Wednesday, May 27, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 5

திருப்பல்லாண்டு பாடல் - 5

அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.


பொருள்:


அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை - இதை, அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். இப்படி பிரிச்சதுக்குப் பிறகு பொருள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. : ))
அவ்வளவு எளிமையான தமிழ்ச் சொற்கள்!

மூவுலகம், ஏழுலகம் ன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கணக்கு சொல்வாங்க!
பூமியிலேயே எத்தனைப் பிரிவுகள் வட்டம், மாவட்டத்து ல துவங்கி, கண்டம், பெருங்கடல் வரைக்கும் போகும். அதே மாதிரி, பூமி, நிலா, சூரியன் உள்ளிட்ட சூரியக்குடும்பம் முதலாக, அண்டம், அண்டங்களை உள்ளடக்கிய பேரண்டம் வரை உலகில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்திற்கும் -- அண்டக் குலங்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பவனை - அண்டக் குலத்துக் கதிபதியாகி (அண்டம் - உலகம், அதிபதி - தலைவன்)

அசுரரிராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் - (அசுரர் இராக்கதர்) அன்பு, கருணை எதுவுமில்லாமல், மிருகத்தைப் போல் தான் நினைத்தவற்றை எல்லாம் அழிக்கும் கொலைபாதகம் செய்யும் அசுரர்கள், இராட்சதர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் குலத்தையே வேரோடு களைந்த இருடீகேசன்! (இண்டைக் குலம் - கொலைத் தொழில் புரிபவர்களின் குலம்)

இருடீகேசன் ன்னா - ரிஷிகேசன் என்று பொருள். அதாவது வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து பெயரைத் தமிழ்ப் படுத்திக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ரிஷி+கேசன் - முனிவர்களின் தலைவன் (முனிவர்கள் ன்னா எப்படிப்பட்டவர்கள் ன்னு உங்களுக்கேத் தெரியும். முற்றும் துறந்தவர்கள்! ஐம்புலன்களின் ஆசைகளைத் துறந்தவர்கள், உயிரின் மேல் பற்றற்றவர்கள், உறவுகளில் பற்றற்றவர்கள்... இப்படிப்பட்ட முற்றும் பற்றற்ற முனிவர்களுக்கேத் தலைவனாக இருந்தால் அவர் எந்த அளவு புலன்களை அடக்கினவராக, ஆசைகளை எல்லாம் துறந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவும் வேண்டுமோ?? ''பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றினைப் பற்றுக பற்று விடற்கு'' என்பது வள்ளுவம். இந்த ''பற்றற்றான்'' தான் நம்ம ''இருடீகேசன்''.
(ரிஷி - முனிவர், கேசன் - தலைவன்)

... இருடிகேசன் தனக்கு, தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி - உலகங்களுக்கெல்லாம் தலைவனாகவும், கொலைதொழில் புரியும் அரக்கர்களை எல்லாம் வேரோடு அழித்த, முற்றும் பற்றற்ற முனிவர்களின் தலைவனாக இருப்பவனுக்கு, அடியவர் குலத்திலுள்ள அனைவரும் வந்து, அவனின் திருவடிகளைத் தொழுது, இறைவனின் ஆயிரம் திருநாமங்களை ஓதுவீர்களாக! அதுமட்டுமில்லாமல், (தொண்டக் குலம் - அடியவர்களின் குலம்)

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே - நீங்கள் உங்களின் பழைய மூடநம்பிக்கைகளை எல்லாம் ஒழித்து நம்மோடு என்றென்றும் இருக்கும் இறை அவனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீ வாழ்வாயாக என்று பாடுவீர்களாக!

பதவுரை:

உலகங்களுக்கெல்லாம் ஒரே தலைவனாக இருப்பவனை, கொலை தொழில் புரியும் அசுரக் குலத்தையே அடியோடு அழித்த, புலன்களை அடக்க வல்ல பற்றற்ற முனிவர்களின் தலைவனுக்கு அடியவர் குலத்திலுள்ள அனைவரும் வந்து, உங்களின் பழைய மூட நம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, முழு மனத்துடன் இறைவனின் திருவடிகளை வணங்கி, அவனின் ஆயிரம் திருநாமங்களை ஓதி, இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவீர்களாக!

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல விளக்கங்கள் தமிழ்!

//இருடீகேசன் ன்னா - ரிஷிகேசன்//

அதை ஹ்ருஷிகேசன்-ன்னும் எழுதுவாங்க! அதாச்சும் புலன்களின் தலைவன்!

//பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே //

அதாச்சும் பழைய தவறான கொள்கையெல்லாம் விடுத்து பல்லாண்டு கூறுங்கள்-ன்னு பொருள்!
சமாதி நிலை, கைவல்யம், இங்கேயே முக்தி, ஜீவ சமாதி என்று ஆத்மாவைப் பற்றியே பேசி, பரமாத்மாவை மறக்கச் செய்யும் பழைய கொள்கைகள்!

அதையெல்லாம் விடுத்து பரமபதத்திலோ இல்லை திவ்யதேசங்களிலோ - மோட்சம் பற்றி எந்தக் கவலையும் இன்றி - இறைவனுக்கு கைங்கர்யம் என்னும் திருத்தொண்டு செய்யும் கொள்கையை மட்டுமே கடைபிடியுங்கள்! பல்லாண்டு பாட வாருங்கள் என்பது பொருள்!

தமிழ் said...

//அதை ஹ்ருஷிகேசன்-ன்னும் எழுதுவாங்க! அதாச்சும் புலன்களின் தலைவன்!//

ஹ்ருஷி ன்னா புலன்கள் ன்னு அர்த்தமா திரு கேயாரெஸ்?? நான் ரிஷி ன்னு நினைச்சுட்டேன்... அதான் ரிஷின்னா முனிவர்கள் இல்லையா.. அதனால, முனிவர்களின் தலைவன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. புதசெவி..

தங்களின் வருகைக்கும், மேலான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி திரு. கேயாரெஸ்!! தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஹ்ருஷி ன்னா புலன்கள் ன்னு அர்த்தமா//

ஹ்ருஷிக் = புலன்கள்
ஈசன் = தலைவன்

//திரு கேயாரெஸ்?? //

:)
இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை! இந்த முன்னொட்டு எல்லாம் ஒன்னும் வேணாம்! ஒழுங்கா, வழக்கம் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க! :)

தமிழ் said...

//ஹ்ருஷி ன்னா புலன்கள் ன்னு அர்த்தமா//

ஹ்ருஷிக் = புலன்கள்
ஈசன் = தலைவன்

//திரு கேயாரெஸ்?? //

:)
இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை! இந்த முன்னொட்டு எல்லாம் ஒன்னும் வேணாம்! ஒழுங்கா, வழக்கம் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க! :)//

பொருளுக்கு மிக்க நன்றி, கேயாரெஸ்... எல்லாம் ஒரு மருவாதைக்குத்தான்.... :))

தமிழ் said...

//
அதாச்சும் பழைய தவறான கொள்கையெல்லாம் விடுத்து பல்லாண்டு கூறுங்கள்-ன்னு பொருள்!
சமாதி நிலை, கைவல்யம், இங்கேயே முக்தி, ஜீவ சமாதி என்று ஆத்மாவைப் பற்றியே பேசி, பரமாத்மாவை மறக்கச் செய்யும் பழைய கொள்கைகள்!

அதையெல்லாம் விடுத்து பரமபதத்திலோ இல்லை திவ்யதேசங்களிலோ - மோட்சம் பற்றி எந்தக் கவலையும் இன்றி - இறைவனுக்கு கைங்கர்யம் என்னும் திருத்தொண்டு செய்யும் கொள்கையை மட்டுமே கடைபிடியுங்கள்! பல்லாண்டு பாட வாருங்கள் என்பது பொருள்! //

அதானே, ஒன்னு பூமியில இருக்கோணும், இல்லாட்டி வைகுந்தம் போயிடனும்....

இப்பிடி ரெண்டுங்கெட்டானா இருந்தா எப்புடீடீஇ??