Sunday, April 19, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 1

திருப்பல்லாண்டு - பாடல் 1

சரிங்க மக்களே! இவ்வளவு நாளா நாம நாலாயிரத்திவ்யப் பிரபந்தப் பாடல்களி்ன் ஆசிரியர்களான பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொண்டோம் இல்லையா! இனி பாடல்களுக்கு வருவோமா...

முதலாவதாக நாம் பார்க்கப் போவது பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு. பெரியாழ்வார் வாழ்ந்த காலத்திற்கு முன்னமேயே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்று பலர் இருந்தும் அவர்களின் பாடல்களை முதலாவதாக வைக்காமல், ஏன் பெரியாழ்வார் பாடல்களை முதலில் பார்க்கிறோம் என்பதில் உங்களுக்குப் பெருத்த சந்தேகம் இருக்கலாம்.

அதுக்குக் காரணம் ஒன்னே ஒன்னுதான். உலகத்துல அதுக்கு மிஞ்சினதும் ஒன்னும் இல்லதான். அதுதான் தாய்மை.


பெரியாழ்வார் பாடல்களோட சிறப்பே அவரது பாடல்கள்ல்ல ததும்புற தாய்மை நிறைந்த பக்திதான். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியே இந்த பட்டர் பிரான் தான். பெரியாழ்வாரைப் பற்றி நாம இங்க ஏற்கனவே பார்த்திருந்தோம்! அதனால இப்போ பாடல்களுக்கு வருவோமா!

ஒரு துளி அமுதம் உண்டால், உயிர்த்துளி நம்மை விட்டு என்றும் நீங்காது ன்னு சொல்வாங்க. அப்போ ஒரு அமுதக்கடலையே உண்டால்..... அந்த அமுதக் கடல்ல நீந்தி நீக்கமற நிறைந்துள்ள நிர்மலனடி தொழுவோமாக.

பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு

காப்பு குறள் வெண் செந்துறை

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்

செவ்வடி செவ்விதிருக்காப்பு.


குறிப்பு: * குறியிட்டுள்ள இடங்களில், நிறுத்திப் படிக்க வேண்டும்

நிகழ்வு:

கமலக்கண்ணன் கனவில் இட்ட கட்டளைக்கிசைந்து, பெரியாழ்வார் வல்லபதேவ பாண்டியனிடம் சென்று பரம்பொருள் யார் என்ற கேள்விக்கு? எங்கும் எப்போதும் எப்பொருளிலும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் பெருமாளே! என்று வேதங்களிலுள்ள ஆதாரங்களுடன் கூற பொற்கிழி தானே வளைந்து கொடுத்தது. பொற்கிழியை வென்ற விஷ்ணுசித்தனை பாண்டிய மன்னன், பட்டர்பிரான் என்னும் பட்டமளித்து பட்டத்து யானை மேல் ஏற்றி, கொட்டு மேளங்கள் முழங்க மிகுந்த மரியாதையுடன் ஒரு மன்னனைப் போல் பரிசிலுடன் அனுப்பி வைத்தான். ஊரார் அனைவரும் திரண்டு வந்து பட்டர்பிரானுக்குப் பூமாரி பொழிந்து பெரும் சிறப்பு செய்தனர். எம்பெருமானும் அக்காட்சியைக் காண கருட வாகனம் மீதேறி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலமாய்க் காட்சித் தந்தார்.

வானில் திடீரென்று ஆயிரம் ஆதவன் அவனியில் உதித்தப் பேரொளி தோன்ற, அதன் நடுவே குளிர்ந்த வெண்மேகமாய், கொள்ளை அழகுடன் கூடலழகர் காட்சித் தந்தார். உடனே அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் கூடலழகரைத் தரிசிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட விஷ்ணுசித்தர் சித்தம் சிதறினார். நெஞ்சம் பதறினார். அடியனாய் இருந்த அவர் சிந்தையில் தாய்மை குடியேறியது.

இறைவன் மேல் கண்ணேறு ஏதாவது பட்டுவிடுமோ? என்று கலங்கி நின்றார். கல்லடியில் தப்பித்தாலும் கண்ணடியில் தப்பிக்க இயலாதே என்று நடுநடுங்கிப் போனார். உடனே அனைவரின் சிந்தையையும் மாற்றும் வண்ணம், கார்முகில் வண்ணன் மேல் திருப்பல்லாண்டு பாடினார். அங்கு கூடியிருந்தோரும் அவருடன் சேர்ந்து பாடினர்.

அந்தப் பாடல் தான் இந்த திருப்பல்லாண்டு!

பொருள்:

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் - பலகோடி நூறாயிரம் ஆண்டு காலமாய் (infinitive) பல யுகங்களைக் கடந்தும் ஆதிக்கும் ஆதியான காலம் முதலாய் நின் திருவருட்கரங்களிலே உயிர்களை வைத்துக் காத்து அருள்புரியும் ஆதிகேசவனே,

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா - குழந்தைக் கண்ணனுக்கு, தாய்மாமன் கம்சனே வில்லனாய் வாய்த்துவிட, அவன் குழந்தையைக் கொல்ல எத்தனையோ தந்திரங்கள் செய்தும், அவன் கெட்ட எண்ணம் நிறைவேறவில்லை. அதில் ஒன்று தான் மல்யுத்த வீரர்களுடன் வைத்த மற்போர்.
குழந்தை கண்ணன் கம்சனின் சாணுரன், முஷ்டிகன் என்னும் இரு மற்போர் வீரர்களையும் எதிர்த்து சண்டையிட வேண்டும்.

ஒரு முறை குழந்தை கண்ணன், வெண்ணையைத் திருடி உண்டுவிட்டான். அதை அறிந்த யசோதை ஏன் வெண்ணையைத் திருடி உண்டாய்? என்று வினவியதற்கு, கண்ணனோ இல்லை என்று பொய்யுரைத்தான். உடனே, யசோதா கண்ணனின் வாயைத் திறக்கச் சொன்ன பொழுது, கண்ணனும் தன் திருவாய்த் திறந்துக் காண்பித்தார். வாயினுள் யசோதை, வெண்ணையைக் காணவில்லை! அண்டசராசரமும் அவர் கண்முன், கண்ணனின் வாயினுள் விரிந்தது. இவ்வாறு பேரண்டம் அத்தனையும், தன் வாயினுள் வைத்து இருக்கும் கண்ணனுக்கு இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். அவன் தன் திண்மையான தோள் வலிமையினால் வீரர்களை எளிதில் வெற்றிக் கொண்டான், பகவான் கண்ணன். அந்த கார் முகில் வண்ணனை, நீல மணி தேகத்தானை, மலைக் கள்ளனைத் தான் பெரியாழ்வார் பாடுகிறார் - தன் திடமான தோள் வலிமையினால் மல்யுத்த வீரர்களை வெற்றிக் கொண்ட நீல மணிவண்ணா!

நின் சேவடி செவ்வித்திருக் காப்பு - எல்லா உயிர்களுக்கும், எக்காலத்தும் காப்பாய் அமையும் உம் செம்மையான திருவடிகளுக்கு பலகோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் திருவந்திக்காப்பு தொடரவேண்டுமாக!

பதவுரை:

தன்னுடைய திண்மையான தோள் வலிமையினால் கம்சனின் மற்போர் வீரர்களைத் தோற்கடித்த நீலமணிவண்ணனே, பல கோடி நூறாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து ஊழிதோறும் எல்லா உயிர்களையும் காக்கும் உன்னுடை சிவந்த செம்மையான திருவடிகளுக்கு பல கோடி நூறாயிரம் ஆண்டுகளுக்கும் திருக்காப்பு தொடர்வதாக!

10 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமையான துவக்கம்!
இனிய முயற்சி!
ஊக்கத்துடன் தொடர்ந்து செய்யுங்க தமிழ்! வாழ்த்துக்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*//

அது என்ன பாட்டுக்கு நடுவில் விண்மீன் குறி (நட்சத்திரக்குறி)?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவர்களின் பாடல்களை முதலாவதாக வைக்காமல், ஏன் பெரியாழ்வார் பாடல்களை முதலில் பார்க்கிறோம் என்பதில் உங்களுக்குப் பெருத்த சந்தேகம் இருக்கலாம்//

ஆமாம்! அதான் அழகா விளக்கிச் சொல்லிட்டீங்களே! தாய்மை-ன்னு!

பெரியாழ்வார் ஒருவரே...
* இறைவனுக்குத் தாயாகவும் இருந்தார்
* இறைவிக்குத் தந்தையாகவும் இருந்தார்!

அதான் அவரின் திருப்பல்லாண்டு சொல்லி நாலாயிர அருளிச் செயல்களும் துவங்குகின்றன!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு//

எதற்கு தமிழ், திருவடிகளுக்கு மட்டும் திருக்காப்பு செய்யணும்? சுத்தி போடணும்? கண்ணேறு கழிக்கணும்?

பொதுவா முகத்துக்கும், உடலுக்கும், கண்ணுக்கும், மேனிக்கும் அல்லவா கண்ணேறு கழிப்பாங்க? இங்கே வித்தியாசமா திருவடி திருக்காப்பு-ன்னு இருக்கே! கொஞ்சம் விளக்குங்களேன்!

தமிழ் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, திரு இரவிசங்கர்.

இறைவனைப் பற்றிப் பேசும்போது, அவன் திருவடிகளைத்தான் எப்போதும் நாம் வணங்கவும், சரணடையவும் செய்வோம்!

பெருமாளின் திருவடிப்படையே, நம்மைக் காக்கும் படை என்று உங்கள் பதிவிலேயே படித்த நினைவு!

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தார்

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

அப்படின்னு, வள்ளுவர்கூட இறைவனைக் குறிக்கும்போது, அவன் திருவடியையே குறித்துள்ளார்.

இறைவனை வர்ணிக்கும்போது, அவனில் மூழ்கும்போது தான் முகம் மற்றதெல்லாம் பேசுவோம், மற்றபடி பொதுவாக வரும்போது, இறைவன் என்றால் அவனின் திருவடியே இறைவனாகக் கருதப்படுகிறது.

அதனால்தான்,பல்லாண்டு பல்லாண்டு, பலகோடி நூறாண்டும் நமக்கு முக்தி தரும் திருவடிக்குப் பல்லாண்டு பாடப்படுகிறது.

தமிழ் said...

//அது என்ன பாட்டுக்கு நடுவில் விண்மீன் குறி (நட்சத்திரக்குறி)?//

விண்மீன் குறியிடப்பட்டுள்ள இடங்களில் நிறுத்திப் படிக்க வேண்டும்.

குறிப்பிட மறந்துவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

பல்லாண்டு அருமையான துவக்கம். நன்றி.

தமிழ் said...

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்!

மற்ற பாடல்களையும் படித்து பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

சண்முகம் - தாம்பரம் / SHANMUGAM - TAMBARAM said...

சிறப்பான செய்தி...! நன்று...
- அடியேன் இராமானுஜதாசன்

தமிழ் said...

//சிறப்பான செய்தி...! நன்று...
- அடியேன் இராமானுஜதாசன்//

காலத் தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள்!!!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!! தொடர்ந்து வந்து ஆதரவு தர வேண்டுகிறோம்!!!!