காய் எனது முதல் முயற்சி
கட்டுரையை முழுக்கப் படித்தேன்..!!
அருமை..!! அருமையாக நகர்த்தியிருக்கின்றீர்கள்..!!
வாழ்க..!!
கட்டுரையை முழுக்கப் படித்தேன்..!!
அருமை..!! அருமையாக நகர்த்தியிருக்கின்றீர்கள்..!!
வாழ்க..!!
நல்ல விளக்கங்கள்..!!
நான் ரசித்துப் படித்தேன்..!!
அருமை..!!
Post a Comment